செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

கற்பிப்போர் கவனத்திற்கு

(ஹிட்லரின் நாஜி வதை முகாமிலிருந்து உயிர்பிழைத்த ஒரு பள்ளி அதிபர் கல்வியாளர்களுக்கு எழுதிய கடிதம்).

அன்புள்ள ஆசிரியர்களுக்கு, நான் நாஜி சித்திரவதை முகாமிலிருந்து உயிர்பிழைத்தவன். வேறு எவரும் காணக்கூடாத காட்சிகளை எனது கண்கள் அங்கு கண்டன. படித்த பொறியியலாளர்களால் கட்டப்பட்ட நச்சு வாயு அறைகள்; படித்த மருத்துவர்களால் நஞ்சூட்டப்பட்ட சிறுவர்கள்; தாதிகளால் கொல்லப்பட்ட சிசுக்கள்; பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கல்வி கற்ற ஆயுதப்படையினரால் கொல்லப்பட்ட பெண்களும், குழந்தைகளும். எனவே நான் கல்வியின் மீது மிகுந்த சந்தேகம் கொள்கிறேன்.

எனவே ஆசிரியர்களே! எனது வேண்டுதல் என்னவெனில் உங்கள் மாணவர்கள் நல்ல மனிதர்களாக உருவாக உதவுங்கள். உங்கள் உழைப்பு மெத்தப் படித்த அரக்கர்களையும், திறமையான உளநோயாளர்களையும் உருவாக்கக் கூடாது. எழுத்தும், வாசிப்பும், கணிதமும், சரித்திரமும் மாணவர்களை நல்ல மனிதர்களாக ஆக்கினால் மட்டுமே பயன் மிகுந்ததாக இருக்கும்.

(Excerpt from the book 'Teacher and Child' by by Dr. Haim Ginott, Child Psychologist and Author)

தமிழில் : சுப்ரமண்ய செல்வா #செல்வாசகம்

வியாழன், 4 ஜனவரி, 2018

சபிக்கப்பட்ட என் கைப்பேசி

மறைந்த தன் நண்பனின் தொலைபேசி இலக்கத்தை தனது கைப்பேசியிலியிருந்து அழிக்க முயலுகையில் படும் துயரத்தை பகிர்ந்துகொண்ட ஒரு நண்பனுக்காக எழுதிய கவிதை:
=================================

நீ
அழைத்த போதெல்லாம்
உன் பெயரால்
ஒளிர்ந்த என் கைப்பேசி
இன்று ஓய்ந்து கிடக்கிறது.
உன் குரலின் ஸ்பரிசத்தை
இனி அது
உணரப்போவதில்லை.

உன் குரலால்
ஆசீர்வதிக்கப்பட்ட
என் செவிகள்
உன் மரணம் கேட்குமாறு
சபிக்கப்பட்டது எப்போது?

கண்ணீரால் காயமான
என் கண்கள்
செய்த பாவமென்ன?

எப்போதும்
சொல்லிவிட்டுத்தானே செல்வாய்
இப்போது மட்டுமென்ன?

நண்பனே!
என் கைப்பேசி சுமக்கும்
உன் எண்ணை
நீக்க முயலுகையில்
துடிக்கும் என் விரல்களை
பதறும் என் நெஞ்சை
நடுங்கும் என் உடலை
உயிருடன் நான் படும்
மரண அவஸ்தையை
உணரவேனும் ஒருமுறை
திரும்பி வா.

- சுப்ரமண்ய செல்வா -

சனி, 4 நவம்பர், 2017

புறக்கணிப்பு

நேற்றையத் தோல்விகளின்
புலம்பல் சப்தத்தில்
இன்றைய வாய்ப்புகள்
கதவைத் தட்டும் சப்தம்
காதுகளுக்கு எட்டாமலேயே
கடந்து போகிறது.

வியாழன், 5 அக்டோபர், 2017

ஊடல்

என் எண்ணம் அறியாத
உன் கோபம்
என்னை ஒன்றும் செய்வதில்லை.
சிரிக்காமல் இருக்க முயன்று தோற்கிறேன்.
உன்னக்குத் தெரியுமென எனக்குத் தெரியும்
"கோபத்திலும் கொள்ளையழகு நீ" எனும்
என் முக்குழல் ஏவுகணையில்
நிர்மூலமாகும் உன் கோபம்.
போதும்.
பேசுவிடு.
- சுப்ரமண்ய செல்வா -

பாலர்பாடம்

வெண்சீருடை சிறகடித்து
வெள்ளந்தி  சிரிப்புதிர்த்து
பள்ளிச்செல்லும் பாலகரை
பார்த்திருத்தல் பரவசம்

நேற்றைய கவலைகளில்லை
நாளைய பயங்களில்லை
இன்றைய வரங்களை
கொண்டாடும் குதூகலம்

இனமில்லை மதமில்லை
இகழ்ந்தொதுக்கும் குணமில்லை
ஏற்றமில்லை தாழ்வுமில்லை
வேற்றுமை வேறெதுவுமில்லை
பொதுமை அறம்
போற்றும் பருவம்

எதிர்ப்பார்ப்பு ஏதுமில்லை
புதிரான வாழ்க்கையில்லை
எதிரிகள் யாருமில்லை
சதிசெய்யும்  எண்ணமில்லை
புதிதாய் அன்றலர்ந்த
பூக்களின் தரிசனம்.

மாசுநிறை நெஞ்சமில்லை
பேசுமொழியில் கள்ளமில்லை
காசுநிறை மாந்தரை
பூசிக்கும் புத்தியில்லை
யோசித்து உறவாடா
நேசிக்கும் நெஞ்சம்.

முகமூடி ஏதுமில்லை
அகம் மூடி அலைவதில்லை
சுகம் தரும் உறவு தேடி
சுயம் தொலைத்து திரிவதில்லை
பள்ளமில்லா உள்ளமெங்கும்
எல்லையில்லா ஏகாந்தம்.

பள்ளிச்செல்லும் பாதைகளில்

பாடங்களை விட்டுச்செல்லும்

பிள்ளைச்செல்வங்களே

கற்கச் செல்லும் வழியில்

நீங்கள்

கற்பித்துச் செல்கிறீர்கள்

- சுப்ரமண்ய செல்வா -   #செல்வாசகம்

நீயறியாத நீ

வாழ்க்கைத் துணைக்கு ஒரு வாழ்த்துப்பா
====================================
இது எனது கவிதை மட்டும்மல்ல. மணமுடித்து ஆண்டுகள் பலவான அநேக ஆண்களின் மனங்களில் உலவும் கவிதை. வார்த்தைகள் வசப்படாததால் வாசிக்க மறந்த கவிதை. அல்லது, தயக்கச் சிறைகளுக்குள் தங்களை அடைத்துக்கொண்டதால், சொல்ல மறந்த, சொல்ல தவிர்க்கும் கவிதை

****************************************************************

இருபத்தைந்து ஆண்டுகால
இல்லற நிறைவின் நிறைவில் - என்
மறுபாதி பற்றி
ஒரு சிறு கவிதை

நீயறியாத நீ

நீ
நீயறியாய்
நீயெனக்கு யாரென்று

ஒருவனை நால்வனாய்
உணரச்செய்யும்
மாயம் புரிந்தவள் நீ
ஆம்
ஒருவனென்ருந்தேன்
உன்னோடிணைந்ததால்
இருவனானேன்
உன் தாய்மையின் தயவால்
நால்வனானேன்

வசந்தத்தை அழைத்து வந்து
என் வாழ்க்கைக்கு
அறிமுகப்படுத்தியவளே
என்
பாலைவனப் பாதைகள்
உன் வரவால்
சோலைகளைச் சுவீகரித்தன

என் காலைகளின்
கதிரொளி நீ
என் மாலைகளின்
புகலிடம் நீ
என் நாளைகளின்
நம்பிக்கை நீ

என்
தடுமாறும் தருணங்களுக்கு
தடம் காட்டும்
வழிகாட்டி நீ

என்
வெற்றிகள்
பற்றிப் பகிரத் துடிக்கும்
பொற்கரம் நீ

என்
தோல்விகள் தேடும்
தோள் நீ

என்
கண்ணீர் தேடும்
கைவிரல் நீ

என்
காரிருள் தருணங்களின்
பேரொளி நீ

எப்படி முடிகிறது உன்னால்
இப்படி எல்லாமாகவும் இருக்க எனும்
விடைத்தெரியாத வினா நீ

நீரின்றி அமையாதாம் இவ்வுலகு
நீயின்றி அமையாது என் உலகு

என்னவெனச் சொல்லி
என்னன்பு சொல்வேன்
நன்றியெனத் தொடங்கி
நாத்தடுமாறி நிற்கின்றேன்
வார்த்தைகள் வசப்படாது
வாயடைத்து நிற்கின்றேன்
சின்னச்சின்ன உதவிக்கெல்லாம்
சொல்லும் வார்த்தை நன்றி எனின்
நின்
பேருதவிக்கு
பேரன்புக்கு
பெருங்கருணைக்கு
என்ன வார்த்தை கொண்டு
என்னன்பு சொல்வேன்?

தமிழறிஞ்சரெல்லாம் கூடி
தக்க வார்த்தை தரும்வரை
'நன்றி'  என்றே சொல்வேன்
என்
இணையே, துணையே, சகியே, தாயே!

- சுப்ரமண்ய செல்வா -

சனி, 17 ஜூன், 2017

சகுனம்

சாலையோரம்
குறுக்கே செல்ல
காத்திருந்த பூனையை
வேகமாய் கடந்து நடந்தேன்.

..............................

கிறீச்சிட்ட சக்கர சப்தம்...
பூனையின் அலறல்...

திரும்பிப் பார்த்தேன்.

வீதி கடக்க முயன்ற பூனை
வேக வாகனத்தில் பட்டு...

பாவம் பூனை
சகுனம் பார்க்கவில்லை
போலும்.

- சுப்ரமண்ய செல்வா -