வியாழன், 22 ஜூலை, 2010

கேள்வி

நீ நோக்காததால் 
நான் நோக்கவில்லை.
நீ புன்னகைக்காததால்
நான் புன்னகைக்கவில்லை.
நீ பேசாததால்
நான் பேசவில்லை.
ஜெயித்ததாய்
இறுமாந்திருந்தது மனது.
சட்டென விழித்து
கேட்டது புத்தி,
'நான் ஏன்
நீயாக வேண்டும்?'

***  சுப்ரமண்ய செல்வா ***  

கல்லைக் கண்டால்...


'கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.  நாயைக் கண்டால் கல்லைக் காணோம்'.  நாம் சர்வ சாதாரணமாய் பயன்படுத்தும் சொற்றொடர்.  அர்த்தம், ஒரு காரியத்தை முடிக்க இரண்டு விடயங்கள் தேவைப்படும்போது பல சமயங்களில் ஒன்று அமைந்தால் மற்றது அமைவதில்லை என்பதாகும்.  ஆனால் இந்த சொற்றொடருக்கு முற்றிலும் வித்தியாசமான அர்த்தம் ஒன்றை இன்று காலை திரு. கனக சுப்புரத்தினம் (பதினாறு கவனர் - தமிழ்நாடு) அவர்கள் எழுதியுள்ள  'நினைவாற்றல் வளர...' எனும் புத்தகத்தை வாசித்துக் கொண்டிரும்போது அறிந்து வியந்தேன்.  இதோ அவரது வரிகளில்......


****************************************************************************
நமது மூளை சுமார் 1400 கிராம் எடையுள்ள புரதப் பொருள். அதில் 700 கிராம் இடப்புறம் உள்ளது.  இது அறிவுப் பகுதி.  Logic and Intellectual Wing.  மீதி 700௦௦ கிராம் வலப்புறம் உள்ளது.  இது உணர்வுப் பகுதி.  Intuition and Intelligence Wing.

இடப்புறம் அறிவுப்பகுதி - எய்தியும் பிரித்துப் பார்க்கும்.  ஆராச்சி செய்யும்.  அதாவது Scanning Process.

ஒரு பூவைப் பார்த்தவுடன், 'அல்லி வட்டம் எது? புல்லி வட்டம் எது? இதழ்கள் எத்தனை?' என்றெல்லாம் ஆராச்சியில் இறங்குவதே இடப்புற வேலை.

வலப்புற உணர்வுப் பகுதி எதையும் சேர்த்து முழுதாய்ப் பார்க்கும். அதோடு, அதன் மீது விருப்பு, வெறுப்பு, வியப்பு... இப்படி ஏதோ ஓர் உணர்வைத் தோற்றுவிக்கும்.

அதே பூவைப் பார்த்து, 'அடடா என்ன அழகான ரோஜா!' என்பது போன்ற வியப்பு உணர்வை உண்டாக்கும்.  மண்ணைப் பிசைந்து மலராக்கிக்த் தந்த செடியின் மேல் காதல் வரும்.  காதல் கசிந்து கண்ணீர் வரும்.  கவிதை கூட பொங்கும்.  'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடி' வள்ளலார் ஆகும்.

ஆக, இடப்புற அறிவியல் (விஞ்ஞானம்) அறுத்துப் பார்த்து ஆராச்சி செய்யும்; வலப்புற உணர்வியல் (மெய்ஞ்ஞானம்) வளர்த்துப் பார்த்து ஆனந்தம் கொள்ளும்.  நடந்ததைப் பதிவு செய்வது அறிவு.  நடப்பதை அனுபவிப்பது உணர்வு.  பிரித்துப் பார்த்தால் அறிவு. சேர்த்துப் பார்த்தால் உணர்வு.

நாய் வடிவத்தில் ஒரு கற்சிலை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  அறிவுப் பகுதி அதை 'வெறும் கல்' என்று சொல்லும்.  உணர்வுப் பகுதியோ 'அடடே என்ன அழகான   நாய்!' என்று வியக்கும்.

ஆக, 'கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.  நாயைக் கண்டால் கல்லைக் காணோம்'.

****************************************************************************

இந்த சொற்றொடருக்கு இப்படி ஒரு அர்த்தம் இருப்பதை இதுவரை அறிந்திருக்கவில்லை.    எனினும் இதே அர்த்தம் கொண்ட வேறொரு சொற்றொடரை அறிவேன். 'மரத்தை மறைத்தது மாமத யானை.  மரத்தில் மறைந்தது மாமத யானை.'  மரத்தினால் ஆன யானை ஒன்றை பார்க்கும் போது, அதை மரமாக பார்த்தால் யானை தெரிவதில்லை.  யானையாக  பார்த்தால் மரம் தெரிவதில்லை.  ஆன்மீகத்தில் இதன் அர்த்தம் 'இந்த பிரபஞ்சத்தில் அனைத்தும் விண்ணின் (அணுவுக்கும் முன்னைய மூலக்கூறு) கூட்டே.  அதனை விண்ணாய்ப் பார்க்கும்போது நானும் எல்லா பொருட்களும், எல்லா உயிர்களும் ஒன்றே.'    அந்த விண்ணானது  உயிரினங்களுக்கு உள்ளே ஓடும்போது அதனை 'உயிர்' என்கிறோம்.  ஆக, அத்தனை உயிரினங்களையும் உயிர் என்ற நிலையில் இருந்து பார்க்கும்போது, நானும் அனைத்து உயிரினங்களும் ஒன்றே.  அத்தகைய மனநிலை வந்து விட்டால், எல்லா உயிர்கள் மீதும் அன்பும் கருணையும் இயல்பாகவே வந்துவிடும்.  இதைதான் மகாகவி பாரதி,
காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்' என்கிறார்.
கீதையில் கண்ணன் :
எந்தப் பொருளிலும் என்னைக் காண்பவன் எவனோ,
அவனை விட்டு எப்போதும் நான் நீங்குவதில்லை;
அவன் என்னை விட்டு நீங்குவதில்லை.
என்பதன் அர்த்தமும் இதுவே.

என்றென்றும் அன்புடன் / சுப்ரமண்ய செல்வா...


வியாழன், 21 ஜனவரி, 2010

உறவும் நட்பும்...

இல்லாதவற்றை இருப்பதாக்கி
கடுகுத் தவறை கடலளவாக்கி
கலைந்துபோகும் உறவுகள்...

சின்னச் சின்னச் சிக்கல்களில்
சிதறிப்போகும் சிநேகங்கள்...

எத்தனை பிணக்குகள்
எத்தனை பிரிவுகள்...

உறவே நட்பே
ஒன்றுரைப்பேன்
நானும் நீயும்
நாளையேகூட
மரணித்துவிடலாம்

நம்மையும் மிஞ்சியா
நம் வெஞ்சினம்
வாழ்வது...?

காலம் நம்முன்னே
காணாமல் போகிறது
நாளையப் பொழுதுகள்
நம்வசம் இல்லை...

இன்றே விரைந்து வா
கைகுலுக்கி
கவலை மறப்போம்

மன்னிப்பு கேட்பதன் அர்த்தம் 'நான் பிழை - நீ சரி' என்பதல்ல; 'நான் சிறியவன் - நீ பெரியவன் என்பதல்ல'.  அதன் அர்த்தம் 'நான் என் தன்முனைப்பைவிட (ego) உன் உறவை அதிகம் மதிக்கிறேன்' என்பதாகும்.

"மன்னித்துவிடு" எனும் ஒரே வார்த்தையில் மறக்கப்படக் கூடிய தவறுகள் எத்தனை?  உலர்ந்துவிட்ட உறவும் நட்பும் மீண்டும் துளிர்க்கும் வாய்ப்புகள் எத்தனை? 

தனிமரம் தோப்பாகாது.  ஒவ்வொரு தனிமனித வாழ்வின் உயர்விலும் உறுதுணையாய் இருப்பது உன்னத உறவுகளும், உயர்ந்த சிநேகன்களுமே.

வாழ்க்கையில் வரப்பிரசாதமாய் கிடைத்த அற்புத உறவுகளையும் சினேகங்களையும் அற்ப விசயங்களுக்காய் அறுத்து விடுவது எத்தனை கொடுமை? சிந்திப்போம்.

==  சுப்ரமண்யா செல்வா ==

சனி, 9 ஜனவரி, 2010

ஆனந்த அழுகை

நல்ல மனிதரை
காணும் போதெல்லாம்
அழுதுவிடுகிறேன் நான்

பாலைவனத்தில்
சோலை கண்ட
பயணியின் பரவசம்
எனக்குள்

நாடி நரம்புகள்
துவண்டு 
உள்ளுக்குள் ஏதோ
உடைந்து
மூச்சும் பேச்சும்
மறந்து
விழிக்குளம் நிறையும்
சில நேரம்
கரைமீறும்

பேரூந்தில் புகையூர்தியில்
கர்ப்பிணிக்கும் இரங்கா
கயவர் மத்தியில்
சட்டென எழுந்து
இடம் தரும்
சக பிரயாணியின்
கருணையில் கரையும் 
என் மனம்

வீதி கடக்க பரிதவிக்கும்
விழியிழந்தவனுக்கு
பார்வை பிச்சையிடும்
வழிப்போக்கனின்
வாத்யல்சத்தில்
துளிர்க்கும் என் விழிகள்

அந்நியப்பட்ட புது இடத்தில்
அகதிபோல் தவிக்கையில்
முன்வந்துதவும்
முகம் தெரியா
அந்நியனின் அன்பில்
விம்மும் என் நெஞ்சம்

இப்படி இப்படி
இங்கும் அங்குமாய்
ஒருவர் இருவராய்
நல்ல மனிதரை
காணும்போதெல்லாம்
அழுதுவிடுகிறேன் நான்
- சுப்ரமண்ய செல்வா -
(நன்றி: மித்திரன் வாரமலர்)
Tamil Songs, Tamil Music, Tamil Films, Tamil music, download, Tamil Stories, Tamil literature

சனி, 12 டிசம்பர், 2009

வாழ்க்கையின் மகத்துவமான சின்னச் சின்ன சந்தோஷங்கள்

பிரபல இந்திய ஊடகவியலாளர் அனிதா பிரதாப் எழுதிய 'The Island of Blood' புத்தகத்திலிருந்து சில பகுதிகள் (தமிழாக்கம்: சுப்பிரமண்ய செல்வா) 

சில நேரங்களில் நான் வியக்கிறேன்.  என் வாழ்நாளில் நான் பார்க்காதது ஏதும் உண்டா? கால்கள் சிதறிய சின்னஞ் சிறார்கள்... சிதைந்த உடல்கள்... தலையற்ற உடல்கள்... உடலற்ற தலைகள்... எரியும் தசைகள்... இரத்தம் சொட்டும் கத்திகள்...

என் வாழ்நாளில் நான் எண்ணற்ற உடல்களை பார்த்திருக்கிறேன்.  வன்செயல் கட்டவிழ்ந்த வீதிகளில், பூகம்பம் உலுக்கிய நகரங்களில், சூறாவளி தாக்கிய கிராமங்களில், லொறிகளில் அடுக்கிய... பாதையோரங்களில் கிடத்திய... வைத்தியசாலைகளில் நிறைந்து  வழியும்...மனித உடல்கள்.

இவ்வித அசாதாரண நிகழ்வுகளுடனான இடைவிடாத தொடர்புகள் என்னுள் ஏற்படுத்திய பக்கவிளைவுகள் பற்பல.  வெள்ளை மலர்கள், மஞ்சள் விழிகள் போன்ற ஆபத்தற்ற விடயங்கள் மீது கூட என்னுள் அர்த்தமற்ற, ஆனால் ஆழமான வெறுப்பு உண்டாயிற்று.  சில வேளைகளில் பிரகாசமான ஒளியில், ஏன் சாதாரண புன்னகையில் கூட அர்த்தமின்றி நான் அதிர்ந்து போகிறேன்.

ஆனால் பன்முகப்பட்ட இந்த அனுபவங்களால் உலகம் ஒரு பொருட்டாக கருதாத பல சின்னச் சின்ன சந்தோசங்களின் உன்னதத்தை நான் உணர்ந்து கொண்டேன்.  பலருக்கு இவை சுவாரசஸ்யமற்ற  சர்வ சாதாரணமானவை.  ஆனால் நான் இந்த சின்னச் சின்ன சந்தோசங்களை நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.  அவை என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றன.  புதிய சூழ்நிலைகளை புத்துணர்ச்சியோடு முகம் கொடுக்க உதவுகின்றன.

சின்னச் சின்ன சந்தோசங்கள்... ஆம், முதல் முதலாய் பனிமழை பெய்வதை பரவசத்தோடு பார்த்து நின்ற அனுபவம் போன்று.  (ஓ... அந்த வெண்பனிக் கட்டிகள் ஆடி... அசைந்து... மெதுவாய்... மிக மெதுவாய்... ஆகாயத்திலிருந்து கீழிறங்கி தரையை முத்தமிடும் அற்புதத்தை ஆச்சரியத்தோடு பார்த்து நின்றேன்.)  அப்பொழுது எனக்கு வயது நாற்பத்து  ஒன்று.

சின்னச் சின்ன சந்தோசங்களை நான் மதிக்கக் கற்றுக் கொண்டேன்.  ஏனெனில், ஊடகவியலாளர் என்ற முறையில் எனது ஒவ்வொரு அனுபவங்களும் வாழ்க்கை எத்தனை நிச்சயமற்றது, கொடியது, பாழாகக் கூடியது என்பதை எனக்கு உணர்த்தின.

1996ஆம் ஆண்டு மே மாதம் ஒரு நாள்.  திரையரங்கு ஒன்றில் படம் பார்த்துக் கொண்டு இருந்தேன்.  கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பின் நான் திரையரங்கில் பார்க்கும் முதல் படம்.  எனது செல்போன் சிணுங்கிற்று.  எழுந்து வெளியே வந்து பேசினேன்.  கெட்ட செய்தியொன்று.  மத்திய டெல்லியில் லாஜ்பட்  என்னும் இடத்தில் குண்டு ஒன்று வெடித்துவிட்டதாம்.  இனி படம் பார்த்த மாதிரிதான்.  நான் காரில் ஏறி புயல் வேகத்தில் ஸ்தலத்திற்கு விரைந்தேன்.

கோரமான காட்சி அது.  கொடிய தீயின் கோரப்பிடியில் கட்டிடங்கள்.  வளைந்து நெளிந்த இருப்புத் தூண்கள்.  உடைந்து நொறுங்கிய பொருட்கள்.  சிதறிய, துண்டாடிய மனிதர்கள்.  சிலர் இறந்தும், இன்னும் சிலர் இறந்து கொண்டும்.  வலி தாளாத கதறல்கள்.  இடிபாடுகளில் சிக்குண்டு காப்பாற்றக் கெஞ்சும் அவலக் குரல்கள். போராடும் தீயணைப்புப் படையினர்.  பொதுமக்களை தூர விலகிப் போகும்படி கத்தும் பொலிசார்.  நான் ஸ்தம்பித்துப் போய் நின்றேன்.

"ஐயோ மகளே... நான் உன் பேச்சைக் கேட்டு நாளை கடைக்கு வந்திருக்கக் கூடாதா... நீ உயிருடன் இருந்திருப்பாயே... மகளே.. நீயின்றி இனி நான் எப்படி உயிருடன் இருப்பேன்...?" ஒரு நடுத்தர வயதுப் பெண் மார்பில் அடித்துக் கதறிக் கொண்டிருந்தாள்.  அவள் மடியில் ஒரு சிதைந்த அழகிய இளம்பெண்.  சுற்றிலும் கருகிய பைகளில் சிதறிக் கிடக்கும் பொருட்கள்.  சில நிமிடங்களுக்கு முன் துள்ளலுடன், நீண்ட கூந்தலுடன், ஆப்பிள் கன்னங்களுடன் - இன்னும் சில நாட்களில் மணப்பெண்ணாகப் போகும் பரவசத்துடன் - இளமையின் விளிம்பில் நின்ற பெண் அவள்.  அந்தத் தாய் திருமண வேலைகளை சீக்கிரம் முடிக்க வேண்டுமென அவசரப்பட்டு இன்று கடைவீதி வந்திருக்கிறாள்.

யோசித்துப் பாருங்கள்.  அந்தத் தாய் இனி என்றேனும் பழைய மாதிரி சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?  அவளின் காயங்கள் எப்படி, எப்பொழுது ஆறும்?

சிந்தித்துப் பார்கிறேன்.  நாம் அலட்டிக் கொள்ளும் நம் பிரச்சினைகள் எவ்வளவு சிறியவை?  எவ்வளவு அற்பமானவை?  எவ்வளவு அர்த்தமற்றவை?  தாள முடியாத வெட்க உணர்வு என்னை ஆட்கொண்டது.  சற்றுமுன் திரைப்படம் தடைபட்டபோது என்னுள் ஓடிய எண்ணங்கள் நினைவுக்கு வந்தன.  'சே... என்ன இது... என்னால் நிம்மதியாக ஒரு படம் கூடப் பார்க்க முடியாதா...?  என்ன வாழ்க்கை இது...?'  ஆத்திரத்தில், துக்கத்தில் புலப்பித் தீர்த்தேனே.

துக்கம்!  அந்த வார்த்தையை பிரயோகிக்க எனக்கு என்ன அருகதை இருக்கிறது?  இதோ இந்தத் தாய் சற்றுமுன் ஜீவனுடன் ஜொலித்த தன மகளின் உடலை மடியில் கிடத்திக் கதறுகிறாளே, இந்தத் துக்கத்தின் முன், இந்த வேதனையின் முன் எனது துக்கம் எத்தனை அற்பமானது?  கதறியழும் அந்தத் தாயின் முகத்தை ஜீவனற்று வெறிக்கும் அந்து பெண் நானாகக் கூட இருந்திருக்கலாம்.  அல்லது துண்டு துண்டான என் மகனை கையிலேந்தி கதறும் தாயாகக் கூட நான் இருந்திருக்கலாம்.  எனக்கு அந்த வேதனையை,  வலியைத் தராத கடவுளுக்கு நெஞ்சம் நெகிழ நன்றி சொன்னேன்.

எனது அனுபவங்கள், பல சர்வ சாதாரணமான விஷயங்களைக் கூட பொக்கிஷங்களாகப் பேணும் பக்குவத்தை எனக்கு தந்திருக்கின்றன.  நானும், என்னை நேசிப்போரும், என்னால் நேசிக்கப்படுவோரும் உயிருடன் இருப்பதையிட்டு நான் சந்தோசப்படுகிறேன்.  பலர் உறவுகளின் பெறுமதியை அவற்றை இழந்த பிறகுதான் உணர்கிறார்கள்.  வருந்துகிறார்கள்.  சுய பச்சாதாபப்படுகிரார்கள்.  ஆனால் அப்போது காலம் கடந்துவிட்டிருக்கும்.

இதுதான் வாழ்க்கை.  இதுதான் யதார்த்தம்.  மரணம் என்பது எவ்வளவு சடுதியானது, எவ்வளவு கொடுமையானது, எப்படி எல்லாவற்றையும் ஒரே கணத்தில் மாற்றிவிடும் வல்லமை கொண்டது என்பதை நீங்கள் உணர்ந்தீர்களானால், வாழ்க்கை என்பது எவ்வளவு பெறுமதியானது, எத்துணை அற்புதமான கொடை என்பதை உணர்வீர்கள்.  அதனை பொக்கிஷமாய் பேண வேண்டியதின் அவசியம் புரியும்.  உறவுகளின் உன்னதம் புரியும்.  வாழ்க்கையின் சின்னச் சின்ன சந்தோசங்களின் மகத்துவம் புரியும்.

(நன்றி: தினக்குரல்)
நன்றி: வீரகேசரி வார வெளியீடு (24.02.2019)

திங்கள், 30 நவம்பர், 2009

கடந்து போன காலங்கள்


-->
கடவுள் மனிதனுக்கு அளித்த அற்புத வரங்களில் ஒன்று மறதி. மறக்கும் சக்தி மட்டும் மனிதனுக்கு கிடைத்திராவிட்டால் மனித குலம் இன்று ஒரு மன நோயாளிக் கூட்டமாக மாறிப் போயிருக்கும்.


எனினும் நாம் கடந்த கால இழப்புகளை, தோல்விகளை, துயரங்களை நினைத்து நினைத்து வேதனைப்பட்டு, இன்று நம் கையில் பொக்கிஷமாய் கிடைத்திருக்கும் நிகழ்காலத்தையும், அற்புத வாய்ப்புகளோடு காத்திருக்கும் எதிர்காலத்தையும் கைநழுவ விட்டு தடுமாறுகிறோம்.

கரையை விட்டு அகன்று செல்லும் தைரியம் உள்ளவர்களால்தான் புதிய தேசங்களை கைப்பற்ற முடிகிறது.

நடந்து முடிந்த ஓட்டப்போட்டியில் தோல்வியை தழுவிய வீரன் அந்த தோல்வியைப் பற்றியே நினைத்திருந்தால் இனி எந்தப் போட்டியிலாவது வெல்ல முடியுமா?  நேற்றைய நஷ்டத்தை மறந்தால்தானே ஒரு வியாபாரியால் இன்றைய வியாபாரத்தை கவனிக்க முடியும்.  இலாபம் ஈட்ட முடியும்.   நடந்து முடிந்த தேர்வில் கோட்டை விட்ட மாணவன், அதனை மறந்து கவனமாக படித்தால்தானே அடுத்த தேர்வில் சித்தி எய்த முடியும்.

கடந்த கால இழப்புகள், தோல்விகள் மூலம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, சுயபச்சாதாபப்பட்டு கடந்த காலத்திலேயே தங்கி தாமதிக்கலாமா?

வாழ்க்கைப் பயணத்தில் ஒரு கதவு மூடும்போது இன்னொன்று தானாக திறந்து கொள்ளும் என்பது இயற்கையின் நியதி.  ஆனால் நாம் மூடிய கதவையே வெறித்துக்கொண்டு இருப்பதால் திறந்திருக்கும் கதவை கவனிக்கத் தவறி விடுகிறோம்.

ஒளிமயமான எதிர்காலம் என்பது மறக்கப்பட்ட இறந்தகாலத்திலேயே தங்கியிருக்கிறது.  வாழ்க்கையின் முன்னோக்கிய பயணத்திற்கு நடந்து முடிந்த தோல்விகளையும், வேதனைகளையும் கடந்தேயாக வேண்டும்.

நேற்று என்பது உடைந்த பானை
நாளை என்பது மதில்மேல் பூனை
இன்று என்பது கைகளில் இருக்கும் வீணை

 வீணையை இசைப்பதும், தூக்கி எறிவதும் நம் கைகளில்தான் இருக்கிறது.

இனிமேல் இறந்தகால சிந்தனையால் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் இழக்க வேண்டுமா...?

சிந்திப்போம்.

நன்றி: செந்தூரம்/தினகரன் வாரமஞ்சரி (17.02.2019)