சனி, 12 டிசம்பர், 2009

வாழ்க்கையின் மகத்துவமான சின்னச் சின்ன சந்தோஷங்கள்

பிரபல இந்திய ஊடகவியலாளர் அனிதா பிரதாப் எழுதிய 'The Island of Blood' புத்தகத்திலிருந்து சில பகுதிகள் (தமிழாக்கம்: சுப்பிரமண்ய செல்வா) 

சில நேரங்களில் நான் வியக்கிறேன்.  என் வாழ்நாளில் நான் பார்க்காதது ஏதும் உண்டா? கால்கள் சிதறிய சின்னஞ் சிறார்கள்... சிதைந்த உடல்கள்... தலையற்ற உடல்கள்... உடலற்ற தலைகள்... எரியும் தசைகள்... இரத்தம் சொட்டும் கத்திகள்...

என் வாழ்நாளில் நான் எண்ணற்ற உடல்களை பார்த்திருக்கிறேன்.  வன்செயல் கட்டவிழ்ந்த வீதிகளில், பூகம்பம் உலுக்கிய நகரங்களில், சூறாவளி தாக்கிய கிராமங்களில், லொறிகளில் அடுக்கிய... பாதையோரங்களில் கிடத்திய... வைத்தியசாலைகளில் நிறைந்து  வழியும்...மனித உடல்கள்.

இவ்வித அசாதாரண நிகழ்வுகளுடனான இடைவிடாத தொடர்புகள் என்னுள் ஏற்படுத்திய பக்கவிளைவுகள் பற்பல.  வெள்ளை மலர்கள், மஞ்சள் விழிகள் போன்ற ஆபத்தற்ற விடயங்கள் மீது கூட என்னுள் அர்த்தமற்ற, ஆனால் ஆழமான வெறுப்பு உண்டாயிற்று.  சில வேளைகளில் பிரகாசமான ஒளியில், ஏன் சாதாரண புன்னகையில் கூட அர்த்தமின்றி நான் அதிர்ந்து போகிறேன்.

ஆனால் பன்முகப்பட்ட இந்த அனுபவங்களால் உலகம் ஒரு பொருட்டாக கருதாத பல சின்னச் சின்ன சந்தோசங்களின் உன்னதத்தை நான் உணர்ந்து கொண்டேன்.  பலருக்கு இவை சுவாரசஸ்யமற்ற  சர்வ சாதாரணமானவை.  ஆனால் நான் இந்த சின்னச் சின்ன சந்தோசங்களை நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.  அவை என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றன.  புதிய சூழ்நிலைகளை புத்துணர்ச்சியோடு முகம் கொடுக்க உதவுகின்றன.

சின்னச் சின்ன சந்தோசங்கள்... ஆம், முதல் முதலாய் பனிமழை பெய்வதை பரவசத்தோடு பார்த்து நின்ற அனுபவம் போன்று.  (ஓ... அந்த வெண்பனிக் கட்டிகள் ஆடி... அசைந்து... மெதுவாய்... மிக மெதுவாய்... ஆகாயத்திலிருந்து கீழிறங்கி தரையை முத்தமிடும் அற்புதத்தை ஆச்சரியத்தோடு பார்த்து நின்றேன்.)  அப்பொழுது எனக்கு வயது நாற்பத்து  ஒன்று.

சின்னச் சின்ன சந்தோசங்களை நான் மதிக்கக் கற்றுக் கொண்டேன்.  ஏனெனில், ஊடகவியலாளர் என்ற முறையில் எனது ஒவ்வொரு அனுபவங்களும் வாழ்க்கை எத்தனை நிச்சயமற்றது, கொடியது, பாழாகக் கூடியது என்பதை எனக்கு உணர்த்தின.

1996ஆம் ஆண்டு மே மாதம் ஒரு நாள்.  திரையரங்கு ஒன்றில் படம் பார்த்துக் கொண்டு இருந்தேன்.  கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பின் நான் திரையரங்கில் பார்க்கும் முதல் படம்.  எனது செல்போன் சிணுங்கிற்று.  எழுந்து வெளியே வந்து பேசினேன்.  கெட்ட செய்தியொன்று.  மத்திய டெல்லியில் லாஜ்பட்  என்னும் இடத்தில் குண்டு ஒன்று வெடித்துவிட்டதாம்.  இனி படம் பார்த்த மாதிரிதான்.  நான் காரில் ஏறி புயல் வேகத்தில் ஸ்தலத்திற்கு விரைந்தேன்.

கோரமான காட்சி அது.  கொடிய தீயின் கோரப்பிடியில் கட்டிடங்கள்.  வளைந்து நெளிந்த இருப்புத் தூண்கள்.  உடைந்து நொறுங்கிய பொருட்கள்.  சிதறிய, துண்டாடிய மனிதர்கள்.  சிலர் இறந்தும், இன்னும் சிலர் இறந்து கொண்டும்.  வலி தாளாத கதறல்கள்.  இடிபாடுகளில் சிக்குண்டு காப்பாற்றக் கெஞ்சும் அவலக் குரல்கள். போராடும் தீயணைப்புப் படையினர்.  பொதுமக்களை தூர விலகிப் போகும்படி கத்தும் பொலிசார்.  நான் ஸ்தம்பித்துப் போய் நின்றேன்.

"ஐயோ மகளே... நான் உன் பேச்சைக் கேட்டு நாளை கடைக்கு வந்திருக்கக் கூடாதா... நீ உயிருடன் இருந்திருப்பாயே... மகளே.. நீயின்றி இனி நான் எப்படி உயிருடன் இருப்பேன்...?" ஒரு நடுத்தர வயதுப் பெண் மார்பில் அடித்துக் கதறிக் கொண்டிருந்தாள்.  அவள் மடியில் ஒரு சிதைந்த அழகிய இளம்பெண்.  சுற்றிலும் கருகிய பைகளில் சிதறிக் கிடக்கும் பொருட்கள்.  சில நிமிடங்களுக்கு முன் துள்ளலுடன், நீண்ட கூந்தலுடன், ஆப்பிள் கன்னங்களுடன் - இன்னும் சில நாட்களில் மணப்பெண்ணாகப் போகும் பரவசத்துடன் - இளமையின் விளிம்பில் நின்ற பெண் அவள்.  அந்தத் தாய் திருமண வேலைகளை சீக்கிரம் முடிக்க வேண்டுமென அவசரப்பட்டு இன்று கடைவீதி வந்திருக்கிறாள்.

யோசித்துப் பாருங்கள்.  அந்தத் தாய் இனி என்றேனும் பழைய மாதிரி சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?  அவளின் காயங்கள் எப்படி, எப்பொழுது ஆறும்?

சிந்தித்துப் பார்கிறேன்.  நாம் அலட்டிக் கொள்ளும் நம் பிரச்சினைகள் எவ்வளவு சிறியவை?  எவ்வளவு அற்பமானவை?  எவ்வளவு அர்த்தமற்றவை?  தாள முடியாத வெட்க உணர்வு என்னை ஆட்கொண்டது.  சற்றுமுன் திரைப்படம் தடைபட்டபோது என்னுள் ஓடிய எண்ணங்கள் நினைவுக்கு வந்தன.  'சே... என்ன இது... என்னால் நிம்மதியாக ஒரு படம் கூடப் பார்க்க முடியாதா...?  என்ன வாழ்க்கை இது...?'  ஆத்திரத்தில், துக்கத்தில் புலப்பித் தீர்த்தேனே.

துக்கம்!  அந்த வார்த்தையை பிரயோகிக்க எனக்கு என்ன அருகதை இருக்கிறது?  இதோ இந்தத் தாய் சற்றுமுன் ஜீவனுடன் ஜொலித்த தன மகளின் உடலை மடியில் கிடத்திக் கதறுகிறாளே, இந்தத் துக்கத்தின் முன், இந்த வேதனையின் முன் எனது துக்கம் எத்தனை அற்பமானது?  கதறியழும் அந்தத் தாயின் முகத்தை ஜீவனற்று வெறிக்கும் அந்து பெண் நானாகக் கூட இருந்திருக்கலாம்.  அல்லது துண்டு துண்டான என் மகனை கையிலேந்தி கதறும் தாயாகக் கூட நான் இருந்திருக்கலாம்.  எனக்கு அந்த வேதனையை,  வலியைத் தராத கடவுளுக்கு நெஞ்சம் நெகிழ நன்றி சொன்னேன்.

எனது அனுபவங்கள், பல சர்வ சாதாரணமான விஷயங்களைக் கூட பொக்கிஷங்களாகப் பேணும் பக்குவத்தை எனக்கு தந்திருக்கின்றன.  நானும், என்னை நேசிப்போரும், என்னால் நேசிக்கப்படுவோரும் உயிருடன் இருப்பதையிட்டு நான் சந்தோசப்படுகிறேன்.  பலர் உறவுகளின் பெறுமதியை அவற்றை இழந்த பிறகுதான் உணர்கிறார்கள்.  வருந்துகிறார்கள்.  சுய பச்சாதாபப்படுகிரார்கள்.  ஆனால் அப்போது காலம் கடந்துவிட்டிருக்கும்.

இதுதான் வாழ்க்கை.  இதுதான் யதார்த்தம்.  மரணம் என்பது எவ்வளவு சடுதியானது, எவ்வளவு கொடுமையானது, எப்படி எல்லாவற்றையும் ஒரே கணத்தில் மாற்றிவிடும் வல்லமை கொண்டது என்பதை நீங்கள் உணர்ந்தீர்களானால், வாழ்க்கை என்பது எவ்வளவு பெறுமதியானது, எத்துணை அற்புதமான கொடை என்பதை உணர்வீர்கள்.  அதனை பொக்கிஷமாய் பேண வேண்டியதின் அவசியம் புரியும்.  உறவுகளின் உன்னதம் புரியும்.  வாழ்க்கையின் சின்னச் சின்ன சந்தோசங்களின் மகத்துவம் புரியும்.

(நன்றி: தினக்குரல்)
நன்றி: வீரகேசரி வார வெளியீடு (24.02.2019)