ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

ஈகோ நல்லது

என்ன.. ஈகோ நல்லதா? வியப்பாக இருக்கிறதா?  ஆம்! ஈகோ நல்லது.
ஈகோ என்பது ஆங்கிலச் சொல்.  அதன் ஆங்கில விளக்கத்தை தேடியபோது ஆச்சரியம் காத்திருந்தது. முன்னணி ஆங்கில அகராதிகளில் காணப்படும் அர்த்தங்கள் இவை:
Oxford: a Person's self-esteem or self-importance (ஓருவரின் சுயமதிப்பு அல்லது சுய முக்கியத்துவம்)
Cambridge: Your idea or opinion of yourself, especially your feeling of your own importance and ability (உங்களைப்பற்றி நீங்கள் கொண்டுள்ள அபிப்பிராயம், குறிப்பாக உங்கள் முக்கியத்துவம், திறமை பற்றிய உங்கள் எண்ணம்)
Collins: Sense of one's own worth (தனது சுயமதிப்பு பற்றிய ஒருவரின் உணர்வு)
Marriam Webster: The opinion that you have about yourself (உங்களைப்பற்றி நீங்கள் கொண்டுள்ள அபிப்பிராயம்)

இப்போது சொல்லுங்கள்.  ஈகோ தேவையா? இந்த அர்த்தங்களில் அடிப்படையில் ஒருவருக்கு ஈகோ தேவையா என்றால் நிச்சயம் தேவை.

உண்மையில் நம்மைப் பற்றிய பிறரின் அபிப்பிராயத்தைவிட நம்மைப் பற்றிய நமது அபிப்பிராயமே முதன்மையானது.

'உலகம் ஆயிரம் சொல்லட்டுமே... உனக்கு நீயே நீதிபதி' என்று கவிஞர் கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல் ஒன்று உண்டு.  ஆம்! நமக்கு நாமே நீதிபதியாக இருக்கும்போதுதான் நம்மை நாமே சீர்தூக்கிப் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.  அந்த அறிதலால் எம் எண்ணங்களில், பேச்சில், செயல்களில் ஏற்படும் மாற்றமானது பிறரிடம் நம்மைப்பற்றிய நல்லபிப்பிராயத்தை இயல்பாகவே ஏற்படுத்தும்.

நம்மை நாம் அறிவது எப்படி? அதற்கு அகப்பயணம் அவசியமாகிறது. நமது சொல், செயல் முதலிய புற மாற்றங்கள் நமது சிந்தனை, எண்ணங்கள் ஆகிய அக மாற்றங்களின் வெளிப்பாடன்றி வேறில்லை.

'வெளியே பார்ப்பவன் கனவு காண்கிறான்;  உள்ளே பார்ப்பவன் விழித்துக் கொள்கிறான்' என்கிறார் பிரபல மனோவியலாளர் கார்ல் யுங்க்.  'உன்னையே நீ அறிவாய்' என்றும் 'ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்ற வாழ்க்கை' என்றும் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிச் சென்றிருக்கிறார் கிரேக்க ஞானி சாக்ரடீஸ்.  'ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்' என்கிறார் திருவள்ளுவர்.
'தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே' என்று தன்னை அறிந்த ஒருவன் பிறர் வழிபடும் அளவுக்கு உயர்வான் என்கிறது திருமந்திரம்.

தினமும் சில நிமிடங்களை ஒதுக்கி, தனிமையில் அமைதியாக அமர்ந்து நான் யார்? நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? எனது கடமைகள் என்ன? எனது குறைகள் எவை? அவற்றை களைவது எப்படி? நிறைகள் எவை? அவற்றை வளர்த்துக்கொள்வது எப்படி? எனது தனித்துவமிக்க திறமைகளைக் கொண்டு சக மனிதர்களின் வாழ்வின் வளத்திற்கு என்னால் எப்படி பங்களிக்க முடியும்? போன்ற கேள்விகளுக்கு பதில் தேடத் தொடங்கினால், சில நாட்களிலேயே நமது வாழ்வில் மகத்தான மாற்றங்கள் ஏற்படுவதை உணரலாம்.

மனவளக்கலை யோகாவில் 'அகத்தாய்வு பயிற்சிகள்' என்று முறையான தற்சோதனைப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.  இது போன்ற முறையான பயிற்சிகள் மூலம் நம்மைப் பற்றி நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

நம்மைப் பற்றிய அறிதலும், புரிதலும் நம்மைப் பற்றிய அபிப்பிராயத்தை நமக்குள் ஏற்படுத்துகிறது. அதுவே நமது ஈகோவாக உருவாகிறது. அத்தைகைய ஈகோ இல்லாத ஒருவரை நாம் எங்கும் காண முடியாது. உண்மையில் ஈகோ நம் மனதின் முதுகெலும்பு.  உடலளவில் நாம் நிமிர்ந்து நிற்பதற்கு காரணம் நமது முதிகெலும்பெனில் மனதளவில் நான் நிமிர்ந்து நிற்பதற்கு காரணம் நமது ஈகோ, அதாவது நமது சுயமதிப்பு.  சுயமதிப்பே தன்னம்பிக்கையின் அஸ்திவாரம்.  தன்னம்பிக்கையே நம்மை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் உந்துசக்தி.  இத்தகைய ஈகோவை 'நேர்மறை ஈகோ' (Positive Ego) என்று சொல்லலாம்.

எனின், எது 'எதிர்மறை ஈகோ' (Negative Ego)?

வேதாத்திரி மகரிஷி அவர்கள் இதனை எளிமையாக விளக்குகிறார். எதிர்மறை ஈகோவுக்கு அவர் பயன்படுத்தும் தமிழ்ச்சொல் 'தன்முனைப்பு'.  அவர் அதனை 'நான்', 'எனது' என்கிற இரண்டு செருக்கு மனநிலைகளாக பிரிக்கிறார்.  'நான்' என்பது அதிகாரப் பற்றினாலும், 'எனது' என்பது பொருள் பற்றினாலும் உண்டாவதாக அவர் பகர்கின்றார். 

'நான் சொல்வது சரி' அல்லது 'எனக்குத் தெரியும்' என்பது நேர்மறை ஈகோ.  'நான் சொல்வது மட்டுமே சரி' அல்லது 'எனக்கு மட்டுமே தெரியும்' எனபது எதிர்மறை ஈகோ.  பல்லின மக்கள் வாழும் இவ்வுலகில் எனது இனம், மொழி, மதம் மட்டுமே உயர்ந்தது என எண்ணுவது, நிலைநாட்ட முயல்வது எதிர்மறை ஈகோ.

சுருக்கமாக சொல்வதாயின் நமது சுயமதிப்பின் வெளிப்பாடு (ஆது வாய்மொழியற்றதாகக் கூட இருக்கலாம்) மற்றவரின் சுயமதிப்பை காயப்படுத்தும்போது அது எதிர்மறை ஈகோவாகிறது. தான் பெற்றுள்ள கல்வி, அறிவு, அந்தஸ்த்து, பதவி, அதிகாரம் போன்றவற்றை கொண்டு பிறரை சிறுமைபடுத்துகின்ற உயர்மனச் சிக்கல் அது.  இது ஆங்கிலத்தில் egotism எனப்படும். பெரும்பாலான ஆங்கில-தமிழ் அகராதிகளில் Egoவிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் தமிழ் அர்த்தம் (தற்பெருமை, நான் என்னும் அகங்காரம், தன்முனைப்பு, சுயநலம், ஆணவம், கர்வம், திமிர், தன்னை மட்டும் மையப்படுத்திய பேச்சு/செயல்) இதற்கு பொருந்தும்.  உண்மையில் இது ஒரு தற்காதல் நிலை. தன்னை மையப்படுத்தி சிருஷ்டித்த அந்த கற்பனை உலகில் வேறு எவருக்கும் இடமிருப்பதில்லை.  அதனால்தான் எதிர்மறை ஈகோவினால் மிக நெருங்கிய உறவுகளில்கூட  இடைவெளி ஏற்படுகிறது; சில வேளைகளில் பிரிவும் நிகழ்கிறது.

நமது கட்டுப்பாட்டுக்குள் இருப்பது நேர்மறை ஈகோ.  தனக்குத் தானே உணவாகி கட்டற்று பெருகி தனிமைப்பட்டு போவது எதிர்மறை ஈகோ.

எனவே மற்றவர்களை பாதிக்காத, நமக்கு தன்னம்பிக்கையூட்டுகிற ஈகோ நல்லது.   அது நமது வளர்ச்சிக்கு அத்தியாவசியமும் கூட.

(நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் - 23.09.2018)

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

எதனை நோக்கிய ஓட்டம் இது?

ஒரு நண்பர் ஓட்டிச்சென்ற வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தேன்.  சாலை சமிஞ்சை விளக்குகளை தாண்டி ஒரு குறுகலான பாதையில் நுழைந்தோம். பின்னால் வந்த வண்டி தொடர்ந்து ஒலிப்பான் எழுப்பி எங்களை முந்த முயன்று கொண்டிருந்தது. எதிர்புறம் தொடர்ந்து வண்டிகள் வந்து கொண்டிருந்ததால் பின்னால் வந்த வண்டிக்கு முந்திச் கெல்ல இடம் கொடுக்க முடியவில்லை.  நிலைமை அறிந்தும் துரத்தும் வண்டிக்காரர் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார். எங்களால் இதை விட வேகமாக செல்வதும் சாத்தியமில்லை. சிறிது தூரம் பயணித்த பின் கிடைத்த ஒரு சிறிய வெற்றிடத்தில் வண்டியை ஒதுக்கி நிறுத்தி பின்னால் வந்த வண்டி முந்திச்செல்ல இடம் கொடுத்தார் நண்பர். நன்றி சொல்ல வேண்டிய அந்த ஓட்டுநர் கையை நீட்டி ஏதோ வசை சொல் வீசிச் சென்றார். எதுவும் நடவாதது போல் நண்பர் வண்டியை ஓட்டத் தொடங்கினார். அவரின் எதிர்வினை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இவ்வாறான சூழ்நிலைகளில் பொதுவான எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆத்திரப்படுவது, திருப்பிக் கத்துவது, முடிந்தால் துரத்திச் சென்று அந்த வண்டியை முந்தி சண்டையிடுவது போன்றவைதான் பொதுவான எதிர்வினைகள்.

எனது எண்ணவோட்டத்தைப் புரிந்து கொண்ட நண்பர் சொன்னார்:
"அந்த இடத்தில் ஒதுங்கி இடம் கொடுத்ததால் நான் எதையும் இழக்கவில்லை. ஆனால் அவருடன் நான் போட்டி போட்டு இருந்தாலோ, வேகமாக செல்ல முயற்சித்திருந்தாலோ எனக்குள் பதற்றம் அதிகரித்து எனது மன அமைதியை இழந்திருப்பேன்.  அது நாம் இப்போது சென்று கொண்டிருக்கும் நமது வணிக சந்திப்பில் எனது பங்களிப்பை மிகவும் பாதித்திருக்கும். அதன் விளைவு எனது வியாபார இழப்பாக கூட அமையலாம்"

எத்துணை பேருண்மை! நமது வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தக் கூடிய உண்மை இது.

இப்படித்தான் நாம் பல சந்தர்ப்பங்களில் சூழ்நிலைகளும், மனிதர்களும் நம்மை எதிர்மறை எதிர்வினையாற்ற அனுமதித்து நமது அமைதியை இழந்து தவிக்கிறோம்.

நமது இந்த குறைபாட்டை சரி செய்து கொள்வது எப்படி? நமது எதிர்வினைகள் நமது அமைதியை கெடுக்காமல் பார்த்துக் கொள்வது எப்படி? அதனால் ஏற்படும் இழப்புகளில் இருந்து எம்மை காத்துக் கொள்வது எப்படி?

இதற்கு மனித இருப்பு பற்றிய, மனித வாழ்வின் நோக்கம் பற்றிய புரிதல் அவசியமாகிறது.

'மனிதன் என்பவன் இயற்கை நியதிக்குட்பட்ட பரிணாமமே தவிர, அவன் சிறப்பான சிருஷ்டி ஏதும் அல்ல.' என்கிறார் ஜேம்ஸ் ஆலன். இயற்கை நியதிக்கு உட்பட்டு வாழுகின்ற இயல்பான வாழ்வில் முரண்களுக்கு இடமில்லை. மனிதனைத் தவிர மற்ற எல்லா உயிரினங்களும் அத்தகைய இயற்கையோடு இசைந்த இயல்பான வாழ்க்கையையே வாழுகின்றன. ஒரு மான் இன்னொரு மானுடைய கொம்பின் நேர்த்தியை பார்த்து பொறாமை கொள்வதில்லை. அதனுடைய காலை முடமாக்கி தன்னிலும் கீழானதாக அதனை ஆக்க சதித்திட்டம் தீட்டுவதில்லை. ஒற்றை பூ மலர்ந்த ரோஜா செடி கொத்துக் கொத்தாய் மலர்ந்திருக்கும் தன் பக்கத்து ரோஜா செடியைப் பார்த்து காழ்ப்புணர்ச்சி கொள்வதில்லை. தன்னிலிருந்து உதிர்ந்த மலர்களையிட்டு கவலைப்பட்டு கண்ணீர் விடுவதில்லை மரம். எஞ்சிய மலர்களிலிருந்து  தோன்றும் பிஞ்சுகளை காய்களாகவும், கனிகளாகவும் ஆக்குவதில் அது கவனம் செலுத்துகிறது. அதற்குத் தெரியும் அடுத்த இளவேனிற் காலத்தில் தன்னில் மீண்டும் பூக்கள் பூக்கும் என்று.  அதற்கு முன் வெட்டப்பட்டாலும் அது மனமுடைந்து சோர்ந்து போவதில்லை. தன்னை மீண்டும் துளிரச் செய்யும் முயற்சியிலிருந்து பின்வாங்குவதில்லை.

விலங்குகளும் மனிதருக்கு கற்றுத் தரும் பாடங்கள் மகத்தானவை.  அவை ருசிக்காகவன்றி பசிக்காகவே உணவைத் தேடுகின்றன. அதனையும் அளவுக்கு மீறி உண்டு அவஸ்த்தைப்படுவதில்லை.  மனிதருக்கு அரிதாக இருந்து இன்று சர்வசாதாரணமாக ஆகிப்போன நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் அவை துன்புறுவதில்லை.  நாளைய தினத்தைப் பற்றிய அச்சங்களாலும், கவலைகளாலும் அல்லறும் மானிடரைப் போலன்றி,  அவை எவ்வித எதிர்பார்ப்புமின்றி இன்றைய தினத்தை இயற்கையோடு இசைந்து கழிப்பதால்,  இன்றைய மனிதர்களின் சாபங்களான பதற்றம் (tension), மனவழுத்தம் (stress) போன்ற மனநோய்களால் அவை பாதிப்படைவதில்லை.

சிந்தனையாற்றலை பெரும் வரமாய் பெற்ற மனிதன் மற்ற உயிரினங்களைவிட சிறப்பாய் வாழ வேண்டாமா? உடல், மன ஆரோக்கியத்தில் உச்சத்தில் இருக்க வேண்டாமா?  எங்கு தொலைத்தோம் நாம் வாழ்க்கையை?

மனிதன் மனிதனாக வாழாமல் தன் இயல்பிலிருந்து மாறிப் போனதின் விளைவு இது.

எனின் எது மனித இயல்பு?

'மனது இதமானவனே மனிதன்' என்கிறார் வேதாத்திரி மகரிஷி.  இதமான மனது இன்பம், துன்பம் ஆகிய இரண்டும் அற்ற நிலை.    உண்மையில் இன்பம், துன்பம் இரண்டுமே உணர்ச்சி எழுச்சி நிலைகள். துன்பமானது வலியையும், வேதனையும் தருவதைப் போலவே இன்பமும் அதன் உடையும் புள்ளியை கடக்கும்போது துன்பமாக மாறுகிறது. இனிப்புப் பண்டமொன்று உண்ணும்போது இன்பம் தருகிறது என்பதற்காக தொடர்ந்து சாப்பிட்டால் ஒரு புள்ளிக்கப்பால் குமட்டல் எடுத்து துன்பமாக மாறுகிறது. உண்மையில் எல்லா இன்பங்களும் இத்தகையனவே. ஒரு புள்ளியை கடக்கும்போது சலிப்பாக மாறுகிறது. நீடித்த சலிப்பும் ஒருவித துன்பமே.  இந்த இருவித உணர்ச்சி எழுச்சி நிலைகளுமற்ற ஒருவித சுகமான அதேவேளை  கட்டுக்கடங்கிய இன்ப நிலையே இதமான மனநிலை.  காலநிலையில்கூட அதிக வெப்பமோ, அதீத குளிரோ அற்ற மிதமான காலநிலையையே நாம் விரும்பிகிறோம்.  அது நமக்கும் இதமாக இருப்பதே அதற்கு காரணம்.

அத்தகைய இதமான மனநிலையை நிலையாக தக்க வைத்துக்கொள்ள வேண்டுமாயின் அதீத இன்பம் தருகின்ற (அதுவே துன்பமாக மாறும்) புலன் நுகர்ச்சியிலிருந்தும்,  மனதின் சமநிலையைக் குலைக்கின்ற கோபம், பொறாமை, கவலை, அவசியமற்ற அச்சம் போன்ற மனக்குறைகளிலிருந்தும் விடுபட வேண்டும்.  இதமான மனது அமைதியின் இருப்பிடமாகும்.  ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் நாம் படிப்பது, தொழில் செய்வது, சம்பாதிப்பது முதலிய நமது அனைத்து செயல்களும் இதனை நோக்கியதே என்பது புரியும். அமைதியே வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சாணி. அமைதியை நமது வாழ்க்கையின் மையப்புள்ளியாக மாற்றிக்கொள்ளும்போது நமது இருப்பு அர்த்தம் பெறுகிறது. அதற்கான எளிய வழி நமது அமைதியை குலைக்கின்ற பொருள், மனிதர், சூழ்நிலை, அவை எத்தனை பெறுமதிமிக்கதாய் இருப்பினும், அவற்றிலிருந்து விலகிச் செல்வதே.

இதமான மனது சக மனிதர் மீதும், ஏன் எல்லா உயிர்கள் மீதும் எல்லையற்ற அன்பு கொள்ளும். பிறர் துயரை தன் துயராய் கொண்டு கலங்கும்; அந்த துயரை துடைக்க முயலும்.  எல்லோரும் இன்புற்றிக்க நினைக்கும்.
மற்றவரை மகிழ்வித்து, அந்த மகிழ்ச்சியில் ஆனந்தம் அடையும்.

உணர்ச்சி வசப்படாது நேர்மறை எதிர்வினையாற்றுகின்ற ஒருவரின் இதமான மனநிலை மற்றவரையும் பற்றிக்கொள்ளும். அது பல்கிப் பெருகி இவ்வுலகில் அன்பும், கருணையும் அரிதான ஒன்று என்கிற நிலை மாறி இயல்பான ஒன்றாகும்.

இதுவே மனித இருப்பின் அர்த்தம்;  மனித வாழ்வின் நோக்கம்.  இந்த பிரபஞ்சத்தின் வயதோடு ஒப்பிடும்போது மனித வாழ்க்கையின் காலம் மிக மிகக் குறுகியது. எல்லையற்ற இந்த இயற்கை இதமான மனதினராய் மனிதர் வாழ எல்லா பாடங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றை தேடிப் படித்து பின்பற்றும் போதும் அந்த குறுகிய காலத்திற்குள் நீண்ட சரித்திரம் படைப்பது நம் எல்லோருக்கும் சாத்தியமாகும்.

(நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் - 09.09.2018)