திங்கள், 21 ஜனவரி, 2019

சிந்தித்தால் சிறப்பு வரும்

காலை நடைப்பயிற்சி செல்லும்போது வெள்ளவத்தை கடற்கரைச் சாலையில் அந்த நண்பரைக் காண்பதுண்டு.  எதிர்த் திசையிலிருந்து வேகமாக வந்துகொண்டிருப்பார்.  ஒரு முகமன் புன்னகையோடு கடந்து செல்வார்.  சில நாட்களில் அதுவும் இல்லை.  முன்பின் அறிமுகம் இல்லாதவரை பார்க்கும் ஒரு வெறுமைப் பார்வையை விட்டுச் செல்வார். அவரைத் தொடர்ந்து சிறிது தொலைவில் அவரது நண்பர்கள் ஐந்தாறு பேர் கூட்டமாக நடந்து வருவார்கள்.  உரத்த பேச்சும், சிரிப்பும் என அவர்கள் நடை கலகலப்பாய் இருக்கும்.  எதிரில் அறிந்தவர்கள் வந்தால், நின்று அவர்களுடன் அலவலாவி தொடர்வார்கள்.  முன்பு குறிப்பிட்ட நண்பர் ஏன் இவர்களுடன் சேர்ந்து செல்வதில்லை என்கிற கேள்வி வெகு நாட்களாக குடைந்துகொண்டிருந்தது.  நடைப்பயிற்சி முடிந்து தனியாக கடலைப் பார்த்து அமர்ந்து ஒய்வு எடுத்துக்கொண்டிருந்தவரை அணுகி கேட்கும் வாய்ப்பு ஒரு நாள் கிட்டியது.

"அது எனது சிந்திப்பதற்கான நேரம்" .  அவரது பதில் ஆச்சரியப்படுத்தியது.

'சிந்திப்பதற்கு தனியாக நேரம் வேண்டுமா?' - கேட்கப்படாத இந்தக் கேள்வியை புரிந்துகொண்டு தொடர்ந்தார்.

"ஆம்... தினமும் காலை நடைப்பயிற்சி செல்லும் அந்த ஒரு மணித்தியால நேரத்தை நான் இடையூறுகள் ஏதுமற்று சிந்திக்கப் பயன்படுத்திக்கொள்கிறேன்.  அதனால்தான் நண்பர்களுடன் சேர்ந்து நடப்பதில்லை. எனது தொழில், அரசியல், ஆன்மீகம், இலக்கியம், உறவுகள், நண்பர்கள், இந்த வாழ்க்கை என ஏதாவது ஒன்றைப்பற்றி சிந்தித்தவாறு நடக்கிறேன். உடலுக்கும், மனதிற்கும், மூளைக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கிடைக்கிறது. எனது வணிகத்தைப்பற்றி மட்டுமன்றி, வாழ்க்கையப்பற்றியும் ஒரு தெளிவு கிடைக்கிறது."

உண்மைதான்.  நாம் சிந்திப்பதற்கென்று தனியாக நேரத்தை ஒதுக்குவதில்லை.  விழித்திருக்கும் வேளைகளில் பெரும்பாலான நேரத்தை பேசியே கழிக்கிறோம்.

சிந்தனையாற்றல் மனித குலத்தின் சிறப்பு வரம்.  மற்ற உயிரினங்களைவிட மனிதரை உயரத்தில் வைத்திருக்கும் உன்னத பேறு.

காடுகளிலும் மேடுகளிலும் நிர்வாணமாக நடமாடிய மனிதனை இலை குலைகள், விலங்குகளின் தோல் முதலியவைத் தொடங்கி இன்று பல வண்ண பட்டாடை வரை அணிய வைத்ததும், வெயில் மழையிலிருந்து தன்னை காத்துக்கொள்ளும் வழியறியாது  வானமே கூரையாக வாழ்ந்த மனிதனை குகை, குடிசையில் தொடங்கி இன்று வான் முட்டும் சொகுசு இருப்பிடங்களில் வாழ வைத்ததும்,  பல நூறு மைல்களை நாட்கணக்கில் கால்நடையாகவே நடந்து கடந்த மனிதன் இன்று பூமிப் பந்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனையை சில மணி நேரங்களில் சென்றடைய முடிவதும் அவனது  சிந்தனையாற்றலின் சிறப்பினால் மட்டுமே.

சிந்தனை விளக்கு சுடர்விட்டு எரிய தூண்டுகோலாய் இருப்பது கேள்விகள்.  மனித மாண்புகள் அனைத்திற்கும் அடிப்படை சிந்தனையாற்றல் எனில் சிந்தனையாற்றலுக்கு அடிப்படை ஏன், என்ன, எப்படி என்னும் கேள்விகள். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், பொருளாதாரம், விவசாயம் என அனைத்து துறைகளிலும் மனிதன் அடைந்திருக்கும் அபரிமிதமான முன்னேற்றத்தின் பின்னணியில் ஆயிரமாயிரம் கேள்விகள் அணிவகுத்து நிற்கின்றன.  சரியான கேள்விகள் எப்படி உன்னதமான சிந்தனைகளுக்கு வழிவகுக்கின்றன என முதலில் விளக்கியவர் கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ்.  அது இன்றும் 'சாக்ரடீஸ் கேள்வி கேட்கும் முறை (Socrates Questioning)' என்று வழங்கப்படுகிறது.

'கல்வியின் நோக்கம் வெறும் அர்த்தங்களை (பொருண்மைகளை) அறிந்துகொள்வதல்ல, மனதை சிந்திக்க பழக்குவதே' எங்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.  இதனையேதான் சாக்ரடீஸும் வலியுறுத்தினார்.  கற்றல் என்பது வெறும் தரவுகளை திணிப்பதோ அல்லது பொருள் புரியாமால் மனனம் செய்ய வைப்பதோ அல்ல; சிந்திக்க வைப்பது.  சிந்தனையைத் தூண்டும் கேள்விகள் மூலம்தான் சிந்திக்க வைத்தல் சாத்தியமாகும்.  அதனால்தான் சாக்ரடீஸிடம் எதனைப்பற்றி கேட்டாலும், அவர் பதிலை கேள்வியாகக் கேட்டு கேட்பவரை சிந்திக்க வைத்தார்.  ஒரு விடயத்தை பதிலாக சொன்னவுடன் பெரும்பாலும் அதனைப்பற்றிய தேடல் அத்தோடு நிறைவடைந்து விடுகிறது.  அதுவே ஒரு கேள்வியாக அமையும்போது எண்ணற்ற சாத்தியக்கூறுகள் புலப்படத் தொடங்குகின்றன.


மார்க்ஸ் மரணித்த போது 'கார்ல் மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்' என ஏங்கல்ஸ் குறிப்பிட்டார்.  ஆம், மரணம் வரை மனிதர் சிந்திப்பதை நிறுத்துவதே இல்லை.

சிந்தனை என்பது மூளையில் நடைபெறும் அறுதியிட்டுக் கூறமுடியாத ஒரு செயற்பாடு.  சிந்தனையின் மூலம் எண்ணங்கள் தோன்றுகின்றன.  எண்ணங்கள் மேலும் புதிய சிந்தனைகளைத் தூண்டுகின்றன.  அது ஒரு முடிவற்றுச் சுழலும் சக்கரம் போன்றது.


நாம் விழித்திருக்கும் நேரங்களில் எல்லாம் எமது உணர்வுப்பூர்வமான ஈடுபாடு இல்லாமலேயே எமக்குள் ஏதாவது சிந்தனை நடைபெற்றுக்கொண்டும், ஆயிரக்கணக்கான எண்ணங்கள் தோன்றிக்கொண்டும் இருக்கின்றன.  இவை அனிச்சையான சிந்தனை (passive thinking) எனப்படும்.  அனிச்சையான சிந்தனைகள் பெரும்பாலும் ஆழமான சிந்தனைகளாக இருப்பதில்லை.  அதனால் அவை நமக்கோ, பிறருக்கோ பயன்மிக்கதாய் இருப்பதில்லை.

இதற்கு நேரெதிரானது செயல்திறன்மிக்க சிந்தனைகள் (active thinking).  இவை ஒரு விடயம்பற்றிய அறிவார்ந்த, ஆழமான, தர்க்கரீதியான, விழிப்புணர்வுடனான சிந்தனைகள்.  சாக்ரடீஸ், பிளேடோ, திருவள்ளுவர், பெர்னார்ட் ஷா, கார்ல் மார்க்ஸ், ஜிட்டு கிருஷணமூர்த்தி என நீளும் மனித குலத்தை மாற்றியமைத்த தத்துவஞானிகள் அனைவரும் இத்தகைய சிந்தனையாளர்களே.

இவர்கள் சிந்திப்பதற்கென்று நேரத்தை ஒதுக்கினார்கள். இவர்களது சிந்தனைகள் மனிதத் துயரங்களை மையம் கொண்டிருந்தன.  எல்லா மனிதத் துன்பங்களையும் உடற்துன்பம், மனத்துன்பம் ஆகிய இரண்டு வகைக்குள் அடக்கிவிடலாம்.  இவர்கள் இந்தத் துன்பங்களுக்கு காரணம் என்ன, அவற்றை எப்படிப் போக்கலாம் என சிந்தித்தார்கள். இவை தன்னலம் கடந்த பரோபகார சிந்தனைகள்.  சிந்தனையிலிருந்து பிறந்த தெளிவை கோட்பாடுகளாக வெளிப்படுத்தினார்கள்.  அவை மனித குல வாழ்வில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தின.  வாழ்க்கையை புரிந்துகொள்வதற்கும், மனிதன் துன்பச் சுழலிலிருந்து மீள்வதற்கும் அவர்களது சிந்தனை வழி தோன்றிய எண்ணங்கள் உதவின.

எனவே நடைப்பயிற்சி நேரத்தை சிந்திக்கப் பயன்படுத்திக்கொள்ளும் நண்பர் குறிப்பிட்டதுபோல் சிந்திப்பதெற்கென்று நேரத்தை ஒதுக்குவது அவசியமாகிறது.   தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை இடையூறுகள் ஏதுமின்றி ஏதாவது ஒரு விடயம் பற்றி ஆழ்ந்து ஒருமுகமாக சிந்திப்பது சிறப்பு தரும்.  அது நமது வாழ்க்கையைப் பற்றிய தெளிவைத் தருவதோடு, குறுகிய மற்றும் நீண்ட நாளைய திட்டங்கள் மூலம் அதனை செம்மைப்படுத்தவும் உதவும்.  அது மட்டுமன்றி அத்தகைய சிந்தனையால் பெற்ற தெளிவை சக மனிதரிடம் பகிர்ந்துகொள்வதன் மூலம் அவர்களது வாழ்விலும் ஒளியேற்ற முடியும்.

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (20.01.2019)

எண்ணிய வண்ணம் வாழ்வு: பகுதி-4 - எண்ணமும் குறிக்கோளும்

மூலம்:  As a Man Thinketh by James Allen         தமிழில்: சுப்ரமண்ய செல்வா

குறிக்கோளானது எண்ணத்தோடு இணைக்கப்படாதவரை எவ்வித அறிவார்ந்த சாதனையும் சாத்தியமில்லை.  பலர் தங்கள் வாழ்க்கை என்னும் கடலினில் எண்ணம் என்கிற பாய்மரக் கப்பலை வெறுமனே அலைய விட்டு விடுகிறார்கள்.  இலக்கில்லாமை என்பது ஒரு பெருங்குறையாகும்.  இடரினை, அழிவினை தவிர்த்து பயணிக்க விரும்புகிறவனின் வாழ்வில் இத்தகைய அலைக்கழிப்புகள் தொடரக் கூடாது.

தங்கள் வாழ்வில் எவ்வித மைய நோக்கமும் இல்லாதவர்கள்தான் எளிதில் அற்பமான கவலைகள், அச்சங்கள், பிரச்சினைகள் மற்றும் சுயபச்சாதாபத்திற்கு இரையாகிறார்கள்.  இவை அவர்களை -  திட்டமிட்டு செய்த பாவங்கள் போன்றே - பிறிதொரு வழியில் நிச்சயமாக தோல்வி, வருத்தம், இழப்பை நோக்கி இட்டுச் செல்கின்றன.  ஏனெனில் ஆற்றல் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும் இப்பிரபஞ்சத்தில் பலவீனம் நிலைத்திருக்க முடியாது.

மனிதன் தனது இதயத்தில் நியாயமான குறிக்கோள் ஒன்றினை சிருஷ்டிக்க வேண்டும்.  அக்குறிக்கோளினை நிறைவேற்ற புறப்பட வேண்டும்.  அந்த அக்குறிக்கோளினை தனது எண்ணங்களின் மையப் புள்ளியாக ஆக்க வேண்டும்.  அந்தக் குறிக்கோளானது அவனது தற்போதைய நிலமைக்கு ஏற்ப, ஆன்மீக இலட்சியமாக இருக்கலாம் அல்லது லௌகீக இலட்சியமாகவும் இருக்கலாம்.  அது எவ்வாறெனினும் அவன் தனது முழு எண்ண ஆற்றலையும் அந்த இலட்சியத்தின் மீது நிலையாக குவிக்க வேண்டும்.  தனது எண்ணங்களை நிலையற்ற மாயைகளிலும், ஆசைகளிலும், கற்பனைகளிலும் அலைய விடாமல், அந்தக் குறிக்கோளை தனது உயரிய கடமையாக ஆக்கி அதனை அடைவதற்கு தன்னை அர்பணிக்க வேண்டும்.  இதுவே சுயக்கட்டுப்பாட்டுக்கும் எண்ண ஒருமுகத்திற்குமான உன்னத வழியாகும்.  அந்த குறிக்கோளினை அடைவதில் அவன் மீண்டும் மீண்டும் தோல்வி அடையினும் (பலகீனத்தை வெற்றிக்கொள்ளும் வரை தோல்வி என்பது இயல்பானதே) அதனிலிருந்த அவன் பெற்ற ஆளுமையின் வலிமை என்பதே அவன் அடைந்துள்ள உண்மையான வெற்றியின் அளவுகோலாகும்.  அது அவனது எதிர்கால பலத்திற்கும் மிகப்பெரிய வெற்றிகளுக்குமான ஆரம்பப் புள்ளியாக அமையும்.

உயர்ந்த குறிக்கோள் மீதான அச்சத்தினால் அதற்கு தயாராய் இல்லாதவர்கள் தங்கள் கடமையை (அது எத்துனை சிறிய பணியாயினும்) குறையின்றி ஆற்றுவதில் தங்கள் எண்ணங்களை நிலைக்கச் செய்தல் வேண்டும்.  இதன் மூலம் மட்டுமே எண்ணங்களை ஒருங்கிணைத்து ஒருமுகப்படுத்த முடியும்; மன உறுதியையும், ஆற்றலையும் மேம்படுத்த முடியும்.  இதனை செய்யும்விடத்து சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.

ஆற்றலை முயற்சியினாலும் பயிற்சியினாலும் மட்டுமே மேம்படுத்த முடியும்.  தனது பலகீனத்தை அறிந்த மிகவும் பலகீனமான ஆன்மா கூட இந்த உண்மையை ஒப்புக் கொண்டு சிறிது சிறிதாக முயற்சியை, பொறுமையை, ஆற்றலை அதிகரிக்கும்போது, மேம்பாடும், இறுதியில் தெய்வீகமான ஆற்றலும் பெற்று உயரும்.

எப்படி ஒரு பலகீனமான உடலை உடையவன் கவனமும் பொறுமையுடனான பயிற்சியின் மூலம் தன்னை வலுப்படுத்திக் கொள்ள முடியுமோ, அதுபோலவே பலகீனமான எண்ணங்களை கொண்ட ஒருவன் சரியான எண்ணங்களைக் கொண்ட பயிற்சியினால் அவற்றை வலுப்படுத்திக் கொள்ள முடியும்.

வலியவர்கள் தோல்வியை தங்கள் இலக்கை அடைவதற்கான ஒரு பாதையாக மட்டுமே காண்கிறார்கள்.  எல்லா நிலைமைகளையும் தங்களுக்கு  சாதகமாக்கிக் கொள்கிறார்கள்.  உறுதியாக சிந்தித்து, அச்சமின்றி முயன்று அற்புதமாக சாதிக்கிறார்கள்.  பலகீனத்தையும், குறிக்கோளின்மையையும் ஓரங்கட்டி தனது குறிக்கோளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கும் ஒருவன் இவர்களில் ஒருவன் ஆகிறான்.

குறிக்கோளை சிருஷ்டித்தவுடன் மனிதன் அதனை அடைவதற்கான நேரான பாதை ஒன்றினை மனதினில் உருவாக்கிக் கொள்ளல் வேண்டும்.  வலமோ இடமோ நோக்காமல் அவ்வழியில் பயணிக்கத் தொடங்க வேண்டும்.  ஐயங்களும் அச்சங்களும் கண்டிப்புடன் களையப்படல் வேண்டும்.  ஏனெனில் அவை முயற்சி என்கிற நேர்க்கோட்டினை சிதைத்து அதனை வளைவான, வீணான, பயனற்றதாக ஆக்கி விடும்.  ஐயமும் அச்சமுமான எண்ணங்களால் எதனையும் சாதிக்க முடியாது.  அவை எப்போதும் தோல்வியை நோக்கியே இட்டுச் செல்லும்.  அவை உட்புகுந்தவுடன் நோக்கம், ஆற்றல், சாதிப்பதற்கான பலம் மற்றும் அனைத்து வலிமையான எண்ணங்களும் நின்று விடும்.

சாதிக்க வேண்டும் என்கிற மனவுறுதி சாதிக்க முடியும் என்கிற ஞானத்தின் மூலமே மேல் எழுகிறது.  ஐயமும் அச்சமும் அந்த ஞானத்தின் பரம எதிரிகள்.  அவற்றை அடிமைபடுத்தாமல் ஊக்குவிக்கின்ற ஒருவன் ஒவ்வொறு அடியிலும் இடையூறுகளை எதிர்கொள்வான்.

ஐயத்தையும் அச்சத்தையும் வெற்றிக் கொண்டவன் தோல்வியை வெற்றிக் கொள்கிறான்.  அவனதும் ஒவ்வொறு எண்ணமும் ஆற்றலோடு ஒன்றிணைந்து இருக்கும்.  எல்லா கஷ்டங்களும் தைரியமாய் எதிர்கொள்ளப்பட்டு விவேகமாய் வெற்றிக் கொள்ளப்படும்.  அவனது குறிகோள்கள் உரிய காலத்தில் பயிரிடப்பட்டு, மலர்ந்து, பருவத்தின் முன் வீழாத கனியைத் தரும்.

குறிக்கோளுடன் அச்சமின்றி ஒன்றிணைக்கப்பட்ட எண்ணமானது ஆக்கச் சக்தியாக மாறுகின்றது.  இதனை அறிந்த ஒருவன் வெறும் நிலையற்ற எண்ணங்களை, அலைபாயும் உணர்ச்சிகளைக் கடந்து உயர்ந்தவனாய், வலிமையானவனாய் ஆகத் தயாராகிறான்.  இதனை செயல்படுத்துகின்ற ஒருவன் தனது மனோ வலிமையை உணர்வுப் பூர்வமாக, புத்திசாலித்தனமாக கையாள்கிறவன் ஆகிறான்.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (21.01.2019)

பெருவினா

இன்றும் நினைவிருக்கிறது
அந்த அகால அதிகாலையின்
அலைபேசி ஒலி
அப்பாவுக்கு  சுகயீனம்
"கொஞ்சம் பொறுத்துக்குங்க அப்பா
தம்பி வந்துகிட்டுருக்கான்
ஹாஸ்பிடல் அழைத்து செல்ல"
பதிலுக்கு சிறு முனங்கல்
தொண்டையில் சிக்கி
தோற்றன வார்த்தைகள்
தொடர்பை துண்டிக்கும் முன்
அதீத உள்ளுணர்வொன்று
அசரீரியாய் உணர்த்தியது
அதுவே அப்பாவுடனான
கடைசி உரையாடலென்று
நினைவறிந்த  நாள் முதலாய்
எம்மை உருவாக்க
தன்னைக் கரைத்த
தருணங்கள் அத்தனையும்
கணப்பொழுதில்
காட்சிப் படமாய் வந்துபோக
"எல்லாத்துக்கும் நன்றிப்பா
ஐ லவ் யூப்பா"
ஆன்மாவின் ஆதியிலிருந்து புறப்பட்டு
உதடுவரை வந்த சொற்களை
உதிரவிடாமல் தடுத்தன
தந்தையிடம் அன்பைச் சொல்ல முடியாத
யுகாந்திரத் தயக்கம்
இன்றும்
தவறவிட்ட தருணத்தின்
தீரா வலியோடு
சேர்ந்தே ஒலிக்குமொரு கேள்வி
அப்பா என்ன சொல்ல நினைத்திருப்பார்?

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (20.01.2019)