நேற்று மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போது முன்னே சென்று கொண்டிருந்த சரக்குந்து (lorry) வீட்டுப் பாவனை பொருட்களால் நிறைந்திருந்தது. குளிர்சாதன பெட்டி, துணி துவைக்கும் யந்திரம், கட்டில், மெத்தை நாற்காலிகள், பூந்தொட்டிகள், ஒரு ஆரஞ்சு நிற கூடைப்பந்து, அட்டைப் பெட்டிகளில் அடைத்த மற்றும் பிற பொருட்களோடு அந்த வண்டி ஆடி அசைந்து கனத்த மனங்களின் நினைவுகளையும் சுமந்து செல்வது போல் தோன்றியது.
வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இது ஒரு வாடிக்கையான நிகழ்வு என்றாலும் வீடு மாறுதல் என்பது பெரும்பாலும் ஒரு வலி மிகுந்த அனுபவம். வேரூன்றிய மரம் ஒன்றை பிடுங்கி வேறு ஒரு இடத்தில் நடுவது போன்றது.
வீடு மாறுதலின் முதல் இழப்பான அயலவர்கள் நம் வாழ்வில் அசைக்க முடியாத ஒரு அங்கம். அவசரத்திற்கு சமையல் பொருட்களை பரிமாறிக் கொள்வதிலிருந்து ஆபத்து நேரங்களில் கை கொடுப்பது வரை நமது வாழ்வில் அவர்களின் பங்கு அளப்பரியது. எங்கோ இருக்கும் உறவுகள் எல்லோரும் பிறகு தான் வந்து சேர்வார்கள். நமது இன்பம், துன்பம், கொண்டாட்டங்கள் என பலவற்றையும் பகிர்ந்து கொள்ளும் அவர்கள் பல வேளைகளில் உறவினர்களை விடவும் நெருக்கமானவர்களாக இருப்பார்கள். வீடு மாறும் போது அப்படிப்பட்டவர்களை பிரிந்து சென்று மீண்டும் புதிய சூழலில் புதிய வாழ்வை ஆரம்பிப்பது அத்தனை எளிதன்று. பெரியவர்களுக்கு மட்டுமின்றி இளையவர்களுக்கும் இது சவால்களும், சங்கடங்களும் நிறைந்த அனுபவம்.
வீடு மாறுதல் பற்றி நா. முத்துக்குமார் அவர்கள் எழுதிய நெஞ்சைத் தொடும் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
- நா. முத்துக்குமார் -
வீடு மாற்றும் போதும்
இழந்து விடுகிறோம் எதையாவது
பாட்டிக்கு பாக்குவெட்டி
தம்பிக்கு
தீப்பெட்டி படங்கள்
கிழித்து ஒட்டி வைத்த
கட்டுரை நோட்டு
அப்பாவுக்கு
ஆபீஸ் போக வசதியாய்
அருகிலேயே பேருந்து
எனக்கு
ஆடு சதை தெரிய கோலம் போடும்
எதிர் வீட்டுப் பெண் மற்றும்
கம்யூனிசம் முதல்
காமசூத்திரம் வரை பேசும்
டீக்கடை நண்பர்கள்
இம்முறை கவனமாய்
போனவாரம் நட்ட
ரோஜாச்செடி முதல்
மாடியில் காய வைத்த
உள்ளாடை வரை எடுத்தாயிற்று
என்றாலும்
ஏதோ ஒன்றை
மறந்த ஞாபகம்
சோற்றுக்கு வரும் நாயிடம்
யார் போய் சொல்வது
வீடு மாறுவதை?
-----------------------------------
இந்த நாளும் இனிய நாளாகட்டும்!
என்றும் அன்புடன்
/ சுப்பிரமண்ய செல்வா
28.06.2023