"மாற்றம் ஒன்றே வாழ்க்கையில் நிலையானது" (Only change is constant in life) - ஈராயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு கிரேக்க தத்துவஞானி ஹெறக்லிடஸ் மொழிந்த மகத்தான உண்மை இது.
உயிருள்ள, உயிரற்ற அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கின்றன. மனிதர்களும் மாறுகிறார்கள். காலம் மனிதருள் ஏற்படுத்தும் மாற்றம் மகத்தானது. கடக்கும் ஒவ்வொரு கணமும் மனிதர்கள் முகம் கொடுக்கும் அனுபவங்கள், அவர்களுடைய எண்ணங்களில், நம்பிக்கைகளில், ஆளுமையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே கடந்து செல்கிறது.
ஆனால் அந்த மாற்றம் ஓர் இரவில் நடப்பதில்லை. அது மிக மிக மெதுவான பயணம்.
வாழ்வின் அனுபவங்கள் மனிதர்களை முதிர்ச்சி மிக்க புதிய மனிதர்களாக மாற்றுகிறது. அந்த முதிர்ச்சி அவர்களை வாழ்க்கையை, மனிதர்களை, சூழ்நிலைகளை புதிய கண்கொண்டு பார்க்கும் வல்லமையை கொடுக்கிறது. பிறரை அன்புடன், அனுதாபத்துடன், கருணையுடன், அவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு அணுகும் ஆற்றலை அவர்கள் பெறுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் இருக்கக்கூடிய தனிப்பட்ட உணர்வுகளை, அவர்களுடைய போராட்டங்களை புரிந்து கொள்ள முயல்கிறார்கள்.
தங்களுடைய கடந்த காலத்தைப் பற்றி எண்ணிப் பார்க்கிறார்கள். அதில் விட்ட தவறுகளுக்காக வருந்துகிறார்கள். அவற்றுக்காக பரிகாரம் செய்ய முயல்கிறார்கள். தங்களுக்குள் ஏற்பட்டுள்ள நேர்மறை மாற்றத்தை வெளிப்படுத்த வாய்ப்பு தேடுகிறார்கள்.
எனவே ஒருவர் என்றோ சொன்ன ஒரு சொல்லுக்காக, செய்த ஒரு செயலுக்காக இன்றும் அவர்களை வெறுப்பது சரியா என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஒருவருடைய கடந்த கால தவறுகளை வைத்து அவரை மதிப்பீடு செய்யாமல் அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுப்பது அவசியமாகிறது. மனதால் மாற்றம் பெற்ற ஒவ்வொரு மனிதரும் அந்த வாய்ப்புக்கு தகுதியானவர்கள். காலம் எல்லா காயங்களையும் ஆற்றும். பிரெஞ்சு கவிஞர் ஜீன் டி லா ஃபொன்டைனே கூறியது போல் "காலத்தின் சிறகுகளில் சோகங்கள் பறந்து போகும்". அந்த வாய்ப்பை தர காலம் இன்னும் கடந்து விடவில்லை என்பதை கருத்தில் கொள்வோம்.
தயக்கத் தடையை கடந்து, அப்படி நாம் கொடுக்கும் ஒரு வாய்ப்பின் மூலம், பட்ட மரம் மீண்டும் துளிர்ப்பது போல், பிரிந்த ஒரு உறவு மீண்டும் இணைந்து, வாழ்க்கையை மேலும் மகிழ்ச்சி மிக்கதாக, கொண்டாட்டம் மிக்கதாக மாற்ற முடியும் என்பதை மனதில் கொள்வோம்.
இந்த நாளும் இனிய நாளாகட்டும்!
என்றும் அன்புடன் / சுப்ரமண்ய செல்வா
(27.03.2023)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக