சனி, 21 ஏப்ரல், 2018

கசப்பினிமை

நீ கையசைத்து
கடந்து சென்ற காட்சி
கடலடி பாறையாய்
கனத்துக்கிடக்கிறது

ஏனோ நீ
பள்ளிக்கூட வாசலில்
துள்ளிப் பிரியும்
நினைவு வந்து போகிறது
பள்ளியிலிருந்து தினமும்
இல்லம் திரும்புவாய்

விடுபட மறுத்த
உன் விரல்களை
வலிய பிரித்து
நடந்தபோது
உவகையும் வெறுமையும்
பெருமிதமும் பிரிதுயருமென
வித்தியாச அவஸ்தையில்
விம்மித் தணிகிறேன்

மகளே
கண்ணீர் கலந்த
என் பெருமூச்சு
சுமந்து வருகிறது
உனக்கான
வாழ்த்துக்களையும்
பிரார்த்தனைகளையும்

-  சுப்ரமண்ய செல்வா -

(அண்மையில் மகளை மணமுடித்துக் கொடுத்த நண்பன் சந்திராவுக்கு)

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

உன்னால் முடியுமெனில்...

கசக்கிய மலரை
மீண்டும் பொருத்தி
மலர்வி

கொட்டிய ரத்தத்தை
மீள் செலுத்தி
காயங்களழி

விடுவித்த உயிரை
சிறைபிடி

அந்தத் தாயை
மனைவியை
சகோதரியை
மகளை
மாசற்று
திருப்பிக்கொடு

உன்னால் முடிகின்ற
அந்நாளில்
நீசனே
வன்புணர்!

- சுப்ரமண்ய செல்வா -

[உலகெங்கும் உருக்குக்குலைக்கப்படும்
ஹசீபாக்களுக்கும், ஹாசினிகளுக்கும் சமர்ப்பணம்]

வியாழன், 19 ஏப்ரல், 2018

முகம் தொலைத்த பூமி

முதற்கல்லை எறியும்
ஆணை வந்ததும்
எல்லோரும் குனிந்து
தமக்கான கல்லை
பொறுக்கத் தொடங்கினர்

ஆண்டவர் அதிர்ந்தார்.

'என்ன...
எல்லோரும் புனிதரா இங்கு?'

நெருங்கி நோக்கினார்.

அத்தனையும்
புனித முகமூடிகள்...
அக அழுக்குகளின்
அடிச்சுவடு மறைத்து
வண்ண வண்ண
சாயம் பூசி
நாட்கணக்கில்
நகாசு செய்து
அசலை விஞ்சிய
அழகு முகமூடிகள்

ஆண்டவரே கொஞ்சம்
மயங்கித்தான் போனார்

முகம் மறந்த
முகமூடிகள் கூட்டம்
குற்றம் சுட்டி ஆர்ப்பரித்தது

ஆண்டவர் அவளிடம் சொன்னார்:
'முகம் தொலைத்த பூமியில்
முகங்காட்டும் நீ நிர்வாணி;
நீயுமொரு புனித முகமூடி தரி
உன் பாவங்கள் மறைக்கப்படலாம்'. 

புதன், 18 ஏப்ரல், 2018

எந்த நட்சத்திரம் நீ

அன்றும் இதே போன்ற ஒரு இரவு
நிலவைத் தொலைத்த வானம்
நீளும் கடற்கரை
முகம் மறைக்கும் கும்மிருட்டு
ஆர்ப்பரிக்கும் கடல்
நானும் நீயும் தனியே

மணலின் ஈரம் மனதை நனைக்க
மெளன நடை

நம் அந்தரங்கம் மதித்து
நண்டுகள்கூட தம் பொந்துக்குள்
முகம் புதைத்துக்கொண்டன

மணல் நடையில் சமனிழந்து
உரசி விலகும் நம் உடல்களிலிருந்து
உருகி வழிந்த பேரன்பில்
அந்த இரவு ஈரமானது

இணைந்த விரல்களினூடே
எண்ணற்ற கனவுப்பறிமாற்றம்
வாய்மொழியற்ற சம்பாஷணை

ஊடலும் பின் கூடலுமாய்
உயிர்ப்போடுலவிய
நெடுங்காதல் பாயணம்
இது போதுமென
இரு மனங்களும் சொல்லும்
ஓர் இலையுதிர்கால நாளில்
பழுத்த இலைகள் இரண்டு மெதுவாய்
மிக மெதுவாய் மரத்திலிருந்து
விலகிச் செல்வதுபோல்
விரல்கோர்த்து ஒன்றாய்
விடைபெறும் நம்
கடைசிக் கனவு மட்டும்
கைகூடாமலே போனது

இதோ இன்னுமொரு
நிலவைத் தொலைத்த இரவு
நிலா முற்றத்தில் மல்லாந்து
விழித்துக் கிடக்கிறேன்
எண்ணற்ற நட்சத்திரங்களில்
எந்த நட்சத்திரம்
நீ.

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

கானகத் தீர்மானம்

மலரைக் கசக்கி
மகிழும் வக்கிரம்
மனிதருக்கு மட்டுமே

பிறகேன் எம்மை
வம்புக்கிழுக்கின்றீர்

எங்களில் எவரும்
தங்கள் பெண்டிரை
கூடியென்ன
தனியேயேனும்
சிதைப்பதில்லை

எனின்
மிருங்கங்கள் போலென
எங்ஙனம் உரைப்பீர்

ஆதலினால் இனி
குரூரத்திற்கு உவமையாய்
மனிதரைக் கொள்வதென
மாக்கள் கூடி
முடிவு செய்தோம்.

- சுப்ரமண்ய செல்வா -

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

ஆதலினால் காத்திரு

கடிகாரத்தை பரிசளிக்கும்
உன் சூசகம் அறிவேன்.

காலதாமதங்களுக்கு
கடிகாரமெனில்
என்
காலந்தவறாத வருகைகளுக்கு
பரிசாய்
என்ன தருவாய்

எனக்கான
உன் காத்திருப்பின்
இடைவெளியை
நிரப்பிக்கொண்டிருக்கும்
என் காதலை
கவனிக்கவில்லையா நீ

நீதானே சொல்வாய்
காத்திருத்தலில்
உயிர்த்திருக்கிறது
உன் காதலென்று

நிமிடங்களும் மணிகளும்
கால நெடுங்கணக்கின்
சிறு பின்னங்கள்

உன்னை அடைதலுக்கான
என் காத்திருப்பு
யுகங்கள் பல கடந்ததென்பதனை
அறிவாயா

ஆதலினால் காத்திரு.

- சுப்ரமண்ய செல்வா -