-->
கடவுள் மனிதனுக்கு அளித்த அற்புத வரங்களில் ஒன்று மறதி. மறக்கும் சக்தி மட்டும் மனிதனுக்கு கிடைத்திராவிட்டால் மனித குலம் இன்று ஒரு மன நோயாளிக் கூட்டமாக மாறிப் போயிருக்கும்.
கரையை விட்டு அகன்று செல்லும் தைரியம் உள்ளவர்களால்தான் புதிய தேசங்களை கைப்பற்ற முடிகிறது.
நடந்து முடிந்த ஓட்டப்போட்டியில் தோல்வியை தழுவிய வீரன் அந்த தோல்வியைப் பற்றியே நினைத்திருந்தால் இனி எந்தப் போட்டியிலாவது வெல்ல முடியுமா? நேற்றைய நஷ்டத்தை மறந்தால்தானே ஒரு வியாபாரியால் இன்றைய வியாபாரத்தை கவனிக்க முடியும். இலாபம் ஈட்ட முடியும். நடந்து முடிந்த தேர்வில் கோட்டை விட்ட மாணவன், அதனை மறந்து கவனமாக படித்தால்தானே அடுத்த தேர்வில் சித்தி எய்த முடியும்.
கடந்த கால இழப்புகள், தோல்விகள் மூலம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, சுயபச்சாதாபப்பட்டு கடந்த காலத்திலேயே தங்கி தாமதிக்கலாமா?
வாழ்க்கைப் பயணத்தில் ஒரு கதவு மூடும்போது இன்னொன்று தானாக திறந்து கொள்ளும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் நாம் மூடிய கதவையே வெறித்துக்கொண்டு இருப்பதால் திறந்திருக்கும் கதவை கவனிக்கத் தவறி விடுகிறோம்.
ஒளிமயமான எதிர்காலம் என்பது மறக்கப்பட்ட இறந்தகாலத்திலேயே தங்கியிருக்கிறது. வாழ்க்கையின் முன்னோக்கிய பயணத்திற்கு நடந்து முடிந்த தோல்விகளையும், வேதனைகளையும் கடந்தேயாக வேண்டும்.
நேற்று என்பது உடைந்த பானை
நாளை என்பது மதில்மேல் பூனை
இன்று என்பது கைகளில் இருக்கும் வீணை
வீணையை இசைப்பதும், தூக்கி எறிவதும் நம் கைகளில்தான் இருக்கிறது.
இனிமேல் இறந்தகால சிந்தனையால் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் இழக்க வேண்டுமா...?
நன்றி: செந்தூரம்/தினகரன் வாரமஞ்சரி (17.02.2019)