ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

பிற்போடும் பிணி

பிறகு...
அப்புறம்...
நாளை...
இன்னொரு நாள்...

நேரமில்லை.
'மூட்' இல்லை.
அவசரமில்லை.

காலந்தாழ்த்த
காரணமாயிரம்.

தள்ளிப்போடும் தருணங்களிலெல்லாம்
வாய்ப்புகளை வாரிக்கொண்டு
சொல்லிக்கொள்ளாமல் விரைகிறது
காலம்.

பிற்போடும் பிணி
பீடித்தோர்க்கு
சாண் ஏற முழம் சறுக்கும்
சாகசம் நிரந்தரம்.
- சுப்ரமண்ய செல்வா -

திங்கள், 19 பிப்ரவரி, 2018

இன்று உனது நாளையை சம்பாதித்தாயா?

இதோ! இன்றைய நாளின் நிறைவு நெருங்கிக்கொண்டிருக்கிறது.
எவ்விதம் கழிந்தது உனது நாள்?
நீ கடந்து செல்கையில் யாரேனும் களிப்படைந்தார்களா?
நீ நின்று பேசினாயென யாரேனும் நினைவில் கொண்டார்களா?
அன்பான சில வார்த்தைகள் உன்னைப்பற்றிச் சொல்ல
இங்கு யாரேனும் உள்ளார்களா?

உனது நண்பனுக்கு உற்சாக வணக்கம் சொன்னாயா? - அல்லது
கடமைக்கு கையசைத்து கடந்து போனாயா?
சுயநலமாய் விரைந்ததா இன்றைய நாள்?  அல்லது
யாருடைய நெஞ்சமேனும் உன் செயலால்
நன்றியால் நனைந்ததா?

இன்றைய நாளை வீணாக்கினாயா? இழந்தாயா?
நலமாய் நகர்ந்ததா? கடிதாய் கடந்ததா?
கருணைத் தடம்விட்டு வந்தாயா? காய வடு விட்டு கடந்தாயா?

இன்றிரவு உறக்கம் நாடி உன் விழிகள் மூடும்போது
இன்றைய உனது  உன்னதச் செயல்களினால்
இன்னுமொரு நாளையை நீ சம்பாதித்தாயென
கடவுள் களிப்புடன் சொல்வாரா?

மூலம்: Have You Earned Your Tomorrow By Edgar Guest
தமிழில்: சுப்ரமண்ய செல்வா

வியாழன், 15 பிப்ரவரி, 2018

வாழ்க்கையின் தருணங்கள்

வாழ்க்கையில் சில தருணங்களில் சிலரின் பிரிவு நம்மை அவ்வளவு பாதிக்கிறது, அவர்களை நாம் நம் கனவுகளிலிருந்து அள்ளியெடுத்து நிஜமாகவே ஆரத்தழுவ ஆசைப்படுகிறோம்.

ஒரு சந்தோஷக்கதவு மூடிக்கொள்ளும் போது இன்னொன்று தானாக திறந்து கொள்கிறது. ஆனால் நாம் அநேக வேளைகளில் மூடிய கதவையே பார்த்துக் கொண்டிருப்பதால் திறந்திருக்கும் கதவை கவனிக்க தவறிவிடுகிறோம்.

வெளித்தோற்றத்தில் மயங்கி விடாதீர்கள். அவை உங்களை ஏமாற்றிவிடும். செல்வத்தில் மயங்கி விடாதீர்கள். அவை கூட மறைந்து விடும். உங்களை புன்னகைக்க வைக்கக்கூடியவரை தேடுங்கள். ஏனெனில் புன்னகையால்தான் ஒரு இருண்ட நாளை ஒளிமயமாக்க முடியும். உங்கள் உள்ளங்களை புன்னகைக்க வைக்கக் கூடிய உறவைத் தேடுங்கள்.

விரும்பிய கனவுகளைக் காணுங்கள். விரும்பிய இடத்திற்கெல்லாம் செல்லுங்கள். என்னவாக விரும்புகின்றீர்களோ அவ்வாறே ஆகுங்கள். ஏனெனில் இவையனைத்தையும் செய்ய உங்களுக்கு இருப்பது ஒரு வாழ்க்கை, ஒரு வாய்ப்பு.

வாழ்க்கை உங்களை இனிமையானவராக்க இன்பத்தை தரட்டும்; வலிமையுள்ளவராக்க சோதனைகளைத் தரட்டும்; பணிவுள்ளவராக்க துயரங்களைத் தரட்டும்; மகிழ்ச்சிமிக்கவராக்க நம்பிக்கைகளைத் தரட்டும்.

எல்லா பெருமகிழ்ச்சிமிக்கவர்களும் எல்லா சிறப்புகளையும் பெற்றவர்கள் அல்ல; அவர்கள் கிடைத்ததை சிறப்பாக்கிக் கொண்டவர்கள்.

எப்போதும் மறக்கப்பட்ட கடந்தகாலத்திலேயே ஒளிமயமான எதிர்காலம் தங்கியிருக்கிறது. நேற்றைய தோல்விகளையும், வேதனைகளையும் சுமந்தவாறு நாளையை நோக்கி நடைபோட முடியாது.

நீங்கள் பிறந்தபோது நீங்கள் அழுதீர்கள்; சுற்றியிருந்தோரெல்லாம் புன்னகைத்தார்கள். நீங்கள் இறக்கும்போது நீங்கள் புன்னகையோடு விடைபெறக்கூடிய, உங்களைச் சுற்றியிருப்போரெல்லாம் அழக்கூடிய ஒரு வாழ்க்கையை இறுதிவரை வாழுங்கள்.

வருடங்களை கணக்கிடாதீர்கள்; நினைவுகளை கணக்கிடுங்கள்.

வாழ்க்கையின் அர்த்தம் எத்தனை முறை சுவாசிக்கிறோம் என்பதில் அல்ல, எத்தனை முறை மூச்சுவிட மறந்து வியந்து நிற்கிறோமோ அந்த அற்புதத் தருணங்களில் இருக்கிறது.

(வாசித்து சேமித்து வைத்தது. ஆங்கில மூலம் எழுதியது யாரென்று தெரியவில்லை.
தமிழிலில்: சுப்ரமண்ய செல்வா)

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

நானும் மனிதனே

உன் நெற்றித் திருநீறு கடந்து
உன் தொப்பி கடந்து
உன் தாடி கடந்து
உன் சிலுவை கடந்து
உன்னை என்னால்
நேசிக்க முடியுமெனில்
நானும் மனிதனே!
- சுப்ரமண்ய செல்வா -  

உலகம் உங்கள் கண்ணாடி

நீங்கள் மற்றவர்களில் காணும் நல்லவைகள் உங்களிடமும் இருக்கின்றன.
நீங்கள் மற்றவர்களில் காணும் தவறுகள் உங்களிடமும் இருக்கின்றன.
ஏனெனில் ஒன்றை அடையாளம் காண வேண்டுமெனில், ஏற்கனவே அது உங்களுக்கு தெரிதிருக்க வேண்டும் அல்லவா!
நீங்கள் மற்றவர்களில் காணும் மகத்தான சாத்தியக்கூறுகள் உங்களாலும் சாத்தியமே.

உங்களைச் சுற்றிலும் நீங்கள் காணும் அழகு உங்கள் அழகே.
உங்களைச் சுற்றிலும் நீங்கள் காணும் உலகு உங்களின் பிரதிபலிப்பே;
அது உங்களை உங்களுக்கு காட்டும் கண்ணாடி.

உலகை மாற்ற வேண்டுமெனில் முதலில் உங்களை மாற்றுங்கள்.
பழிபோடுவதாலும், குறை கூறுவதாலும் ஆவது ஒன்றும் இல்லை.
உங்கள் கருத்துகளுக்கு நீங்களே பொறுப்பாளிகள்.
நீங்கள் மற்றவர்களில் காண்பவை உங்களை உங்களுக்கு காண்பிக்கின்றன.
மற்றவர்களில் நல்லதை காணுங்கள். நீங்கள் உங்களை மிகச் சிறந்தவராய் காண்பீர்கள்.
மனமுவந்து ஈனுங்கள்.  நீங்கள் உங்களுக்கே கொடுக்கின்றீர்கள்.

அழகை ஆராதியுங்கள்;  நீங்கள் அழகாகுவீர்கள்.
படைப்பாற்றலை போற்றுங்கள்; படைப்பாளியாவீர்கள்.
நேசியுங்கள்;  நேசிக்கப்படுவீர்கள்.
புரிந்துகொள்ள முயலுங்கள்;  புரிந்துகொள்ளப்படுவீர்கள்.
செவிகொடுங்கள்;  உங்கள் குரல் செவிமடுக்கப்படும்.
கற்றுக்கொடுங்கள். கற்றுக்கொள்வீர்கள்.

உங்களின் சிறந்த முகத்தை கண்ணாடி முன் காட்டுங்கள்.
உங்களை திருப்பி நோக்கும் முகத்தைப் பார்த்து ஆனந்தப்படுவீர்கள்.

(ஆங்கில மூலம் எழுதியவர் யாரென்று தெரியவில்லை.
தமிழில்: சுப்ரமண்ய செல்வா)

நான் நீயாயின்

காட்சி ஒன்றாயினும்
காணும் நீயல்ல நான்

நம்மறிவு
நம்மனுபவம்
நம்முணர்வு
வெவ்வேறு

நீ காணும் உலகை
நின் விழி வழியே
நான் காணும் நாளில்
நான் நாமாகும்
மாயம் நிகழும்!

- சுப்ரமண்ய செல்வா - 

வியப்பு

விபத்துதான் நம் சந்திப்பு
உன்னால் மட்டும் எப்படி
காயப்படாமல்
கடந்து செல்ல முடிந்தது...!?
- சுப்ரமண்ய செல்வா -

கடமை

வனப்புமிகு வனம் என்னை வசீகரிகறிக்கிறது.
ஆயினுமிது தாமதிக்கும் தருணமல்ல.
நிறையவிருக்கின்றன நான்
நிறைவேற்றக் காத்திருக்கும் வாக்குறுதிகள்.
தொலைதூரம் செல்ல வேண்டும் நான் துயில்கொள்ளும் முன்
ஆம்
தொலைதூரம் செல்ல வேண்டும் நான் துயில்கொள்ளும் முன்.

(Robert Frost அவர்களின் 'Stopping by the woods on a snowy evening' கவிதையில் ஒரு பகுதி
தமிழில்: சுப்ரமண்ய செல்வா)


உங்கள் மீது பதிந்த சிறு விழிகள்...


அந்தச் சின்னஞ்சிறு விழிகள்
உங்களையே கவனிக்கின்றன
இரவும் பகலும் எப்பொழுதும்.

அந்தச் சின்னஞ்சிறு செவிகள்
திறந்தேயிருக்கின்றன
உங்களது ஒவ்வொறு சொல்லையும்
உடனுக்குடன் உள்வாங்க.

அந்தச் சின்னஞ்சிறு கரங்கள்
பரபரக்கின்றன
நீங்கள் செய்வதத்தனையையும் செய்வதற்காக.

அந்தச் சின்னஞ்சிறு மனது
கனவு காண்கிறது
உங்களைப்போல் உருவாகும்
அந்த ஒரு நாளுக்காக.

நீங்களே அவனின் நாயகன்; நீங்களே
அறிவாளிகளுக்கெல்லாம் அறிவாளி.
ஐயமேதும் இல்லை உங்களில்
அந்த சின்ஞ்சிறு நெஞ்சினில்.

முற்றுமுழுதாய் அவன் நம்புகின்றான்;
நீங்கள் சொல்வதனைத்தையும்
நீங்கள் செய்வதனைத்தையும்.
உங்களைப்போல் ஒருநாள் பெரியவனாகி
உங்களைப்போலவே பேசுவான்
உங்களைப்போலவே நடப்பான்.

அகல விழி திறந்த அந்தச் சிறுவன்
நம்புகிறான்
நீங்கள் எப்பொழுதும் சரியென்று.
உங்கள்
ஒவ்வொறு வாக்கும் திருவாக்கே
ஒவ்வொறு செயலும் நற்செயலே.

அந்த சின்ஞ்சிறு விழிகள்
திறந்தேயிருக்கின்றன.
இரவும் பகலும் எப்பொழுதும்
உங்களையே அவை கவனிக்கின்றன.

ஒவ்வொறு நாளும்
உங்கள் எல்லா செயல்களிளும்
தடம்விட்டுச் செல்கிறீர்கள் நீங்கள்.
உங்களைப்போல் வளரக் காத்திருக்கும்
அந்தச் சின்னஞ்சிறு கால்கள்
உங்கள் தடம்பற்றியே நடக்கும்.

(ஆங்கில மூலக்கவிதையை எழுதியது யாரென்று தெரியவில்லை.
தமிழில்: சுப்ரமண்ய செல்வா)

கற்பிப்போர் கவனத்திற்கு

(ஹிட்லரின் நாஜி வதை முகாமிலிருந்து உயிர்பிழைத்த ஒரு பள்ளி அதிபர் கல்வியாளர்களுக்கு எழுதிய கடிதம்).

அன்புள்ள ஆசிரியர்களுக்கு, நான் நாஜி சித்திரவதை முகாமிலிருந்து உயிர்பிழைத்தவன். வேறு எவரும் காணக்கூடாத காட்சிகளை எனது கண்கள் அங்கு கண்டன. படித்த பொறியியலாளர்களால் கட்டப்பட்ட நச்சு வாயு அறைகள்; படித்த மருத்துவர்களால் நஞ்சூட்டப்பட்ட சிறுவர்கள்; தாதிகளால் கொல்லப்பட்ட சிசுக்கள்; பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கல்வி கற்ற ஆயுதப்படையினரால் கொல்லப்பட்ட பெண்களும், குழந்தைகளும். எனவே நான் கல்வியின் மீது மிகுந்த சந்தேகம் கொள்கிறேன்.

எனவே ஆசிரியர்களே! எனது வேண்டுதல் என்னவெனில் உங்கள் மாணவர்கள் நல்ல மனிதர்களாக உருவாக உதவுங்கள். உங்கள் உழைப்பு மெத்தப் படித்த அரக்கர்களையும், திறமையான உளநோயாளர்களையும் உருவாக்கக் கூடாது. எழுத்தும், வாசிப்பும், கணிதமும், சரித்திரமும் மாணவர்களை நல்ல மனிதர்களாக ஆக்கினால் மட்டுமே பயன் மிகுந்ததாக இருக்கும்.

(Excerpt from the book 'Teacher and Child' by by Dr. Haim Ginott, Child Psychologist and Author)

தமிழில் : சுப்ரமண்ய செல்வா #செல்வாசகம்