ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

அன்புள்ள அப்பாவுக்கு...

இன்றோடு நீங்கள் இறந்து ஒரு மாதம் ஆகிறது.  'இறந்து' என்பதைவிட 'மறைந்து' என்பது நன்றாக பொருந்தும்.  ஏனெனில் ஒரு கணம் நீங்கள் இருந்தீர்கள்; மறுகணம் நீங்கள் மறைந்தீர்கள்.  'காலமாகிவிட்டார்' என்று சொல்வார்கள்.  அதுவும் சரியே.  காலம் என்பது இறைநிலையின்  தன்மை.  காலம் நிலையானது.  நிலையில்லாமையில் இருந்து நிலையான நிலைக்கு சென்றுவிட்டீர்கள்.

இந்த தத்துவம் எல்லாம் தெரிந்திருந்தும், புரிந்திருந்தும் கனத்த இதயம் லேசாக மறுக்கிறது.    காலம் கவலைகளை மாற்றும் என்பார்கள்.  ஆனால் அந்த காலம் என்பது வெறும் ஒரு மாதம் அல்ல என்பது மட்டும் புரிகிறது.  உடலின் காயம் ஆற மருந்து இருக்கிறது.  மனதின் காயம் மாற...?  மாறுவதுபோல், மறைவதுபோல் இருந்தாலும் மீண்டும் சட்டென ரணமாகி வலி தருவது மனக்காயங்களுக்கு மட்டுமே சாத்தியமாகிறது.  புதிய புதிய வடிவங்களில், புதிய வலிகளோடு வருகிறது.  புதிய வடுக்களை விட்டுச் செல்கிறது.

வேதனையிலும் வியப்பாயிருக்கிறது.  மரணம் எத்தனை பேருக்கு இத்தனை இயல்பாய் சாத்தியமாகும்?  நீங்கள் சிறிது தளர்ச்சியாய் இருப்பதாய் நாங்கள் உணர்கிறோம்.  நீங்களோ நன்றாக இருப்பதாகவே உணர்கிறீர்கள்.   சொல்கிறீர்கள்.  எதற்கும் மருத்துவமனை போகலாமென்று நாங்கள் தயாராகிறோம்.  நீங்கள் கால்களை நீட்டி கட்டிலில் சாய்ந்து அமர்கிறீர்கள்.  சில நிமிடங்களில் நாங்கள் திரும்பி வருகிறோம்.  நீங்கள் கண் மூடியிருக்கிறீர்கள்.  நிரந்தரமாய்.  இப்படியும் நடக்குமா?  ஒரு வலியின்றி... வேதனையின்றி... இத்தனை இயல்பாய்...  மரணம் இத்தனை எளிதானதா?  இருப்பதைவிட இறப்பது எளிதோ?  அப்பா, நீங்கள் பிடிவாதக்காரர்.  வாழும்வரை எங்களுக்கு எவ்வித சிரமும் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தீர்கள்.  மரணத்திலும் உங்கள் உறுதி நிலைத்தது. 

'அன்புள்ள அப்பாவுக்கு...' என்று ஆரம்பிக்கும்போது சிறு வயதில் பள்ளி விடுதியில் இருந்து நான் உங்களுக்கு எழுதிய கடிதங்கள் நினைவுக்கு வருகிறது.  பொங்கி வரும் நினைவுகளை தடுக்க முடியவில்லை...
  • சின்னஞ் சிறு வயதில் பாலர் பள்ளிக்கு அழைத்து சென்றது..
  • சிறு வயதில் புத்தாடை உடுத்தி தேயிலை தோட்டத்து உத்தியோகர் குடியிருப்பில் கொண்டாடிய பண்டிகைகள்..
  • பத்து வயதில் கண்டியில் உள்ள பள்ளி விடுதியில் என்னை சேர்த்தது; அங்கு நான் வீட்டை நினைத்து அழுது, உங்கள் வரவுக்காய் ஏங்கியது.  நீங்கள் வந்தபோது மகிழ்ந்தது.  விடுமுறை விட்டதும் ஆவலோடு உங்களோடு வீடு வந்தது...
  • எனது கல்வி தேர்ச்சியை கண்டு நீங்கள் மகிழ்ந்தது.  பெருமைப்பட்டது...
  • நாம் சில காலம் ஏழ்மையில் உழன்றபோது நீங்கள் பரிதவித்தது.  எங்கள் உயர்வுக்காய் நீங்கள் ஓடாய் உழைத்தது.  உடலை வருத்திக் கொண்டது.
  • நான் முதன்முதலாய் வேலை நிமித்தமாய் வெளிநாடு பயணித்தபோது விமான நிலையத்தில் நீங்கள் கலங்கியது.. (ஆச்சரியமாய் இருந்தது.. அப்பாவும் அழுவாரா?)
  • நான் குடும்பப் பொறுப்பை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்ததும் நீங்கள் ஆசுவாசப்பட்டது.  மகிழ்ந்தது.
  • எனது மூத்த மகனை - உங்கள் முதல் பேரனை - எனது மனைவி உங்கள் கையில் கொடுத்த போது நீங்கள் அடைந்த எல்லையற்ற மகிழ்ச்சி...
  • நாம் வாதிட்டது.  பேசிக் கொள்ளாமல் இருந்தது. 
  • சண்டையிட்டது.  சமாதானம் ஆனது.
  • நீங்கள் நோயுற்றபோது நீங்கள் குழந்தையானது.  நான் தந்தையானது.  அதிலும் நீங்கள் பெருமை கொண்டது.
  • "செல்வம்... பிசியாக இருக்கிறாயா..?" என்று தொடங்கும் உங்கள் தொலைபேசி அழைப்புகள்...
  • ஒருமுறை இந்தியா சென்று வர வேண்டும் என்கிற உங்கள் ஆசை.  நீங்கள் நோயுற்றதால் அதை ஈடேற்ற முடியாத என் இயலாமை.
நினைவுகள்... நினைவுகள்...  நினைவுகள்...  நிலைகுலைய செய்யும் நினைவுகள்.  மனிதனுக்கு கிடைத்த வரமும் சாபமும் நினைவுகளே.

அப்பா, ஒரு தந்தையாய் உங்கள் கடமைகளை முழுமையாய் செய்தீர்கள்.  என்னை 'அவையத்து முந்தி இருக்கச்' செய்தீர்கள்.   'இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்' என்பதற்கு ஒப்ப நான் இருந்தேனா?  இயன்றவரை முயன்றேன், இருந்தேன் என்றே நினைக்கிறேன்.  இறுதிவரை நீங்கள் எங்களுக்கு பலமாய் இருந்தீர்கள்.  பாலமாய் இருந்தீர்கள்.  

ஆனால் அப்பா ஒவ்வொரு மரணமும் ஒரு படிப்பினையே.  இழப்பின்போதுதான் இருப்பவர்களின் அருமை உணர்த்தப்படுகிறது. மகிமை புரிகிறது...

இப்போது அப்பா என்பது உடல் அல்ல.  ஒரு உணர்வு மட்டுமே.  இறை உணர்வைபோல...

'நன்றி' என்ற வார்த்தைக்கு வலிமை போதாதேனினும் எனக்கு வேறு வார்த்தை தெரியவில்லை.

எனவே,

கோடானுகோடி நன்றிகள் அப்பா.  சென்று வாருங்கள்.

மீண்டும் சந்திக்கும் வரை....
உங்கள் மகன்,
சுப்ரமண்ய செல்வா

     

    வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

    எண்ணங்கள்

    எண்ணங்களே எமை வார்த்தன
    எண்ணங்களே எமை உருவாக்கின
    கள்ள மனமுடையோனை துன்பம் தொடர்கிறது
    காளைதனை தொடரும் வண்டிபோல்
    நல்ல மனமுடையோனை இன்பம் தொடர்கிறது
    சொந்த நிழலை போல்... சர்வ நிச்சயமாக.

    மூலம்:  James Allen's "As a Man Thinketh"
    தமிழில்:  சுப்ரமண்ய செல்வா

    வியாழன், 22 ஜூலை, 2010

    கேள்வி

    நீ நோக்காததால் 
    நான் நோக்கவில்லை.
    நீ புன்னகைக்காததால்
    நான் புன்னகைக்கவில்லை.
    நீ பேசாததால்
    நான் பேசவில்லை.
    ஜெயித்ததாய்
    இறுமாந்திருந்தது மனது.
    சட்டென விழித்து
    கேட்டது புத்தி,
    'நான் ஏன்
    நீயாக வேண்டும்?'

    ***  சுப்ரமண்ய செல்வா ***  

    கல்லைக் கண்டால்...


    'கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.  நாயைக் கண்டால் கல்லைக் காணோம்'.  நாம் சர்வ சாதாரணமாய் பயன்படுத்தும் சொற்றொடர்.  அர்த்தம், ஒரு காரியத்தை முடிக்க இரண்டு விடயங்கள் தேவைப்படும்போது பல சமயங்களில் ஒன்று அமைந்தால் மற்றது அமைவதில்லை என்பதாகும்.  ஆனால் இந்த சொற்றொடருக்கு முற்றிலும் வித்தியாசமான அர்த்தம் ஒன்றை இன்று காலை திரு. கனக சுப்புரத்தினம் (பதினாறு கவனர் - தமிழ்நாடு) அவர்கள் எழுதியுள்ள  'நினைவாற்றல் வளர...' எனும் புத்தகத்தை வாசித்துக் கொண்டிரும்போது அறிந்து வியந்தேன்.  இதோ அவரது வரிகளில்......


    ****************************************************************************
    நமது மூளை சுமார் 1400 கிராம் எடையுள்ள புரதப் பொருள். அதில் 700 கிராம் இடப்புறம் உள்ளது.  இது அறிவுப் பகுதி.  Logic and Intellectual Wing.  மீதி 700௦௦ கிராம் வலப்புறம் உள்ளது.  இது உணர்வுப் பகுதி.  Intuition and Intelligence Wing.

    இடப்புறம் அறிவுப்பகுதி - எய்தியும் பிரித்துப் பார்க்கும்.  ஆராச்சி செய்யும்.  அதாவது Scanning Process.

    ஒரு பூவைப் பார்த்தவுடன், 'அல்லி வட்டம் எது? புல்லி வட்டம் எது? இதழ்கள் எத்தனை?' என்றெல்லாம் ஆராச்சியில் இறங்குவதே இடப்புற வேலை.

    வலப்புற உணர்வுப் பகுதி எதையும் சேர்த்து முழுதாய்ப் பார்க்கும். அதோடு, அதன் மீது விருப்பு, வெறுப்பு, வியப்பு... இப்படி ஏதோ ஓர் உணர்வைத் தோற்றுவிக்கும்.

    அதே பூவைப் பார்த்து, 'அடடா என்ன அழகான ரோஜா!' என்பது போன்ற வியப்பு உணர்வை உண்டாக்கும்.  மண்ணைப் பிசைந்து மலராக்கிக்த் தந்த செடியின் மேல் காதல் வரும்.  காதல் கசிந்து கண்ணீர் வரும்.  கவிதை கூட பொங்கும்.  'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடி' வள்ளலார் ஆகும்.

    ஆக, இடப்புற அறிவியல் (விஞ்ஞானம்) அறுத்துப் பார்த்து ஆராச்சி செய்யும்; வலப்புற உணர்வியல் (மெய்ஞ்ஞானம்) வளர்த்துப் பார்த்து ஆனந்தம் கொள்ளும்.  நடந்ததைப் பதிவு செய்வது அறிவு.  நடப்பதை அனுபவிப்பது உணர்வு.  பிரித்துப் பார்த்தால் அறிவு. சேர்த்துப் பார்த்தால் உணர்வு.

    நாய் வடிவத்தில் ஒரு கற்சிலை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  அறிவுப் பகுதி அதை 'வெறும் கல்' என்று சொல்லும்.  உணர்வுப் பகுதியோ 'அடடே என்ன அழகான   நாய்!' என்று வியக்கும்.

    ஆக, 'கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.  நாயைக் கண்டால் கல்லைக் காணோம்'.

    ****************************************************************************

    இந்த சொற்றொடருக்கு இப்படி ஒரு அர்த்தம் இருப்பதை இதுவரை அறிந்திருக்கவில்லை.    எனினும் இதே அர்த்தம் கொண்ட வேறொரு சொற்றொடரை அறிவேன். 'மரத்தை மறைத்தது மாமத யானை.  மரத்தில் மறைந்தது மாமத யானை.'  மரத்தினால் ஆன யானை ஒன்றை பார்க்கும் போது, அதை மரமாக பார்த்தால் யானை தெரிவதில்லை.  யானையாக  பார்த்தால் மரம் தெரிவதில்லை.  ஆன்மீகத்தில் இதன் அர்த்தம் 'இந்த பிரபஞ்சத்தில் அனைத்தும் விண்ணின் (அணுவுக்கும் முன்னைய மூலக்கூறு) கூட்டே.  அதனை விண்ணாய்ப் பார்க்கும்போது நானும் எல்லா பொருட்களும், எல்லா உயிர்களும் ஒன்றே.'    அந்த விண்ணானது  உயிரினங்களுக்கு உள்ளே ஓடும்போது அதனை 'உயிர்' என்கிறோம்.  ஆக, அத்தனை உயிரினங்களையும் உயிர் என்ற நிலையில் இருந்து பார்க்கும்போது, நானும் அனைத்து உயிரினங்களும் ஒன்றே.  அத்தகைய மனநிலை வந்து விட்டால், எல்லா உயிர்கள் மீதும் அன்பும் கருணையும் இயல்பாகவே வந்துவிடும்.  இதைதான் மகாகவி பாரதி,
    காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
    கடலும் மலையும் எங்கள் கூட்டம்' என்கிறார்.
    கீதையில் கண்ணன் :
    எந்தப் பொருளிலும் என்னைக் காண்பவன் எவனோ,
    அவனை விட்டு எப்போதும் நான் நீங்குவதில்லை;
    அவன் என்னை விட்டு நீங்குவதில்லை.
    என்பதன் அர்த்தமும் இதுவே.

    என்றென்றும் அன்புடன் / சுப்ரமண்ய செல்வா...


    வியாழன், 21 ஜனவரி, 2010

    உறவும் நட்பும்...

    இல்லாதவற்றை இருப்பதாக்கி
    கடுகுத் தவறை கடலளவாக்கி
    கலைந்துபோகும் உறவுகள்...

    சின்னச் சின்னச் சிக்கல்களில்
    சிதறிப்போகும் சிநேகங்கள்...

    எத்தனை பிணக்குகள்
    எத்தனை பிரிவுகள்...

    உறவே நட்பே
    ஒன்றுரைப்பேன்
    நானும் நீயும்
    நாளையேகூட
    மரணித்துவிடலாம்

    நம்மையும் மிஞ்சியா
    நம் வெஞ்சினம்
    வாழ்வது...?

    காலம் நம்முன்னே
    காணாமல் போகிறது
    நாளையப் பொழுதுகள்
    நம்வசம் இல்லை...

    இன்றே விரைந்து வா
    கைகுலுக்கி
    கவலை மறப்போம்

    மன்னிப்பு கேட்பதன் அர்த்தம் 'நான் பிழை - நீ சரி' என்பதல்ல; 'நான் சிறியவன் - நீ பெரியவன் என்பதல்ல'.  அதன் அர்த்தம் 'நான் என் தன்முனைப்பைவிட (ego) உன் உறவை அதிகம் மதிக்கிறேன்' என்பதாகும்.

    "மன்னித்துவிடு" எனும் ஒரே வார்த்தையில் மறக்கப்படக் கூடிய தவறுகள் எத்தனை?  உலர்ந்துவிட்ட உறவும் நட்பும் மீண்டும் துளிர்க்கும் வாய்ப்புகள் எத்தனை? 

    தனிமரம் தோப்பாகாது.  ஒவ்வொரு தனிமனித வாழ்வின் உயர்விலும் உறுதுணையாய் இருப்பது உன்னத உறவுகளும், உயர்ந்த சிநேகன்களுமே.

    வாழ்க்கையில் வரப்பிரசாதமாய் கிடைத்த அற்புத உறவுகளையும் சினேகங்களையும் அற்ப விசயங்களுக்காய் அறுத்து விடுவது எத்தனை கொடுமை? சிந்திப்போம்.

    ==  சுப்ரமண்யா செல்வா ==

    சனி, 9 ஜனவரி, 2010

    ஆனந்த அழுகை

    நல்ல மனிதரை
    காணும் போதெல்லாம்
    அழுதுவிடுகிறேன் நான்

    பாலைவனத்தில்
    சோலை கண்ட
    பயணியின் பரவசம்
    எனக்குள்

    நாடி நரம்புகள்
    துவண்டு 
    உள்ளுக்குள் ஏதோ
    உடைந்து
    மூச்சும் பேச்சும்
    மறந்து
    விழிக்குளம் நிறையும்
    சில நேரம்
    கரைமீறும்

    பேரூந்தில் புகையூர்தியில்
    கர்ப்பிணிக்கும் இரங்கா
    கயவர் மத்தியில்
    சட்டென எழுந்து
    இடம் தரும்
    சக பிரயாணியின்
    கருணையில் கரையும் 
    என் மனம்

    வீதி கடக்க பரிதவிக்கும்
    விழியிழந்தவனுக்கு
    பார்வை பிச்சையிடும்
    வழிப்போக்கனின்
    வாத்யல்சத்தில்
    துளிர்க்கும் என் விழிகள்

    அந்நியப்பட்ட புது இடத்தில்
    அகதிபோல் தவிக்கையில்
    முன்வந்துதவும்
    முகம் தெரியா
    அந்நியனின் அன்பில்
    விம்மும் என் நெஞ்சம்

    இப்படி இப்படி
    இங்கும் அங்குமாய்
    ஒருவர் இருவராய்
    நல்ல மனிதரை
    காணும்போதெல்லாம்
    அழுதுவிடுகிறேன் நான்
    - சுப்ரமண்ய செல்வா -
    (நன்றி: மித்திரன் வாரமலர்)
    Tamil Songs, Tamil Music, Tamil Films, Tamil music, download, Tamil Stories, Tamil literature