முப்பது நாட்களுக்கு பிறகு இன்றுதான் வீடு ஓரளவு வழமைக்கு திரும்பியிருந்தது. வீட்டை மூடியிருந்த தடித்த சூட்சுமத் திரை முழுவதுமாக விலகியிருந்தது. நாளை திங்கட்கிழமை வேலை நாள் என்பதால் கருமாதிக்கு வந்தவர்கள் எல்லோரும் விடைபெற்றுச் சென்றுவிட்டார்கள். அணையா விளக்கு ஒளிர, பொட்டிட்டு, மாலையிட்டு வரவேற்பரையில் நடுநாயகமாக வீற்றிருந்த தாத்தாவின் படத்தை வழிபாட்டு அறையில் வைத்தாயிற்று.
அன்று மாலை வரவேற்பறை தளபாடங்களை மீண்டும் அதனதன் இடங்களில் நகர்த்தி வைக்கும்போதுதான் அந்தக் கேள்வி முளைத்தது.
'தாத்தாவின் சாய்வு நாற்காலியை என்ன செய்வது?'
உயர் ரக சோபா, தேனீர் மேசை, சுவரில் பொருத்தப்பட்ட தொலைக்காட்சி என ஒருவித ஒழுங்கமைப்போடு இருந்த வரவேற்பறைக்கு அந்த சாய்வு நாற்காலி கொஞ்சம் பொருத்தமற்று இருந்தது என்னவோ உண்மைதான். எல்லோரும் சகித்துக்கொள்ளப் பழகிவிட்ட ஒரு இடைஞ்சல். தாத்தாவும் அதை உணர்ந்தே இருந்தார். தானும் இந்த சாய்வு நாற்காலியைப் போல இவர்களுக்கு இடைஞ்சலாகிவிட்டோமோ என்று தாத்தாவுக்கு அடிக்கடி தோன்றுவதுண்டு. வீட்டில் யாரும் இல்லாத வேளைகளில் பாட்டியிடம் வாய்விட்டே சொல்லியும் இருக்கிறார். பாட்டிக்கு கூட அந்த ஐயம் இல்லாமல் இல்லை. இருந்தாலும் "அது எப்படிங்க நம்ம பிள்ளைகளுக்கு நாம எடைஞ்சலாவோம்" என்பாள்.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் அந்த சாய்வு நாற்காலி வரவேற்பறையில் இடம் பிடித்தது. அதுவரை சுறுசுறுப்பாக நடமாடிக் கொண்டிருந்த தாத்தா ஒரு நாள் குளியலறையில் வழுக்கி விழுந்து முதுகுத் தண்டில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆறு மாத கால கட்டாய படுக்கை ஓய்வை பரிந்துரை செய்த மருத்துவர்களே வியக்கும் வண்ணம் நான்கே மாதங்களில் பூரண குணமடைந்து நடமாட தொடங்கிவிட்டாலும், பழைய சுறுசுறுப்பு காணாமல் போய்விட்டிருந்தது. ஒவ்வொரு வேலையும் அதீத கவனத்தோடு செய்யத் தொடங்கினார். மீண்டும் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்து மற்றவர்களுக்கு பாரமாகி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். சோபாவில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது கஷ்டமாக இருந்தது. அப்போதுதான் சாய்வு நாற்காலிக்கான தேவை ஏற்பட்டது.
அதன்பிறகு அந்த சாய்வு நாற்காலி அவரின் ஒரு அங்கமானது. பெரும்பாலான நேரங்களை அதில் சாய்ந்து அமர்ந்தவாரே கழிக்கத் தொடங்கினார். தாத்தா இறுதிவரை ஒரு கண்டிப்பான ஒழுக்க வாதியாகவே இருந்தார். இதனை வெள்ளைக்காரத் துரைமார்களிடமிருந்து கற்றுக்கொண்டதாக பெருமையோடு சொல்வார். தினமும் காலை முகச்சவரம் செய்து குளித்து தூய்மையான மாற்று ஆடை அணிந்து சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்து கொள்வார். அதில் அமர்ந்தவாறு செய்தித்தாள்களை வாசித்துக்கொண்டோ, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ பொழுது கழியும். சில நேரங்களில் அதில் அமர்ந்தவாறே கண்ணயர்வார். உணவிற்கும், ஓய்வறை செல்லவும் மட்டுமே அதிலிருந்து எழுந்து வருவார்.
பாட்டியின் பொழுதும் பெரும்பாலும் அதன் அருகில் கீழே அமர்ந்தே கழியும். பாட்டிக்கு சோபாவில் அமர்வதை விட வெறுந்தரையில் கால் நீட்டி அமர்வதே பிடிக்கும். அவ்வப்போது அங்கு அமர்ந்தவாறு வெற்றிலையை இடித்து வாயில் குதப்பிக் கொள்வாள். "இந்தக் கருமத்தை விட்டு தொலைன்னா கேட்கிறயா என்ன?" தாத்தாவின் எதிர்ப்பு பழக்கமாகிவிட்டது. பட்டியால் வெற்றிலை இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.
இந்த வீட்டுக்கு வந்தது முதல் தாத்தாவின் உடலை சுமந்த சாய்வு நாற்காலி இன்று அவர் இறுதி மூச்சை சுமந்து கொண்டிருக்கிறது.
ஏனென்று தெரியவில்லை. வழமையாக பகல் உணவுக்குப் பின் தங்களது அறையில் சென்று சிறிது நேரம் தூங்கி எழும் தாத்தா அன்று அறைக்குச் செல்லாமல் மீண்டும் வந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டார். அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் எல்லோரும் பகலுணவுக்குப் பிறகு தங்கள் அறைகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு அன்றைய செய்தித்தாளை வாசித்தவாறு கண்ணயர்ந்து போனார் தாத்தா. அவரது ஆழ்ந்த தூக்கத்தை பார்த்து தொந்தரவு செய்யாமல் ஓய்வெடுக்க தங்கள் அறைக்கு போனாள் பாட்டி.
பகல் தூக்கத்திலும் ஒழுக்கத்தை கடைபிடிப்பவர் தாத்தா. முப்பது நிமிடங்களுக்கு மேல் அவர் என்றுமே பகலில் தூங்கியதில்லை. 4 மணி அளவில் எழுந்து அறையை விட்டு வெளியே வந்த பாட்டிக்கு அவ்வளவு நேரம் தாத்தா தூங்கிக் கொண்டிருந்தது ஆச்சரியத்தை அளித்தது. அருகில் சென்று பார்த்தபோது வாசித்துக்கொண்டிருந்த செய்தித்தாள் கீழே நழுவி மின்விசிறிக் காற்றில் தரையில் பரவிக்கிடந்தது. அருகே சென்று தட்டி எழுப்பியவளின் அடிவயிற்றிலிருந்து புறப்பட்ட "ஐயோ அப்பா" என்னும் அலறலில் முழு வீடும் விழித்துக்கொண்டது.
*******
சாய்வு நாற்காலியை அங்கிருந்து அகற்றுவதற்கு எதிர்ப்புக்குரல் எதிர்பாராத இடத்தில் இருந்து வந்தது. அது தாத்தாவின் மருமகள். இன்னும் கொஞ்ச நாளைக்கு அது அங்கேயே இருக்கட்டும் என்று சொன்னபோது அவள் குரல் கம்மியது.
அவளை ஒருவாறு சமாதானம் செய்து சாய்வு நாற்காலியை மொட்டை மாடியில் உள்ள பழைய பொருட்கள் வைப்பறைக்கு இடம் மாற்றுவது என முடிவாயிற்று.
அனைத்தையும் தனது அறைக்குள் ஒடுங்கி படுத்தவாறு கேட்டுக்கொண்டிருந்தாள் பாட்டி. பொதுவாக இவ்வாறான உரையாடல்களில் அவர் கலந்து கொள்வதில்லை. அவரது பங்கேற்றல் வரவேற்கப்படுவதும் இல்லை.
பாட்டி கூட அந்த சாய்வு நாற்காலியை பயன்படுத்தலாம் என்ற எண்ணம் அவரது மகன் உட்பட எவருக்குமே தோன்றவில்லை. ஒரு மூதாட்டி சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுக்கும் காட்சி அவர்களின் மனங்களுக்கு பிடிபடவில்லை.
தாத்தாவின் மகனும் பேரனும் சேர்ந்து சாய்வு நாற்காலியை மொட்டை மாடிக்கு இடம் மாற்றிவிட்டு திரும்பினார்கள். வைப்பறையில் இடம் போதாமையால் மறுநாள் அதில் உள்ள பொருட்களை ஒழுங்கு செய்யும் வரை தற்காலிகமாக அறைக்கு வெளியே வைத்துவிட்டு வந்தார்கள்.
வரவேற்பரையில் சாய்வு நாற்காலி இருந்த இடம் வெறிச்சோடிக் கிடந்தது. நாளை அந்த இடத்தை நெகிழி பூக்கள் நிறைந்த பெரிய பூச்சாடி ஒன்று அலங்கரிக்கலாம். சில மாதங்களில் இருந்த சுவடு தெரியாமல் சாய்வு நாற்காலி மறக்கப்படும், தாத்தாவை போல.
எல்லோரும் உறங்கிய பின் நேரம் நடுநிசியை அண்மித்த வேளை பாட்டி தன் அறையிலிருந்து வெளியே வந்து மெதுவாக படியேறி மொட்டை மாடியை அடைந்தார். வெறிச்சோடிக் கிடந்த அந்த மொட்டை மாடியில் அனாதரவாய் விடப்பட்ட சாய்வு நாற்காலி நிலவொளியில் தெரிந்தது. பார்க்கப் பார்க்க அதன்மீது அவளுக்கு பேரன்பு பெருகியது. கண்ணீர் பெருக அருகில் சென்றாள். வாஞ்சையோடு அதனை வருடினாள். தாத்தா கால் வைக்கும் இடத்தை தொட்டு வணங்கினார். சுற்றுமுற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு வாழ்க்கையில் முதல்முறையாக அந்த சாய்வு நாற்காலியில் மெதுவாக அமர்ந்தார். அவரது எடைக்கு சமநிலை இழந்து ஒரு தொட்டிலை போல் அது மெதுவாக ஆடத்தொடங்கியது. அவரை அறியாமல் கால்களால் அழுத்த அது ஒரு தாள லயத்தோடு அசையத் தொடங்கிற்று. அவரின் மனமெங்கும் உடலெங்கும் ஒரு பேரமைதி பரவ கண்கள் சொருகின. ஆழ்ந்த உறக்கம் அவரை ஆட்கொண்டது. தாயையும் பின்பு கணவரையும் ஆரத்தழுவி உறங்கிய நினைவுகள் கனவுகளாய் வந்து போயின.
நன்றி: தினகரன் வாரமஞ்சரி (03.02.2019)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக