ஞாயிறு, 27 ஜூன், 2021

மன்னிக்கும் மனம்...


மன்னிப்பு கேட்பதன் அவசியம் பற்றி பதிவிட்ட பிறகு மன்னித்தலின் மாண்பு பற்றி குறள் ஒன்று வாசிக்கக் கிடைத்தது ஒரு இனிய நிகழ்வுப் பொருத்தம்.


ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். (குறள்: 156)

கலைஞர் மு.கருணாநிதி உரை:

தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.

மன்னிப்பது இயலாமையின், பலவீனத்தின் அறிகுறியன்று.  அது வீரத்தின் அறிகுறி.  நமது தன்னம்பிக்கையின் வெளிப்பாடு.

மன்னிப்பு கேட்பவரை மன்னித்து விடுவது மனித குணமென்றால், மன்னிப்பு கேட்காதவரையும் மன்னித்து விடுவது மாமனித குணம்.  

மன்னித்து மறந்துவிட்டவர்களின் வாழ்க்கைப் பயணம் சுமைகளற்ற சுகப்பயணமாக இருக்கும்.

எனது கவிதையொன்று:

மன்னித்துவிடு
===============
வெறுக்கப்படுபவரைவிட 
வெறுப்பவர்க்கே 
வேதனை அதிகம்

வெறுப்புச் சுமை சுமந்து
நடக்கும் வாழ்வு கொடிது

சுமையிறக்கிய பறவையாய்
சுதந்திர வானில்
சிறகடித்துப் பறக்க ஆசையா...?

மன்னித்துவிடு.

மன்னிக்காமல்
மறத்தல் அரிது

முகம் பார்த்து மன்னிக்க 
முடியவில்லையா?
அகம் நிறைந்து மன்னித்துவிடு.

தன்னை தான் வெறுத்தலே
தாளாத சுமை
உன்னையும் சேர்த்து
மன்னித்துவிடு.

விதிவிலக்கல்ல நீ
எல்லா இதய வீட்டுக்குள்ளும்
இறுகப் பூட்டிய
இருண்ட அறைகள் உண்டு

இறந்தகாலம்
இறந்த காலம்
மற.

ஏனெனில் இங்கு
கடந்தகாலமற்ற ஞானியுமில்லை
எதிர்காலமற்ற பாவியுமில்லை.

-  சுப்ரமண்ய செல்வா  -

(தொடுதூரத்தில் விடிவானம் கவிதைத் தொகுதி)

இங்கு கிடைக்கும் 👇👇👇

https://notionpress.com/read/agavarigal



வெள்ளி, 25 ஜூன், 2021

மன்னித்துவிடு(ங்கள்)

 


'மன்னித்துவிடு(ங்கள்)'

எத்தனையோ காயங்களை ஆற்றக்கூடிய, பிரிவுகளை மாற்றக்கூடிய,  இடைவெளிகளை நிரப்பக்கூடிய ஒற்றைச் சொல்.  ஆனால் அதனை உச்சரிப்பதில்தான் எத்தனைத் தயக்கம்!  மனம் விரும்பினாலும் அது வாய்மொழியாவதை தன்முனைப்பு தடுத்து நிறுத்தும்.  

யார் முதலில் சொல்வது என்கிற போட்டியில் ஒரே நாளில் தீரக்கூடிய சிறு சச்சரவுகூட வாரக்கணக்கில், மாதக்கணக்கில், சிலவேளைகளில் வருடக்கணக்கில் நீண்டு தீராத பெரும் பகையாய் உருமாறும்.   

மன்னிப்பு கேட்பதன் அர்த்தம் 'நான் பிழை - நீ சரி' என்பதல்ல; 'நான் சிறியவன் - நீ பெரியவன் என்பதல்ல'.  அதன் அர்த்தம் 'நான் என் தன்முனைப்பைவிட (ego) உன் உறவை அதிகம் மதிக்கிறேன்' என்பதாகும்.

பல வேளைகளில் தவறு நமதாக இருந்தாலும் அதை ஒத்துக்கொள்ளும் போது நாம் பிறரிலும் தாழ்ந்து விடுகிறோம் என்கின்ற தவறான எண்ணம் மன்னிப்பு கேட்பதை தடுக்கின்றது.  நாம் எப்போதும் சரியானவர்கள், தவறு செய்யாதவர்கள் என்று நம்பவே நம் மனது விரும்புகிறது.  இந்த மாயையிலிருந்து வெளிவந்து, மனிதத் தவறுகளுக்கு நாமும் விதிவிலக்கல்ல என்பதை உணர்ந்து, நமது தவறுகளுக்கு தைரியமாக, மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்க முடிந்தால் எத்தனையோ இருகப்பூட்டிய மனக்கதவுகள் அகலத் திறந்து உறவுகள் தொடர்கதையாககும்.  

'மன்னித்துவிடு(ங்கள்)'  எனும் ஒரே வார்த்தையில் மறக்கப்படக் கூடிய தவறுகள் எத்தனை?  உலர்ந்துவிட்ட உறவும் நட்பும் மீண்டும் துளிர்க்கும் வாய்ப்புகள் எத்தனை?  தனிமரம் தோப்பாகாது.  ஒவ்வொரு தனிமனித வாழ்வின் உயர்விலும், தாழ்விலும் உறுதுணையாய் இருப்பது உன்னத உறவுகளும், உயர்ந்த சினேகங்களுமே.  

வாழ்க்கையில் வரப்பிரசாதமாய் கிடைத்த உறவுகளும், நட்புகளும் கைநழுவி போய்விடாமல் 'மன்னித்துவிடு(ங்கள்)'  என்ற ஒற்றை வார்த்தை காக்குமென்றால், நமது ஈகோவை விட்டு அதை உச்சரிப்பதில்தான  என்ன தவறு?  விடை காண வேண்டிய வினா.

- சுப்ரமண்யா செல்வா -  #செல்வாசகம்

https://youtu.be/SRITxY-GPMU

செவ்வாய், 22 ஜூன், 2021

கடமையைச் செய்தால் போதுமா?


இன்றைய காலை வாசிப்பில் சிந்திக்கத் தூண்டிய மூன்று வார்த்தைகள்: 

"போருக்காக போர் புரிவாயாக".

(இன்ப துன்ப, இலாப நஷ்ட, வெற்றி தோல்வி, இவற்றைக் கருதாது போருக்காக போர் புரிவாயாக - கீதை  அத்: 2 பதம்: 38). 

இது ஆயுதம் ஏந்தி புரியும் போருக்கு மட்டுமல்ல, நாம் அன்றாடம் செய்யும் எல்லா செயல்களுக்கும் பொருந்தும். பெறுபேறுகள் பற்றிய சிந்தனையும், எதிர்பார்ப்பும் செயல் மீதான கவனத்தை சிதைக்கும். 

ஸ்டீவ் ஜொப்ஸ் கூற்று ஒன்று நினைவுக்கு வருகிறது.

"உங்கள் கவனம் இலாபத்தில் இருந்தால், நீங்கள் தயாரிக்கும் பொருட்களின் தரத்தின் மீதான கவனம் குறையும். மாறாக உங்கள் கவனம் பொருட்களின் தரத்தில் இருந்தால், இலாபம் தானாக வரும்". 

செயல் நேர்த்தியும், செயல் சிறப்பும் தக்க விளைவுகளை தராமல் போகாது. அதற்குத் தேவை செயல்/தொழில் மீதான பேரார்வம், பெருவிருப்பு (passion).

(தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை. செய்கையின் பயனைக் கருதாதே; தொழில் செய்யாமலுமிராதே. கீதை  அத்: 2 பதம்: 47). 

விளைவுகள் மீது அதிக கவனம் வேண்டாம் என்பதற்கு இன்னொரு காரணம் விளைவுகள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதாகும்.  செயல் நமது கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த செயல் விளைவாக மாறுவதற்கு நமது கட்டுப்பாட்டில் இல்லாத இன்னும் பல காரணிகள் ஏதுவாகின்றன. எனவே நமது கட்டுப்பாட்டில் இல்லாத விடயங்களைப்பற்றி கவலை கொள்வதால் காலவிரயம் தவிர வேறொன்றுமில்லை.  

எந்தச் செயல்/தொழில் தொடங்குமுன் தூண்டுதலையும், ஈடுபடும்போது கிளர்ச்சியையும் (excitement) தருகிறதோ அதுவே பெருவிருப்பத்திற்குரியதாகும். பெறுபேறுகள் பற்றிய சிந்தனையின்றி செயல் தரும் இன்பத்திற்காக செயல் புரிவது. உதாரணமாக இந்தப் பதிவை நான் எழுதும்போதே அது எனக்கு கிளர்ச்சிமிக்கதாகவும், நிறைவு தருவதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறன்றி இது பெறப்போகும் விருப்புகளில் (likes) எனது கவனம் இருந்தால் எழுதுவதில் முழுமையான ஈடுபாடு இருக்காது.  

உங்கள் செயல்/தொழில் அத்தகைய மனநிலையை தரவில்லையெனில் அற்புத வரமான உங்கள் வாழ்க்கையை வீணடிக்கிறீர்கள் என அர்த்தம். செயல் சிறக்க இன்னோரு வழி பற்றற்ற மனநிலை.  

விளைவில்தான் பற்று கூடாது என்றால் செயலிலுமா? அதுவும் பெருவிருப்போடு ஈடுபடும் செயலில் எப்படி பற்றற்று இருப்பது?   'பற்றற்ற' என்பதில் கொஞ்சம் ஆன்மிகம் தூக்கல் என்பதால் 'கருவி' (tool) மனநிலை என்று வைத்துக்கொள்ளலாம்.  கருவி மனநிலை என்பது ஒரு செயலை 'நான் செய்கிறேன்' என்றில்லாமல் அச்செயல் 'என் மூலம் செய்யப்படுகிறது' என்பதாகும்.  'நான் செய்கிறேன்' என்கிறபோது ஈகோ உள்ளே நுழைந்து காரியத்தை கெடுத்துவிடுகிறது.  ஆணவம் கலந்த செயல் உண்மையான நிறைவையும், மகிழ்ச்சியையும் தராது.  கருவி மனநிலையில்  ஒரு செயலில்  பெருவிருப்போடு அதேவேளை பற்றற்று ஈடுபடுதல் சாத்தியம்.  தன் ஊடாக வெளிப்படும் இன்னிசைக்கு புல்லாங்குழல் சொந்தம் கொண்டாடுவதில்லை. 

- சுப்ரமண்ய செல்வா -   #செல்வாசகம்

https://youtu.be/orpxSTl9jlg



சனி, 19 ஜூன், 2021

தப்பெண்ணத்தை மாற்றுவது எப்படி ?


அண்மையில் வந்த கேள்வியோன்று:
ஒருவர் என்மீது கொண்டிருக்கும் தப்பெண்ணத்தை எப்படி மாற்றுவது?

பெரும்பாலான உறவுச் சிக்கல்களுக்கு காரணமாய் இருப்பது தவறான புரிதலால் ஏற்படும் தப்பெண்ணம் அல்லது தப்பபிப்பிராயம்.  தவறான புரிதல்களுக்கு காரணம் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளும்போது ஏற்படும் இடைவெளி (Communication Gap).   சொல்பவர் சொல்ல முற்படுவது ஒன்றாகவும், கேட்பவர் புரிந்துகொள்வது வேறொன்றாகவும் இருப்பது. 

பல வேளைகளில் தவறான வார்த்தைகளால் சரியான நோக்கம்கூட சரிந்துவிடுகிறது. சொல்லும் விதம் தவறாகும்போது சொன்னதனைத்தும் கேட்பவரிடம் சென்றடையத் தவறிவிடுகிறது.

கேட்பவரும் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ள முன்முடிவுகளுடன் செவிமடுக்கும்போது, சொல்பவரின் வார்த்தைகளுக்கு புதுப்புது அர்த்தங்கள் புலப்படுவதுண்டு.  எப்போதும் வார்த்தைகள் சொல்பவருடையவை; அர்த்தங்கள் கேட்பவருடையவை.

தீர விசாரிக்காமல் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றவர்களின் அபிப்பிராயங்களும் தப்பெண்ணங்களை ஏற்படுத்துவதுண்டு.

சரி,  ஏற்பட்டுவிட்ட தப்பெண்ணத்தை மாற்றுவது எப்படி?

இலகுவான வழி சம்பந்தப்பட்டவரிடம் நேரடியாக மனம் திறந்து பேசுவதுதான்.  பெரும்பாலும் நம் முன் எழுந்து நிற்கும்  நமது ஈகோ என்னும் பெருஞ்சுவர் நம்மை அந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க விடாமல் தடுக்கும்.  தைரியத்துடன் அதனைத் தாண்டிவிட்டால் தீர்வு கிட்டிவிடும் வாய்ப்புகள் அதிகம். சம்பந்தப்பட்டவர் நேரடி உரையாடலுக்கு தயாராக இல்லை என்றால், இருவருக்கும் பொதுவான ஒருவரின் உதவியை நாடலாம்.  அப்போதும் அவர் நமது நகர்வுகளை புறந்தள்ளினால் அப்போதைக்கு அந்த முயற்சியை கைவிடுவதே உகந்தது.  ஏனெனில் நம்மைப்பற்றிய தப்பபிப்ராயங்களை தொடர்ந்து வலிந்து சென்று மாற்றுவது கடினம். அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்தும் உண்டு. நமது தவறு என்று அவர்கள் நினைப்பதை நாம் நியாயப்படுத்த முயலுவதாக கருதப்படலாம். ஒரிருமுறை முயற்சி செய்துவிட்டு காலத்திடம் கையளிப்பதே சாலச் சிறந்தது. காலம் எல்லா காயங்களையும் ஆற்றும்; நம்மை புரிந்துகொள்ளும் பக்குவத்தை அவர்களுக்கு கொடுக்கும். நம் நியாயம் புலப்படும் நாளொன்று வரும்.  அதுவரை காத்திருத்தலே புத்திசாலித்தனம்.

- சுப்ரமண்ய செல்வா -   #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

https://youtu.be/orpxSTl9jlg

வெள்ளி, 18 ஜூன், 2021

அச்சுகள் ஆயிரம்

கைதேர்ந்த அச்சு வார்ப்பவர்கள் நாம். பெற்றோர், பிள்ளைகள், உறவுகள் நண்பர்கள், சக பணியாளர்கள் என நம்மிடம் உறவு கொள்ளும் அனைவருக்கும் விதவிதமான அச்சுகளை  உருவாக்கி வைத்திருக்கிறோம்.  அவர்கள் அனைவரும் நாம் வார்த்து வைத்துள்ள அச்சுகளில் துல்லியமாக பொருந்த வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.  அப்படி நடக்காத பட்சத்தில் ஏமாற்றம் அடைகிறோம்.  இந்தப் புள்ளியில் ஆரம்பமாகின்றன எல்லா உறவுச் சிக்கல்களும்.  

பிறரின் அச்சுகளில் நாம் பொருந்துகின்றோமா என்கின்ற கேள்வியின் பதிலில் எமது எதிர்பார்ப்புகள் எவ்வளவு அர்த்தமற்றவை என்கின்ற உண்மை புரியும்.  

எண்ணூறு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கும் உலக மக்கள் தொகையில் உருவத்தால் ஒருவர் மற்றொருவரை போல் இல்லாத பொழுது உள்ளத்தால் ஒருவரைப் போல் இன்னொருவர் இருப்பது எப்படி சாத்தியம்?   ஒருவருடைய எண்ணம், சொல், செயல் என்பன அவருடைய பிறப்பு, வளர்ப்பு, கல்வி, வாழ்க்கை அனுபவம் என பலவித கலவைகளின் வெளிப்பாடு.  உடன்பிறந்த இரட்டையர்களுக்கு கூட அவை  ஒன்றுபோல் இருப்பதில்லை.  இந்த உண்மையின் வெளிச்சம் எம்முள் படர்ந்தால் நமது எதிர்பார்ப்பு இருள் அகலும்.

நமது அச்சுகளையும் அவை உருவாக்கும் எதிர்பார்ப்புகளையும் ஆழப் புதைத்துவிட்டு, மனிதர்களை அவர்களுடைய இயல்பான பலங்களுடன்,  பலவீனங்களுடன் நிபந்தனையற்று ஏற்றுக்கொள்ள முடிந்தால் எல்லா உறவுத் தொடர்புகளும் அர்த்தமிக்கதாய், நிறைவானதாய் இருக்கும்.

- சுப்ரமண்ய செல்வா -   #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

https://youtu.be/d6dBNwkekaU

புதன், 16 ஜூன், 2021

தொடக்கச் சிக்கல்

நனவாகக் கூடிய எத்தனையோ கனவுகள் நனவாகாமல், அடையக்கூடிய எத்தனையோ வெற்றிகள் அடையப்படாமல், புரியக்கூடிய எத்தனையோ சாதனைகள் நிகழாமல் இருப்பதற்கு காரணம் தொடக்கச் சிக்கல் (starting trouble). 

நம்மால் ஒன்றை சாதிக்க முடியும் என்று நன்கு தெரிந்திருந்தும்  எல்லாம் சரியாக அமையட்டும் என்று காத்திருக்கிறோம்.   தயக்கம் காரணமாக தள்ளிப்- போடுகிறோம்;  அல்லது காரணம் எதுவுமின்றி காலந்தாழ்த்துகிறோம்.

இது சிறிய செயல்களிலிருந்து பெரும் சாதனைகள் வரை அனைத்துக்கும் பொருந்தும்.  உண்மையில் கச்சிதமான தொடக்கம் கச்சிதமான முடிவு என்று எதுவுமில்லை. ஆயிரம் மைல் பயணம் ஒற்றைக்  காலடியில் தொடங்குகிறது.  பயணத்தில் வரக்கூடிய தடங்கல்களை,  சவால்களைப் பற்றி எண்ணிக்-கொண்டிருந்தால் எப்போது பயணத்தை ஆரம்பிப்பது?

நம்மால் காற்றின் திசையை கட்டுப்படுத்த முடியாது.  ஆனால் நமது கப்பலின் பாயை மாற்றிக் கட்டி இலக்கை அடைய முடியும்.

'எண்ணித் துணிதல்' நன்றுதான். ஆனால் எவ்வளவு காலம்தான் எண்ணிக்கொண்டே இருப்பது?  ஏதாவது ஒரு புள்ளியில் தொடக்கம், இடையிடையே சின்னச்சின்ன திருத்தங்கள், மேம்படுத்தல்கள் - இவையே வெற்றிப்பயணத்திற்கான விதிமுறைகள்.

தொடக்கமும், முடிவும் போலவே பயணமும் முக்கியம்.  சென்றடையும் இலக்கைப் போலவே இலக்கை நோக்கிச் செல்லும் வழியில் கிடைக்கும் அனுபவங்களும் பெறுமதியானவை.  

சிலவேளைகளில் சேருமிடத்தை  சென்றடைய  சிறுது நேரம் ஆகலாம்.  ஆனால் அனுபவித்து பயணித்தால் பயணக்களைப்பின்றி இலக்கை அடையலாம்.

- சுப்ரமண்ய செல்வா -    #செல்வாசகம்

Latest YouTube Video

https://youtu.be/d6dBNwkekaU


திங்கள், 14 ஜூன், 2021

வரங்களின் வரிசை

அபரிமித மனநிலை (abundance mentality)  வாழ்க்கையை அழகுமிக்கதாக மாற்றுகிறது.  குறை மனநிலை அல்லது பற்றாக்குறை மனநிலை (lack/scarcity  mentality) வாழ்க்கையை வரட்சிமிக்கதாக  வடிவமைக்கிறது.

இது ஈர்ப்பு விதி. 

எமது எண்ணங்களுக்கு ஏற்ற சூழ்நிலைகளை நாம் உருவாக்குகிறோம்.

எப்போதும் எம்மிடம் இல்லாதவற்றை பற்றியே எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது இல்லாமையை எம்மை நோக்கி ஈர்த்துக்கொள்கிறோம். 

எமது பிரார்த்தனைகளில் கூட எது எம்மிடம் இல்லையோ அவையே முன்னிலைப்-படுத்தப்படுகின்றன.  எனவே தொடர்ந்தும் அவை எமக்கு எட்டாக்கனிகளாகவே இருக்கின்றன.

அபரிமித மனநிலை நமது மனதில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்துகிறது.  நமது தேவைகள் நம்மை அறியாமல் மெல்ல மெல்ல பூர்த்தி செய்யப்படுகின்றன.

அந்த அபரிமிதமான மன நிலையை அடைவது எப்படி?

நம்மிடம் இல்லாதவற்றைப்  பற்றி மறந்துவிட்டு இருப்பவைகளுக்கு     மனதார நன்றி சொல்ல தொடங்குவது முதல் படி.  காலை கண்விழித்ததும்,  இரவு உறங்கச் செல்லும் முன்பும் ஒரு சில நிமிடங்கள் அதனை ஒரு பிரார்த்தனையாக செய்தால் இன்னும் சிறப்பு.

நேற்று உயிருடன் இருந்தவர் இன்று இல்லை.  குறிப்பாக இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் அது இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது.  நேற்றிறவு உறங்கச் சென்ற  பல்லாயிரம் பேர் இன்று கண்விழிக்கவில்லை.   அவர்களில் ஒருவராக நாம் இல்லை என்பது முதல் வரம்.  நோயற்ற உடல், உயிர்வாழ அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறையுள், அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள், உணர்வுத் தேவைகளான அன்பு, அமைதி, இன்பம் போன்றவற்றை பூர்த்தி செய்யும் பெற்றோர், உடன் பிறப்புகள், உறவுகள், வாழ்க்கைத்-துணை, பிள்ளைகள், நண்பர்கள் என  இயற்கை நமக்கு வாரி வழங்கியிருக்கும் வரங்களை வரிசைப்படுத்தத் தொடங்கினால் அந்தப் பட்டியல் முடிவற்று நீளும்.  அது ஏற்படுத்தும் நன்றிப் பெருக்கில் அபரிமித மனநிலை சாத்தியமாகும். 

நமக்கு கீழே உள்ளவர் கோடி என்கிற உண்மை புலப்படும்.  நிறை மனம் வாய்க்கும்.

ஒரு ஆங்கில கிறிஸ்தவப் பாடலின் தமிழாக்கம்:

உங்கள் வரங்களை கணக்கிடுங்கள் - அவை
ஒவ்வொன்றையும் உரத்துச் சொல்லுங்கள்...

- சுப்ரமண்ய செல்வா -    #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

YouTube: https://youtube.com/c/SubramanyaSelva

வெள்ளி, 11 ஜூன், 2021

மனதின் பரிணாமம்

டார்வின்னின் பரிணாமக் கோட்பாடு மனிதத் தோற்றத்துடன் நிறைவுபெற்றுவிட்டது என்றே தோன்றுகிறது.  இதற்கு அப்பால் தோற்ற வேறுப்பாட்டுடன் அதிசிறந்த மனிதன் (super human) பரிணாமம் பெறும் வாய்ப்பு  மிகவும் குறைவு. இப்போது நடைபெற்றுக்- கொண்டிருப்பது அறிவின் பரிணாமம். இருபது வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட இன்றைய பத்து வயது சிறுவர்கள் அதிபுத்திசாலிகளாக இருக்கிறார்கள்.  சின்னஞ்சிறுசுகள் கைபேசிகளை அனாயசமாக கையாளும் விதம் இதற்கு ஒரு சான்று.

இதைப்போல் மனதின் பரிணாமம் மிகுந்திடின் மனிதகுலம் மேன்மையுறும். எல்லோரும் இன்புற்றிருத்தல் சாத்தியமாகும். அது என்ன மனதின் பரிணாமம்? உடலளவில் மனிதன் மாறியிருப்பினும், குணத்தளவில்  விலங்கினப் பதிவிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை. சீறும் பாம்பும், தந்திர நரியும், நிறம் மாறும் பச்சோந்தியும், குரூர கொடுமிருகங்களும் அவ்வப்போது தலைக்காட்டி தம் இருப்பை  பறைச்சாற்றிச் செல்கின்றன. இந்த விலங்கினப் பதிவுகளின் நிரந்தர வெளியேற்றமே மனதின் பரிணாமம்.

'மனிதன் என்பதன் பொருள்  மனது இதமானவன்' என்கிறார் வேதாத்திரி மகரிஷி. இதமான மனதிற்கு உரித்தாதல் மனதின் பரிணாமம்.

அன்பும் கருணையுமே இதமான மனதின் அடையாளங்கள்.  பிறருக்கு துன்பம் தராது இருத்தல் அன்பு.  எம்மால் இயன்ற அளவில் பிறர் துன்பம் போக்குதல் கருணை.  எல்லா மதங்களின் சாராம்சமும் இதுவே.

- சுப்ரமண்ய செல்வா -   #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

YouTube: https://youtube.com/c/SubramanyaSelva

செவ்வாய், 8 ஜூன், 2021

தீதற்ற செல்வம்

பணம் படைத்தவர்கள் அனைவரும் செல்வந்தர்கள் அல்லர்.  என்ன வியப்பாக இருக்கிறதா? பணம் அதிகமிக்கவர் பணக்காரர்.  செல்வம் அதிகமிக்கவர் செல்வந்தர்.  தாள்கள், நாணயங்கள், சொத்துகள் என எண்ணிக்கைக்குள் அடங்குவது பணம். 

எனின், எது செல்வம்? 

வங்கிகளில் இருக்கும் கோடிகளா? வாழும் மாடிவீடுகளா? வரிசைகட்டும் வாகனங்களா?  ஆடம்பர ஆபரணங்களா? 

அண்மையில் ஒரு கானொளி பார்த்து கண்கலங்கினேன்.  சொற்பமாய் சம்பாதிக்கும் ஒரு எளிய மனிதர் தனது ஒய்வு நேரத்தில் கழிவறைகளை கழுவி சம்பாத்தித்த பணத்தில் கடந்த 15 வருடங்களில் 1200 மாணவர்களின் கல்விக்கு உதவியிருக்கிறார்.  இவரை எந்த வகையில் சேர்ப்பது?

'அன்னயாவினும் புண்ணியம் கோடி  ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'

எனும் பாரதியின் அறிவுரையை  நடைமுறைப்படுத்திய, ஈகை மனம் என்னும் பெருஞ்செல்வம் படைத்த இந்த மாமனிதரும்  உண்மையில் செல்வந்தர் அல்லவா? 

பதினாறு செல்வங்களில் ஒன்று மட்டுமே பணத்தோடு பொறுந்தக்கூடியது; அதுவும் 'தீதற்ற செல்வம்'. மற்ற பதினைந்து செல்வங்கள் உடையோரும் செல்வந்தர்களே.  முக்கியமானது 'அழியாப் புகழ்'.  ஈகைச்செல்வம் மிக்கோரே அழியாப் புகழ் பெறுவர்.

பணத்தைக்கொண்டு செய்யும் தர்மங்கள் மட்டுமே ஈகையாகாது.  தனக்கு வாய்த்த அறிவைக்கொண்டு, உடல் உழைப்பு மூலம், தனது நேரத்தை செலவழித்து என ஒருவரால் இயன்ற வகையில் சக மனிதரை கைதூக்கி விட, மேம்படுத்த செய்யும் செயல்கள் அனைத்துமே ஈகை என்றே கொள்ளலாம்.  

ஆக செல்வந்தராக இருக்க பணம் படைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை அல்லவா! 

- சுப்ரமண்ய செல்வா - #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

YouTube: https://youtube.com/c/SubramanyaSelva


திங்கள், 7 ஜூன், 2021

வையம் வசமாகும்

ஒரு நேசப் பார்வை
ஒரு சினேகப் புன்னகை
ஒரு அன்புச் சொல்
ஒரு ஆறுதல் அரவணைப்பு...
ஒரு சிறு கல் வீழ்ந்த குளத்தின்
வட்டச் சிற்றலையாய்
விரிந்து விரிந்து
வையத்தை வசப்படுத்தும்
- சுப்ரமண்ய செல்வா -   #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

YouTube: https://youtube.com/c/SubramanyaSelva