ஞாயிறு, 31 மார்ச், 2019

கானகத்தில் ஒரு பனிமாலைப் பொழுதில்

யாருடைய காடிதென்று நானறிவேன்
ஆயினும் அவனில்லமோ சிற்றூரில்
அறியப் போவதில்லை அவன்
பனிபோர்த்திய அவன் கானகத்தை
நான் பார்த்து நிற்பதை

அருகில் பண்ணை வீடேதுமில்லா தனிமையில்
பனியுறைந்த ஏரிக்கும் காட்டிற்குமிடையே
இருள் அடரும் இவ்வந்தியில்
தரித்திருப்பதன் விசித்திரத்தை
என் சிறுகுதிரை உணர்ந்திருக்க வேண்டும்

தன் சேணத்து
மணி அசைத்து வினவுகிறது
தவறேதும் உண்டோவென
மணியசைவின் பனிப்பொழிவின்
மென்காற்றின் மெல்லொலி தவிர
வேறு சப்தம் ஏதுமில்லை

வனப்புமிகு இவ்வனமென்னை வசீகரிக்கிறது.
ஆயினுமிது தாமதிக்கும் தருணமல்ல
நிறையவிருக்கின்றன நான்
நிறைவேற்றக் காத்திருக்கும் வாக்குறுதிகள்
தொலைதூரம் செல்ல வேண்டும் நான் துயில்கொள்ளும் முன்
ஆம்
தொலைதூரம் செல்ல வேண்டும் நான் துயில்கொள்ளும் முன்.

ஆங்கில மூலம்:  Stopping by the woods on a snowy evening - Robert Frost

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (24.03.2019)

செவ்வாய், 19 மார்ச், 2019

வாசல் வழி


மூன்று நாட்களுக்கு முந்திய இரவில்
இப்பெரும் பிரபஞ்சத்தில் பிரவேசித்த
பெண் சிசுவின் முதல் வருகை
உதிர்ந்த ஓர் உயிரின்
இறுதிப்பயணத்தின் தொடக்கம்
மணமுடித்த ஜோடி ஒன்றின்
மறுவீட்டு அழைப்பு
முன்ஜாமப் பொழுதொன்றில்
பூனையென வெளியேறும்
இளம்பெண்ணின் படிதாண்டல்
வன்ம வார்த்தைகள் வீசி
விரைந்து கடக்கும்
உறவோன்றின் பிரிவு
அறைந்து சாத்தப்பட்ட அவமானம்
ஊரடங்கிய ஓரிரவில்
உள்நுழையும் கள்வனின் அத்துமீறல்
இப்படியும் இன்ன  பிறவுமாக
எத்தனையோ சம்பவிக்கலாம்
வியர்வை பெருகும் கரங்கள் கொண்டு
தச்சன் உருவாக்கும்
இந்த வாசற்கதவு வழி!

(நன்றி: தினகரன் வாரமஞ்சரி - 17.03.2019)

திங்கள், 11 மார்ச், 2019

தடைகளும் வரங்களே

பூச்சி எப்படி அதன் பூச்சிக்கூட்டிலிருந்து வெளிவந்து பறக்கத் தொடங்குகிறது என் அறிய விருப்பிய ஒருவர் ஒரு பூச்சிக்கூட்டினை தனது வீட்டிற்கு எடுத்துச்சென்றார். சில நாட்களுக்குப் பின் அந்த பூச்சிக்கூட்டில் சிறு துளையொன்று உருவாகி இருப்பதைக் கண்டு அதன் அருகில் அமர்ந்து கவனிக்கத் தொடங்கினார். நேரம் செல்லத் தொடங்கியது. பூச்சி அந்த சிறு துளை வழியாக தன்னை திணித்து வெளிவர பல மணி நேரமாக போராடியது. ஒரு கட்டத்தில் எந்த அசைவுமில்லை. இனிமேல் வெளிவர முடியாமல் சிக்கிக்கொண்டதுபோல் தோன்றியது. அதன்மீது பரிதாபப்பட்டு உதவ எண்ணிய அந்த மனிதர் கத்தரிக்கோலொன்றினை எடுத்து கூட்டின் முனையை வெட்டி துளையை பெரிதாக்கினார். பூச்சி எளிதாக வெளிவந்தது. ஆனால் அதனுடைய உடல் வீங்கியும், இறகுகள் சுருங்கியும் இருந்தன. இறகுகள் பெரிதாகி பூச்சி பறக்கத் தொடங்கும் தருணத்திற்காக காத்திருந்தார். ஒன்றும் நடக்கவில்லை. அது தொடர்ந்து பருத்த உடலுடனும், சுருங்கிய சிறகுகளுடனும் சிரமத்துடன் ஊர்ந்து திரிந்தது. அதனால் இனி பறக்கவே முடியாது.

அந்த மனிதர் தனது கருணையினால் எழுந்த அவசரத்தில் இயற்கையின் அற்புத ஏற்பாடு ஒன்றினை புரிந்துக்கொள்ளத் தவறிவிட்டார். அது இலகுவாக வெளிவராமல் தடுக்கப்படுவதில் ஒரு நோக்கம் இருந்தது. அந்த சிறு துளை வழியாக வெளிவர பூச்சி போராடும்போது அதன் உடலில் நிறைந்துள்ள திரவம் சிறகுகள் பக்கம் உந்தித் தள்ளப்பட்டு, கூட்டை விட்டு வெளியே வந்ததும் பறப்பதற்கான ஆற்றலைக் கொடுக்கும். சுதந்திரமும், சிறகடித்துப் பறத்தலும் போராட்டத்திற்கு பின்பே சாத்தியம். அந்த பூச்சியின் போராட்டம் தடுக்கப்பட்டதால் அதன் உண்மையான சுதந்திரம் பறிபோனது.

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் தடைகளும் அத்தகையதே. மனித வாழ்க்கை எப்பொழுதும் மலர் தூவிய பாதையிலே நடைபயிலும் சுக பயணமாக இருப்பதில்லை. பல வேளைகளில் அது கல்லும் முள்ளும் நிறைந்த இருள் சூழ்ந்த கானகப் பயணமாகவும் இருப்பதுண்டு. உண்மையில் இந்த இருமை இயல்பே வாழ்க்கையை சுவாரஸ்யமிக்கதாக ஆக்குகின்றது என்று சொல்லலாம். பகல் – இரவு, நன்மை – தீமை, உண்மை - பொய் என உலகில் அனைத்தும் இரட்டைத் தன்மையோடு இருப்பதை நாம் காணலாம்.

தடைகளை இரண்டு விதங்களில் எதிர்கொள்ளலாம். தடைகளைக் கண்டு தளர்ந்து தன் விதியை நொந்து கழிவிரக்கத்தில் காலம் கடத்தலாம். இது எதிர்மறை எதிர்கொள்ளல். அல்லது தடைகளுக்கான காரணங்களை ஆராய்ந்து, அவற்றை வெற்றி கொள்வது எப்படி என திட்டமிட்டு, செயலாற்றி, தடைகளைத் தாண்டி முன் செல்லலாம். இது நேர்மறை எதிர்கொள்ளல்.

தடைகள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு அம்சம் என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டு நேர்மறையாக எதிர்வினையாற்றும்பொழுது வாழ்க்கையில் வெற்றி நம் வசமாகும்.

பாதியளவு நிறைந்துள்ள ஒரு பாத்திரத்தை பார்த்து பாதி நிறைந்திருக்கிறது என்று சொல்லலாம். அல்லது பாதி காலியாக இருக்கிறது என்றும் சொல்லலாம். பூத்துக் குலுங்கும் ரோஜா செடியின் முட்களை புறக்கணித்துவிட்டு மலர்களின் அழகில் மனம் மயங்கலாம். அல்லது மலர்களை மறந்துவிட்டு முட்களை சபிக்கலாம். அனைத்தும் நம் பார்வையில்தான் இருக்கிறது.

பல வேளைகளில் தடைகள் வரங்களாக அமைந்துவிடுவதுண்டு. ஓஷோ ஒரு கதை சொல்கிறார். அது ஒரு சீன பெண் துறவியைப் பற்றிய கதை.

ஒரு கிராமத்துக்கு சென்ற அந்த பெண் துறவி தனது போதனைகளை முடித்தபோது மாலையாகி இருள் படர தொடங்கி இருந்தது. அடுத்த கிராமம் தொலைவில் இருந்தது. இரவில் பயணிக்க இயலாது. அந்த கிராமத்தில் உள்ள வீடுகளை தட்டி இரவில் தங்கிக்கொள்ள இடம் கேட்டார். அவர்கள் அவரது தர்ம வழியை பின்பற்றுபவர்கள் அல்லர். அத்தோடு அந்தப் பெண்மணி அவர்களுக்கு பரிச்சயமற்றவர். யாரும் அவருக்கு இடம் தர முன்வரவில்லை. வேறுவழியின்றி அன்று இரவு அவர் அந்த ஊரின் வயல் மேட்டிலேயே உறங்க நேர்ந்தது. ஒரு மரத்தடியில் படுத்து அமைதியாக உறங்கினார். இரவு இரண்டு மணிக்கு விழிப்பு ஏற்பட்டது. குளிர் அதிகமாக இருந்ததால் உறக்கம் கலைந்தது. சுற்றுமுற்றும் பார்த்தார். அவர் கண்ட காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. சுற்றிலும் அமைதி. மரங்களும் செடிகளும் நிலவொளியில் குளித்துக் கொண்டிருந்தன. மலர்கள் அனைத்தும் மலர்ந்து மணம் வீசின. மரம் முழுவதும் மலர்கள். மெல்லிய தென்றல் மேனியை தழுவி சென்றது. அந்த அற்புத பொழுதின் ஆனந்தத்தை அவர் முழுமையாக அனுபவித்தார்.

மறுநாள் கிராமத்திற்கு சென்று தனக்கு தங்க இடம் தர மறுத்தவர்களை வணங்கி நன்றி சொன்னார். "நீங்கள் எனக்கு இடம் தந்திருந்தால் நான்கு சுவர்களுக்குள் எனது இரவு கழிந்திருக்கும். நீங்கள் மறுத்ததால் ஒரு அற்புத அனுபவத்தை பெரும் பாக்கியம் எனக்கு கிட்டியது. வயல்புரத்தில் மலர்ந்த மலர்களைக் கண்டேன். முழு நிலவைக் கண்டேன். என் வாழ்வில் இதுவரையில் கண்டறியாத ஒன்றை கண்டேன். நீங்கள் எனக்கு இடம் அளித்திருந்தால் நான் அதை இழந்திருப்பேன்." என்று சொன்னார்.

இதுபோல் தடைகள் வரங்களாக மாறிய அனுபவங்கள் நம் எல்லோருக்கும் இருக்கும்.

பல வேளைகளில் தடைகள் நாமே அறிந்திராத நமது பலத்தை நமக்கு அடையாளம் காட்டும் வாய்ப்புகளாகவும் அமைந்துவிடுவதுண்டு.

ஓட்டப்போட்டியில் கடைசியாக வந்த வீரர் கூட ஒரு யானையால் துரத்தப்பட்டால் போட்டியில் வென்றவரை விடவும் வேகமாக ஓடி தப்பிக்க முயல்வார்.

தடைகளை வென்று உலகின் உச்சியைத் தொட்ட அருணிமா சின்ஹாவின் கதை தனித்துவமானது.

அவர் இந்தியாவின் தேசிய மட்ட கரப்பந்தாட்ட வீராங்கனையாக இருந்தவர். ஒரு நாள் அவர் தொழில் விஷயமாக புதுடில்லி நோக்கி தொடருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது நான்கு திருடர்கள் அவரது தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார்கள். கூட்டம் நிறைந்த பெட்டியில் எவரும் உதவிக்கு வராத நிலையில் அவர் தனி ஒரு பெண்ணாக நின்று அவர்களுடன் போராடினார். தங்கச் சங்கிலியை பறிக்க முடியாத ஆத்திரத்தில் அவர்கள் அவரை தூக்கி தொடருந்துக்கு வெளியே வீசினார்கள். கீழே விழுந்து அடிபட்டவர் சுதாகரிப்பதற்குள் எதிர் திசையில் இருந்து வந்த வேறொரு தொடருந்து அவரது இடது காலின் மேல் ஏறி சென்றதால் அதனை முழங்காலுக்குக் கீழ் துண்டிக்க வேண்டி வந்தது. அந்த இளம்பெண்ணின் வாழ்க்கை இருண்டது. ஆயினும் மனதை தேற்றிக்கொண்டார். எதிர்காலம் சூனியமான நிலையில் மருத்துவமனையின் கட்டிலில் படுத்தவாறு அவர் ஒரு நம்பமுடியாத முடிவை எடுத்தார். அது எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைவது என்பது. வழமைபோல் கேள்விப்பட்டவர்கள் அனைவரும் எள்ளி நகையாடினார்கள். மனம் தளராது தொடர்ந்து போராடி தனது கனவை மெய்ப்பித்தார். எவரெஸ்ட் மலை ஏறிய உலகின் முதலாவது கால் துண்டிக்கப்பட பெண் என்னும் சாதனையை படைத்தார். 2015ஆம் வருடம் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது.

ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் தடைகளும், பிரச்சினைகளும் வாழ்க்கையில் நம்மை தகவமைத்துக்கொள்ள இயற்கை நல்கும் நல்வாய்ப்புகள் என்பது புரியும்.

நடைபயிலும் குழந்தை சமனிழந்து விழுந்து அழும்போது தாய் தூக்காமல் பார்த்திருப்பது அதன்மீது அன்பு இல்லாமையினால் அன்று. அதுவாகவே எழுந்து நடக்கும் ஆற்றலை குழந்தை பெற வேண்டும் என்பதற்காகவே.

மண்ணின் மேற்பரப்பில் மாணிக்கக் கற்கள் கிடைப்பதில்லை. பல்லாண்டு கால தொடர் அழுத்தமே மண்ணுக்கடியில் கூழாங்கற்களை மாணிக்கக் கற்களாய் மாற்றுகிறது.

காட்டில் வளரும் எல்லா மூங்கில்களும் புல்லாங்குழல்கள் ஆவதில்லை. வெட்டப்பட்டு, பதனிடப்பட்டு, உரசித் தேய்க்கப்பட்டு, துளையிடப்பட்ட மூங்கில்கள் மட்டுமே இன்னிசை பரப்பும் புல்லாங்குழல்கள் ஆகும் பேற்றினைப் பெறுகின்றன.

சிலவேளைகளில் வாழ்க்கையில் தடைகளும், போராட்டங்களும் நமக்கு அவசியமாயிருக்கிறது. போராட்டமற்ற வாழ்வு நம்மை முடமாக்கும். நமது உண்மையான ஆற்றல் நமக்குத் தெரியாமலே போய்விடும்.

எனவே, தடைகளைக் கண்டு தயங்காது அவற்றை நேர்மறையாக எதிர்கொள்வோருக்கு தடைகளும் வரங்களே.

(நன்றி: வீரகேசரி வார வெளியீடு (10.03.2019)

திங்கள், 4 மார்ச், 2019

இருமை இருப்பு

வாசல்களில் கழற்றி விடப்படும் காலணிகளைப் போல்
வேஷம் கலைந்து வீடடைகிறோம்
வெளியுலக ஆடைகளைந்து
அழுக்கு தீர குளித்து
உண்மை உடை தறிக்கிறோம்
முகமூடிகளைப் பத்திரப்படுத்துகிறோம்

சாதி கடந்தவர்கள் நாம்
எம் வாரிசுகளுக்கு
வாழ்க்கைத்  துணை தேடும் வரை

மதங்களை கடந்து மனிதரை நேசிக்கும்
மகாத்மாக்கள் நாம்
மதங்களின் பெயரால்
மனிதரை மாய்த்தாலும்
மௌனித்தே இருப்போம்

எமக்கில்லை
ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வு
நம் மாடி வீட்டு முல்லைக்கொடி
அயல்வீட்டு ஏழைக் கொம்பை
பற்றிப் படராத வரை

நாட்டுப்பற்றாளர் நாம்
நமது கட்டிலடி கறுப்புப்பணப் பெட்டிகள்
நம்மைக் காட்டிக் கொடுக்காத வரை

தமிழ் நமக்கு உயிர்
நம் பிள்ளைகளை
பன்னாட்டு பள்ளியில் சேர்க்க
பல லட்சம் செலவழிப்போம்
தங்கிலீஷில் பேசுவதே
இங்கிதம் எனக் கொள்வோம்

பெண்மையை போற்றுவோம்
நம் வீட்டுப் பெண்டிர்
தம்மாசைகளை ஆழப்புதைத்து
நம்மிஷ்டம்போல் இருக்கும் வரை

இப்படியாகவும்
இன்னும் பலவாகும்
இருமை இருப்பின்
மறுவடிவங்கள் நாம்

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (03.03.2019)

இலையாட்டம்

ஒன்றுபோல் நடனமிடுவதில்லை
ஒரு செடியின் எல்லா இலைகளும்
மேலும் கீழும்
வலமும் இடமும்
இடமும் வலமும்
முன்னும் பின்னுமாய்
எல்லா திசைகளிலும்
களிநடனம் புரிகின்றன
ஆம் என்றும்
இல்லை என்றும்
இருக்கலாம் என்றும்
காற்றோடு கலந்துரையாடுகின்றன
காற்றின் ஸ்பரிசத்தில் நாணி
காற்றோடு காதல் செய்து
காற்றோடு கலவி செய்து
களைத்துத் துயில்கின்றன
சில பொழுதுகளில்
எதிர்த்து நின்று தோற்றுப் போய்
காற்று கடந்ததும் தலைநிமிர்கின்றன
காற்றுத் தீண்டாத பொழுதுகளில்
அசைவற்று நிஷ்டையிலிருக்கின்றன
பிரிதொரு நாளில்
காற்றின் துணையோடே
உயிர்த் துறக்கின்றன.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி (03.03.2019)

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

காதலெனப்படுவது யாதெனில்...

பாலையில் புனல் தேடும் அறிவிலியாய்
உன் மனவெளியில் ஈரம் தேடித் திரிகிறேன்
முட்டாளாய் இருப்பது புத்திசாலித்தனம் என்று
உன்னை பின்தொடரும் பொழுதுகளில்
சமாதானம்  கொள்கிறேன்
வறள்நிலங்களில் ஆழ்துளை கிணறு தோண்டுபவனின் நம்பிக்கை என
என்னுள் ஊற்றெடுக்கும் காதல் சுனை
உன்னை ஈரப்படுத்த எடுக்கும் பிரயத்தனங்கள் யாவும்
பாறையில் பெய்த பெருமழையாய்
பயனற்றுப் போகின்றன
தன் காயங்களை பாதுகாக்கும் யாசகனென
என்றோ ஒரு காதல் விபத்தில் பட்ட காயங்களை
அடைகாத்து கழிவிரக்கத்தில் களிகொள்கிறாய்
உன்னைச் சுற்றி நீ எழுப்பியிருக்கும்
தீச்சுவர் கொண்டு
அன்பு சுமந்து வரும்
ஆண் விட்டில்களை பழிதீர்க்கிறாய்
அறிந்திடு பெண்ணே
இலையுதிர் காலத்தில் நிர்வாணமான மரம்தான்
வசந்த காலத்தில் புத்திலை போர்த்திக் கொள்கிறது
இருளில் ஒளிந்திருக்கிறது விடியல்
இயற்கையை மறுதலிக்கும் உன் பிரயத்தனங்கள்
அனைத்தும் பொய்த்து
காதலெனப்படுவதுப்படுவது உதிரும் மலரல்ல
முறிந்த பின்னும் துளிர்க்கும் கிளையென
நீ அறியும் ஒருநாளில்ஒரு
எனது காதலும் காத்திருப்பும்
அர்த்தம் பெறும்

நன்றி: தினகரன் வாரமஞ்சரி (17.02.2019)

திங்கள், 11 பிப்ரவரி, 2019

புதிய சுதந்திரம்

பெருசிறு பான்மையென்ற பேதங்கள் களைந்திங்கு
ஒரு நாடு ஒரு மக்கள் ஓருரிமையென்று
உருவாகும் ஓர் நாளின் உதயத்திலென்
திருநாடு அடைந்திடும் மெய்ச் சுதந்திரம்

எண்ணிக்கையினால் தாம் மேலோரெனும் - விஷ
எண்ணத்தை ஊட்டி  ஓரினத்தை
கண்ணுள்ள குருடராக்கும் கயவர் அழியுமோர்
நன்னாளில் என்னாடெய்தும் உண்மைச் சுதந்திரம்

சிம்மவழி வந்தோர்க்கே சொந்தமிந் நாடெனும்
வம்பு மொழி செப்புவோர் வாயடைத்து
எம்மதமும் எம்மொழியும் ஒன்றாகு மொருநாளில்
செம்மையா யுதித்துடும் சீரான சுதந்திரம்

சித்தமதில் காழ்ப்பழித்து  சீர்தூக்கி
புத்தம்போல் சைவ மிஸ்லாம் கிருத்தவமும்
ஒத்ததென இத்தரையில் உணரு மொருநாள்
புத்தம் புதிதாய் பூத்திடும் சுதந்திரம்

என் பாட்டன் என்னப்பன் யானும்தான்
இந்நாட்டில் பிறந்திட்டோம் எனினுமின்னும்
அந்நியனாய் எண்ணும் நிலை இல்லாதாகும்
பொன்னாளில் பூக்கும் புது சுதந்திரம்

ஈதெங்கள் நாடென்று இறுமாப்புடன்
இதயங்கள் இணைந்திங்கு ஒரு குரலில்
விதந்தோதும் பெருநாளின் புலர்பொழுதில்
இதமாக மலர்ந்திடும் புதிதாயொரு சுதந்திரம்

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (10.02.2019)

காப்பியக்கோவுக்கோர் கவிமடல்

காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் 'வாத்தியார் மாப்பிள்ளை காவியம்' நூலை வாசித்து முடித்ததும் அவருக்கு எழுதியனுப்பிய கவிமடல்...
=====================

காப்பியக்கோ யாத்தளித்த - வாத்தியார்
மாப்பிள்ளை காவியமது
மூப்பில்லா  தமிழுக்கொரு - முத்தான
காப்பென்பேன் முழுவுண்மை

கால யந்திரத்தின் மீதேறி
மீள பலநாள் பின்சென்று
ஈழ மண்ணின் கீழ்க்கரையில்
வாழ வைத்த கவி வரிகள்

மருதமுனை யூர் சென்று
தெருக்களிலே நடைபயின்று
திருமணத்தில் பங்கேற்று
திரும்பி வந்த தோருணர்வு

ஆழ் கடலில் மீன் பிடிப்போர்
நீள் வயலில் ஏர் பிடிப்போர்
நூல் நூற்று ஆடை நெய்வோர்
வாழ்க்கையது வரிவடிவில்

அமிழ்து மின்சுவையும் என்று
தமிழு  மிஸ்லாமும் அன்று
இமியளவு மிணைபிரியா கதை
இமையதை ஈரமாக்கும்

வெள்ளந்தி மனிதர்களின்
கள்ளமிலா வாழ்வதனை - புது
வெள்ளம் கொண்டு போனதுவோ
நல்லதுவோ நவின்றுடுவீர்

மெல்லவே மீண்டு மங்கு
உள்ளங்கள் இணைந்தின்று
பள்ளி கோவில் பகுப்பழிய
பள்ளங்கள் விலகாதோ

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

சாய்வு நாற்காலி

முப்பது நாட்களுக்கு பிறகு இன்றுதான் வீடு ஓரளவு வழமைக்கு திரும்பியிருந்தது.  வீட்டை மூடியிருந்த தடித்த சூட்சுமத் திரை முழுவதுமாக விலகியிருந்தது.  நாளை திங்கட்கிழமை வேலை நாள் என்பதால் கருமாதிக்கு வந்தவர்கள் எல்லோரும் விடைபெற்றுச் சென்றுவிட்டார்கள்.  அணையா விளக்கு ஒளிர, பொட்டிட்டு, மாலையிட்டு வரவேற்பரையில்  நடுநாயகமாக வீற்றிருந்த தாத்தாவின் படத்தை வழிபாட்டு அறையில் வைத்தாயிற்று.

அன்று மாலை வரவேற்பறை தளபாடங்களை மீண்டும் அதனதன் இடங்களில் நகர்த்தி வைக்கும்போதுதான் அந்தக் கேள்வி முளைத்தது.

'தாத்தாவின் சாய்வு நாற்காலியை என்ன செய்வது?'

உயர் ரக சோபா, தேனீர் மேசை, சுவரில் பொருத்தப்பட்ட தொலைக்காட்சி என ஒருவித ஒழுங்கமைப்போடு இருந்த வரவேற்பறைக்கு அந்த சாய்வு நாற்காலி கொஞ்சம் பொருத்தமற்று இருந்தது என்னவோ உண்மைதான்.  எல்லோரும் சகித்துக்கொள்ளப் பழகிவிட்ட ஒரு இடைஞ்சல்.  தாத்தாவும் அதை உணர்ந்தே இருந்தார்.  தானும் இந்த சாய்வு நாற்காலியைப் போல இவர்களுக்கு இடைஞ்சலாகிவிட்டோமோ என்று தாத்தாவுக்கு அடிக்கடி தோன்றுவதுண்டு.  வீட்டில் யாரும் இல்லாத வேளைகளில் பாட்டியிடம் வாய்விட்டே சொல்லியும் இருக்கிறார். பாட்டிக்கு கூட அந்த ஐயம் இல்லாமல் இல்லை.  இருந்தாலும் "அது எப்படிங்க நம்ம பிள்ளைகளுக்கு நாம எடைஞ்சலாவோம்" என்பாள்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் அந்த சாய்வு நாற்காலி வரவேற்பறையில் இடம் பிடித்தது.  அதுவரை சுறுசுறுப்பாக நடமாடிக் கொண்டிருந்த தாத்தா ஒரு நாள் குளியலறையில் வழுக்கி விழுந்து முதுகுத் தண்டில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆறு மாத கால கட்டாய படுக்கை ஓய்வை பரிந்துரை செய்த மருத்துவர்களே வியக்கும் வண்ணம் நான்கே மாதங்களில் பூரண குணமடைந்து நடமாட தொடங்கிவிட்டாலும்,   பழைய சுறுசுறுப்பு காணாமல் போய்விட்டிருந்தது. ஒவ்வொரு வேலையும் அதீத கவனத்தோடு செய்யத் தொடங்கினார். மீண்டும் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்து மற்றவர்களுக்கு பாரமாகி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.   சோபாவில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது கஷ்டமாக இருந்தது. அப்போதுதான் சாய்வு நாற்காலிக்கான தேவை ஏற்பட்டது.

அதன்பிறகு அந்த சாய்வு நாற்காலி அவரின் ஒரு அங்கமானது. பெரும்பாலான நேரங்களை அதில் சாய்ந்து அமர்ந்தவாரே கழிக்கத் தொடங்கினார். தாத்தா இறுதிவரை ஒரு கண்டிப்பான ஒழுக்க வாதியாகவே இருந்தார். இதனை வெள்ளைக்காரத் துரைமார்களிடமிருந்து கற்றுக்கொண்டதாக பெருமையோடு சொல்வார்.  தினமும் காலை முகச்சவரம் செய்து குளித்து தூய்மையான மாற்று ஆடை அணிந்து சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்து கொள்வார்.  அதில் அமர்ந்தவாறு செய்தித்தாள்களை வாசித்துக்கொண்டோ, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ பொழுது கழியும். சில நேரங்களில் அதில் அமர்ந்தவாறே கண்ணயர்வார். உணவிற்கும், ஓய்வறை செல்லவும் மட்டுமே அதிலிருந்து எழுந்து வருவார்.

பாட்டியின் பொழுதும் பெரும்பாலும் அதன் அருகில் கீழே அமர்ந்தே கழியும். பாட்டிக்கு சோபாவில் அமர்வதை விட வெறுந்தரையில் கால் நீட்டி அமர்வதே பிடிக்கும். அவ்வப்போது அங்கு அமர்ந்தவாறு வெற்றிலையை இடித்து வாயில் குதப்பிக் கொள்வாள். "இந்தக் கருமத்தை விட்டு தொலைன்னா கேட்கிறயா என்ன?" தாத்தாவின் எதிர்ப்பு பழக்கமாகிவிட்டது.  பட்டியால் வெற்றிலை இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

இந்த வீட்டுக்கு வந்தது முதல் தாத்தாவின் உடலை சுமந்த சாய்வு நாற்காலி இன்று அவர் இறுதி மூச்சை சுமந்து கொண்டிருக்கிறது.

ஏனென்று தெரியவில்லை. வழமையாக பகல் உணவுக்குப் பின் தங்களது அறையில் சென்று சிறிது நேரம் தூங்கி எழும் தாத்தா அன்று அறைக்குச் செல்லாமல் மீண்டும் வந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டார். அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் எல்லோரும் பகலுணவுக்குப் பிறகு தங்கள் அறைகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.  தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு அன்றைய செய்தித்தாளை வாசித்தவாறு கண்ணயர்ந்து போனார் தாத்தா. அவரது ஆழ்ந்த தூக்கத்தை பார்த்து தொந்தரவு செய்யாமல் ஓய்வெடுக்க தங்கள் அறைக்கு போனாள் பாட்டி.

பகல் தூக்கத்திலும் ஒழுக்கத்தை கடைபிடிப்பவர் தாத்தா. முப்பது நிமிடங்களுக்கு மேல் அவர் என்றுமே பகலில் தூங்கியதில்லை.  4 மணி அளவில் எழுந்து அறையை விட்டு வெளியே வந்த பாட்டிக்கு அவ்வளவு நேரம் தாத்தா தூங்கிக் கொண்டிருந்தது ஆச்சரியத்தை அளித்தது.  அருகில் சென்று பார்த்தபோது வாசித்துக்கொண்டிருந்த செய்தித்தாள் கீழே நழுவி மின்விசிறிக் காற்றில் தரையில் பரவிக்கிடந்தது.  அருகே சென்று தட்டி எழுப்பியவளின் அடிவயிற்றிலிருந்து  புறப்பட்ட "ஐயோ அப்பா" என்னும் அலறலில் முழு வீடும் விழித்துக்கொண்டது.

*******

சாய்வு நாற்காலியை அங்கிருந்து அகற்றுவதற்கு எதிர்ப்புக்குரல் எதிர்பாராத இடத்தில் இருந்து வந்தது. அது தாத்தாவின் மருமகள். இன்னும் கொஞ்ச நாளைக்கு அது அங்கேயே இருக்கட்டும் என்று சொன்னபோது அவள் குரல் கம்மியது.

அவளை ஒருவாறு சமாதானம் செய்து சாய்வு நாற்காலியை மொட்டை மாடியில் உள்ள பழைய பொருட்கள் வைப்பறைக்கு இடம் மாற்றுவது என முடிவாயிற்று.

அனைத்தையும் தனது அறைக்குள் ஒடுங்கி படுத்தவாறு கேட்டுக்கொண்டிருந்தாள் பாட்டி. பொதுவாக இவ்வாறான உரையாடல்களில் அவர் கலந்து கொள்வதில்லை.  அவரது பங்கேற்றல் வரவேற்கப்படுவதும் இல்லை.

பாட்டி கூட அந்த சாய்வு நாற்காலியை பயன்படுத்தலாம் என்ற எண்ணம் அவரது மகன் உட்பட எவருக்குமே தோன்றவில்லை. ஒரு மூதாட்டி சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுக்கும் காட்சி அவர்களின் மனங்களுக்கு பிடிபடவில்லை.

தாத்தாவின் மகனும் பேரனும் சேர்ந்து சாய்வு நாற்காலியை மொட்டை மாடிக்கு இடம் மாற்றிவிட்டு திரும்பினார்கள். வைப்பறையில் இடம் போதாமையால் மறுநாள் அதில் உள்ள பொருட்களை ஒழுங்கு செய்யும் வரை தற்காலிகமாக அறைக்கு வெளியே வைத்துவிட்டு வந்தார்கள்.

வரவேற்பரையில் சாய்வு நாற்காலி இருந்த இடம் வெறிச்சோடிக் கிடந்தது. நாளை அந்த இடத்தை நெகிழி பூக்கள் நிறைந்த பெரிய பூச்சாடி ஒன்று அலங்கரிக்கலாம். சில மாதங்களில் இருந்த சுவடு தெரியாமல் சாய்வு நாற்காலி மறக்கப்படும், தாத்தாவை போல.

எல்லோரும் உறங்கிய பின் நேரம் நடுநிசியை அண்மித்த வேளை பாட்டி தன் அறையிலிருந்து வெளியே வந்து மெதுவாக படியேறி மொட்டை மாடியை அடைந்தார்.  வெறிச்சோடிக் கிடந்த அந்த மொட்டை மாடியில் அனாதரவாய் விடப்பட்ட சாய்வு நாற்காலி நிலவொளியில் தெரிந்தது.  பார்க்கப் பார்க்க அதன்மீது அவளுக்கு பேரன்பு பெருகியது. கண்ணீர் பெருக அருகில் சென்றாள்.  வாஞ்சையோடு அதனை வருடினாள். தாத்தா கால் வைக்கும் இடத்தை தொட்டு வணங்கினார். சுற்றுமுற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு வாழ்க்கையில் முதல்முறையாக அந்த சாய்வு நாற்காலியில் மெதுவாக அமர்ந்தார். அவரது எடைக்கு சமநிலை இழந்து ஒரு தொட்டிலை போல் அது மெதுவாக ஆடத்தொடங்கியது.  அவரை அறியாமல் கால்களால் அழுத்த அது ஒரு தாள லயத்தோடு அசையத் தொடங்கிற்று. அவரின் மனமெங்கும் உடலெங்கும் ஒரு பேரமைதி பரவ கண்கள் சொருகின. ஆழ்ந்த உறக்கம் அவரை ஆட்கொண்டது. தாயையும் பின்பு கணவரையும் ஆரத்தழுவி உறங்கிய நினைவுகள் கனவுகளாய் வந்து போயின.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி (03.02.2019)

திங்கள், 21 ஜனவரி, 2019

சிந்தித்தால் சிறப்பு வரும்

காலை நடைப்பயிற்சி செல்லும்போது வெள்ளவத்தை கடற்கரைச் சாலையில் அந்த நண்பரைக் காண்பதுண்டு.  எதிர்த் திசையிலிருந்து வேகமாக வந்துகொண்டிருப்பார்.  ஒரு முகமன் புன்னகையோடு கடந்து செல்வார்.  சில நாட்களில் அதுவும் இல்லை.  முன்பின் அறிமுகம் இல்லாதவரை பார்க்கும் ஒரு வெறுமைப் பார்வையை விட்டுச் செல்வார். அவரைத் தொடர்ந்து சிறிது தொலைவில் அவரது நண்பர்கள் ஐந்தாறு பேர் கூட்டமாக நடந்து வருவார்கள்.  உரத்த பேச்சும், சிரிப்பும் என அவர்கள் நடை கலகலப்பாய் இருக்கும்.  எதிரில் அறிந்தவர்கள் வந்தால், நின்று அவர்களுடன் அலவலாவி தொடர்வார்கள்.  முன்பு குறிப்பிட்ட நண்பர் ஏன் இவர்களுடன் சேர்ந்து செல்வதில்லை என்கிற கேள்வி வெகு நாட்களாக குடைந்துகொண்டிருந்தது.  நடைப்பயிற்சி முடிந்து தனியாக கடலைப் பார்த்து அமர்ந்து ஒய்வு எடுத்துக்கொண்டிருந்தவரை அணுகி கேட்கும் வாய்ப்பு ஒரு நாள் கிட்டியது.

"அது எனது சிந்திப்பதற்கான நேரம்" .  அவரது பதில் ஆச்சரியப்படுத்தியது.

'சிந்திப்பதற்கு தனியாக நேரம் வேண்டுமா?' - கேட்கப்படாத இந்தக் கேள்வியை புரிந்துகொண்டு தொடர்ந்தார்.

"ஆம்... தினமும் காலை நடைப்பயிற்சி செல்லும் அந்த ஒரு மணித்தியால நேரத்தை நான் இடையூறுகள் ஏதுமற்று சிந்திக்கப் பயன்படுத்திக்கொள்கிறேன்.  அதனால்தான் நண்பர்களுடன் சேர்ந்து நடப்பதில்லை. எனது தொழில், அரசியல், ஆன்மீகம், இலக்கியம், உறவுகள், நண்பர்கள், இந்த வாழ்க்கை என ஏதாவது ஒன்றைப்பற்றி சிந்தித்தவாறு நடக்கிறேன். உடலுக்கும், மனதிற்கும், மூளைக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கிடைக்கிறது. எனது வணிகத்தைப்பற்றி மட்டுமன்றி, வாழ்க்கையப்பற்றியும் ஒரு தெளிவு கிடைக்கிறது."

உண்மைதான்.  நாம் சிந்திப்பதற்கென்று தனியாக நேரத்தை ஒதுக்குவதில்லை.  விழித்திருக்கும் வேளைகளில் பெரும்பாலான நேரத்தை பேசியே கழிக்கிறோம்.

சிந்தனையாற்றல் மனித குலத்தின் சிறப்பு வரம்.  மற்ற உயிரினங்களைவிட மனிதரை உயரத்தில் வைத்திருக்கும் உன்னத பேறு.

காடுகளிலும் மேடுகளிலும் நிர்வாணமாக நடமாடிய மனிதனை இலை குலைகள், விலங்குகளின் தோல் முதலியவைத் தொடங்கி இன்று பல வண்ண பட்டாடை வரை அணிய வைத்ததும், வெயில் மழையிலிருந்து தன்னை காத்துக்கொள்ளும் வழியறியாது  வானமே கூரையாக வாழ்ந்த மனிதனை குகை, குடிசையில் தொடங்கி இன்று வான் முட்டும் சொகுசு இருப்பிடங்களில் வாழ வைத்ததும்,  பல நூறு மைல்களை நாட்கணக்கில் கால்நடையாகவே நடந்து கடந்த மனிதன் இன்று பூமிப் பந்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனையை சில மணி நேரங்களில் சென்றடைய முடிவதும் அவனது  சிந்தனையாற்றலின் சிறப்பினால் மட்டுமே.

சிந்தனை விளக்கு சுடர்விட்டு எரிய தூண்டுகோலாய் இருப்பது கேள்விகள்.  மனித மாண்புகள் அனைத்திற்கும் அடிப்படை சிந்தனையாற்றல் எனில் சிந்தனையாற்றலுக்கு அடிப்படை ஏன், என்ன, எப்படி என்னும் கேள்விகள். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், பொருளாதாரம், விவசாயம் என அனைத்து துறைகளிலும் மனிதன் அடைந்திருக்கும் அபரிமிதமான முன்னேற்றத்தின் பின்னணியில் ஆயிரமாயிரம் கேள்விகள் அணிவகுத்து நிற்கின்றன.  சரியான கேள்விகள் எப்படி உன்னதமான சிந்தனைகளுக்கு வழிவகுக்கின்றன என முதலில் விளக்கியவர் கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ்.  அது இன்றும் 'சாக்ரடீஸ் கேள்வி கேட்கும் முறை (Socrates Questioning)' என்று வழங்கப்படுகிறது.

'கல்வியின் நோக்கம் வெறும் அர்த்தங்களை (பொருண்மைகளை) அறிந்துகொள்வதல்ல, மனதை சிந்திக்க பழக்குவதே' எங்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.  இதனையேதான் சாக்ரடீஸும் வலியுறுத்தினார்.  கற்றல் என்பது வெறும் தரவுகளை திணிப்பதோ அல்லது பொருள் புரியாமால் மனனம் செய்ய வைப்பதோ அல்ல; சிந்திக்க வைப்பது.  சிந்தனையைத் தூண்டும் கேள்விகள் மூலம்தான் சிந்திக்க வைத்தல் சாத்தியமாகும்.  அதனால்தான் சாக்ரடீஸிடம் எதனைப்பற்றி கேட்டாலும், அவர் பதிலை கேள்வியாகக் கேட்டு கேட்பவரை சிந்திக்க வைத்தார்.  ஒரு விடயத்தை பதிலாக சொன்னவுடன் பெரும்பாலும் அதனைப்பற்றிய தேடல் அத்தோடு நிறைவடைந்து விடுகிறது.  அதுவே ஒரு கேள்வியாக அமையும்போது எண்ணற்ற சாத்தியக்கூறுகள் புலப்படத் தொடங்குகின்றன.


மார்க்ஸ் மரணித்த போது 'கார்ல் மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்' என ஏங்கல்ஸ் குறிப்பிட்டார்.  ஆம், மரணம் வரை மனிதர் சிந்திப்பதை நிறுத்துவதே இல்லை.

சிந்தனை என்பது மூளையில் நடைபெறும் அறுதியிட்டுக் கூறமுடியாத ஒரு செயற்பாடு.  சிந்தனையின் மூலம் எண்ணங்கள் தோன்றுகின்றன.  எண்ணங்கள் மேலும் புதிய சிந்தனைகளைத் தூண்டுகின்றன.  அது ஒரு முடிவற்றுச் சுழலும் சக்கரம் போன்றது.


நாம் விழித்திருக்கும் நேரங்களில் எல்லாம் எமது உணர்வுப்பூர்வமான ஈடுபாடு இல்லாமலேயே எமக்குள் ஏதாவது சிந்தனை நடைபெற்றுக்கொண்டும், ஆயிரக்கணக்கான எண்ணங்கள் தோன்றிக்கொண்டும் இருக்கின்றன.  இவை அனிச்சையான சிந்தனை (passive thinking) எனப்படும்.  அனிச்சையான சிந்தனைகள் பெரும்பாலும் ஆழமான சிந்தனைகளாக இருப்பதில்லை.  அதனால் அவை நமக்கோ, பிறருக்கோ பயன்மிக்கதாய் இருப்பதில்லை.

இதற்கு நேரெதிரானது செயல்திறன்மிக்க சிந்தனைகள் (active thinking).  இவை ஒரு விடயம்பற்றிய அறிவார்ந்த, ஆழமான, தர்க்கரீதியான, விழிப்புணர்வுடனான சிந்தனைகள்.  சாக்ரடீஸ், பிளேடோ, திருவள்ளுவர், பெர்னார்ட் ஷா, கார்ல் மார்க்ஸ், ஜிட்டு கிருஷணமூர்த்தி என நீளும் மனித குலத்தை மாற்றியமைத்த தத்துவஞானிகள் அனைவரும் இத்தகைய சிந்தனையாளர்களே.

இவர்கள் சிந்திப்பதற்கென்று நேரத்தை ஒதுக்கினார்கள். இவர்களது சிந்தனைகள் மனிதத் துயரங்களை மையம் கொண்டிருந்தன.  எல்லா மனிதத் துன்பங்களையும் உடற்துன்பம், மனத்துன்பம் ஆகிய இரண்டு வகைக்குள் அடக்கிவிடலாம்.  இவர்கள் இந்தத் துன்பங்களுக்கு காரணம் என்ன, அவற்றை எப்படிப் போக்கலாம் என சிந்தித்தார்கள். இவை தன்னலம் கடந்த பரோபகார சிந்தனைகள்.  சிந்தனையிலிருந்து பிறந்த தெளிவை கோட்பாடுகளாக வெளிப்படுத்தினார்கள்.  அவை மனித குல வாழ்வில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தின.  வாழ்க்கையை புரிந்துகொள்வதற்கும், மனிதன் துன்பச் சுழலிலிருந்து மீள்வதற்கும் அவர்களது சிந்தனை வழி தோன்றிய எண்ணங்கள் உதவின.

எனவே நடைப்பயிற்சி நேரத்தை சிந்திக்கப் பயன்படுத்திக்கொள்ளும் நண்பர் குறிப்பிட்டதுபோல் சிந்திப்பதெற்கென்று நேரத்தை ஒதுக்குவது அவசியமாகிறது.   தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை இடையூறுகள் ஏதுமின்றி ஏதாவது ஒரு விடயம் பற்றி ஆழ்ந்து ஒருமுகமாக சிந்திப்பது சிறப்பு தரும்.  அது நமது வாழ்க்கையைப் பற்றிய தெளிவைத் தருவதோடு, குறுகிய மற்றும் நீண்ட நாளைய திட்டங்கள் மூலம் அதனை செம்மைப்படுத்தவும் உதவும்.  அது மட்டுமன்றி அத்தகைய சிந்தனையால் பெற்ற தெளிவை சக மனிதரிடம் பகிர்ந்துகொள்வதன் மூலம் அவர்களது வாழ்விலும் ஒளியேற்ற முடியும்.

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (20.01.2019)

எண்ணிய வண்ணம் வாழ்வு: பகுதி-4 - எண்ணமும் குறிக்கோளும்

மூலம்:  As a Man Thinketh by James Allen         தமிழில்: சுப்ரமண்ய செல்வா

குறிக்கோளானது எண்ணத்தோடு இணைக்கப்படாதவரை எவ்வித அறிவார்ந்த சாதனையும் சாத்தியமில்லை.  பலர் தங்கள் வாழ்க்கை என்னும் கடலினில் எண்ணம் என்கிற பாய்மரக் கப்பலை வெறுமனே அலைய விட்டு விடுகிறார்கள்.  இலக்கில்லாமை என்பது ஒரு பெருங்குறையாகும்.  இடரினை, அழிவினை தவிர்த்து பயணிக்க விரும்புகிறவனின் வாழ்வில் இத்தகைய அலைக்கழிப்புகள் தொடரக் கூடாது.

தங்கள் வாழ்வில் எவ்வித மைய நோக்கமும் இல்லாதவர்கள்தான் எளிதில் அற்பமான கவலைகள், அச்சங்கள், பிரச்சினைகள் மற்றும் சுயபச்சாதாபத்திற்கு இரையாகிறார்கள்.  இவை அவர்களை -  திட்டமிட்டு செய்த பாவங்கள் போன்றே - பிறிதொரு வழியில் நிச்சயமாக தோல்வி, வருத்தம், இழப்பை நோக்கி இட்டுச் செல்கின்றன.  ஏனெனில் ஆற்றல் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும் இப்பிரபஞ்சத்தில் பலவீனம் நிலைத்திருக்க முடியாது.

மனிதன் தனது இதயத்தில் நியாயமான குறிக்கோள் ஒன்றினை சிருஷ்டிக்க வேண்டும்.  அக்குறிக்கோளினை நிறைவேற்ற புறப்பட வேண்டும்.  அந்த அக்குறிக்கோளினை தனது எண்ணங்களின் மையப் புள்ளியாக ஆக்க வேண்டும்.  அந்தக் குறிக்கோளானது அவனது தற்போதைய நிலமைக்கு ஏற்ப, ஆன்மீக இலட்சியமாக இருக்கலாம் அல்லது லௌகீக இலட்சியமாகவும் இருக்கலாம்.  அது எவ்வாறெனினும் அவன் தனது முழு எண்ண ஆற்றலையும் அந்த இலட்சியத்தின் மீது நிலையாக குவிக்க வேண்டும்.  தனது எண்ணங்களை நிலையற்ற மாயைகளிலும், ஆசைகளிலும், கற்பனைகளிலும் அலைய விடாமல், அந்தக் குறிக்கோளை தனது உயரிய கடமையாக ஆக்கி அதனை அடைவதற்கு தன்னை அர்பணிக்க வேண்டும்.  இதுவே சுயக்கட்டுப்பாட்டுக்கும் எண்ண ஒருமுகத்திற்குமான உன்னத வழியாகும்.  அந்த குறிக்கோளினை அடைவதில் அவன் மீண்டும் மீண்டும் தோல்வி அடையினும் (பலகீனத்தை வெற்றிக்கொள்ளும் வரை தோல்வி என்பது இயல்பானதே) அதனிலிருந்த அவன் பெற்ற ஆளுமையின் வலிமை என்பதே அவன் அடைந்துள்ள உண்மையான வெற்றியின் அளவுகோலாகும்.  அது அவனது எதிர்கால பலத்திற்கும் மிகப்பெரிய வெற்றிகளுக்குமான ஆரம்பப் புள்ளியாக அமையும்.

உயர்ந்த குறிக்கோள் மீதான அச்சத்தினால் அதற்கு தயாராய் இல்லாதவர்கள் தங்கள் கடமையை (அது எத்துனை சிறிய பணியாயினும்) குறையின்றி ஆற்றுவதில் தங்கள் எண்ணங்களை நிலைக்கச் செய்தல் வேண்டும்.  இதன் மூலம் மட்டுமே எண்ணங்களை ஒருங்கிணைத்து ஒருமுகப்படுத்த முடியும்; மன உறுதியையும், ஆற்றலையும் மேம்படுத்த முடியும்.  இதனை செய்யும்விடத்து சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.

ஆற்றலை முயற்சியினாலும் பயிற்சியினாலும் மட்டுமே மேம்படுத்த முடியும்.  தனது பலகீனத்தை அறிந்த மிகவும் பலகீனமான ஆன்மா கூட இந்த உண்மையை ஒப்புக் கொண்டு சிறிது சிறிதாக முயற்சியை, பொறுமையை, ஆற்றலை அதிகரிக்கும்போது, மேம்பாடும், இறுதியில் தெய்வீகமான ஆற்றலும் பெற்று உயரும்.

எப்படி ஒரு பலகீனமான உடலை உடையவன் கவனமும் பொறுமையுடனான பயிற்சியின் மூலம் தன்னை வலுப்படுத்திக் கொள்ள முடியுமோ, அதுபோலவே பலகீனமான எண்ணங்களை கொண்ட ஒருவன் சரியான எண்ணங்களைக் கொண்ட பயிற்சியினால் அவற்றை வலுப்படுத்திக் கொள்ள முடியும்.

வலியவர்கள் தோல்வியை தங்கள் இலக்கை அடைவதற்கான ஒரு பாதையாக மட்டுமே காண்கிறார்கள்.  எல்லா நிலைமைகளையும் தங்களுக்கு  சாதகமாக்கிக் கொள்கிறார்கள்.  உறுதியாக சிந்தித்து, அச்சமின்றி முயன்று அற்புதமாக சாதிக்கிறார்கள்.  பலகீனத்தையும், குறிக்கோளின்மையையும் ஓரங்கட்டி தனது குறிக்கோளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கும் ஒருவன் இவர்களில் ஒருவன் ஆகிறான்.

குறிக்கோளை சிருஷ்டித்தவுடன் மனிதன் அதனை அடைவதற்கான நேரான பாதை ஒன்றினை மனதினில் உருவாக்கிக் கொள்ளல் வேண்டும்.  வலமோ இடமோ நோக்காமல் அவ்வழியில் பயணிக்கத் தொடங்க வேண்டும்.  ஐயங்களும் அச்சங்களும் கண்டிப்புடன் களையப்படல் வேண்டும்.  ஏனெனில் அவை முயற்சி என்கிற நேர்க்கோட்டினை சிதைத்து அதனை வளைவான, வீணான, பயனற்றதாக ஆக்கி விடும்.  ஐயமும் அச்சமுமான எண்ணங்களால் எதனையும் சாதிக்க முடியாது.  அவை எப்போதும் தோல்வியை நோக்கியே இட்டுச் செல்லும்.  அவை உட்புகுந்தவுடன் நோக்கம், ஆற்றல், சாதிப்பதற்கான பலம் மற்றும் அனைத்து வலிமையான எண்ணங்களும் நின்று விடும்.

சாதிக்க வேண்டும் என்கிற மனவுறுதி சாதிக்க முடியும் என்கிற ஞானத்தின் மூலமே மேல் எழுகிறது.  ஐயமும் அச்சமும் அந்த ஞானத்தின் பரம எதிரிகள்.  அவற்றை அடிமைபடுத்தாமல் ஊக்குவிக்கின்ற ஒருவன் ஒவ்வொறு அடியிலும் இடையூறுகளை எதிர்கொள்வான்.

ஐயத்தையும் அச்சத்தையும் வெற்றிக் கொண்டவன் தோல்வியை வெற்றிக் கொள்கிறான்.  அவனதும் ஒவ்வொறு எண்ணமும் ஆற்றலோடு ஒன்றிணைந்து இருக்கும்.  எல்லா கஷ்டங்களும் தைரியமாய் எதிர்கொள்ளப்பட்டு விவேகமாய் வெற்றிக் கொள்ளப்படும்.  அவனது குறிகோள்கள் உரிய காலத்தில் பயிரிடப்பட்டு, மலர்ந்து, பருவத்தின் முன் வீழாத கனியைத் தரும்.

குறிக்கோளுடன் அச்சமின்றி ஒன்றிணைக்கப்பட்ட எண்ணமானது ஆக்கச் சக்தியாக மாறுகின்றது.  இதனை அறிந்த ஒருவன் வெறும் நிலையற்ற எண்ணங்களை, அலைபாயும் உணர்ச்சிகளைக் கடந்து உயர்ந்தவனாய், வலிமையானவனாய் ஆகத் தயாராகிறான்.  இதனை செயல்படுத்துகின்ற ஒருவன் தனது மனோ வலிமையை உணர்வுப் பூர்வமாக, புத்திசாலித்தனமாக கையாள்கிறவன் ஆகிறான்.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (21.01.2019)

பெருவினா

இன்றும் நினைவிருக்கிறது
அந்த அகால அதிகாலையின்
அலைபேசி ஒலி
அப்பாவுக்கு  சுகயீனம்
"கொஞ்சம் பொறுத்துக்குங்க அப்பா
தம்பி வந்துகிட்டுருக்கான்
ஹாஸ்பிடல் அழைத்து செல்ல"
பதிலுக்கு சிறு முனங்கல்
தொண்டையில் சிக்கி
தோற்றன வார்த்தைகள்
தொடர்பை துண்டிக்கும் முன்
அதீத உள்ளுணர்வொன்று
அசரீரியாய் உணர்த்தியது
அதுவே அப்பாவுடனான
கடைசி உரையாடலென்று
நினைவறிந்த  நாள் முதலாய்
எம்மை உருவாக்க
தன்னைக் கரைத்த
தருணங்கள் அத்தனையும்
கணப்பொழுதில்
காட்சிப் படமாய் வந்துபோக
"எல்லாத்துக்கும் நன்றிப்பா
ஐ லவ் யூப்பா"
ஆன்மாவின் ஆதியிலிருந்து புறப்பட்டு
உதடுவரை வந்த சொற்களை
உதிரவிடாமல் தடுத்தன
தந்தையிடம் அன்பைச் சொல்ல முடியாத
யுகாந்திரத் தயக்கம்
இன்றும்
தவறவிட்ட தருணத்தின்
தீரா வலியோடு
சேர்ந்தே ஒலிக்குமொரு கேள்வி
அப்பா என்ன சொல்ல நினைத்திருப்பார்?

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (20.01.2019)