அக வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவை அவாமிக்க, ஆர்வம் மிக்க துருவித் தேடி அறிந்து கொள்ள வேண்டும் என்கின்ற உந்துதல் மிக்க மனம். (An inquisitive mind).
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் கூற்று ஒன்று:
'என்னிடம் சிறப்பான திறமைகள் எதுவும் இல்லை. என்னிடம் இருப்பது பேரார்வம் மட்டுமே.'
அந்தப் பேரார்வம்தான் அவரை இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அறிவியலாளராக, இயற்பியலாளராக மாற்றியது.
ஆர்வம் மிக்க மனம் நம்மை தேடல் மிக்க மனிதர்களாக மாற்றுகிறது. கேள்விப்படும் அனைத்தைப் பற்றியும் தேடி அறிந்து விரிவான அறிவைப் பெறும் உந்துதலை தருகிறது.
அப்படி பெறுகின்ற அறிவின் மூலம் நாம் அனுதினமும் வளர்கின்றோம். அத்தகைய வளர்ச்சி நமக்கு அளப்பரிய மனநிறைவைத் தருகிறது.
அறிவுத் தேடலில் வாசிப்பு மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. பள்ளிகள், கல்லூரிகளுடன் நின்றுவிட்ட கற்றலை வாசிப்பின் மூலமே தொடர முடியும்.
அறிவின் வளர்ச்சியில் கற்றது கைமண்ணளவு என்கின்ற பேருண்மை புரிகிறது.
மேற்கத்திய தத்துவ மரபின் தந்தை எனக் குறிப்பிடப்படும் சாக்ரடீஸ் அவர்களின் கூற்று ஒன்று:
'எனக்குத் தெரிந்ததெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது என்பதே.'
எனவே தேடல் தொடர்கிறது. வளர்ச்சி வசப்படுகிறது.
இந்த இடையராத வளர்ச்சியின் மூலம் பெற்ற அறிவு, அவற்றை சக மனிதர்களுடன் பகிர்ந்து அவர்களையும் உயர்த்த வேண்டும் என்கின்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அந்த எண்ணத்தின் வெளிப்பாடுதான் எழுத்தாக, பேச்சாக இன்னும் பிற கலைகளாக, இலக்கியங்களாக வடிவெடுக்கிறது.
சாக்ரடீஸுக்கும் முந்தைய கிரேக்க மெய்யியலாளர் ஹெராக்ளிட்டஸ் அவர்களின் அற்புதமான கூற்று ஒன்று:
'எந்த மனிதனும் ஒரே நதியில் இரண்டு முறை அடியெடுத்து வைப்பதில்லை, ஏனென்றால் அது ஒரே நதி அல்ல, அவன் ஒரே மனிதனும் அல்ல.'
உதாரணமாக இந்தப் பதிவை வாசிக்கத் தொடங்கும் முன் இருந்த நீங்களும் வாசித்த பிறகு இருக்கும் நீங்களும் ஒருவர் அல்லர்.
மனிதரின் அக வளர்ச்சி அத்தகைய நுண்ணிய பொழுதுகளில் நடந்து கொண்டிருக்கிறது.
ஆர்வம் மிக்கவர்களாக, தேடல் மிக்கவர்களாக இருந்தால் அந்த வளர்ச்சி நம் அனைவருக்கும் சாத்தியம் என்பது மாற்ற முடியாத உண்மை.
இந்த நாளும் இனிய நாளாகட்டும்!
என்றும் அன்புடன் / சுப்ரமண்ய செல்வா
(29.03.2023)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக