புதன், 26 அக்டோபர், 2016

மௌனத்தின் சப்தம்

நடுநிசி இரவின் விழிப்பில்
அருகில் யாருமில்லா
தனிமைத் தருணங்களில்
மௌனம்
பெருங்குரலெடுத்து பேசும்

இதய மயான மூலையில்
யாருமறியாது மூடிய குழியை
தோண்டத் தூண்டும்
ஈவிரக்கமின்றி ஆணையிடும்

தோண்டத் தோண்ட
திகில் மிகும்

ஓ...
ஒரு சவக்குழிக்குள்
இத்தனை எலும்புக்கூடுகளா.?!

நெஞ்சறிந்து வஞ்சித்தது
அஞ்சாது பொய்யுரைத்தது
கெஞ்சியும் இரங்காதது
ஆணவத்தில் ஆர்ப்பரித்தது
அச்சமின்றி இச்சித்தது
துச்சமென இகழ்ந்தது
இருந்தும் ஈயாதது
தெரிந்தும் திருடியது
போலியாய் புகழ்ந்தது
முறையற்று காமுகித்தது
பொறாமையில் புழுங்கியது
புறம்பேசி மகிழ்ந்தது

தோண்டத் தோண்ட
தோன்றிக்கொண்டேயிருக்கும்
ஆழப்புதைத்த அவலங்கள்

திகில் கண்டு திளைக்கும்
மௌனத்தின் சப்தத்தில்
மனசாட்சி விழித்தேழுந்து
மருகித் தவிக்கும்.

== சுப்ரமண்ய செல்வா ==

கருத்துகள் இல்லை: