இன்றோடு நீங்கள் இறந்து ஒரு மாதம் ஆகிறது. 'இறந்து' என்பதைவிட 'மறைந்து' என்பது நன்றாக பொருந்தும். ஏனெனில் ஒரு கணம் நீங்கள் இருந்தீர்கள்; மறுகணம் நீங்கள் மறைந்தீர்கள். 'காலமாகிவிட்டார்' என்று சொல்வார்கள். அதுவும் சரியே. காலம் என்பது இறைநிலையின் தன்மை. காலம் நிலையானது. நிலையில்லாமையில் இருந்து நிலையான நிலைக்கு சென்றுவிட்டீர்கள்.
இந்த தத்துவம் எல்லாம் தெரிந்திருந்தும், புரிந்திருந்தும் கனத்த இதயம் லேசாக மறுக்கிறது. காலம் கவலைகளை மாற்றும் என்பார்கள். ஆனால் அந்த காலம் என்பது வெறும் ஒரு மாதம் அல்ல என்பது மட்டும் புரிகிறது. உடலின் காயம் ஆற மருந்து இருக்கிறது. மனதின் காயம் மாற...? மாறுவதுபோல், மறைவதுபோல் இருந்தாலும் மீண்டும் சட்டென ரணமாகி வலி தருவது மனக்காயங்களுக்கு மட்டுமே சாத்தியமாகிறது. புதிய புதிய வடிவங்களில், புதிய வலிகளோடு வருகிறது. புதிய வடுக்களை விட்டுச் செல்கிறது.
வேதனையிலும் வியப்பாயிருக்கிறது. மரணம் எத்தனை பேருக்கு இத்தனை இயல்பாய் சாத்தியமாகும்? நீங்கள் சிறிது தளர்ச்சியாய் இருப்பதாய் நாங்கள் உணர்கிறோம். நீங்களோ நன்றாக இருப்பதாகவே உணர்கிறீர்கள். சொல்கிறீர்கள். எதற்கும் மருத்துவமனை போகலாமென்று நாங்கள் தயாராகிறோம். நீங்கள் கால்களை நீட்டி கட்டிலில் சாய்ந்து அமர்கிறீர்கள். சில நிமிடங்களில் நாங்கள் திரும்பி வருகிறோம். நீங்கள் கண் மூடியிருக்கிறீர்கள். நிரந்தரமாய். இப்படியும் நடக்குமா? ஒரு வலியின்றி... வேதனையின்றி... இத்தனை இயல்பாய்... மரணம் இத்தனை எளிதானதா? இருப்பதைவிட இறப்பது எளிதோ? அப்பா, நீங்கள் பிடிவாதக்காரர். வாழும்வரை எங்களுக்கு எவ்வித சிரமும் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தீர்கள். மரணத்திலும் உங்கள் உறுதி நிலைத்தது.
'அன்புள்ள அப்பாவுக்கு...' என்று ஆரம்பிக்கும்போது சிறு வயதில் பள்ளி விடுதியில் இருந்து நான் உங்களுக்கு எழுதிய கடிதங்கள் நினைவுக்கு வருகிறது. பொங்கி வரும் நினைவுகளை தடுக்க முடியவில்லை...
- சின்னஞ் சிறு வயதில் பாலர் பள்ளிக்கு அழைத்து சென்றது..
- சிறு வயதில் புத்தாடை உடுத்தி தேயிலை தோட்டத்து உத்தியோகர் குடியிருப்பில் கொண்டாடிய பண்டிகைகள்..
- பத்து வயதில் கண்டியில் உள்ள பள்ளி விடுதியில் என்னை சேர்த்தது; அங்கு நான் வீட்டை நினைத்து அழுது, உங்கள் வரவுக்காய் ஏங்கியது. நீங்கள் வந்தபோது மகிழ்ந்தது. விடுமுறை விட்டதும் ஆவலோடு உங்களோடு வீடு வந்தது...
- எனது கல்வி தேர்ச்சியை கண்டு நீங்கள் மகிழ்ந்தது. பெருமைப்பட்டது...
- நாம் சில காலம் ஏழ்மையில் உழன்றபோது நீங்கள் பரிதவித்தது. எங்கள் உயர்வுக்காய் நீங்கள் ஓடாய் உழைத்தது. உடலை வருத்திக் கொண்டது.
- நான் முதன்முதலாய் வேலை நிமித்தமாய் வெளிநாடு பயணித்தபோது விமான நிலையத்தில் நீங்கள் கலங்கியது.. (ஆச்சரியமாய் இருந்தது.. அப்பாவும் அழுவாரா?)
- நான் குடும்பப் பொறுப்பை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்ததும் நீங்கள் ஆசுவாசப்பட்டது. மகிழ்ந்தது.
- எனது மூத்த மகனை - உங்கள் முதல் பேரனை - எனது மனைவி உங்கள் கையில் கொடுத்த போது நீங்கள் அடைந்த எல்லையற்ற மகிழ்ச்சி...
- நாம் வாதிட்டது. பேசிக் கொள்ளாமல் இருந்தது.
- சண்டையிட்டது. சமாதானம் ஆனது.
- நீங்கள் நோயுற்றபோது நீங்கள் குழந்தையானது. நான் தந்தையானது. அதிலும் நீங்கள் பெருமை கொண்டது.
- "செல்வம்... பிசியாக இருக்கிறாயா..?" என்று தொடங்கும் உங்கள் தொலைபேசி அழைப்புகள்...
- ஒருமுறை இந்தியா சென்று வர வேண்டும் என்கிற உங்கள் ஆசை. நீங்கள் நோயுற்றதால் அதை ஈடேற்ற முடியாத என் இயலாமை.
நினைவுகள்... நினைவுகள்... நினைவுகள்... நிலைகுலைய செய்யும் நினைவுகள். மனிதனுக்கு கிடைத்த வரமும் சாபமும் நினைவுகளே.
அப்பா, ஒரு தந்தையாய் உங்கள் கடமைகளை முழுமையாய் செய்தீர்கள். என்னை 'அவையத்து முந்தி இருக்கச்' செய்தீர்கள். 'இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்' என்பதற்கு ஒப்ப நான் இருந்தேனா? இயன்றவரை முயன்றேன், இருந்தேன் என்றே நினைக்கிறேன். இறுதிவரை நீங்கள் எங்களுக்கு பலமாய் இருந்தீர்கள். பாலமாய் இருந்தீர்கள்.
ஆனால் அப்பா ஒவ்வொரு மரணமும் ஒரு படிப்பினையே. இழப்பின்போதுதான் இருப்பவர்களின் அருமை உணர்த்தப்படுகிறது. மகிமை புரிகிறது...
இப்போது அப்பா என்பது உடல் அல்ல. ஒரு உணர்வு மட்டுமே. இறை உணர்வைபோல...
'நன்றி' என்ற வார்த்தைக்கு வலிமை போதாதேனினும் எனக்கு வேறு வார்த்தை தெரியவில்லை.
எனவே,
கோடானுகோடி நன்றிகள் அப்பா. சென்று வாருங்கள்.
மீண்டும் சந்திக்கும் வரை....
உங்கள் மகன்,
சுப்ரமண்ய செல்வா
2 கருத்துகள்:
அண்ணா உங்களின் வரிகளை பார்க்கும் ஒவ்வருமுறையும் கதறி அழுகிறேன்.அப்பா உங்களின் ஒவ்வொரு கணிப்பும் 100% சரியானதாகவே இருந்தது.ஆனால் அதன் வீரியத்தின் வேகத்தினை ஏற்றுக்கொள்ளும் தன்மை என்னிடம் இல்லாததினால் சில வேளைகளில் உங்களிடம் முரண் பட்டேன்.நீங்கள் இல்லாத இந்த நிமிடங்களில் அதன் யதார்த்தின் உண்மையினை உணர்ந்து வெட்கித்தலை சாய்க்கிறேன்.
Where can I begin. What can I say. I am dumbfounded, Selva. Vasanthi and I cried so much while reading your heartfelt and meaningful eulogy for your father. I salute your sincere gratitude for a great man who had been the most influential part of what you are now. Every word, every sentence reflects the sincere love and respect you had for him. Your father must be a great personality. They say that the sacrifices parents make for their children will have an impact on them when they become parents. I can see that happening in you, Selva. You have implanted those values and beliefs in your children. When they take the reins of responsibilities they will definitely remember you just like the way you remember your father. Hats off to you, for the beautiful composition.
கருத்துரையிடுக