செவ்வாய், 22 ஜூன், 2021

கடமையைச் செய்தால் போதுமா?


இன்றைய காலை வாசிப்பில் சிந்திக்கத் தூண்டிய மூன்று வார்த்தைகள்: 

"போருக்காக போர் புரிவாயாக".

(இன்ப துன்ப, இலாப நஷ்ட, வெற்றி தோல்வி, இவற்றைக் கருதாது போருக்காக போர் புரிவாயாக - கீதை  அத்: 2 பதம்: 38). 

இது ஆயுதம் ஏந்தி புரியும் போருக்கு மட்டுமல்ல, நாம் அன்றாடம் செய்யும் எல்லா செயல்களுக்கும் பொருந்தும். பெறுபேறுகள் பற்றிய சிந்தனையும், எதிர்பார்ப்பும் செயல் மீதான கவனத்தை சிதைக்கும். 

ஸ்டீவ் ஜொப்ஸ் கூற்று ஒன்று நினைவுக்கு வருகிறது.

"உங்கள் கவனம் இலாபத்தில் இருந்தால், நீங்கள் தயாரிக்கும் பொருட்களின் தரத்தின் மீதான கவனம் குறையும். மாறாக உங்கள் கவனம் பொருட்களின் தரத்தில் இருந்தால், இலாபம் தானாக வரும்". 

செயல் நேர்த்தியும், செயல் சிறப்பும் தக்க விளைவுகளை தராமல் போகாது. அதற்குத் தேவை செயல்/தொழில் மீதான பேரார்வம், பெருவிருப்பு (passion).

(தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை. செய்கையின் பயனைக் கருதாதே; தொழில் செய்யாமலுமிராதே. கீதை  அத்: 2 பதம்: 47). 

விளைவுகள் மீது அதிக கவனம் வேண்டாம் என்பதற்கு இன்னொரு காரணம் விளைவுகள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதாகும்.  செயல் நமது கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த செயல் விளைவாக மாறுவதற்கு நமது கட்டுப்பாட்டில் இல்லாத இன்னும் பல காரணிகள் ஏதுவாகின்றன. எனவே நமது கட்டுப்பாட்டில் இல்லாத விடயங்களைப்பற்றி கவலை கொள்வதால் காலவிரயம் தவிர வேறொன்றுமில்லை.  

எந்தச் செயல்/தொழில் தொடங்குமுன் தூண்டுதலையும், ஈடுபடும்போது கிளர்ச்சியையும் (excitement) தருகிறதோ அதுவே பெருவிருப்பத்திற்குரியதாகும். பெறுபேறுகள் பற்றிய சிந்தனையின்றி செயல் தரும் இன்பத்திற்காக செயல் புரிவது. உதாரணமாக இந்தப் பதிவை நான் எழுதும்போதே அது எனக்கு கிளர்ச்சிமிக்கதாகவும், நிறைவு தருவதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறன்றி இது பெறப்போகும் விருப்புகளில் (likes) எனது கவனம் இருந்தால் எழுதுவதில் முழுமையான ஈடுபாடு இருக்காது.  

உங்கள் செயல்/தொழில் அத்தகைய மனநிலையை தரவில்லையெனில் அற்புத வரமான உங்கள் வாழ்க்கையை வீணடிக்கிறீர்கள் என அர்த்தம். செயல் சிறக்க இன்னோரு வழி பற்றற்ற மனநிலை.  

விளைவில்தான் பற்று கூடாது என்றால் செயலிலுமா? அதுவும் பெருவிருப்போடு ஈடுபடும் செயலில் எப்படி பற்றற்று இருப்பது?   'பற்றற்ற' என்பதில் கொஞ்சம் ஆன்மிகம் தூக்கல் என்பதால் 'கருவி' (tool) மனநிலை என்று வைத்துக்கொள்ளலாம்.  கருவி மனநிலை என்பது ஒரு செயலை 'நான் செய்கிறேன்' என்றில்லாமல் அச்செயல் 'என் மூலம் செய்யப்படுகிறது' என்பதாகும்.  'நான் செய்கிறேன்' என்கிறபோது ஈகோ உள்ளே நுழைந்து காரியத்தை கெடுத்துவிடுகிறது.  ஆணவம் கலந்த செயல் உண்மையான நிறைவையும், மகிழ்ச்சியையும் தராது.  கருவி மனநிலையில்  ஒரு செயலில்  பெருவிருப்போடு அதேவேளை பற்றற்று ஈடுபடுதல் சாத்தியம்.  தன் ஊடாக வெளிப்படும் இன்னிசைக்கு புல்லாங்குழல் சொந்தம் கொண்டாடுவதில்லை. 

- சுப்ரமண்ய செல்வா -   #செல்வாசகம்

https://youtu.be/orpxSTl9jlg



கருத்துகள் இல்லை: