நேற்று மகன் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த திரைப்படத்தின் கடைசி சில காட்சிகளை பார்க்கக் கிடைத்தது. திரைப்படத்தின் பெயர் 'நேரம்'. படத்தின் முடிவில் வரும் வசனம் இது:
பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் கதாநாயகன் திரைப்படத்தின் முடிவில் கூறுவது:
(இவ்வளவு பிரச்சினைகளுக்குப் பிறகும்) "நிம்மதியா ஒரு தம் அடிச்சுக்கிட்டு, மனசுக்கு புடிச்ச பொண்ண நெஞ்சோடு சேர்த்து நான் இங்க நிக்கிறதுக்கு காரணம் என்னன்னா எங்கேயோ யாரோ சொன்னது ஞாபகத்துக்கு வருது...
'நேரம்'
நேரம் இரண்டு வகைப்படும். ஒன்னு நல்ல நேரம். இன்னொன்னு கெட்ட நேரம். கெட்ட நேரத்துக்கு அப்புறம் நல்ல நேரம் வரும்"
ஆம் கெட்ட நேரத்துக்கு பிறகு நல்ல நேரம் நிச்சயம் வரும். அதற்கு அடித்தளமாக இருப்பது நம்பிக்கை.
நம்பிக்கை. இந்த நம்பிக்கைதான் மனிதர்களின் வாழ்க்கைப் படகு கவிழ்ந்து விடாமல் நங்கூரமிட்டு காக்கிறது. நாளை அனைத்தும் நலமாக இருக்கும் என்கின்ற நம்பிக்கையே ஒவ்வொரு காலையிலும் எதிர்பார்ப்புடன் கண் விழிக்கச் செய்கிறது. துவண்டு விடாமல் காரியங்கள் ஆற்றச் செய்கிறது.
ஆங்கில கவிஞர் அலெக்சாண்டர் போப் அவர்களின் ஒரு அழகான கவிதை வரி:
'Hope springs eternal in the human breast. நம்பிக்கை மனித நெஞ்சில் நித்தியமாக துளிர்த்திருக்கிறது.'
நம்பிக்கையே இருண்ட சுரங்கத்தில் எங்கோ தெரியும் ஒரு சிறிய ஒளியை நோக்கி நம்மை நகர்த்திச் செல்லும் வழிகாட்டி.
அமெரிக்க கவிஞர் எமிலி டிக்கின்சன் அவர்களின் கவிதையில் வருவது போல்
'நம்பிக்கை ஆன்மாவின் கிளையில் அமர்ந்து வார்த்தைகளற்று ராகமிசைக்கும் அழகிய பறவை. அது பாடுவதை என்றுமே நிறுத்துவதில்லை.'
வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இரவும் பகலும் போல் ஏற்றமும் இறக்கமும் வாழ்க்கையில் மாற்ற முடியாதது. ஒவ்வொரு அஸ்தமனமும் இன்னொரு விடியலுக்கான வாக்குறுதி.
நமது தற்போதைய நிலையை உற்றுப் பார்த்து, நாம் இந்த இடத்துக்கு வந்து சேர்ந்ததற்கான காரணங்களை நன்கு ஆராய்ந்து, நமது எண்ணங்களை, செயல்களை, சூழ்நிலையை மாற்றி அமைப்பதன் மூலம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குகின்ற வல்லமை நம் அனைவருக்கும் உண்டு. நமது தவறுகளை படிப்பினைகளாகவும், பெற்ற அனுபவங்களை படிக்கட்டுகளாகவும் ஆக்கினால் வெற்றியை நிச்சயம் எட்டிப் பிடிக்கலாம்.
மாட்டின் லூதர் கிங் கூறுவது போல்:
'எல்லைக்குட்பட்ட ஏமாற்றங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஆனால் எல்லையற்ற நம்பிக்கையை ஒருபோதும் இழந்து விடக்கூடாது.'
சவால் மிக்க தருணங்களில் நம்பிக்கையை இழப்பது இயல்பு. ஆனால் நம்பிக்கையை கைவிடாது இறுகப் பற்றிக் கொண்டால், அல்லலுரும் பொழுதுகளில் அது நல்லதொரு துணையாக இருக்கும்.
நாம் நம்பிக்கையை கைவிடாமல் இருக்கும் வரை நம்பிக்கை நம்மை என்றும் கை விடுவதில்லை.
நாளை நலமே விளையும். நம்பிக்கை!
இந்த நாளும் இனிய நாளாகட்டும்!
என்றும் அன்புடன்
சுப்ரமண்ய செல்வா
(02.04.2023)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக