வியாழன், 29 நவம்பர், 2018

எண்ணிய வண்ணம் வாழ்வு: பகுதி-2 எண்ணமும் சூழ்நிலைகளும் (தொடர்ச்சி...)

மூலம்:  As a Man Thinketh by James Allen        தமிழில்: சுப்ரமண்ய செல்வா

துன்பம் என்பது எப்போதும் ஏதோ ஒரு வழியில் தவறான எண்ணத்தின் விளைவே.  அது ஒருவன் தன்னோடும், தன் இருப்பின் மூலமான நியதியோடும் இசைவாய் இல்லை என்பதன் அறிகுறியாகும்.  துன்பத்தின் ஒரே உன்னத நோக்கம் தூய்மைப்படுத்துவதாகும்.  தூய்மையான பின்பு துன்பம் தொடர்வதில்லை.  அழுக்கை அகற்றியபின் தங்கத்தை மேலும் எரிப்பதில் அர்த்தமில்லை; முற்றிலும் தூய்மையான ஒருவன் துன்பப்பட முடியாது.

ஒரு மனிதன் எதிர்கொள்ளும் துன்பம் மிக்க சூழ்நிலைகள் என்பன அவன் தன் அகத்தோடு இசைவற்று இருப்பதன் விளைவே.  அதேபோல் ஒருவன் எதிர்கொள்ளும் இன்பகரமான சூழ்நிலகள் என்பன அவன் தன் அகத்தோடு ஒத்திசைவாய் இருப்பதன் விளைவே.  இன்பம் என்பது சரியான எண்ணத்தினதும், துன்பம் என்பது தவறான எண்ணத்தினதும் சரிசமமான பங்காகும்.  அங்கே உள்ளவன் இல்லாதவன் என்ற பாகுபாட்டுக்கு இடமில்லை.  ஒருவன் செல்வந்தனாக ஆனால் சபிக்கப்பட்டவனாக இருக்கலாம்.  இன்னொருவன் ஏழையாக ஆனால் ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருக்கலாம்.  செல்வமும் மகிழ்ச்சியும் ஒன்றாயிருப்பது அந்த செல்வமானது நேர்மையான விவேவகமான முறையில் பயன்படுத்தப்படும் போது மட்டுமே.  அதேபோல் ஏழை துன்பக்குழியின் கீழே போவது அந்த துன்பமானது தன் மீது அநியாயமாக சுமத்தப்பட்டு இருக்கிறது என்று கருதும்போதே.

வறுமையும் மிதமிஞ்சிய அனுபோகமும் இழிநிலையின் இரு எல்லைகளாகும்.  இவை இரண்டும் இயற்கைக்கு மாறானதும், மனநோயின் விளைவும் ஆகும்.  ஒருவனின் சரியான, இயல்பான நிலை என்பது இன்பமாய், ஆரோக்கியமாய், செழுமையாய் இருத்தலே.  அத்தகைய உன்னத நிலையை அடைவது என்பது அவன் தனது அகத்தோடும் புறத்தோடும், தன்னுள்ளும் தன் புற சூழலோடும் இசைவிணக்கமாய் இருத்தலின் விளைவே.

ஒருவன் உண்மையான மனிதன் ஆகத் தொடங்குவது புலம்பலையும், நிந்தித்தலையும் நிறுத்தி, தன் வாழ்வை ஒழுங்குபடுத்துகின்ற அந்த மறைந்துள்ள மாறாத நியதியை தேட ஆரம்பிக்கும்போது மட்டுமே.  அப்படி அவன் தன் மனதை அந்த ஒழுங்கமைப்போடு இணைக்கும்போது, தனது நிலைமைக்கு மற்றவர்களே காரணம் எனக் குற்றஞ்சாற்றுதலை நிறுத்துகிறான்.  உயரிய எண்ணங்களால் தன்னை கட்டி எழுப்புகின்றான்.  புறச்சூழலோடு போரிடுவதை நிறுத்தி, அச்சூழ்நிலைகளையே தனது துரித முன்னேற்றத்திற்கும், தன்னுள் மறைந்திருக்கும் அற்புதமான ஆற்றல்களையும், சாத்தியங்களையும் கண்டறிய உபயோகப்படுத்திக் கொள்கின்றான்.

குழப்பங்கள் அல்ல, ஒழுங்கமைப்பே பிரபஞ்சத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற அடிப்படைக் கோட்பாடு.  அநீதி அல்ல, நீதியே வாழ்வின் சாரமும், ஆன்மாவும் ஆகும்.  ஒழுக்கக் கேடல்ல, நேர்மையே நம்மை  வடிவமைக்கின்ற, முன்னோக்கித் தள்ளுகின்ற ஆற்றல்.  இந்நியதிக்கொப்ப, பிரபஞ்சம் சரியாக இருக்க வேண்டுமெனில் ஒருவன் தன்னை சரிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.  அப்படி தன்னை சரிப்படுத் கொள்கின்ற இந்நிகழ்வின் போது, ஒருவன் பிற பொருட்களை, பிற மனிதர்களை நோக்கிய தனது எண்ணங்களை மாற்றும்போது, அதற்கொப்ப தன்னை நோக்கிய பிற பொருட்களின், பிற மனிதர்களின் எண்ணங்கள் மாற்றம் அடைவதை அறிந்துக் கொள்வான்.

இந்த உண்மையின் சான்று ஒவ்வொரு மனிதருள்ளும் இருக்கின்றது.  அதனை அறிந்துக்கொள்ள தேவை முறையான சுய ஆய்வும்  சுய பகுப்பாய்வுமே.  ஒருவன் தனது எண்ணங்களை தீவிரமாக மாற்றிப் பார்க்கட்டும்.  அது அவன் வாழ்வில் ஏற்படுத்தும் சடுதியான மாற்றங்களைக் கண்டு வியப்படைவான்.  மனிதர்கள் எண்ணங்களை இரகசியமாக வைத்திருக்க முடியும் என்று எண்ணுகிறார்கள்.  ஆனால் அது சாத்தியமன்று.  எண்ணம் பழக்கமாக வெளிப்படுகின்றது.  பழக்கம் அதற்கொத்த சூழ்நிலையை உருவாக்குகின்றது.  கீழ்த்தரமான எண்ணங்கள் குடி, சிற்றின்பம் முதலிய பழக்கங்கள் ஆகின்றன.  அவை நோய், அழிவு மிகுந்த சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  ஒவ்வொறு விதமான தூய்மையற்ற எண்ணங்களும், வலிமையற்ற குழப்பம் மிகுந்த பழக்கங்கள் ஆகின்றன.  அவை திசை மாற்றுகின்ற, தீமை விளைவிக்கின்ற சூழ்நிலைகளை உருவாக்கின்றன.  அச்சமிக்க, தடுமாற்றமான, உறுதியற்ற எண்ணங்கள் பலவீனமான, கோழைத்தனமான, உறுதியற்ற பழக்கங்கள் ஆகின்றன.  அவை அதற்கு ஒத்த தோல்வி, வறுமை, அடிமைப்பட்ட சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  சோம்பேறித்தனமான எண்ணங்கள், அசுத்தமான, நேர்மையற்ற பழக்கங்கள் ஆகின்றன.  அவை முறைதவறுகின்ற, கொடுவறுமை விளைவிக்கின்ற சூழ்நிலைகள உருவாக்குகின்றன.  பிறரை வெறுக்கின்ற, கண்டிக்கின்ற எண்ணங்கள், வீண் பழி சுமத்துகின்ற, அடவடித்தனமான (வன்முறை) பழக்கங்கள் ஆகின்றன.  அவை மற்றவர்களை காயப்படுத்துகின்ற, துன்புறுத்துகின்ற சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  எல்லாவிதமான சுயநல எண்ணங்களும் தன்னலமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை அதற்கொத்த துயரமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  அதேபோல் எல்லாவிதமான அழகான எண்ணங்களும், தயை மிகுந்த, கருணைமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை அதற்கொத்த அன்பான, பிரகாசமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  தூய்மையான எண்ணங்கள், இச்சை அடக்கிய, சுயகட்டுப்பாடுமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை சாந்தமான, அமைதியான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  தைரியமான, தன்னம்பிக்கைமிக்க மற்றும் தீர்மானமான எண்ணங்கள் வீறுமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை அதற்கொத்த வெற்றிமிக்க, அபரிமிதமான, சுதந்திரமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  ஆற்றல்மிக்க எண்ணங்கள் தூய்மையான, செயலூக்கமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை ரம்மியமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  மென்மையான, பிழை பொறுக்கின்ற எண்ணங்கள், சாந்தமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை பாதுகாப்பான, இதமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  அன்பு மிகுந்த, சுயநலமற்ற எண்ணங்கள், தன்னலமற்ற பழக்கங்கள் ஆகின்றன.  அவை நிச்சயமான நிலையான சுபீட்சம் மற்றும் உண்மையான செழிப்புமிக்க சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.

நன்மையானதோ தீமையானதோ, விடாப்பிடியாக தொடர்கின்ற ஒரு எண்ணம், அதற்கொத்த விளைவுகளை ஒருவருடைய குணத்திலும் சூழ்நிலையிலும் கொடுக்கத் தவறுவதில்லை.  ஒருவன் தன்னுடைய சூழ்நிலைகளை நேரடியாக தேர்ந்தெடுக்க முடியாது.  ஆனால் அவனால் தன் எண்ணங்களை தேர்ந்தெடுக்க முடியும்.  அதன் மூலம் மறைமுகமாக, ஆனால் நிச்சயமாக, தனது சூழ்நிலைகளை வடிவமைக்க முடியும்.

இயற்கையானது ஒருவன் தன்னுள் அதிகமாக ஊக்குவிக்கின்ற எண்ணங்களை ஈடேற்ற உதவுகிறது.  நல்லதும் கெட்டதுமான எண்ணங்களை விரைவில் வெளிக்கொணர்வதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன.

ஒருவன் தனது பாவமிக்க எண்ணங்களை நிறுத்தட்டும்.  முழு உலகமும் அவனை நோக்கி கனிவோடு திரும்பும்.  அவனுக்கு உதவத் தயாராகும்.  அவன் தனது நலிந்த, ஆரோக்கியமற்ற எண்ணங்களை தூர விலக்கட்டும்.  ஆஹா.. அவனது உறுதியான முடிவுக்கு உதவுவதற்கு ஒவ்வொரு கரங்களிலிருந்தும் வாய்ப்புகள் பூக்கும்.  அவன் தன்னுள் நல்ல எண்ணங்களை ஊக்குவிக்கட்டும்.  எந்தத் தலைவிதியும் அவனை துர்பாக்கிய குழியினுள் தள்ளாது.  உலகம் என்பது ஒரு பல்வண்ணக் காட்சிக் கருவி.  அது அடுத்தடுத்து நகர்கின்ற கணங்களில் காட்டுகின்ற மாறுபட்ட பல வண்ணங்களின் கூட்டு என்பது வேறு எதுவுமன்று.  அவை சதா ஓடுகின்ற உங்கள் எண்ணங்களைக் கொண்டு மிக நேர்த்தியாக ஒழுங்குப்படுத்தப்பட்ட படங்களே.

ஆவாய் நீ நின் சித்தம்படி.
தோல்வி திருப்திபட்டுக்கொள்ளட்டும்
சூழ்நிலை எனும் அந்த மாய உலகில்.
ஆன்மா அதனை வெறுக்கின்றது.
ஏனெனில்அது சுதந்திரமானது.

அது
காலத்தை ஆள்கின்றது;  பரவெளியை வெற்றிகொள்கிறது.
சந்தர்ப்பம் எனும் வஞ்சகனை அடக்கியாள்கின்றது.
சூழ்நிலை எனும் கொடுங்கோலனை
வீழ்த்தி அடிமையாக்குகின்றது.

மனித சித்தம்
அந்த
பார்வைக்கு புலப்படா(த) பேராற்றல்
அழிவற்ற ஆன்மாவின் ஆசைக் குழந்தை
எந்த இலக்கை நோக்கியும்
எந்த தடையையும் தகர்த்துச் செல்லும்

எனவே
காலதாமத்தினால் கலங்காதீர் - (யாவும்)
அறிந்தவராய் காத்திருப்பீர்
ஆன்மா எழுந்து ஆணையிடும்போது
அனைத்து கடவுளரும்
பணிவிடைபுரிய பார்த்திருப்பர்.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (25.11..2018)

திங்கள், 12 நவம்பர், 2018

எண்ணிய வண்ணம் வாழ்வு: பகுதி-2 எண்ணமும் சூழ்நிலைகளும் (தொடர்ச்சி...)

மூலம்:  As a Man Thinketh by James Allen        தமிழில்: சுப்ரமண்ய செல்வா

மனிதர்கள் தங்கள் சூழ்நிலைகளை மேம்படுத்த ஆவல் கொள்கிறார்கள்.  ஆனால் தங்களை மேம்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை.  ஆகவே அவர்கள் தொடர்ந்து கட்டுண்டு  கிடக்கின்றார்கள்.  தன்னைத் தானே சிலுவையிலிட்டு வலி வேதனையோடு தன் குறைகளை போக்குகின்ற மனிதன் தன் இதயத்தின் தேடலை அடையத் தவறுவதில்லை.  இந்த உண்மை மண்ணுலக மட்டுமல்ல விண்ணுலக விடயங்களுக்கும் பொருந்தும்.  வெறும் செல்வம் மட்டுமே சேர்க்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவன் கூட, அதனை அடைவதற்கு மிகப்பெரிய தனிப்பட்ட தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கின்றது. அவ்வாறெனின், அமைதியான வாழ்வை பெறுவதற்கு அவன் எத்துணை தியாகம் செய்ய வேண்டும்?

இதோ ஒரு மிக மிக ஏழ்மையான மனிதன்.   தனது சூழலும் வாழ்க்கைத் தரமும் உயர வேண்டுமென்று மிகவும் ஆவல் கொள்கின்றான்.  ஆனால் எப்பொழுதும் தனது வேலைகளை சரியாக செய்யாமல் தனது எஜமானனை ஏமாற்றுகின்றான்.  தனக்கு கிடைக்கும் ஊதியம் குறைவென்று தனது தவறை நியாயப்படுத்துகின்றான்.  உண்மையான சுபீட்சத்திற்கான அடிப்படை எதுவென்று அவனுக்கு புரியவில்லை.  தனது ஏழ்மையிலிருந்து வெளிவர அவன் அருகதையற்றவன்.  அதுமட்டுமன்றி தனது சோம்பேறித்தனமான, ஏமாற்றுகிற, கோழைத்தனமான எண்ணங்களால், ஏழ்மை என்னும் படுகுழியின் ஆழத்திற்கு அவன் தன்னை இழுத்துச் செல்கின்றான்.

இதோ சாப்பாட்டு பிரியரான ஒரு பணக்காரன்.  கட்டுபாடற்ற உணவு பழக்கத்தின் காரணமாக வலி வேதனைமிக்க நீண்ட நோயுற்றவன்.  அவன் தனது நோயிலிருந்து விடுபட எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் செல்வழிக்கத் தயாராயிருக்கிறான்.  ஆனால் உணவு மீதான தனது அபரிமிதமான ஆசையத் துறக்க தயாராயில்லை.  அவனுக்கு விதம்விதமான சுவையான உணவும் வேண்டும்; அதேவேளை உடலும் நலமாக இருக்க வேண்டும்.  அத்தகையவன் ஆரோக்கியமாக இருக்க அருகதையற்றவன்.  அவன் இன்னும் உண்மையான ஆரோக்கிய வாழ்வின் அரிச்சுவடி அறியாதவன்.

இதோ ஒரு எஜமானன்.  குறுக்கு வழிகளை கையாண்டு குறைந்த சம்பளம் கொடுப்பதன் மூலம் அதிக இலாபம் சம்பாதிக்கிறான்.  அத்தகையவன் உண்மையான சுபீட்சத்திற்கு அருகதையற்றவன்.  ஒரு நாள் தனது பெயரையும், பணத்தையும் இழக்கும்போது, சூழ்நிலைகள் மீது குறை கூறுகின்றான்.  தானே அந்த சூழ்நிலையின் காரணகர்த்தா என்பதை அவன் அறியவில்லை.

மேல் குறிப்பிட்ட மூன்று உதாரணங்களையும் நான் குறிப்பிட்டது, மனிதன், தானே தனது சூழ்நிலைகளின் கர்த்தாவாக (பல நேரங்களில் அவனையறியாமலேயே) இருக்கின்றான் என்பதனை எடுத்துக் காட்டவே.  நல்லதையே அடைய வேண்டும் என்று முயற்சிக்கின்ற மனிதன், அந்த முயற்சிக்குத் தடையாக இருக்கக் கூடிய எண்ணங்களையும் ஆசைகளையும் தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டே இருக்கின்றான்.  இத்தகைய உதாரணங்களை முடிவற்று பெருக்கிக் கொண்டே போகலாம்.  அது அவசியமற்றது.  ஏனெனில் ஒருவர் முயற்சித்தால் தனது மனதின்,  வாழ்வின் சுவட்டிலேயே எண்ணங்கள் என்னும் நியதியின் செயல்பாட்டைக் காணலாம்.  அப்படி அறியும் வரை வெறும் வெளிப்புறத் தோற்றங்கள் மூலம் எட்டப்படுகின்ற முடிவானது விவேகமற்றதாகும்.

ஆனால், சூழ்நிலைகள் மிக குழப்பமானவை.  எண்ணங்கள் ஆழ வேரூன்றியவை.  மகிழ்ச்சி என்பதோ மனிதருக்கு மனிதர் மிக வேறுபடுபவை.  ஆகவே ஒரு மனிதனின் முழுமையான உண்மைத் தன்மையை (அது அவனுக்குத் தெரிந்திருப்பினும்) அவனது வெளிப்புறத் தோற்றத்தின் மூலம் இன்னொருவரால் தீர்மானஞ்செய்ய இயலாது.  ஒருவன் சில வழிகளில் நேர்மையானவனாக இருக்கலாம்.  இருந்தும் ஏழ்மையில் கஷ்டப்படலாம்.  இன்னொருவன் சில வழிகளில் நேர்மையற்றவனாக இருக்கலாம்.  இருந்தும் செல்வந்தனாக இருக்கலாம்.  ஆனால் ஒருவன் தோற்றுப் போவது அவனது குறிப்பிட்ட நேர்மையினால் என்றும், மற்றவன் வளமாய் வாழ்வது அவனது குறிப்பிட்ட நேர்மையற்ற தன்மையினால் என்றும் எட்டப்படுகின்ற முடிவானது வெறும் மேலோட்டமானதாகும்.  இதற்கு காரணம் நேர்மையற்றவன் முற்று முழுதாய் அயோக்கியன்; நேர்மையானவன் முழுமையான உத்தமன் என்கிற அனுமானம் ஆகும்.  ஆழ்ந்த அறிவின் மற்றும் பரந்த அனுபவம் மூலம் அம்முடிவானது தவறு என புலப்படும்.  நேர்மையற்றவனிடம் மற்றவனிடம் இல்லாத சில உன்னத பண்புகள் இருந்திருக்கலாம்.  அதேபோல் நேர்மையானவனிடம் மற்றவனிடம் இல்லாத சில தீய குணங்கள் இருந்திருக்கலாம்.  நேர்மையானவன் தனது நல்ல குணங்களின், செயல்களினால் பெறக்கூடிய நற்பலன்களை அனுபவிப்பது போலவே தனது தீய குணங்களினால் வரக்கூடிய துன்பங்களையும் அனுபவிக்கிறான்.  அதுபோலவே நேர்மையற்றவன் தனது துன்பங்களையும் இன்பங்களையும் சேகரிக்கிறான்.

ஒருவன் நல்லவனாய் இருப்பதால்தான் துன்பங்ளை அனுபக்கிறான் என்று வழமையாக நம்புவது அறியாமையின் வெளிப்பாடே.  தனது மனதிலிருந்து ஒவ்வொறு ஆரோக்கியமற்ற, கசப்பான, தூய்மையற்ற எண்ணத்தையும் நிர்மூலமாக்குகின்ற வரையிலும்; தனது ஆன்மாவிலிருந்து பாவக் களங்கங்கள் அனைத்தையும் கழுவிப் போக்குகின்ற வரையிலும், ஒருவன் தனது துயரங்களுக்கு எல்லாம் காரணம் தனது நல்ல தன்மையே என்று பறைசாற்றக் கூடிய தகுதியைப் பெறுவதில்லை.   அத்தகைய ஒப்புயர்வற்ற முழுமையை நோக்கிப் பயணிக்கின்ற வழியில் - அதனை அடையும் முன்பே - பாரபட்சமற்ற அந்த உன்னத இயற்கை நியதியை அறிந்து கொள்கின்றான்.  அது எப்போதும் நன்மைக்குத் தீமையையும், தீமைக்கு நன்மையையும் விளைவாகக் கொடுப்பதில்லை.  அத்தைகைய மேலான அறிவோடு ஒருவன் தனது கடந்த கால வாழ்க்கையை பின்னோக்கிப் பார்க்கும்போது, அது எப்போதும் சரியான ஒழுங்கமைப்போடு இருந்திருப்பதையும், நல்லதும், தீதுமானது தனது எல்லா கடந்த கால அனுபவங்களும் தனது அகத்தின் சரியான வெளிப்பாடு என்பதனையும் அறிகிறான்.

நல்ல எண்ணங்களும் செயல்களும் எப்போதும் தீய விளைவுகளைத் தருவதில்லை; தீய எண்ணங்களும் செயல்களும் எப்போதும் நல்ல விளைவுகளைத் தருவதில்லை.  சோளத்திலிருந்து சோளத்தைத் தவிர, நெருஞ்சியிலிருந்து நெருஞ்சியைத் தவிர வேறு எதுவும் வருவதில்லை.  மனிதர்கள் புற உலகத்தில் இந்த நியதியை நன்கு புரிந்து கொள்கிறார்கள்.  அதனோடு ஒத்துப் போகிறார்கள்.  புற உலகத்தைப் போன்றே அக உலகத்திலும் (அற உலகத்திலும்) அந்த நியதியின் சீரான ஒழுங்கமைப்பு மாறாதது.  எனினும் வெகு சிலரே அதனை புரிந்து கொள்கிறார்கள்.  பலர் அதனை புரிந்து கொள்ளாததால் அதனுடன் ஒத்துப் போவதில்லை.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (11.11..2018)

எண்ணிய வண்ணம் வாழ்வு: பகுதி-2 எண்ணமும் சூழ்நிலைகளும்

மூலம்:  As a Man Thinketh by James Allen        தமிழில்: சுப்ரமண்ய செல்வா

மனித மனம் என்பது ஒரு தோட்டத்தைப் போன்றது.  எதையும் பயிரிட்டாலும் பயிரிடாவிட்டாலும் அங்கு ஏதாவதொன்று முளைத்துக்கொண்டே இருக்கும்.  பயனுள்ள விதைகளை விதைக்கத் தவறினால் பயனற்ற களைகளின் விதைகள் அங்கு விழுந்து தங்களை பெருக்கிக்கொண்டே இருக்கும்.

களைகளை அகற்றி தனக்கு தேவையான கனிகளையும் மலர்களையும் பயிரிடும் ஒரு நல்ல தோட்டக்காரனைப் போல, மனிதன் மனம் என்கின்ற தனது தோட்டத்தில் தவறான, பயனற்ற, தூய்மையற்ற எண்ணங்கள் என்னும் களைகளை அகற்றி, சரியான, பயனுள்ள, தூய்மையான கனிகளையும் மலர்களையும் நிறைவாக பயிரிட்டு வர, தானே தனது ஆன்மாவின் மிகச் சிறந்த தோட்டக்காரன் என்பதையும், தானே தனது வாழ்வை இயக்குபவன் என்பதையும் நன்றாக கண்டு கொள்கின்றான். தனது எண்ணங்களின் குறைகளை உள்ளார்ந்து உணர்கின்றான்.  எப்படி எண்ணங்களும் மனமும் குணத்தை, சூழ்நிலைகளை, தலைவிதியை உருமாற்றுகின்றன என்பதனை துல்லியமாக புரிந்து கொள்கின்றான்.

எண்ணமும் குணமும் ஒன்றே. ஒருவன் தனது குணத்தை அடையாளம் கண்டு கொள்வதும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதும் சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் வழியாகவே. எனவே ஒருவனது வாழ்வின் புறச்சூழ்நிலைக்கும் அவனது அகத்தின் தன்மைக்கும் ஒரு இணக்கமான தொடர்பு இருப்பதைக் காணலாம்.  இதன் அர்த்தம் ஒருவனது குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையானது அவனது மொத்த குணத்தின் வெளிப்பாடாக இருக்கும் என்பதல்ல.  ஆனால் அந்த குறிப்பிட்ட சூழ்நிலையானது அவனுள் இருக்கும் ஏதோ ஒரு ஆழ்ந்த எண்ணத்தோடு தொடர்புடையாதாக இருக்கும்.  அந்தத் தொடர்பின் நெருக்கம் எத்தகையதெனில் அது அந்தச் சூழ்நிலயில் அவனது வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருக்கும்.

ஒவ்வொறு மனிதனதும் தற்போதைய நிலை என்பது அவனது இருப்பின் நியதிக்கு உட்பட்டதே.  அவனது குணத்தை கட்டமைத்த அவனது எண்ணங்களே அவனை அங்கு கொண்டு வந்திருக்கின்றன.  அவனது வாழ்க்கை அமைப்பிலே தற்செயல் என்பதற்கு இடமேயில்லை.  அனைத்தும் எப்போதும் தவற முடியாத ஒரு நியதிக்கு உட்பட்டதே.  இது தங்கள் சூழ்நிலையோடு இணக்கமின்றி இருப்பவர்களுக்கும் மற்றும்  தங்கள் சூழ்நிலையோடு மனநிறைவோடு ஒத்து இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

இடையறாத தன்மாற்றத்துடன் முற்போக்குப் பாதையில் பயணிக்கின்ற மனிதன், தான் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் தரும் பாடங்களை கற்றுக் கொள்ளும்போது தன்னை மேலும் மேலும் உயர்த்திக் கொள்ள முடியும்.  ஒவ்வொறு சூழ்நிலையும் அதனகத்தே அவனுக்காக வைத்திருக்கும் ஆன்ம பாடத்தை அவன் கற்றுத் தேறும்போது, புதிய சூழ்நிலைகள் புதிய பாடங்களோடு அவனுக்காக காத்திருக்கின்றன.

தான் புறச்சூழ்நிலைகளின் உருவாக்கம்  என்று நம்புகின்ற வரையில் மனிதன் சூழ்நிலைகளின் தாக்கத்திற்கு உட்பட்டே இருப்பான்.  ஆனால் தானே படைக்கும் சக்தி என்று உணருபோது; தானே சூழ்நிலைகள் வளர்கின்ற மறைந்திருக்கும் மண்ணையும் விதைகளையும் ஆள்கின்றவன் என்று உணரும்போது, அவன் தனக்குத் தானே சரியான எஜமானன் ஆகின்றான்.

நீண்ட காலம் சுயக்கட்டுப்பாட்டுடன் தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டும் வரும் ஒவ்வொறு மனிதனாலும் சூழ்நிலைகள் என்பன எண்ணங்களிலிருந்து வளர்வதை நன்கு உணர முடியும்.   ஏனெனில் தனது சூழ்நிலைகளின் மாற்றங்களின் அளவானது அவனது மனதின் மாற்ற அளவுக்கு சரியாக ஒத்திருப்பதை அவன் அறிந்திருப்பான்.  அதேபோல் ஒருவன் மனப்பூர்வமாக முயற்சித்து தனது குணங்களில் உள்ள குறைகளை களையும்போது, அவன் இன்பம் துன்பம் என மாறி மாறி வரும் வாழ்க்கைச் சக்கரத்திலிருந்து விரைவாக வெளியே வருகின்றான்.

ஆன்மா தான் விரும்புகின்ற, பயப்படுகின்ற, இரகசியமாய் காக்கின்ற விடயங்களையே தன்னுள் ஈர்க்கின்றது.  அது தனது உயர்வான விருப்பங்கள் என்னும் உச்சியையும் அடைகின்றது.  கட்டுப்படுத்தப்படாதஆசைகள் என்னும் பாதாளத்தையும் தொடுகின்றது.  சூழ்நிலைகள் மூலமே அது தனக்கு ஒத்தவற்றைப் பெறுகின்றது.

மனதிலே விதைக்கப்பட்ட அல்லது விழ அனுமதிக்கப்பட்ட ஒவ்வொறு எண்ண விதையும் வேரூன்றி தனது விளைச்சளைத் தருகின்றது.  அது இன்றோ நாளையோ செயலாக மலர்ந்து, அதற்கு ஒத்த வாய்ப்புகளையும் சூழ்நிலைகளையும் விளைவாக தருகின்றது.  நல்ல எண்ணங்கள் நல்ல கனிகளையும், தீய எண்ணங்கள் தீய கனிகளையும் தருகின்றன.

சூழ்நிலை எனும் புற உலகம் எண்ணம் எனும் அக உலகத்திற்கு எற்ப தன்னை வடிவமைத்துக் கொள்கின்றது.  இனிமையும் கசப்புமான புறச்சூழ்நிலைகளே ஒருவனின் இறுதியான தகைமையை நோக்கி இட்டுச்செல்லும் காரணிகளாக அமைகின்றன.  தனது விளைச்சலை தானே அறுவடை செய்யும் மனிதன் துன்பத்திலிருந்தும் பேரின்பத்திலிருந்தும் படிப்பினை பெறுகின்றான்.

தன்னை ஆட்கொள்ள அனுமதித்த உள்ளார்ந்த ஆசைகளை, விருப்பங்களை, எண்ணங்களை தொடர்வதன் மூலம் மனிதன் இறுதியாக அவற்றின் விளைவுகளை அவனது வாழ்வின் புறச்சூழ்நிலையில் காண்கின்றான்.

ஒருவன் பிச்சை புகுவதோ சிறைக்கு வந்தடைவதோ சந்தர்ப்பத்தின் அல்லது விதியின் கொடுமையினால் அல்ல. அதற்கு அவன் தேர்ந்தெடுத்த மிகத் தாழ்ந்த எண்ணங்களும் கீழ்த்தரமான ஆசைகளும் மிக்க பாதையே காரணம்.  அதே போன்று தூய்மையான மனம் கொண்ட ஒருவன் திடீரென பாவத்தில் வீழ்வது வெறும் புறக்காரணங்களால் அல்ல.  பாவ எண்ணம் நீண்ட காலமாக அவன் இதயத்தினுள்ளே இரகசியமாக ஊட்டி வளர்க்கப்பட்டிருந்தது.  சரியான வாய்ப்பு அதன் ஒன்றுதிரண்ட சக்தியை வெளிப்படுத்தியது.  சூழ்நிலை ஒருவனை உருவாக்குவது இல்லை.  அது அவனை அவனுக்கு வெளிப்படுத்துகிறது.  கீழ்த்தரமான எண்ணங்களின் இணக்கத்தால் அன்றி வேறு எவ்வழியிலும் தீய செயலோ அதனால் விளையக்கூடிய துன்பங்களோ ஏற்படுவதில்லை.  அதேபோன்று நீண்ட நல்லொழுக்கத்தின் விளைவால் அன்றி வேறு எவ்வழியிலும் நற்பண்புகளும் அதனால் ஏற்படக்கூடிய தூய இன்பமும் கிட்டுவதில்லை.  எனவே எண்ணத்தின் எஜமானனான மனிதன் தன்னை உருவாக்குபவனும் உருமாற்றுவனும், தன் புறச்கூழலின் கர்த்தாவும் ஆகிறான்.  பிறப்பிலேயே ஆன்மா தனது தனித்தன்மையோடு வந்து விடுகிறது.  இந்த பூமியில் அது மேற்கொள்ளும் யாத்திரையின் ஒவ்வொறு அடியிலும் தம்மை வெளிப்படுத்துகின்ற சூழ்நிலைகளை அது தன்னை நோக்கி ஈர்க்கின்றது.  அவை அதன் சொந்த தூய்மையும், அழுக்கையும், பலத்தையும், பலவீனத்தையும் பிரதிபலிக்கின்றன.

மனிதர் தாம் விருப்புவதை தம்மை நோக்கி ஈர்த்துக் கொள்வதில்லை.  அவர்கள் எதுவாக இருக்கிறார்களோ அவற்றையே தம்மை நோக்கி ஈர்த்துக் கொள்கிறார்கள்.  அவர்களின் விருப்பங்களும், கற்பனகளும், இலட்சியங்களும் ஒவ்வொறு அடியிலும் தடைபடுகின்றன.  நல்லதும் தீயதுமான அவர்களின் உள்ளார்ந்த எண்ணங்களும் ஆசைகளும் தமக்குத் தாமே உணவாகி பெருகுகின்றன.  நம்மை உருமாற்றுகின்ற தெய்வீகம் நமக்குள்ளேதான் இருக்கின்றது.  அது வேறு யாருமல்ல.  நாமேதான்.  மனிதன் விலங்கிடப்படுவது அவனாலேயேதான்.  எண்ணமும் செயலும் விதியெனும் சிறையின் காவலர்கள்.  அவை கீழ்த்தரமாக இருக்கும்போது அவர்கள் சிறைப்படுத்துகிறார்கள்.  அவை உயர்வாக இருக்கும்போது அவர்களே நம்மை விடுவிக்கின்ற சுதந்திர தேவதைகளாகவும் இருக்கின்றார்கள்.

மனிதனுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதன்றி, அவன் விரும்புவதும் பிரார்த்திப்பதும் அவனுக்கு கிட்டுவதில்லை.   அவனது விருப்பங்கள் ஈடேறுவதும், பிரார்த்தனைகள் பலிப்பதும் அவை அவனது எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் இசைவாக இருக்கும்போது மட்டுமே.

இந்த உண்மையின் ஒளியில் சூழ்நிலைகளுக்கு எதிராக போரிடுதல் என்பதன் அர்த்தம் என்ன? அதன் அர்த்தம் என்னவெனில் மனிதன் எல்லா நேரங்களிலும் விளைவுக்கான காரணத்தை தன்னுள் போஷித்து காத்துக் கொண்டே, விளைவுக்கு எதிராக தொடர்ந்து போரிடுகிறான்.

அந்தக் காரணமானது அவன் அறிந்த இழிச்செயலாகவும் இருக்கலாம்.  அவனுக்கே தெரியாத பலவீனமாகவும் இருக்கலாம்.  எவ்வாறெனினும் கொண்டவனின் முயற்சிகளை அது விடாப்பிடியாக தடுக்கிறது.  எனவே காரணங்களை களைவது அவசியமாகிறது.

(நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் - 04.11.2018)

#மீடூ

என் கொடுங்கனவின் கதாநாயகன் நீ
நீ திருடிச் சென்ற என் உறக்கத்தை
இன்று கைப்பற்றினேன்
ஒரு யுகாந்திர நீளிரவின் விடியலில்
இதோ சுமையிறக்கிய சுகத்தில்
புலர்ந்தும் துயில்கிறேன்
உன் மகளையொத்த என்னை
உன் அதிகார விறைப்பால்
ஊமையாக்கினாய்
இன்றென் குரலைக் கண்டெடுத்து
உரத்துச் சொல்கிறேன்
#நானும்
#மீடூ
என் குரலின் எதிரொலியில்
என்னையொத்த இன்னொருத்தி
மௌனம் கலைகிறாள்
அவளின் எதிரொலியாய் இன்னொருத்தியென
எங்கள் குரலாயுதமேந்தி சமரிடுகிறோம்
கிழிந்து தொங்கும் உன் பிம்ம ஆடை வழி
உன் நிர்வாணம் அரங்கேறுகிறது
இரையாக்கியவன் இரையாகும்
வேட்டையாளன் வேட்டையாடப்படும்
வேளையிது

(நன்றி:  தினகரன வாரமஞ்சரி - 04011.2018)

தேடிச் சோறு நிதம் தின்று…

மாலை 6 மணி. காலநிலை அவ்வளவு ஒன்றும் மோசமாக இல்லை. சற்றுமுன் பெய்து ஓய்ந்த மழையின் காரணமாக காற்றில் ஈரம் கலந்திருந்தது. ஆயினும் அவருக்கு அபரிமிதமாக வியர்த்துக் கொட்டியது. சில நிமிடங்களுக்கு முன்பு தான் பணியாளரை அழைத்து மின்விசிறியை வேகமாக வைக்கச் சொல்லி இருந்தார். ஏற்கனவே வியர்வையால் தொப்பையாக நனைந்திருந்த கை துண்டை எடுத்து மீண்டும் முகத்தையும், கைகளையும், தலையையும் அழுந்த துடைத்துக் கொண்டார்.  கல்லாப்பெட்டியில் உயர்ந்த நாற்காலியிலிருந்து சற்றுத் திரும்பி தனது உணவகத்தை நோட்டமிட்டார். எல்லா மேசைகளும் நிறைந்திருந்தன. பணியாளர்கள் சுறுசுறுப்பாக உணவு பரிமாறிக் கொண்டிருந்தனர். மேசையை யாரோ தட்டுவது கேட்டு மெதுவாக திரும்பினார். முன்னே நிற்பவர் முகம் கொஞ்சம் மங்கலாக தெரிந்தது. கண்களை ஒரு முறை இறுக மூடி திறந்தார்.  விலைச்சீட்டோடு அவர் கொடுத்த பணத்தை வாங்க முயன்று, தடுமாறி முன்பக்கமாக மேசையின் மீது சரிந்து விழுந்தார். 'ஐயோ முதலாளி' என்று கத்திய பணியாளர்களின் ஓலத்தை கேட்கும் திறனை, முகத்தில் தெளிக்கப்பட்ட நீரை உணரும் நிலையை அவர் கடந்து விட்டிருந்தார்.  அந்த நொடியில் அவர் உயிர் பிரிந்துவிட்டதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவசரமாக வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்தார்கள். மருத்துவர்களால் அவரது மரணத்தை உறுதிப்படுத்த மட்டுமே முடிந்தது.

இது கதையல்ல. உண்மைச் சம்பவம்.

கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே அவரது உடல்நிலை அவ்வளவு நன்றாக இல்லை. முதுகு, தோள்பட்டை மற்றும் இடது கையில் தொடர்ந்து வலி. வழமைபோல் காலையில் வீட்டை விட்டு கிளம்புபவர் இரவு 10 மணிக்கு வீடு திரும்பி வலி நிவாரணி தைலம் பூசிக்கொண்டு படுத்திருக்கிறார். நெஞ்செரிச்சலை அஜீரணக் கோளாறு என்று அவராகவே தீர்மானித்து சோடா குடித்து சமாளித்திருக்கிறார்.

மாரடைப்புக்கான அறிகுறிகளை அலட்சியம் செய்ததால் அவரது நாற்பத்தி எட்டாவது வயதில் ஏற்பட்ட அகால மரணம் இது. விபத்துக்களால் மட்டுமன்றி அறியாமையினால்,  அலட்சியத்தினால் ஏற்படுகின்ற தவிர்க்கக்கூடிய இத்தகைய மரணங்களும் அகால மரணங்களே.

இதுபோன்ற இறப்புகளைப் பற்றி கேள்விப்படுவது இப்பொழுதெல்லாம் வழக்கமாகிவிட்டது.  காட்சிகள் வேறாயினும் முடிவு என்னவோ ஒன்றாகவே இருக்கிறது. இவற்றில் பெரும்பான்மையானவை தவிர்க்கக்கூடிய இழப்புகள் என்பது பெரும் சோகம். இவற்றிற்கான காரணங்களை ஆராயும் பொழுது ஒரு பொதுவான பாணி தென்படுவதைக் காணலாம். அவை:
• இது போன்ற நோய்கள் நமக்கு வராது என்கிற அசட்டுத்தனமான எண்ணம்.
• நோயை தாமே ஊகித்து தமக்கு தாமே வைத்தியம் செய்து கொள்கிற அறிவீனம்.
• நடுத்தர வயதை கடந்த பின் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதனை காலவிரயம்,  பணவிரயம் என்று எண்ணி தவிர்க்கும் போக்கு.
•எவ்வித உடற்பயிற்சியிலும் ஈடுபடாதிருப்பது.

நமது முன்னோர்களுக்கு  அரிதாக இருந்த மாரடைப்பு, நீரிழிவு, இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்கள் இப்போதெல்லாம் வாலிப வயதினருக்கும் வருவதைப் பார்க்கின்றோம். நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் பாரிய மாற்றங்கள் இதற்கு காரணம். உணவு பழக்கவழக்கங்கள், குறிப்பாக துரித உணவு வகைகள், விவசாயத்தில் பயன் படுத்தப்படும் ரசாயனங்கள், சூழல் மாசு, போதிய ஓய்வின்மை, உடற்பயிற்சியின்மை, போட்டி மிக்க வாழ்க்கை தரும் மனவழுத்தம் போன்றவை தற்கால மனிதர் வாழ்வில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

தனது மறைவுக்குப் பின்னும் தனது குடும்பம் சுகமாக இருக்க வேண்டும் என்று அயராது உழைக்கின்ற ஒரு குடும்பத்தலைவர்,  அவரையே முற்றுமுழுதாக சார்ந்திருக்கும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கையை அவரின்  இறப்பு எப்படி புரட்டிப் போடும் என்பது பற்றி கொஞ்சம் சிந்தித்தால் அவரது உடல் நலம் பற்றிய அக்கறையும் பொறுப்புணர்வும் இயல்பாகவே அதிகரிக்கும்.

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட நபரின் மனைவியின் வயது 38. இப்போது அவர் இளம் விதவை. இதுவரையும் வீடே உலகம் என்று வெளியுலகம் தெரியாது வாழ்ந்தவர். பதின்ம வயது மகன். சின்னஞ்சிறு மகள். திக்கற்று திகைத்து நிற்கும் அவர்கள் வாழ்வு இனி ஒருபோதும்  வழமைபோல் இருக்கப் போவதில்லை. இதுவல்ல அந்தக் குடும்பத் தலைவர் தனது குடும்பத்தைப் பற்றியும் கண்ட கனவு.

அதேபோல் உயிரோடு இருந்த பொழுதும் அவர் உண்மையிலேயே வாழ்ந்தாரா என்பது கேள்விக்குறி.

வருடம் முழுவதும் ஒரு நாளேனும் ஓய்வெடுக்காத உழைப்பு. விடியும் முன் வீட்டை விட்டு கிளம்பினால் இரவு 10 மணிக்கு பின்புதான் வீடு திரும்புவார்.  காலையில் சில நிமிடங்கள் மட்டுமே தந்தையை பிள்ளைகள் காண்பதுண்டு. உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு, பள்ளி கூட்டங்களுக்கு மற்றும் விழாக்களுக்கு மனைவி மட்டுமே சென்று வருவார். குடும்பத்தோடு ஒன்றாய் குதூகலித்த பொழுதுகள் அரிதிலும் அரிது. வெளியூர் சுற்றுப்பயணம் என்ன உள்ளூர் கடற்கரைக்கோ, ஒரு திரைப்படத்திற்கோ கூட சேர்ந்து சென்றதில்லை.

வீட்டில் பொருத்தியிருக்கும் பெருந்திரை தொலைக்காட்சி மற்றும் இன்ன பிற சொகுசு சாதனங்கள் தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்பது அவரது எண்ணம். ஆனால் அவர்களின் உண்மையான மகிழ்ச்சி அவரின் அருகாமை என்பதனை அவர் அறிந்திருக்கவில்லை.

இதனை வாசிக்கும் பலருக்கு மேலே குறிப்பிட்ட விடயங்கள் ஏதோ ஒரு விதத்தில் பரிச்சியம் மிக்கதாய், தங்களின் வாழ்வோடு தொடர்புபடுத்திப் பார்க்க கூடியதாய் இருப்பின் அது வியப்பன்று.  ஏனெனில் இன்று பெரும்பாலானோரின் வாழ்வு இவ்விதமாகவே கழிகின்றது. குறிப்பாக கீழத்தேய நாடுகளின் குடும்ப, சமூக அமைப்பு இத்தைகையதாகவே இருக்கின்றது.

இதுவா அரிதிலும் அரிதான இந்த மானிடப் பிறவி எடுத்ததன் நோக்கம்?

விலங்குகள் கூட எதிர்காலம் பற்றிய கவலை இன்றி நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்கின்றன. தின்ற புல்லை அசை போட்டவாறு ஓய்வெடுக்கிறது மாடு. தனது தேவை தீர்ந்ததும் மர நிழலில் படுத்து தன்னை தளர்த்திக் கொள்கிறது சிங்கம். தோகை விரித்தாடி காண்போரை மயக்குகிறது மயில். கிளைக்கு கிளை தாவி குதூகலிக்கிறது குரங்கு. ஏரியில் நீராடி தண்ணீரை பீச்சி அடித்து விளையாடி மகிழ்கிறது யானை.

ஆனால் நாம் மூச்சுவிட நேரமின்றி ஓடிக் கொண்டிருக்கிறோம். நாளைகளை பற்றிய கவலையில் இன்றைய தினங்களை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இயந்திரமயமாகிப் போன இந்த வாழ்வில்
இயற்கையின் பேரழகு பற்றிய பிரக்ஞையின்றி இயந்திரங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறோம்.

இதுவன்று மனித வாழ்வின் நோக்கம். அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்கிறார் அவ்வைப் பிராட்டி. அத்தகு அரிய வாழ்வுதனை முத்துக்களை வீசிவிட்டு சிப்பிகளை சேகரிக்கும் அறிவிலிகள் போல் வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.

எனின், உண்மையில் மனித வாழ்வின் நோக்கம்தான் என்ன?

'இயற்கை இன்பங்களை அளவோடு முறையோடு துய்த்து அறிவின் முழுமைப்பேறை  அடைவதே மனித வாழ்வின் நோக்கம்' என்கிறார் வேதாத்திரி மகரிஷி.

இந்த துய்த்தல், நுகருதல் அல்லது அனுபவித்தல் என்பது மனிதருக்கு மட்டுமே கிட்டியுள்ள பேறு. நமது ஒவ்வொரு செயலுடனும் நமது புலன்களும், மனதும் சம்பந்தப்பட்டு அவை அனுபவங்களாக மாறுகின்றன.  பசுவானது தனது வாழ்நாள் முழுவது புல்லையே தின்கின்றது.  ஆனால் நம்மால் ஒரே வகையான உணவை தொடர்ந்து உண்ண முடிவதில்லை.  ஏனெனில் நாம் உண்ணுகின்றபோது அந்த உணவின் சுவையை, மணத்தை, உருவகத்தை இரசித்து அனுபவிக்கின்றோம்.  அதனை அனுபவித்து முடிந்ததும் வேறு குணமுள்ள உணவை நாடுகின்றோம். ஒரே வகையான தன்மை சலிப்பைத் தருகின்றது.  இதனைப்போல் தான் எல்லா அனுபோகங்களும்.

உறவுகளோடு கூடி குலாவ, இயற்கை எழிலை கண்டுகளிக்க, இன்னிசையை இரசிக்க, கலைகளோடு ஒன்றி மெய்மறக்க நேரம் ஒதுக்க முடியாத வாழ்க்கை வெறும் இருப்பு மட்டுமே: வாழ்தல் அல்ல.

இருத்தல் அல்ல வாழ்வின் நோக்கம்; வாழ்தல்.

இன்னும் பலர் தமது பிரச்சினைகளையெல்லாம் தீர்த்த பிறகு, பொறுப்புகளையெல்லாம் ஈடேற்றிய பிறகு வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்று எண்ணுகிறார்கள்; சந்தோஷங்களை தள்ளி வைக்கிறார்கள். ஆனால் அநேகருக்கு அந்த நாள் வராமலே போய்விடுகிறது. சிலருக்கு எல்லாம் சரிவர அமையும்போது காலம் கடந்துவிடுகிறது. உடலும் மனமும் ஒத்துழைக்க மறுத்து வாழ்க்கை சுமையாகிறது.

வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி என்பது சென்றடையும் இடத்தில் அல்ல, செல்லும் பயணத்திலேயே இருக்கிறது. அடையப்போகும் இடத்தை பற்றிய கவனத்தினாலும், கவலையினாலும் பாதையின் இருமருங்கிலுமுள்ள பச்சைப் புல்வெளிகளையும், மணம் பரப்பும் மலர்களையும், பாடும் பறவைகளையும், வீசும் தென்றலையும்,  இன்னும் பல இன்பங்களையும் அனுபவிக்கத் தவறி கடந்து செல்கின்றோம். வாழ்க்கை என்பது ஒரு வழிச் சாலை. இன்னொரு நாள் நாம் இவ்வழியில் பயணிக்கப் போவதில்லை.

நமது வாழ்க்கையின் இலையுதிர் காலத்தில் நமக்கு துணை இருக்கப் போவது நாம் சுமந்திருக்கும் நினைவுகள் மாத்திரமே. அப்போது திரும்ப பெற இப்போது எத்தகைய நினைவுகளை வைப்பில் இடப்போகிறோம்?  இந்தக் கேள்விக்கான பதிலில் இருக்கிறது நமது வாழ்வு வெறும் இருத்தலா அல்லது வாழ்தலா என்பது.

நன்றி:  வீரகேசரி வார வெளியீடு (04.11.2018)