ஞாயிறு, 12 ஜூலை, 2015

அன்பு சூழ் உலகு

விடியல் என்று ஏதுமில்லை
மெய்யெனத் தெரியும் பொய்யது
இருளே நிரந்தரம். இரவே நிரந்தரம்
தன்னைச் சுழற்றியே பூமி
விண்ணொளி பெறுகிறது.

அசிங்கம் என்று ஏதுமில்லை
அனைத்தும் மனிதன் கற்பிதம்
நரகலும் சிறுநீரும் கூட அசிங்கமில்லை
மனிதனுக்குள் இருப்பதனால்
அழகே நிரந்தரம்.

பொய்யென்று ஏதுமில்லை
மெய்யை மறைத்த மேகமது
உரைப்பவன் உள்ளத்தில் ஒளிந்திருக்கும்
மெய்யே நிரந்தரம்.

தோல்வி என்று ஏதுமில்லை
மனமது மருகும் மாயத் தோற்றம்
வெற்றியே நிரந்தரம்
நிறைந்த வெற்றி. குறைந்த வெற்றி.
அளவில் மாற்றம் அம்மட்டே.

பகை என்று ஏதுமில்லை
உறவில் விழுந்த சிறு கீறல்
காலம் கரையும்
கீறல் மறையும்
உறவே நிரந்தரம்

வன்மம் என்று ஏதுமில்லை
அன்பின் அளவில் குறைபாடு
குறைதீர்க்கும்
அன்பு சூழ் உலகமிது
அன்பே நிரந்தரம்


ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

மழையுதிர்க் காலம்!


மழை பொழியும் மாலைப் பொழுதொன்றில் சற்று நின்று நிதானித்து ஓடும் நீரை ஒருமுறை பார்த்ததுண்டா நண்பர்களே?  யாருக்காகவும் எதற்காகவும் காத்து நிற்காமல், இயற்கையோடு இசைந்து ஓடிக்கொண்டே இருக்கும் நீர் சொல்லும் சேதி மகத்தானது.  வாய்ப்பு கிடக்கும் போதெல்லாம் புதுப் பாதை வகுத்து, எதிர்ப்படும் தடைகளை தகர்த்தெறிந்து, மேடுகளை கடக்க நின்று நிதானித்து பலம் சேர்த்து, பள்ளங்களில் சட்டென நீர்வீழ்ச்சியாய் வீழ்ந்து தெறித்து, சிறுகற்களை மூழ்கடித்து, மிரட்டி நிற்கும் பெருங்கற்கள் முன் பணிந்து பின் அதனைச் சுற்றி வளைந்து நெளிந்து பயணிக்கும் நீர் எப்போதும் தன் இயல்பிலிருந்து மாறுவதில்லை.  அதன் விரைவிலும் ஒரு தளர்வு; ஆக்ரோஷத்திலும் ஓர் அமைதி.  பயணம் ஒன்றே அதன் குறிக்கோள்!  ஓடும் நீர் சொல்லும் பாடம் நம் எல்லோருக்குமானது…   -  சுப்ரமண்ய செல்வா