வியாழன், 5 அக்டோபர், 2017

நீயறியாத நீ

வாழ்க்கைத் துணைக்கு ஒரு வாழ்த்துப்பா
====================================
இது எனது கவிதை மட்டும்மல்ல. மணமுடித்து ஆண்டுகள் பலவான அநேக ஆண்களின் மனங்களில் உலவும் கவிதை. வார்த்தைகள் வசப்படாததால் வாசிக்க மறந்த கவிதை. அல்லது, தயக்கச் சிறைகளுக்குள் தங்களை அடைத்துக்கொண்டதால், சொல்ல மறந்த, சொல்ல தவிர்க்கும் கவிதை

****************************************************************

இருபத்தைந்து ஆண்டுகால
இல்லற நிறைவின் நிறைவில் - என்
மறுபாதி பற்றி
ஒரு சிறு கவிதை

நீயறியாத நீ

நீ
நீயறியாய்
நீயெனக்கு யாரென்று

ஒருவனை நால்வனாய்
உணரச்செய்யும்
மாயம் புரிந்தவள் நீ
ஆம்
ஒருவனென்ருந்தேன்
உன்னோடிணைந்ததால்
இருவனானேன்
உன் தாய்மையின் தயவால்
நால்வனானேன்

வசந்தத்தை அழைத்து வந்து
என் வாழ்க்கைக்கு
அறிமுகப்படுத்தியவளே
என்
பாலைவனப் பாதைகள்
உன் வரவால்
சோலைகளைச் சுவீகரித்தன

என் காலைகளின்
கதிரொளி நீ
என் மாலைகளின்
புகலிடம் நீ
என் நாளைகளின்
நம்பிக்கை நீ

என்
தடுமாறும் தருணங்களுக்கு
தடம் காட்டும்
வழிகாட்டி நீ

என்
வெற்றிகள்
பற்றிப் பகிரத் துடிக்கும்
பொற்கரம் நீ

என்
தோல்விகள் தேடும்
தோள் நீ

என்
கண்ணீர் தேடும்
கைவிரல் நீ

என்
காரிருள் தருணங்களின்
பேரொளி நீ

எப்படி முடிகிறது உன்னால்
இப்படி எல்லாமாகவும் இருக்க எனும்
விடைத்தெரியாத வினா நீ

நீரின்றி அமையாதாம் இவ்வுலகு
நீயின்றி அமையாது என் உலகு

என்னவெனச் சொல்லி
என்னன்பு சொல்வேன்
நன்றியெனத் தொடங்கி
நாத்தடுமாறி நிற்கின்றேன்
வார்த்தைகள் வசப்படாது
வாயடைத்து நிற்கின்றேன்
சின்னச்சின்ன உதவிக்கெல்லாம்
சொல்லும் வார்த்தை நன்றி எனின்
நின்
பேருதவிக்கு
பேரன்புக்கு
பெருங்கருணைக்கு
என்ன வார்த்தை கொண்டு
என்னன்பு சொல்வேன்?

தமிழறிஞ்சரெல்லாம் கூடி
தக்க வார்த்தை தரும்வரை
'நன்றி'  என்றே சொல்வேன்
என்
இணையே, துணையே, சகியே, தாயே!

- சுப்ரமண்ய செல்வா -

கருத்துகள் இல்லை: