மாலை 6 மணி. காலநிலை அவ்வளவு ஒன்றும் மோசமாக இல்லை. சற்றுமுன் பெய்து ஓய்ந்த மழையின் காரணமாக காற்றில் ஈரம் கலந்திருந்தது. ஆயினும் அவருக்கு அபரிமிதமாக வியர்த்துக் கொட்டியது. சில நிமிடங்களுக்கு முன்பு தான் பணியாளரை அழைத்து மின்விசிறியை வேகமாக வைக்கச் சொல்லி இருந்தார். ஏற்கனவே வியர்வையால் தொப்பையாக நனைந்திருந்த கை துண்டை எடுத்து மீண்டும் முகத்தையும், கைகளையும், தலையையும் அழுந்த துடைத்துக் கொண்டார். கல்லாப்பெட்டியில் உயர்ந்த நாற்காலியிலிருந்து சற்றுத் திரும்பி தனது உணவகத்தை நோட்டமிட்டார். எல்லா மேசைகளும் நிறைந்திருந்தன. பணியாளர்கள் சுறுசுறுப்பாக உணவு பரிமாறிக் கொண்டிருந்தனர். மேசையை யாரோ தட்டுவது கேட்டு மெதுவாக திரும்பினார். முன்னே நிற்பவர் முகம் கொஞ்சம் மங்கலாக தெரிந்தது. கண்களை ஒரு முறை இறுக மூடி திறந்தார். விலைச்சீட்டோடு அவர் கொடுத்த பணத்தை வாங்க முயன்று, தடுமாறி முன்பக்கமாக மேசையின் மீது சரிந்து விழுந்தார். 'ஐயோ முதலாளி' என்று கத்திய பணியாளர்களின் ஓலத்தை கேட்கும் திறனை, முகத்தில் தெளிக்கப்பட்ட நீரை உணரும் நிலையை அவர் கடந்து விட்டிருந்தார். அந்த நொடியில் அவர் உயிர் பிரிந்துவிட்டதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவசரமாக வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்தார்கள். மருத்துவர்களால் அவரது மரணத்தை உறுதிப்படுத்த மட்டுமே முடிந்தது.
இது கதையல்ல. உண்மைச் சம்பவம்.
கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே அவரது உடல்நிலை அவ்வளவு நன்றாக இல்லை. முதுகு, தோள்பட்டை மற்றும் இடது கையில் தொடர்ந்து வலி. வழமைபோல் காலையில் வீட்டை விட்டு கிளம்புபவர் இரவு 10 மணிக்கு வீடு திரும்பி வலி நிவாரணி தைலம் பூசிக்கொண்டு படுத்திருக்கிறார். நெஞ்செரிச்சலை அஜீரணக் கோளாறு என்று அவராகவே தீர்மானித்து சோடா குடித்து சமாளித்திருக்கிறார்.
மாரடைப்புக்கான அறிகுறிகளை அலட்சியம் செய்ததால் அவரது நாற்பத்தி எட்டாவது வயதில் ஏற்பட்ட அகால மரணம் இது. விபத்துக்களால் மட்டுமன்றி அறியாமையினால், அலட்சியத்தினால் ஏற்படுகின்ற தவிர்க்கக்கூடிய இத்தகைய மரணங்களும் அகால மரணங்களே.
இதுபோன்ற இறப்புகளைப் பற்றி கேள்விப்படுவது இப்பொழுதெல்லாம் வழக்கமாகிவிட்டது. காட்சிகள் வேறாயினும் முடிவு என்னவோ ஒன்றாகவே இருக்கிறது. இவற்றில் பெரும்பான்மையானவை தவிர்க்கக்கூடிய இழப்புகள் என்பது பெரும் சோகம். இவற்றிற்கான காரணங்களை ஆராயும் பொழுது ஒரு பொதுவான பாணி தென்படுவதைக் காணலாம். அவை:
• இது போன்ற நோய்கள் நமக்கு வராது என்கிற அசட்டுத்தனமான எண்ணம்.
• நோயை தாமே ஊகித்து தமக்கு தாமே வைத்தியம் செய்து கொள்கிற அறிவீனம்.
• நடுத்தர வயதை கடந்த பின் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதனை காலவிரயம், பணவிரயம் என்று எண்ணி தவிர்க்கும் போக்கு.
•எவ்வித உடற்பயிற்சியிலும் ஈடுபடாதிருப்பது.
நமது முன்னோர்களுக்கு அரிதாக இருந்த மாரடைப்பு, நீரிழிவு, இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்கள் இப்போதெல்லாம் வாலிப வயதினருக்கும் வருவதைப் பார்க்கின்றோம். நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் பாரிய மாற்றங்கள் இதற்கு காரணம். உணவு பழக்கவழக்கங்கள், குறிப்பாக துரித உணவு வகைகள், விவசாயத்தில் பயன் படுத்தப்படும் ரசாயனங்கள், சூழல் மாசு, போதிய ஓய்வின்மை, உடற்பயிற்சியின்மை, போட்டி மிக்க வாழ்க்கை தரும் மனவழுத்தம் போன்றவை தற்கால மனிதர் வாழ்வில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.
தனது மறைவுக்குப் பின்னும் தனது குடும்பம் சுகமாக இருக்க வேண்டும் என்று அயராது உழைக்கின்ற ஒரு குடும்பத்தலைவர், அவரையே முற்றுமுழுதாக சார்ந்திருக்கும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கையை அவரின் இறப்பு எப்படி புரட்டிப் போடும் என்பது பற்றி கொஞ்சம் சிந்தித்தால் அவரது உடல் நலம் பற்றிய அக்கறையும் பொறுப்புணர்வும் இயல்பாகவே அதிகரிக்கும்.
இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட நபரின் மனைவியின் வயது 38. இப்போது அவர் இளம் விதவை. இதுவரையும் வீடே உலகம் என்று வெளியுலகம் தெரியாது வாழ்ந்தவர். பதின்ம வயது மகன். சின்னஞ்சிறு மகள். திக்கற்று திகைத்து நிற்கும் அவர்கள் வாழ்வு இனி ஒருபோதும் வழமைபோல் இருக்கப் போவதில்லை. இதுவல்ல அந்தக் குடும்பத் தலைவர் தனது குடும்பத்தைப் பற்றியும் கண்ட கனவு.
அதேபோல் உயிரோடு இருந்த பொழுதும் அவர் உண்மையிலேயே வாழ்ந்தாரா என்பது கேள்விக்குறி.
வருடம் முழுவதும் ஒரு நாளேனும் ஓய்வெடுக்காத உழைப்பு. விடியும் முன் வீட்டை விட்டு கிளம்பினால் இரவு 10 மணிக்கு பின்புதான் வீடு திரும்புவார். காலையில் சில நிமிடங்கள் மட்டுமே தந்தையை பிள்ளைகள் காண்பதுண்டு. உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு, பள்ளி கூட்டங்களுக்கு மற்றும் விழாக்களுக்கு மனைவி மட்டுமே சென்று வருவார். குடும்பத்தோடு ஒன்றாய் குதூகலித்த பொழுதுகள் அரிதிலும் அரிது. வெளியூர் சுற்றுப்பயணம் என்ன உள்ளூர் கடற்கரைக்கோ, ஒரு திரைப்படத்திற்கோ கூட சேர்ந்து சென்றதில்லை.
வீட்டில் பொருத்தியிருக்கும் பெருந்திரை தொலைக்காட்சி மற்றும் இன்ன பிற சொகுசு சாதனங்கள் தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்பது அவரது எண்ணம். ஆனால் அவர்களின் உண்மையான மகிழ்ச்சி அவரின் அருகாமை என்பதனை அவர் அறிந்திருக்கவில்லை.
இதனை வாசிக்கும் பலருக்கு மேலே குறிப்பிட்ட விடயங்கள் ஏதோ ஒரு விதத்தில் பரிச்சியம் மிக்கதாய், தங்களின் வாழ்வோடு தொடர்புபடுத்திப் பார்க்க கூடியதாய் இருப்பின் அது வியப்பன்று. ஏனெனில் இன்று பெரும்பாலானோரின் வாழ்வு இவ்விதமாகவே கழிகின்றது. குறிப்பாக கீழத்தேய நாடுகளின் குடும்ப, சமூக அமைப்பு இத்தைகையதாகவே இருக்கின்றது.
இதுவா அரிதிலும் அரிதான இந்த மானிடப் பிறவி எடுத்ததன் நோக்கம்?
விலங்குகள் கூட எதிர்காலம் பற்றிய கவலை இன்றி நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்கின்றன. தின்ற புல்லை அசை போட்டவாறு ஓய்வெடுக்கிறது மாடு. தனது தேவை தீர்ந்ததும் மர நிழலில் படுத்து தன்னை தளர்த்திக் கொள்கிறது சிங்கம். தோகை விரித்தாடி காண்போரை மயக்குகிறது மயில். கிளைக்கு கிளை தாவி குதூகலிக்கிறது குரங்கு. ஏரியில் நீராடி தண்ணீரை பீச்சி அடித்து விளையாடி மகிழ்கிறது யானை.
ஆனால் நாம் மூச்சுவிட நேரமின்றி ஓடிக் கொண்டிருக்கிறோம். நாளைகளை பற்றிய கவலையில் இன்றைய தினங்களை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இயந்திரமயமாகிப் போன இந்த வாழ்வில்
இயற்கையின் பேரழகு பற்றிய பிரக்ஞையின்றி இயந்திரங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
இதுவன்று மனித வாழ்வின் நோக்கம். அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்கிறார் அவ்வைப் பிராட்டி. அத்தகு அரிய வாழ்வுதனை முத்துக்களை வீசிவிட்டு சிப்பிகளை சேகரிக்கும் அறிவிலிகள் போல் வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.
எனின், உண்மையில் மனித வாழ்வின் நோக்கம்தான் என்ன?
'இயற்கை இன்பங்களை அளவோடு முறையோடு துய்த்து அறிவின் முழுமைப்பேறை அடைவதே மனித வாழ்வின் நோக்கம்' என்கிறார் வேதாத்திரி மகரிஷி.
இந்த துய்த்தல், நுகருதல் அல்லது அனுபவித்தல் என்பது மனிதருக்கு மட்டுமே கிட்டியுள்ள பேறு. நமது ஒவ்வொரு செயலுடனும் நமது புலன்களும், மனதும் சம்பந்தப்பட்டு அவை அனுபவங்களாக மாறுகின்றன. பசுவானது தனது வாழ்நாள் முழுவது புல்லையே தின்கின்றது. ஆனால் நம்மால் ஒரே வகையான உணவை தொடர்ந்து உண்ண முடிவதில்லை. ஏனெனில் நாம் உண்ணுகின்றபோது அந்த உணவின் சுவையை, மணத்தை, உருவகத்தை இரசித்து அனுபவிக்கின்றோம். அதனை அனுபவித்து முடிந்ததும் வேறு குணமுள்ள உணவை நாடுகின்றோம். ஒரே வகையான தன்மை சலிப்பைத் தருகின்றது. இதனைப்போல் தான் எல்லா அனுபோகங்களும்.
உறவுகளோடு கூடி குலாவ, இயற்கை எழிலை கண்டுகளிக்க, இன்னிசையை இரசிக்க, கலைகளோடு ஒன்றி மெய்மறக்க நேரம் ஒதுக்க முடியாத வாழ்க்கை வெறும் இருப்பு மட்டுமே: வாழ்தல் அல்ல.
இருத்தல் அல்ல வாழ்வின் நோக்கம்; வாழ்தல்.
இன்னும் பலர் தமது பிரச்சினைகளையெல்லாம் தீர்த்த பிறகு, பொறுப்புகளையெல்லாம் ஈடேற்றிய பிறகு வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்று எண்ணுகிறார்கள்; சந்தோஷங்களை தள்ளி வைக்கிறார்கள். ஆனால் அநேகருக்கு அந்த நாள் வராமலே போய்விடுகிறது. சிலருக்கு எல்லாம் சரிவர அமையும்போது காலம் கடந்துவிடுகிறது. உடலும் மனமும் ஒத்துழைக்க மறுத்து வாழ்க்கை சுமையாகிறது.
வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி என்பது சென்றடையும் இடத்தில் அல்ல, செல்லும் பயணத்திலேயே இருக்கிறது. அடையப்போகும் இடத்தை பற்றிய கவனத்தினாலும், கவலையினாலும் பாதையின் இருமருங்கிலுமுள்ள பச்சைப் புல்வெளிகளையும், மணம் பரப்பும் மலர்களையும், பாடும் பறவைகளையும், வீசும் தென்றலையும், இன்னும் பல இன்பங்களையும் அனுபவிக்கத் தவறி கடந்து செல்கின்றோம். வாழ்க்கை என்பது ஒரு வழிச் சாலை. இன்னொரு நாள் நாம் இவ்வழியில் பயணிக்கப் போவதில்லை.
நமது வாழ்க்கையின் இலையுதிர் காலத்தில் நமக்கு துணை இருக்கப் போவது நாம் சுமந்திருக்கும் நினைவுகள் மாத்திரமே. அப்போது திரும்ப பெற இப்போது எத்தகைய நினைவுகளை வைப்பில் இடப்போகிறோம்? இந்தக் கேள்விக்கான பதிலில் இருக்கிறது நமது வாழ்வு வெறும் இருத்தலா அல்லது வாழ்தலா என்பது.
நன்றி: வீரகேசரி வார வெளியீடு (04.11.2018)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக