புதன், 28 டிசம்பர், 2016

வேர்கள் சொல்லும் வேதம்

செகொவ்யா* எனும் பெருமரம்
ஆண்டுகள் பல்லாயிரம் அழியாதிருக்குமாம்
அடைமழை பெருவெள்ளம் புயல்காற்று
எதனாலும் அதனை வேரறுக்க முடியாதாம்
ஆயினும் அதன் வேர்கள்
ஆழ ஊடுறுவிச் செல்லாதாம்.
ஆச்சர்ய உண்மை!

அதிர்ந்து போன அறிவியல்
நிலம் தோண்டி தேடிற்று.
மண் மறைத்த  ரகசியம் தென்பட்டது.

செகொவ்யா வேர்கள்
பக்கவாட்டில் படர்ந்து
தன் சக மர வேர்களை
பற்றிப் பிணைந்து
பலம் பெற்றுக் கொள்ளும்.

செகொவ்யா வனமெங்கும்
செம்மர வேர்கள்
கிளை பரப்பி கரங்கோர்த்து
ஒன்றொக்கொன்று உறுதுணையாகி
காலத்தை வெல்லும்
சூட்சுமம் சொல்லும்

வேர்கள் சொல்லும் வேதம்
புரிகிறதா மானுடமே?

*sequoia

-- சுபரமண்ய செல்வா --

வெள்ளி, 23 டிசம்பர், 2016

தீராக்கடன்

ஐயாயிரம் புத்தம் புது விடியல்கள்
ஒரு கோடி பனிச்சொறியும் புது மலர்கள்
ஐயாயிரம் பொன் போர்த்திய அஸ்தமனங்கள்
ஒரு கோடி சில்லிட்ட பனித் திரள்கள்
ஐந்து அமைதிமிகு நண்பர்கள்; ஒரு குழந்தையின் நேசம்
மேலே ஒரு வெண்மேகக் கடல்
ஒரு நூறு இசை உலவும் கனவுகள்
நிலவொளியில் நனைந்த பாதைகள்; விரைந்தோடும் சிற்றோடை
நறுமணக் காட்டில் ஓரு ஜுன் இரவு
அன்பு செய்கிற… புரிந்துகொள்கிற ஒரு இதயம்
அன்று காலை விழித்த வேளை நான் வியந்தேன்
இறைவா…!
எப்படி நான் இந்த கடனை அடைப்பேன்?

மூலம்: Courtland W. Sayers
தமிழாக்கம்:  சுப்ரமண்ய செல்வா

வியாழன், 15 டிசம்பர், 2016

அலை ஞானம்

சில அலைகள்
எழுந்ததும் வீழ்ந்து மறைகின்றன
சில அலைகள்
சில தூரம் கடந்து சிதைகின்றன
சில அலைகள்
கரையைத் தொட்டு
காணாமற் போகின்றன

தோன்றுவனவெல்லாம்
தொலைந்து போதல் நியதி.
அலைகள் சொல்லும் செய்தி!

-- சுப்ரமண்ய செல்வா -

(இன்று, 15/12/2016, காலை கடல் பார்த்து அமர்ந்திருந்த வேளை அலைகள் சொன்ன சேதி...