திங்கள், 21 ஜனவரி, 2019

சிந்தித்தால் சிறப்பு வரும்

காலை நடைப்பயிற்சி செல்லும்போது வெள்ளவத்தை கடற்கரைச் சாலையில் அந்த நண்பரைக் காண்பதுண்டு.  எதிர்த் திசையிலிருந்து வேகமாக வந்துகொண்டிருப்பார்.  ஒரு முகமன் புன்னகையோடு கடந்து செல்வார்.  சில நாட்களில் அதுவும் இல்லை.  முன்பின் அறிமுகம் இல்லாதவரை பார்க்கும் ஒரு வெறுமைப் பார்வையை விட்டுச் செல்வார். அவரைத் தொடர்ந்து சிறிது தொலைவில் அவரது நண்பர்கள் ஐந்தாறு பேர் கூட்டமாக நடந்து வருவார்கள்.  உரத்த பேச்சும், சிரிப்பும் என அவர்கள் நடை கலகலப்பாய் இருக்கும்.  எதிரில் அறிந்தவர்கள் வந்தால், நின்று அவர்களுடன் அலவலாவி தொடர்வார்கள்.  முன்பு குறிப்பிட்ட நண்பர் ஏன் இவர்களுடன் சேர்ந்து செல்வதில்லை என்கிற கேள்வி வெகு நாட்களாக குடைந்துகொண்டிருந்தது.  நடைப்பயிற்சி முடிந்து தனியாக கடலைப் பார்த்து அமர்ந்து ஒய்வு எடுத்துக்கொண்டிருந்தவரை அணுகி கேட்கும் வாய்ப்பு ஒரு நாள் கிட்டியது.

"அது எனது சிந்திப்பதற்கான நேரம்" .  அவரது பதில் ஆச்சரியப்படுத்தியது.

'சிந்திப்பதற்கு தனியாக நேரம் வேண்டுமா?' - கேட்கப்படாத இந்தக் கேள்வியை புரிந்துகொண்டு தொடர்ந்தார்.

"ஆம்... தினமும் காலை நடைப்பயிற்சி செல்லும் அந்த ஒரு மணித்தியால நேரத்தை நான் இடையூறுகள் ஏதுமற்று சிந்திக்கப் பயன்படுத்திக்கொள்கிறேன்.  அதனால்தான் நண்பர்களுடன் சேர்ந்து நடப்பதில்லை. எனது தொழில், அரசியல், ஆன்மீகம், இலக்கியம், உறவுகள், நண்பர்கள், இந்த வாழ்க்கை என ஏதாவது ஒன்றைப்பற்றி சிந்தித்தவாறு நடக்கிறேன். உடலுக்கும், மனதிற்கும், மூளைக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கிடைக்கிறது. எனது வணிகத்தைப்பற்றி மட்டுமன்றி, வாழ்க்கையப்பற்றியும் ஒரு தெளிவு கிடைக்கிறது."

உண்மைதான்.  நாம் சிந்திப்பதற்கென்று தனியாக நேரத்தை ஒதுக்குவதில்லை.  விழித்திருக்கும் வேளைகளில் பெரும்பாலான நேரத்தை பேசியே கழிக்கிறோம்.

சிந்தனையாற்றல் மனித குலத்தின் சிறப்பு வரம்.  மற்ற உயிரினங்களைவிட மனிதரை உயரத்தில் வைத்திருக்கும் உன்னத பேறு.

காடுகளிலும் மேடுகளிலும் நிர்வாணமாக நடமாடிய மனிதனை இலை குலைகள், விலங்குகளின் தோல் முதலியவைத் தொடங்கி இன்று பல வண்ண பட்டாடை வரை அணிய வைத்ததும், வெயில் மழையிலிருந்து தன்னை காத்துக்கொள்ளும் வழியறியாது  வானமே கூரையாக வாழ்ந்த மனிதனை குகை, குடிசையில் தொடங்கி இன்று வான் முட்டும் சொகுசு இருப்பிடங்களில் வாழ வைத்ததும்,  பல நூறு மைல்களை நாட்கணக்கில் கால்நடையாகவே நடந்து கடந்த மனிதன் இன்று பூமிப் பந்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனையை சில மணி நேரங்களில் சென்றடைய முடிவதும் அவனது  சிந்தனையாற்றலின் சிறப்பினால் மட்டுமே.

சிந்தனை விளக்கு சுடர்விட்டு எரிய தூண்டுகோலாய் இருப்பது கேள்விகள்.  மனித மாண்புகள் அனைத்திற்கும் அடிப்படை சிந்தனையாற்றல் எனில் சிந்தனையாற்றலுக்கு அடிப்படை ஏன், என்ன, எப்படி என்னும் கேள்விகள். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், பொருளாதாரம், விவசாயம் என அனைத்து துறைகளிலும் மனிதன் அடைந்திருக்கும் அபரிமிதமான முன்னேற்றத்தின் பின்னணியில் ஆயிரமாயிரம் கேள்விகள் அணிவகுத்து நிற்கின்றன.  சரியான கேள்விகள் எப்படி உன்னதமான சிந்தனைகளுக்கு வழிவகுக்கின்றன என முதலில் விளக்கியவர் கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ்.  அது இன்றும் 'சாக்ரடீஸ் கேள்வி கேட்கும் முறை (Socrates Questioning)' என்று வழங்கப்படுகிறது.

'கல்வியின் நோக்கம் வெறும் அர்த்தங்களை (பொருண்மைகளை) அறிந்துகொள்வதல்ல, மனதை சிந்திக்க பழக்குவதே' எங்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.  இதனையேதான் சாக்ரடீஸும் வலியுறுத்தினார்.  கற்றல் என்பது வெறும் தரவுகளை திணிப்பதோ அல்லது பொருள் புரியாமால் மனனம் செய்ய வைப்பதோ அல்ல; சிந்திக்க வைப்பது.  சிந்தனையைத் தூண்டும் கேள்விகள் மூலம்தான் சிந்திக்க வைத்தல் சாத்தியமாகும்.  அதனால்தான் சாக்ரடீஸிடம் எதனைப்பற்றி கேட்டாலும், அவர் பதிலை கேள்வியாகக் கேட்டு கேட்பவரை சிந்திக்க வைத்தார்.  ஒரு விடயத்தை பதிலாக சொன்னவுடன் பெரும்பாலும் அதனைப்பற்றிய தேடல் அத்தோடு நிறைவடைந்து விடுகிறது.  அதுவே ஒரு கேள்வியாக அமையும்போது எண்ணற்ற சாத்தியக்கூறுகள் புலப்படத் தொடங்குகின்றன.


மார்க்ஸ் மரணித்த போது 'கார்ல் மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்' என ஏங்கல்ஸ் குறிப்பிட்டார்.  ஆம், மரணம் வரை மனிதர் சிந்திப்பதை நிறுத்துவதே இல்லை.

சிந்தனை என்பது மூளையில் நடைபெறும் அறுதியிட்டுக் கூறமுடியாத ஒரு செயற்பாடு.  சிந்தனையின் மூலம் எண்ணங்கள் தோன்றுகின்றன.  எண்ணங்கள் மேலும் புதிய சிந்தனைகளைத் தூண்டுகின்றன.  அது ஒரு முடிவற்றுச் சுழலும் சக்கரம் போன்றது.


நாம் விழித்திருக்கும் நேரங்களில் எல்லாம் எமது உணர்வுப்பூர்வமான ஈடுபாடு இல்லாமலேயே எமக்குள் ஏதாவது சிந்தனை நடைபெற்றுக்கொண்டும், ஆயிரக்கணக்கான எண்ணங்கள் தோன்றிக்கொண்டும் இருக்கின்றன.  இவை அனிச்சையான சிந்தனை (passive thinking) எனப்படும்.  அனிச்சையான சிந்தனைகள் பெரும்பாலும் ஆழமான சிந்தனைகளாக இருப்பதில்லை.  அதனால் அவை நமக்கோ, பிறருக்கோ பயன்மிக்கதாய் இருப்பதில்லை.

இதற்கு நேரெதிரானது செயல்திறன்மிக்க சிந்தனைகள் (active thinking).  இவை ஒரு விடயம்பற்றிய அறிவார்ந்த, ஆழமான, தர்க்கரீதியான, விழிப்புணர்வுடனான சிந்தனைகள்.  சாக்ரடீஸ், பிளேடோ, திருவள்ளுவர், பெர்னார்ட் ஷா, கார்ல் மார்க்ஸ், ஜிட்டு கிருஷணமூர்த்தி என நீளும் மனித குலத்தை மாற்றியமைத்த தத்துவஞானிகள் அனைவரும் இத்தகைய சிந்தனையாளர்களே.

இவர்கள் சிந்திப்பதற்கென்று நேரத்தை ஒதுக்கினார்கள். இவர்களது சிந்தனைகள் மனிதத் துயரங்களை மையம் கொண்டிருந்தன.  எல்லா மனிதத் துன்பங்களையும் உடற்துன்பம், மனத்துன்பம் ஆகிய இரண்டு வகைக்குள் அடக்கிவிடலாம்.  இவர்கள் இந்தத் துன்பங்களுக்கு காரணம் என்ன, அவற்றை எப்படிப் போக்கலாம் என சிந்தித்தார்கள். இவை தன்னலம் கடந்த பரோபகார சிந்தனைகள்.  சிந்தனையிலிருந்து பிறந்த தெளிவை கோட்பாடுகளாக வெளிப்படுத்தினார்கள்.  அவை மனித குல வாழ்வில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தின.  வாழ்க்கையை புரிந்துகொள்வதற்கும், மனிதன் துன்பச் சுழலிலிருந்து மீள்வதற்கும் அவர்களது சிந்தனை வழி தோன்றிய எண்ணங்கள் உதவின.

எனவே நடைப்பயிற்சி நேரத்தை சிந்திக்கப் பயன்படுத்திக்கொள்ளும் நண்பர் குறிப்பிட்டதுபோல் சிந்திப்பதெற்கென்று நேரத்தை ஒதுக்குவது அவசியமாகிறது.   தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை இடையூறுகள் ஏதுமின்றி ஏதாவது ஒரு விடயம் பற்றி ஆழ்ந்து ஒருமுகமாக சிந்திப்பது சிறப்பு தரும்.  அது நமது வாழ்க்கையைப் பற்றிய தெளிவைத் தருவதோடு, குறுகிய மற்றும் நீண்ட நாளைய திட்டங்கள் மூலம் அதனை செம்மைப்படுத்தவும் உதவும்.  அது மட்டுமன்றி அத்தகைய சிந்தனையால் பெற்ற தெளிவை சக மனிதரிடம் பகிர்ந்துகொள்வதன் மூலம் அவர்களது வாழ்விலும் ஒளியேற்ற முடியும்.

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (20.01.2019)

எண்ணிய வண்ணம் வாழ்வு: பகுதி-4 - எண்ணமும் குறிக்கோளும்

மூலம்:  As a Man Thinketh by James Allen         தமிழில்: சுப்ரமண்ய செல்வா

குறிக்கோளானது எண்ணத்தோடு இணைக்கப்படாதவரை எவ்வித அறிவார்ந்த சாதனையும் சாத்தியமில்லை.  பலர் தங்கள் வாழ்க்கை என்னும் கடலினில் எண்ணம் என்கிற பாய்மரக் கப்பலை வெறுமனே அலைய விட்டு விடுகிறார்கள்.  இலக்கில்லாமை என்பது ஒரு பெருங்குறையாகும்.  இடரினை, அழிவினை தவிர்த்து பயணிக்க விரும்புகிறவனின் வாழ்வில் இத்தகைய அலைக்கழிப்புகள் தொடரக் கூடாது.

தங்கள் வாழ்வில் எவ்வித மைய நோக்கமும் இல்லாதவர்கள்தான் எளிதில் அற்பமான கவலைகள், அச்சங்கள், பிரச்சினைகள் மற்றும் சுயபச்சாதாபத்திற்கு இரையாகிறார்கள்.  இவை அவர்களை -  திட்டமிட்டு செய்த பாவங்கள் போன்றே - பிறிதொரு வழியில் நிச்சயமாக தோல்வி, வருத்தம், இழப்பை நோக்கி இட்டுச் செல்கின்றன.  ஏனெனில் ஆற்றல் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும் இப்பிரபஞ்சத்தில் பலவீனம் நிலைத்திருக்க முடியாது.

மனிதன் தனது இதயத்தில் நியாயமான குறிக்கோள் ஒன்றினை சிருஷ்டிக்க வேண்டும்.  அக்குறிக்கோளினை நிறைவேற்ற புறப்பட வேண்டும்.  அந்த அக்குறிக்கோளினை தனது எண்ணங்களின் மையப் புள்ளியாக ஆக்க வேண்டும்.  அந்தக் குறிக்கோளானது அவனது தற்போதைய நிலமைக்கு ஏற்ப, ஆன்மீக இலட்சியமாக இருக்கலாம் அல்லது லௌகீக இலட்சியமாகவும் இருக்கலாம்.  அது எவ்வாறெனினும் அவன் தனது முழு எண்ண ஆற்றலையும் அந்த இலட்சியத்தின் மீது நிலையாக குவிக்க வேண்டும்.  தனது எண்ணங்களை நிலையற்ற மாயைகளிலும், ஆசைகளிலும், கற்பனைகளிலும் அலைய விடாமல், அந்தக் குறிக்கோளை தனது உயரிய கடமையாக ஆக்கி அதனை அடைவதற்கு தன்னை அர்பணிக்க வேண்டும்.  இதுவே சுயக்கட்டுப்பாட்டுக்கும் எண்ண ஒருமுகத்திற்குமான உன்னத வழியாகும்.  அந்த குறிக்கோளினை அடைவதில் அவன் மீண்டும் மீண்டும் தோல்வி அடையினும் (பலகீனத்தை வெற்றிக்கொள்ளும் வரை தோல்வி என்பது இயல்பானதே) அதனிலிருந்த அவன் பெற்ற ஆளுமையின் வலிமை என்பதே அவன் அடைந்துள்ள உண்மையான வெற்றியின் அளவுகோலாகும்.  அது அவனது எதிர்கால பலத்திற்கும் மிகப்பெரிய வெற்றிகளுக்குமான ஆரம்பப் புள்ளியாக அமையும்.

உயர்ந்த குறிக்கோள் மீதான அச்சத்தினால் அதற்கு தயாராய் இல்லாதவர்கள் தங்கள் கடமையை (அது எத்துனை சிறிய பணியாயினும்) குறையின்றி ஆற்றுவதில் தங்கள் எண்ணங்களை நிலைக்கச் செய்தல் வேண்டும்.  இதன் மூலம் மட்டுமே எண்ணங்களை ஒருங்கிணைத்து ஒருமுகப்படுத்த முடியும்; மன உறுதியையும், ஆற்றலையும் மேம்படுத்த முடியும்.  இதனை செய்யும்விடத்து சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.

ஆற்றலை முயற்சியினாலும் பயிற்சியினாலும் மட்டுமே மேம்படுத்த முடியும்.  தனது பலகீனத்தை அறிந்த மிகவும் பலகீனமான ஆன்மா கூட இந்த உண்மையை ஒப்புக் கொண்டு சிறிது சிறிதாக முயற்சியை, பொறுமையை, ஆற்றலை அதிகரிக்கும்போது, மேம்பாடும், இறுதியில் தெய்வீகமான ஆற்றலும் பெற்று உயரும்.

எப்படி ஒரு பலகீனமான உடலை உடையவன் கவனமும் பொறுமையுடனான பயிற்சியின் மூலம் தன்னை வலுப்படுத்திக் கொள்ள முடியுமோ, அதுபோலவே பலகீனமான எண்ணங்களை கொண்ட ஒருவன் சரியான எண்ணங்களைக் கொண்ட பயிற்சியினால் அவற்றை வலுப்படுத்திக் கொள்ள முடியும்.

வலியவர்கள் தோல்வியை தங்கள் இலக்கை அடைவதற்கான ஒரு பாதையாக மட்டுமே காண்கிறார்கள்.  எல்லா நிலைமைகளையும் தங்களுக்கு  சாதகமாக்கிக் கொள்கிறார்கள்.  உறுதியாக சிந்தித்து, அச்சமின்றி முயன்று அற்புதமாக சாதிக்கிறார்கள்.  பலகீனத்தையும், குறிக்கோளின்மையையும் ஓரங்கட்டி தனது குறிக்கோளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கும் ஒருவன் இவர்களில் ஒருவன் ஆகிறான்.

குறிக்கோளை சிருஷ்டித்தவுடன் மனிதன் அதனை அடைவதற்கான நேரான பாதை ஒன்றினை மனதினில் உருவாக்கிக் கொள்ளல் வேண்டும்.  வலமோ இடமோ நோக்காமல் அவ்வழியில் பயணிக்கத் தொடங்க வேண்டும்.  ஐயங்களும் அச்சங்களும் கண்டிப்புடன் களையப்படல் வேண்டும்.  ஏனெனில் அவை முயற்சி என்கிற நேர்க்கோட்டினை சிதைத்து அதனை வளைவான, வீணான, பயனற்றதாக ஆக்கி விடும்.  ஐயமும் அச்சமுமான எண்ணங்களால் எதனையும் சாதிக்க முடியாது.  அவை எப்போதும் தோல்வியை நோக்கியே இட்டுச் செல்லும்.  அவை உட்புகுந்தவுடன் நோக்கம், ஆற்றல், சாதிப்பதற்கான பலம் மற்றும் அனைத்து வலிமையான எண்ணங்களும் நின்று விடும்.

சாதிக்க வேண்டும் என்கிற மனவுறுதி சாதிக்க முடியும் என்கிற ஞானத்தின் மூலமே மேல் எழுகிறது.  ஐயமும் அச்சமும் அந்த ஞானத்தின் பரம எதிரிகள்.  அவற்றை அடிமைபடுத்தாமல் ஊக்குவிக்கின்ற ஒருவன் ஒவ்வொறு அடியிலும் இடையூறுகளை எதிர்கொள்வான்.

ஐயத்தையும் அச்சத்தையும் வெற்றிக் கொண்டவன் தோல்வியை வெற்றிக் கொள்கிறான்.  அவனதும் ஒவ்வொறு எண்ணமும் ஆற்றலோடு ஒன்றிணைந்து இருக்கும்.  எல்லா கஷ்டங்களும் தைரியமாய் எதிர்கொள்ளப்பட்டு விவேகமாய் வெற்றிக் கொள்ளப்படும்.  அவனது குறிகோள்கள் உரிய காலத்தில் பயிரிடப்பட்டு, மலர்ந்து, பருவத்தின் முன் வீழாத கனியைத் தரும்.

குறிக்கோளுடன் அச்சமின்றி ஒன்றிணைக்கப்பட்ட எண்ணமானது ஆக்கச் சக்தியாக மாறுகின்றது.  இதனை அறிந்த ஒருவன் வெறும் நிலையற்ற எண்ணங்களை, அலைபாயும் உணர்ச்சிகளைக் கடந்து உயர்ந்தவனாய், வலிமையானவனாய் ஆகத் தயாராகிறான்.  இதனை செயல்படுத்துகின்ற ஒருவன் தனது மனோ வலிமையை உணர்வுப் பூர்வமாக, புத்திசாலித்தனமாக கையாள்கிறவன் ஆகிறான்.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (21.01.2019)

பெருவினா

இன்றும் நினைவிருக்கிறது
அந்த அகால அதிகாலையின்
அலைபேசி ஒலி
அப்பாவுக்கு  சுகயீனம்
"கொஞ்சம் பொறுத்துக்குங்க அப்பா
தம்பி வந்துகிட்டுருக்கான்
ஹாஸ்பிடல் அழைத்து செல்ல"
பதிலுக்கு சிறு முனங்கல்
தொண்டையில் சிக்கி
தோற்றன வார்த்தைகள்
தொடர்பை துண்டிக்கும் முன்
அதீத உள்ளுணர்வொன்று
அசரீரியாய் உணர்த்தியது
அதுவே அப்பாவுடனான
கடைசி உரையாடலென்று
நினைவறிந்த  நாள் முதலாய்
எம்மை உருவாக்க
தன்னைக் கரைத்த
தருணங்கள் அத்தனையும்
கணப்பொழுதில்
காட்சிப் படமாய் வந்துபோக
"எல்லாத்துக்கும் நன்றிப்பா
ஐ லவ் யூப்பா"
ஆன்மாவின் ஆதியிலிருந்து புறப்பட்டு
உதடுவரை வந்த சொற்களை
உதிரவிடாமல் தடுத்தன
தந்தையிடம் அன்பைச் சொல்ல முடியாத
யுகாந்திரத் தயக்கம்
இன்றும்
தவறவிட்ட தருணத்தின்
தீரா வலியோடு
சேர்ந்தே ஒலிக்குமொரு கேள்வி
அப்பா என்ன சொல்ல நினைத்திருப்பார்?

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (20.01.2019)

திங்கள், 10 டிசம்பர், 2018

எண்ணிய வண்ணம் வாழ்வு: பகுதி-3 - எண்ணமும் உடல் நலமும்

மூலம்:  As a Man Thinketh by James Allen        தமிழில்: சுப்ரமண்ய செல்வா

உடல் எனப்படுவது மனதின் அடிமை.  அது மனதின் இயக்கங்களுக்கு அடிபணிகிறது; அந்த இயக்கங்கள் திட்டமிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவையாக இருக்கலாம் அல்லது தானாகவே வெளிப்படுத்தப்பட்டவையாகவும் இருக்கலாம்.  தீய எண்ணங்கள் உடலை துரிதமாக நோயையும் அழிவையும் நோக்கி இட்டுச் செல்கின்றன.  அதேபோல்  தூய்மையான அழகான எண்ணங்கள் உடலை இளமையாக அழகுபடுத்துகின்றன.

சூழ்நிலைகளைப் போலவே நோயும் உடல் நலமும் எண்ணத்தில் ஆழ வேரூன்றி இருக்கின்றது.  தீய எண்ணங்கள் நோயுற்ற உடல் மூலம் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன.  அச்சமிக்க எண்ணங்கள் தோட்டாக்களைப் போல்வே துரிதமாக மனிதரை கொல்வதை நாம் அறிவோம்.  நோயைப்பற்றி பயந்து வாழ்பவர்களே சீக்கிரம் நோய்வாய்ப்படுகிறார்கள்.  பதற்றம் முழு உடலையும் நிலைகுலைத்து அதனுள் நோய் உட்புக உறுதுணையாகிறது.  அதுபோலவே தூய்மையற்ற எண்ணங்கள் - அவை உடலால் அனுபவிக்கப்படாவிட்டாலும்கூட - வெகு விரைவில் நரம்பு மண்டலத்தை தகர்த்துவிடும்.

திடமான, தூய, இன்பமான எண்ணங்கள் உடலை சுறுசுறுப்பு மிக்கதாக, வசீகரமானதாக கட்டி எழுப்புகின்றன.  உடல் ஒரு மென்மையான நெகிழ்வான கருவி.  ஆகவே அது எண்ணங்களின் பதிவுகளை உடனடியாக பிரதிபலிக்கின்றது.  நல்லதும் தீயதுமான எண்ணப் பழக்கங்கள் அவற்றுக்கு ஒத்த விளைவுகளை அதன் மீது உண்டாக்குகின்றன.

மனிதர் அழுக்கான எண்ணங்களை பரப்பும் வரையில் அவர்களுக்குள் அசுத்தமான நஞ்சான இரத்தம் ஓடிக்கொண்டேதான் இருக்கும். தூய இதயத்தில் இருந்து வருவதே தூய வாழ்வும் தூய உடலும். மாசுமிக்க மனதின் வெளிப்பாடே மாசுமிக்க வாழ்வும் சீரழிந்த உடலும்.  எண்ணமே செயலின், வாழ்வின், சகல வெளிப்பாட்டினதும் ஊற்று.  ஊற்றினைத் தூய்மைப்படுத்துங்கள்; அனைத்தும் தூய்மையாகும்.

ஒருவன் தனது எண்ணங்களை மாற்றாதவரை வெறும் உணவுப் பழக்கங்களை மாற்றுவதினால் அவனக்கு எவ்வித நன்மையும் வந்துவிடப் போவதில்லை.  தனது எண்ணங்களை தூய்மைப்படுத்திய ஒருவன் தூய்மையற்ற உணவினை நாடுவதும் இல்லை.

தூய எண்ணங்கள் தூய பழக்க வழக்கங்களை ஏற்படுத்துகின்றன.  தனது உடலினைத் தூய்மைப்படுத்தாத ஒரு துறவி உண்மையில் துறவியல்ல.  தனது எண்ணங்களை திடப்படுத்திய, தூய்மைப்படுத்திய ஒருவன் தீய கிருமிகளைப்பற்றி கவலைப்பட தேவையில்லை.

உங்கள் உடல் பூரண நலத்துடன் இருக்க வேண்டுமெனில், உங்கள் மனதினை காத்திடுவீர்.  உங்கள் உடலினை புதுப்பிக்க வேண்டுமெனில், உங்கள் மனதினை அழகுபடுத்துவீர்.  வன்மம்மிக்க, பொறாமைமிக்க, ஏமாற்றமிகு, மனச்சோர்வுமிக்க எண்ணங்கள் உடலின் நலத்தையும் வசீகரத்தையும் கொள்ளையிடும்.  சிடுசிடுப்பான முகம் என்பது தற்செயலாய் வருவதல்ல.  அது வெறுப்பான எண்ணங்களின் வெளிப்பாடு.

அழகை கெடுக்கும் சுருக்கங்கள் மடமை, இச்சை, கர்வம் என்பவற்றால் உண்டானவையே.

பிரகாசமான, களங்கமற்ற சிறுமி ஒருத்தியின் முகம் கொண்ட தொண்ணூற்றாறு வயதான மூதாட்டி ஒருவரை நான் அறிவேன்.  அதேபோன்று தன் வயதிற்கு சிறிதும் பொறுத்தமற்ற முகம் கொண்ட நடுத்தர வயதிற்கும் குறைவான ஒருவனையும் நான் அறிவேன்.  முன்னையது இனிமையான, மகிழ்வான மனநிலையின் வெளிப்பாடு.  பின்னையது இச்சைமிகுந்த, அமைதியிழந்த மனதின் விளைவு.

காற்றையும் சூரிய ஒளியையும் தாராளமாக உட்புக விட்டாலன்றி உங்களால் இனிமையான முழுமையான உறைவிடத்தை பெற முடியாது.  அது போல மனதினுள் ஆனந்தம், நல்லெண்ணம், அமைதி என்பனவற்றை தாராளமாக உட்புக விட்டால் மட்டுமே, திடமான உடலினையும் பிரகாசமான, மகிழ்வான, அமைதியான முகத்தோற்றத்தினையும் பெற முடியும்.

முதியவர்களின் முகங்களில் முகச்சுருக்கங்களைக் காண்கிறோம்.  சிலருக்கு அவை பரிவினால் எற்பட்டிருக்கும்.  சிலருக்கு அவை திடமான, தூய்மையான எண்ணங்களினால் உண்டாகியிருக்கும்.  இன்னும் சிலருக்கோ அவை இச்சையினால் செதுக்கப்பட்டிருக்கும்.  யாரால் அதனை பிரித்தறிய முடியாது?  நேர்மையாய் நன்னெறியில் வாழ்ந்தவர்களுக்கு, முதுமை என்பது சூரிய அஸ்தமனத்தைப் போன்று சலனமற்ற, அமைதியான, மென்மையாய் கனிந்த ஒரு நிலை.  அண்மையில் நான் தத்துவஞானி ஒருவரை அவரது மரணப்படுக்கையில் பார்த்திருக்கிறேன்.  வயதில் மட்டுமே அவர் முதுமை அடைந்திருந்தார்.  அவர் தான் வாழ்ந்தது போல்வே இனிமையாய், அமைதியாய் மரணித்தார்.

உடல்நோய்களை விரட்ட உற்சாகமான எண்ணங்களை விட சிறந்த மருத்துவர் வேறு எவரும் இல்லை.  துயரம், கவலை எனும் இருள் கவியும் போது அதனை கலைக்க நல்லெண்ணத்திற்கும் மேலான ஆறுதல் அளிப்பவர் வேறு எவரும் இல்லை.  பகைமை, வெறுப்பு, சந்தேகம், பொறாமை போன்ற எண்ணங்களுடன் தொடர்ந்து வாழ்வது என்பது தனது சொந்த சிறைக்குள் வாழ்வதற்கு ஒப்பானதாகும்.  பிறரைப் பற்றி நல்லதையே எண்ணுவது, எல்லோருடனும் உற்சாகமாக இருப்பது, பொறுமையாக மற்றவரிடத்தில் நல்லதையே காண்பது போன்ற தன்னலமற்ற எண்ணங்கள் சுவர்கத்தின் வாயில்களாகும்.  நாளுக்கு நாள் எல்லா உயிர்கள் மீதும் அமைதியான எண்ணங்களுடன் வாழ்வோருக்கு அது அபரிமிதமான அமைதியைக் கொண்டு வரும்.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (09.12..2018)

திங்கள், 3 டிசம்பர், 2018

சாபமாகும் வரங்கள்

முதலாளி அரக்கரிடமிருந்து
உன்னை விடுவிப்பதாய்
உறுதி கூறும்
தொழிற்சங்க தேவர்கள்கூட
ஆசைப்படுகிறார்கள்
நீ அவர்களுக்கு
அடிமையாயிருக்க வேண்டுமென
உன் சந்தா எவ்வளவென
அறிவுறுத்தப்படுவாய்
சத்தமின்றி செலுத்து
கணக்குக் கேட்டால்
துரோகியாவாய் கவனம்
உன் ஊதியத்தையும்
உன் உணவையும்
உன் உணர்வையும்
அவர்களே தீர்மானிக்கிறார்கள்
விடுதலை தேவர்களே
விலங்கிடத் துடிக்க
பிசாசுக்கும்
ஆழ்நீலக் கடலுக்குமிடையே
பெருங்ககுழப்பத்தில் நீ.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி (02/12/2018)

துயிலெழுப்பல்


வானூர்தி பயணத்தில்
வாசிக்கவேன்று
கையோடு எடுத்துவந்த
கவிதை நூலை
பாதி வாசித்து
நினைவட்டை இடைச்செருகி
கண்ணயர்ந்தவனை
தட்டி எழுப்பிக்கொண்டிருக்கின்றன
வாசிக்கப்படாத கவிதைகள்

(25.11.2018 சென்னை/தில்லி வானூர்தி பயணத்தில்)

வியாழன், 29 நவம்பர், 2018

எண்ணிய வண்ணம் வாழ்வு: பகுதி-2 எண்ணமும் சூழ்நிலைகளும் (தொடர்ச்சி...)

மூலம்:  As a Man Thinketh by James Allen        தமிழில்: சுப்ரமண்ய செல்வா

துன்பம் என்பது எப்போதும் ஏதோ ஒரு வழியில் தவறான எண்ணத்தின் விளைவே.  அது ஒருவன் தன்னோடும், தன் இருப்பின் மூலமான நியதியோடும் இசைவாய் இல்லை என்பதன் அறிகுறியாகும்.  துன்பத்தின் ஒரே உன்னத நோக்கம் தூய்மைப்படுத்துவதாகும்.  தூய்மையான பின்பு துன்பம் தொடர்வதில்லை.  அழுக்கை அகற்றியபின் தங்கத்தை மேலும் எரிப்பதில் அர்த்தமில்லை; முற்றிலும் தூய்மையான ஒருவன் துன்பப்பட முடியாது.

ஒரு மனிதன் எதிர்கொள்ளும் துன்பம் மிக்க சூழ்நிலைகள் என்பன அவன் தன் அகத்தோடு இசைவற்று இருப்பதன் விளைவே.  அதேபோல் ஒருவன் எதிர்கொள்ளும் இன்பகரமான சூழ்நிலகள் என்பன அவன் தன் அகத்தோடு ஒத்திசைவாய் இருப்பதன் விளைவே.  இன்பம் என்பது சரியான எண்ணத்தினதும், துன்பம் என்பது தவறான எண்ணத்தினதும் சரிசமமான பங்காகும்.  அங்கே உள்ளவன் இல்லாதவன் என்ற பாகுபாட்டுக்கு இடமில்லை.  ஒருவன் செல்வந்தனாக ஆனால் சபிக்கப்பட்டவனாக இருக்கலாம்.  இன்னொருவன் ஏழையாக ஆனால் ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருக்கலாம்.  செல்வமும் மகிழ்ச்சியும் ஒன்றாயிருப்பது அந்த செல்வமானது நேர்மையான விவேவகமான முறையில் பயன்படுத்தப்படும் போது மட்டுமே.  அதேபோல் ஏழை துன்பக்குழியின் கீழே போவது அந்த துன்பமானது தன் மீது அநியாயமாக சுமத்தப்பட்டு இருக்கிறது என்று கருதும்போதே.

வறுமையும் மிதமிஞ்சிய அனுபோகமும் இழிநிலையின் இரு எல்லைகளாகும்.  இவை இரண்டும் இயற்கைக்கு மாறானதும், மனநோயின் விளைவும் ஆகும்.  ஒருவனின் சரியான, இயல்பான நிலை என்பது இன்பமாய், ஆரோக்கியமாய், செழுமையாய் இருத்தலே.  அத்தகைய உன்னத நிலையை அடைவது என்பது அவன் தனது அகத்தோடும் புறத்தோடும், தன்னுள்ளும் தன் புற சூழலோடும் இசைவிணக்கமாய் இருத்தலின் விளைவே.

ஒருவன் உண்மையான மனிதன் ஆகத் தொடங்குவது புலம்பலையும், நிந்தித்தலையும் நிறுத்தி, தன் வாழ்வை ஒழுங்குபடுத்துகின்ற அந்த மறைந்துள்ள மாறாத நியதியை தேட ஆரம்பிக்கும்போது மட்டுமே.  அப்படி அவன் தன் மனதை அந்த ஒழுங்கமைப்போடு இணைக்கும்போது, தனது நிலைமைக்கு மற்றவர்களே காரணம் எனக் குற்றஞ்சாற்றுதலை நிறுத்துகிறான்.  உயரிய எண்ணங்களால் தன்னை கட்டி எழுப்புகின்றான்.  புறச்சூழலோடு போரிடுவதை நிறுத்தி, அச்சூழ்நிலைகளையே தனது துரித முன்னேற்றத்திற்கும், தன்னுள் மறைந்திருக்கும் அற்புதமான ஆற்றல்களையும், சாத்தியங்களையும் கண்டறிய உபயோகப்படுத்திக் கொள்கின்றான்.

குழப்பங்கள் அல்ல, ஒழுங்கமைப்பே பிரபஞ்சத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற அடிப்படைக் கோட்பாடு.  அநீதி அல்ல, நீதியே வாழ்வின் சாரமும், ஆன்மாவும் ஆகும்.  ஒழுக்கக் கேடல்ல, நேர்மையே நம்மை  வடிவமைக்கின்ற, முன்னோக்கித் தள்ளுகின்ற ஆற்றல்.  இந்நியதிக்கொப்ப, பிரபஞ்சம் சரியாக இருக்க வேண்டுமெனில் ஒருவன் தன்னை சரிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.  அப்படி தன்னை சரிப்படுத் கொள்கின்ற இந்நிகழ்வின் போது, ஒருவன் பிற பொருட்களை, பிற மனிதர்களை நோக்கிய தனது எண்ணங்களை மாற்றும்போது, அதற்கொப்ப தன்னை நோக்கிய பிற பொருட்களின், பிற மனிதர்களின் எண்ணங்கள் மாற்றம் அடைவதை அறிந்துக் கொள்வான்.

இந்த உண்மையின் சான்று ஒவ்வொரு மனிதருள்ளும் இருக்கின்றது.  அதனை அறிந்துக்கொள்ள தேவை முறையான சுய ஆய்வும்  சுய பகுப்பாய்வுமே.  ஒருவன் தனது எண்ணங்களை தீவிரமாக மாற்றிப் பார்க்கட்டும்.  அது அவன் வாழ்வில் ஏற்படுத்தும் சடுதியான மாற்றங்களைக் கண்டு வியப்படைவான்.  மனிதர்கள் எண்ணங்களை இரகசியமாக வைத்திருக்க முடியும் என்று எண்ணுகிறார்கள்.  ஆனால் அது சாத்தியமன்று.  எண்ணம் பழக்கமாக வெளிப்படுகின்றது.  பழக்கம் அதற்கொத்த சூழ்நிலையை உருவாக்குகின்றது.  கீழ்த்தரமான எண்ணங்கள் குடி, சிற்றின்பம் முதலிய பழக்கங்கள் ஆகின்றன.  அவை நோய், அழிவு மிகுந்த சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  ஒவ்வொறு விதமான தூய்மையற்ற எண்ணங்களும், வலிமையற்ற குழப்பம் மிகுந்த பழக்கங்கள் ஆகின்றன.  அவை திசை மாற்றுகின்ற, தீமை விளைவிக்கின்ற சூழ்நிலைகளை உருவாக்கின்றன.  அச்சமிக்க, தடுமாற்றமான, உறுதியற்ற எண்ணங்கள் பலவீனமான, கோழைத்தனமான, உறுதியற்ற பழக்கங்கள் ஆகின்றன.  அவை அதற்கு ஒத்த தோல்வி, வறுமை, அடிமைப்பட்ட சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  சோம்பேறித்தனமான எண்ணங்கள், அசுத்தமான, நேர்மையற்ற பழக்கங்கள் ஆகின்றன.  அவை முறைதவறுகின்ற, கொடுவறுமை விளைவிக்கின்ற சூழ்நிலைகள உருவாக்குகின்றன.  பிறரை வெறுக்கின்ற, கண்டிக்கின்ற எண்ணங்கள், வீண் பழி சுமத்துகின்ற, அடவடித்தனமான (வன்முறை) பழக்கங்கள் ஆகின்றன.  அவை மற்றவர்களை காயப்படுத்துகின்ற, துன்புறுத்துகின்ற சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  எல்லாவிதமான சுயநல எண்ணங்களும் தன்னலமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை அதற்கொத்த துயரமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  அதேபோல் எல்லாவிதமான அழகான எண்ணங்களும், தயை மிகுந்த, கருணைமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை அதற்கொத்த அன்பான, பிரகாசமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  தூய்மையான எண்ணங்கள், இச்சை அடக்கிய, சுயகட்டுப்பாடுமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை சாந்தமான, அமைதியான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  தைரியமான, தன்னம்பிக்கைமிக்க மற்றும் தீர்மானமான எண்ணங்கள் வீறுமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை அதற்கொத்த வெற்றிமிக்க, அபரிமிதமான, சுதந்திரமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  ஆற்றல்மிக்க எண்ணங்கள் தூய்மையான, செயலூக்கமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை ரம்மியமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  மென்மையான, பிழை பொறுக்கின்ற எண்ணங்கள், சாந்தமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை பாதுகாப்பான, இதமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  அன்பு மிகுந்த, சுயநலமற்ற எண்ணங்கள், தன்னலமற்ற பழக்கங்கள் ஆகின்றன.  அவை நிச்சயமான நிலையான சுபீட்சம் மற்றும் உண்மையான செழிப்புமிக்க சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.

நன்மையானதோ தீமையானதோ, விடாப்பிடியாக தொடர்கின்ற ஒரு எண்ணம், அதற்கொத்த விளைவுகளை ஒருவருடைய குணத்திலும் சூழ்நிலையிலும் கொடுக்கத் தவறுவதில்லை.  ஒருவன் தன்னுடைய சூழ்நிலைகளை நேரடியாக தேர்ந்தெடுக்க முடியாது.  ஆனால் அவனால் தன் எண்ணங்களை தேர்ந்தெடுக்க முடியும்.  அதன் மூலம் மறைமுகமாக, ஆனால் நிச்சயமாக, தனது சூழ்நிலைகளை வடிவமைக்க முடியும்.

இயற்கையானது ஒருவன் தன்னுள் அதிகமாக ஊக்குவிக்கின்ற எண்ணங்களை ஈடேற்ற உதவுகிறது.  நல்லதும் கெட்டதுமான எண்ணங்களை விரைவில் வெளிக்கொணர்வதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன.

ஒருவன் தனது பாவமிக்க எண்ணங்களை நிறுத்தட்டும்.  முழு உலகமும் அவனை நோக்கி கனிவோடு திரும்பும்.  அவனுக்கு உதவத் தயாராகும்.  அவன் தனது நலிந்த, ஆரோக்கியமற்ற எண்ணங்களை தூர விலக்கட்டும்.  ஆஹா.. அவனது உறுதியான முடிவுக்கு உதவுவதற்கு ஒவ்வொரு கரங்களிலிருந்தும் வாய்ப்புகள் பூக்கும்.  அவன் தன்னுள் நல்ல எண்ணங்களை ஊக்குவிக்கட்டும்.  எந்தத் தலைவிதியும் அவனை துர்பாக்கிய குழியினுள் தள்ளாது.  உலகம் என்பது ஒரு பல்வண்ணக் காட்சிக் கருவி.  அது அடுத்தடுத்து நகர்கின்ற கணங்களில் காட்டுகின்ற மாறுபட்ட பல வண்ணங்களின் கூட்டு என்பது வேறு எதுவுமன்று.  அவை சதா ஓடுகின்ற உங்கள் எண்ணங்களைக் கொண்டு மிக நேர்த்தியாக ஒழுங்குப்படுத்தப்பட்ட படங்களே.

ஆவாய் நீ நின் சித்தம்படி.
தோல்வி திருப்திபட்டுக்கொள்ளட்டும்
சூழ்நிலை எனும் அந்த மாய உலகில்.
ஆன்மா அதனை வெறுக்கின்றது.
ஏனெனில்அது சுதந்திரமானது.

அது
காலத்தை ஆள்கின்றது;  பரவெளியை வெற்றிகொள்கிறது.
சந்தர்ப்பம் எனும் வஞ்சகனை அடக்கியாள்கின்றது.
சூழ்நிலை எனும் கொடுங்கோலனை
வீழ்த்தி அடிமையாக்குகின்றது.

மனித சித்தம்
அந்த
பார்வைக்கு புலப்படா(த) பேராற்றல்
அழிவற்ற ஆன்மாவின் ஆசைக் குழந்தை
எந்த இலக்கை நோக்கியும்
எந்த தடையையும் தகர்த்துச் செல்லும்

எனவே
காலதாமத்தினால் கலங்காதீர் - (யாவும்)
அறிந்தவராய் காத்திருப்பீர்
ஆன்மா எழுந்து ஆணையிடும்போது
அனைத்து கடவுளரும்
பணிவிடைபுரிய பார்த்திருப்பர்.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (25.11..2018)