திங்கள், 31 மே, 2021

எண்ணிய எண்ணியாங்கு

சிகரங்களை தொட்டவர்களென நாம் சிரம் உயர்த்தி பார்ப்பவர்களில் பெரும்பாலோர் சிறிய தொடக்கம் கொண்டவர்கள் என்கிற உண்மை நமக்கான நம்பிக்கை. ஆப்ரகாம் லிங்கனிலிருந்து அப்துல் கலாம் ஈறாக உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.  'ஒரு சிலரால்  மகத்தான வெற்றிகளை அடைய முடிகிறது என்பதே மற்றவர்களாலும் அது சாத்தியம் என்பதற்கு சான்று' என்கிறார் ஆப்ரகாம் லிங்கன். இலங்கைத் தெருக்களில் நான் வாகனம் ஓட்டத் தொடங்கியதில் ஒரு சுவாரசியப் பின்னணி உண்டு.  1995ம் வருடம். பத்தாண்டு கால வெளிநாட்டு வாசத்திற்குப் பின் நாடு திரும்பியிருந்தேன். நான் வண்டி ஓட்டத் தொடங்கியதே  சீராக கட்டமைக்கப்பட்டிருந்த நான் பணிபுரிந்த அந்த நாட்டின் பெரும்பாதைகளில்.  இலங்கைப் பாதைகளைப் பார்த்து திகைத்து நின்றேன்.  சிறிய இருவழிப் பாதைகளில் விரையும் சிறிதும் பெரிதுமான வாகனங்கள், முச்சக்கர, இருச்சக்கர வண்டிகள், மிதி வண்டிகள், மாட்டு வண்டிகள், நினைத்த இடத்தில் பாதையின் குறுக்கேச் செல்லும் மனிதர்கள் என பெருங்குழப்பமாய் தெரிந்தன நம் வீதிகள். சில நாட்கள் கவனித்துப் பார்த்தபோது நிறைய பெண்கள் எவ்வித தயக்கமுமின்றி லாவகமாய் வண்டி ஓட்டிச் செல்வதை கண்டேன். கொஞ்சம் தைரியம் வந்தது.  இவர்களே ஓட்டும்போது நம்மால் ஏன் முடியாது என்கிற எண்ணம் தோன்றிற்று. ('இவர்களே'வில் தொனிக்கும் அன்றைய ஆண் திமிர் மனநிலையை மறைக்க விரும்பவில்லை.  முதிர்ச்சிப் பாதையில் வெகு தூரம் பயணித்தாயிற்று).   மனதை தைரியப்படுத்திக்கொண்டு ஓட்டத் தொடங்கினேன்.   ஓரிரு நாள் பதற்றத்திற்குப் பின் சகலமும் சரியாயிற்று.  

தினமும் காலை நடைப்பயிற்சியில் பல முதியவர்களைப் பார்க்கிறேன்.  தவறாது தினமும் வந்துவிடுகிறார்கள்.  சோம்பல் தரும் சுகத்தில் இன்று நடைப்பயிற்சியை தவிர்த்துவிடுவோமா என தடுமாறும் தருணங்களில் அவர்களின் நினைப்பே எனக்கும் உந்துசக்தி.   நம்மாலும் முடியும் என்கிற நம்பிக்கையில் பயணத்தின் பாதி தூரத்தை கடந்துவிடலாம்.  நமக்கு ஆதர்சமாகவும், உந்துசக்தியாகவும் பலர் இருக்கிறார்கள்.  தேடல் நிறைந்த கண்களுக்கு அவர்கள் புலப்படுகிறார்கள்.

-சுப்ரமண்ய செல்வா -    #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

YouTube: https://youtube.com/c/SubramanyaSelva


வெள்ளி, 28 மே, 2021

ஒரு பாறையின் கதை

 


பெருங்கற்கள் பல இருந்த ஓரிடத்தில் ஒரு பாறை மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. உளிகளும், சுத்தியல்களும் கொண்டு-வரப்பட்டன. சிற்பி தன் வேலையத் தொடங்கினார். பாறை அடிவாங்கத் தொடங்கியது. அதன் மேனியெங்கும் உளியின் கோரத்தாண்டவம். அதன் பல பகுதிகள் உடைபட்டு விலகிப்போயின. சுற்றியிருந்த மற்ற பாறைகளில் சில வெறுமனே வேடிக்கை பார்த்தன. சில தாங்கள் தப்பித்துவிட்டோமென அக-மகிழ்ந்தன. சில ஏளனப் பார்வை வீசின. சில அதன் வலி, வேதனை கண்டு உள்ளூர மகிழ்ந்தன. சில பரிதாபப்பட்டன. சில பரிதாபப்படுவதுபோல் பகல்வேஷம் போட்டன. நாட்கள் உருண்டோடின. சிதைக்கப்பட்ட பாறை அழகிய சிலையாய் உருவெடுத்தது. கோயிலின் கருவறையில் குடியேறியது. எல்லோரும் கைக்கூப்பி வணங்கும் கடவுளானது. எல்லா பாறைகளுக்கும் சிலையாகும் பேறு கிட்டுவதில்லை.  சிலையான பின்பு அவற்றை உளிகளும், சுத்தியல்களும் நெருங்குவதில்லை.   

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் தடைகளால்,  பிரச்சினைகளால்,  போராட்-டங்களால் நாம் உன்னத உயர்வுக்கு தயார்படுத்தப்படுகின்றோம்.  அவை நாமே அறியாத நமது ஆற்றல்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறன.  அவற்றின் நோக்கம் நம்மை உருக்குலைத்தல் அல்ல உருமாற்றுதல்.  பழைய இரும்பை உருக்குவது புதிய உரு கொடுப்பதற்காக. அசுத்தம் அகன்றபின் தங்கம் மேலும் புடம்போடப்படுவதில்லை.  பல்லாயிரம் ஆண்டுகளின் அழுத்தத்தினாலேயே சாதாரணக் கல்லும் வைரக்கல்லாய் வடிவெடுக்கிறது. நீண்ட தேடுதலுக்கும், தோண்டுதலுக்கும் பின்னேயே தங்கமும், வைரமும் தட்டுப்படுகின்றன. துன்பத்தின் படிப்பினையை கற்றாருக்கு துன்பத்திற்கே துன்பம் கொடுத்திடும் துணிவு பிறந்திடும். 

- சுப்ரமண்ய செல்வா -   #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

YouTube: https://youtube.com/c/SubramanyaSelva


புதன், 26 மே, 2021

கசடறுக்கும் கல்வி


கசடு அறக் கற்கச் சொல்கிறார் வள்ளுவர்.  எது கசடு? எத்தனையோ உண்டு.  அதில் தனது நலம் பற்றி மட்டுமே சிந்திப்பதும் செயல்புரிவதுமே பெரும் கசடு. வணிகமாகிவிட்ட இன்றைய கல்வி அதை ஊக்குவிப்பதில் ஆச்சரியமில்லை.  கற்றுத் தேர்ந்து தொழில் செய்து பணம் சம்பாதிபதையே நோக்கமாகக் கொண்ட இன்றைய கல்வியில் மனித வாழ்க்கை விழுமியங்கள் ஒரு விடுபட்ட  பாடம் ஆகிவிட்டது.  ஆரம்பப் பள்ளி ஓட்டப்பந்தயத்தில் எப்படியாவது முதல் இடத்தை பிடித்து விட வேண்டும் என்று அந்த சின்னஞ்சிறு கால்களுக்கு கற்றுத் தருகிறோம்.   வளர்ந்ததும் அது வாழ்க்கைப் பந்தயத்தில் 'எப்படியாவது'   முதலிடம்  பிடிக்க  ஓடுகிறது.  சக போட்டியாளரை இடறி விழச் செய்வது கூட தவறு இல்லை என்று எண்ணுகிறது.  

சிறுவர்கள் மனவியலாளர் Dr. Haim Ginott தனது Teacher and Child என்ற நூலில் ஹிட்லரின் நாஜி வதை முகாமிலிருந்து உயிர்பிழைத்த ஒரு பள்ளி அதிபர் கல்வியாளர்களுக்கு எழுதிய இந்தக் கடிதம் உள்ளது. 

**********************"

அன்புள்ள ஆசிரியர்களுக்கு, நான் நாஜி சித்திரவதை முகாமிலிருந்து உயிர்பிழைத்தவன்.  வேறு எவரும் காணக்கூடாத காட்சிகளை எனது கண்கள் அங்கு கண்டன.  படித்த பொறியியலாளர்களால் கட்டப்பட்ட நச்சு வாயு அறைகள்; படித்த மருத்துவர்களால் நஞ்சூட்டப்பட்ட சிறுவர்கள்; தாதிகளால் கொல்லப்பட்ட சிசுக்கள்; பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கல்வி கற்ற ஆயுதப்படையினரால் கொல்லப்பட்ட பெண்களும், குழந்தைகளும்.... 

எனவே நான் கல்வியின் மீது மிகுந்த சந்தேகம் கொள்கிறேன்.

எனவே ஆசிரியர்களே! எனது வேண்டுதல் என்னவெனில் உங்கள் மாணவர்கள் நல்ல மனிதர்களாக உருவாக உதவுங்கள்.  உங்கள் உழைப்பு மெத்தப் படித்த அரக்கர்களையும், திறமையான உளநோயாளர்களையும் உருவாக்கக் கூடாது.  எழுத்தும், வாசிப்பும், கணிதமும், சரித்திரமும் மாணவர்களை நல்ல மனிதர்களாக ஆக்கினால் மட்டுமே பயன் மிகுந்ததாக இருக்கும்.

**********************

இந்தக் கடமை ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் உண்டு.   இல்லம்தானே முதல் பள்ளி!

- சுப்ரமண்ய செல்வா -  #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

YouTube: https://youtube.com/c/SubramanyaSelva

செவ்வாய், 25 மே, 2021

இறக்கி வைக்கலாம் இந்தச் சுமையை

ஒரு கதை :

ஒரு நாள் ஒரு ஆரம்ப பள்ளியின் ஆசிரியை தனது மாணவர்களை ஒரு புதிய விளையாட்டுக்கு அழைத்தார்.  ஆவலுடன் வந்த மாணவர்களிடம் சொன்னார்  "நீங்கள் ஒவ்வொருவரும் நாளை வகுப்புக்கு வரும்போது ஒரு  பையில் சில உருளைக்கிழங்குகளை போட்டு கொண்டு வர வேண்டும். ஒவ்வொறு உருளைக்கிழங்கிற்கும் நீங்கள் யார் யாரை வெறுக்கிறீர்களோ அவர்களின் பெயரை இட வேண்டும்."  அடுத்த நாள் எல்லா மாணவரின் கைகளிலும் ஒன்று இரண்டு ஐந்து என பலவித எண்ணிக்கைகளில் உருளைக்கிழங்குகள் அடங்கிய பைகள்.  ஆசிரியை சொன்னார் "ரொம்ப நல்லது.. இனி என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இந்தப் பையை இன்னும் இரண்டு வாரத்திற்கு நீங்கள் எங்கு சென்றாலும் எடுத்துச் செல்ல வேண்டும் (கழிவறை உட்பட)."

ஆசிரியையின் கட்டளையை மாணவர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள்.  நாட்கள் நகர்ந்தன.  உருளைக்கிழங்குகள் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டு துர்மணம் வீசத்தொடங்கின. அதிக உருளைக்கிழங்குகள் வைத்திருந்தவர்கள் அதிக பாரத்தை சுமந்து கஷ்டப்பட்டார்கள்.

ஒருவாறு இரண்டு வாரங்கள் கழிந்தன.  நிம்மதிப் பெருமூச்சோடு வகுப்புக்கு வந்த மாணவர்களிடம் ஆசிரியை அவர்களது அனுபவங்களை கேட்டார்.  எல்லோரும் ஒரே நேரத்தில் பேசத் தொடங்கினார்கள்.  ஒவ்வொருவரும் அழுகிய உருளைக்கிழங்குகள் எவ்வளவு துர்மணம் என்றும் பாரம் சுமப்பது எவ்வளவு கடினமென்றும் புலம்பினார்கள்.

அவர்களை அமைதிப்படுத்திய ஆசிரியை கேட்டார் "துர்மணம் வீசும் உருளைக்கிழங்குகளை இரண்டு வாரம் சுமக்க முடியாத நீங்கள், வெறுப்பு என்கிற துர்மணத்தை, பாரத்தை வாழ்க்கை முழுவதும் உங்கள் இதயங்களில் எப்படி சுமக்கப் போகிறீர்கள்?"

சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் சிந்திக்கத் தூண்டும் கதை இது.

நாம் வெறுப்பவர்களைப் பற்றி நினைக்கும் போதே  நம்மையறியாமல் நம் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது.  இரத்த அழுத்தம் கூடுகிறது.  மூளை சிந்திக்கும் திறனை இழக்கிறது.  நம் வெறுப்பு நம்மால் வெறுக்கப்படுபவர்களை பாதிக்கின்றதோ இல்லையோ, நம் மனதையும் உடலையும் நிச்சயமாக பாதிக்கின்றது.

உண்மைதான், வெறுப்பு என்பது ஒரு துர்மணம் வீசும் பெருஞ்சுமை.  எத்தனை காலத்துக்குத்தான் அதை மூச்சு முட்ட சுமப்பது?  இறக்கி வைத்து விட்டு கொஞ்சம் சுகமாக சுவாசிக்கலாமா?

- சுப்ரமண்ய செல்வா -     #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

YouTube: https://youtube.com/c/SubramanyaSelva


ஞாயிறு, 23 மே, 2021

ஒரு பிரார்த்தனை

அன்பும் கருணையுமே அனைத்து மதங்களின் சாரம். பிறருக்கு துன்பம் தராதிருத்தல் அன்பு. பிறர் துன்பம் போக்குதல் கருணை.  

இது புனித பிரான்சிஸ் அவர்களின் பிரார்த்தனை என்று இணையத்தில் வாசித்தது.  ஆனால் அது அவருடையது என்பதற்கு எவ்வித சான்றும் இல்லை என்கிற கருத்தும் நிலவுகிறது.  அது எதுவாக இருந்தால் என்ன, மனதை இதமாக்குகிற எந்த பிரார்த்தனையும் எல்லோருக்குமானதே.

************************

இறைவா... நினது சமாதானத்தின் கருவியாக எனை ஆக்குவாயாக. 
எங்கு வெறுப்பு நிறைந்திருக்கிறதோ, 
அங்கு நான் அன்பை விதைப்பேனாக. 
எங்கு காயம் நிறைந்திருக்கிறதோ, 
அங்கு நான் மன்னிப்பை விதைப்பேனாக. 
எங்கு முரண்பாடு நிறைந்திருக்கிறதோ, 
அங்கு ஐக்கியத்தை விதைப்பேனாக. 
எங்கு ஐயம் நிறைந்திருக்கிறதோ, 
அங்கு நான் உறுதியை விதைப்பேனாக. 
எங்கு விரக்தி நிறந்திருக்கிறாதோ, 
அங்கு நான் நம்பிக்கையை விதைப்பேனாக. 
எங்கு இருள் நிறைந்திருக்கிறதோ, 
அங்கு நான் ஒளியை விதைப்பேனாக. 
எங்கு துயரம் நிறைந்திருக்கிறதோ, 
அங்கு நான் மகிழ்ச்சியை விதைப்பேனாக.

தெய்வீகத் தந்தையே, 
ஆறுதல் அளிப்பது போல் ஆறுதல் பெறவும் 
புரிந்துகொள்வது போல் புரிந்துகொள்ளப்படவும் 
அன்பு செய்வது போல்  அன்பு செய்யப்படவும் 
எனக்கருள்வாய். 
ஏனெனில் 
கொடுப்பதனாலேயே பெறுகிறோம். 
மன்னிப்பதனாலேயே மன்னிக்கப்படுகிறோம். 
'நான்' என்கிற அந்த சிறுமையின் மரணத்திலேயே 
அழிவற்ற நிரந்தர வாழ்வில் பிறக்கிறோம்.

************************

புனித. ஃபிரான்சிஸ் அவர்களின் பிரார்த்தனை
தமிழாக்கம்: சுப்ரமண்ய செல்வா   

சனி, 22 மே, 2021

யார் நமது முன்னேற்றத்தின் எதிரிகள்?

பிறர் அடையும் வெற்றிகளை, முன்னேற்றங்களை நம்மால் ஏன் அடைய முடியாமல் இருக்கிறது?  பிற மனிதர்களை,  சூழ்நிலைகளை சுட்டிக்காட்ட சுற்றுமுற்றும் பார்க்கிறோம். எப்போதும் தமது நிறைகளுக்கு தாமே காரணம் என்று இருமாப்பு கொள்வதும், குறைகளுக்கு புறக் காரணங்களைத் தேடுவதும் மனித இயல்பு.  பிறந்து வளர்ந்த சூழ்நிலை, ஏழ்மை, கல்வி எமக்கு உதவ, உயர்த்திவிட எவருமில்லை என எண்ணற்ற காரணங்கள்.  ஆனால் நம்மிலும்  குறைந்த  வசதி படைத்தவர்கள், கல்வி கற்றவர்கள், ஏன் உடற்குறை உள்ளவர்கள் கூட  எப்படி வாழ்க்கையில் வெற்றியாளர்களாக வீறுநடை போடுகிறார்கள்?

எனின்  யார் நமது முன்னேற்றத்தின் எதிரிகள்? உண்மையில் நாமே நம் முன்னேற்றத்தின் எதிரிகள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். நம்மைச்சுற்றி நாமே கட்டியெழுப்பியிருக்கும் சௌகரிய வலயத்தின் (comfort zone)  சிறைக்கைதிகள் நாம். அந்தச் சிறை பூட்டப்பட்டிருப்பது உட்புறம். சாவிகளும் நம்மிடமே உண்டு. ஆயினும் திறந்து வெளிவரத் தயக்கம்.  அந்த வலயத்திற்கு வெளியே வாய்ப்புகள் வரிசைக்கட்டி நிற்கின்றன. ஆயினும் நாம் அசௌகரியங்களுக்கு அஞ்சி, இடர்களுக்கு முகங்கொடுக்கும் தைரியமற்று, உள்ளதே போதுமென்று நமக்கு நாமே எல்லை வகுத்துக்கொள்கிறோம்.  வாழ்க்கை தொடங்குவது உங்கள் சௌகரிய வலயத்தின் முடிவில் (Life begins at the end of your comfort zone - Neale Donald Walsch).வெற்றிபெற்ற மனிதரெல்லாம் அந்த வலயத்தை விட்டு வெளியே வந்தவர்கள் என்பது எமக்கான பாடம்.

அடுத்தது மாற்றத்துக்கு முகம்கொடுக்க முடியாத, மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலை.  அதனால்   செய்ததையே திரும்பத் திரும்ப செய்துகொண்டு மாறுபட்ட பலனை எதிர்பார்க்கிறோம்.  ("Insanity is doing the same thing over and over again, but expecting different results." - Albert Einstein).

எப்போதும் எதிரி யாரென்று தெரிந்துகொண்டால் போரை வெல்வது எளிது. நமது எதிரி யார் என்ற தெளிவில் நமது வெற்றியும் எளிதாகும்.  

- சுப்ரமண்ய செல்வா -    #செல்வாசகம்


வெள்ளி, 21 மே, 2021

வேர்களின் வேதம்

கண்ணுக்குத் தெரியாத வேர்களின் தயவில் கண்ணுக்குத் தெரியும் மரங்கள் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றன. இரையைத் தேடி விரையும் விலங்கினைப் போல, மரத்தின் வேர் விரல்கள் நீண்டு நீண்டு சென்று நீரையும் கனிமங்களையும் தேடிக் கண்டுபிடித்து  மரத்திற்கு கடத்துகின்றன. 

செக்கோயா (sequoia)  மரங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கலிபோனியா செம்மரங்கள் என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய மரங்களான இவை 380 அடி உயரமும் 30 அடி சுற்றளவு வரை வளரக்கூடியவை. பல நூற்றாண்டுகள் உயிர் வாழ்பவை.  கலிபோர்னியாவில் உள்ள தேசிய செக்கோயா பூங்காவில் இருக்கும் 2300 முதல் 2700 வருடங்கள் வரை  பழமையானது என கருதப்படும் ஜெனரல்  ஷேர்மன் என்னும் பெயர் கொண்ட செக்கோயா மரம்தான் இன்று உயிர்வாழும் செக்கோயா மரங்களிலேயே மிகவும் பழமையானது. 

அவ்வளவு பெரிய மரங்கள், அத்தனை ஆண்டுகள் உயிர் வாழ வேண்டுமென்றால் செக்கோயா மரங்களின் வேர்கள் வெகு ஆழத்திற்கு சென்றிருக்க வேண்டும் இல்லையா?  ஆனால் அவை அவ்வாறு இல்லை என்பதுதான் பேரதிசயம்.  செக்கோயா மரங்களின் வேர்கள் ஆறு முதல் ஏழு அடி ஆழம் வரை மட்டுமே செல்கின்றன.  ஆனால் அவை 100 அடி வரை பக்கவாட்டில் படர்ந்து பக்கத்தில் இருக்கும் மரங்களின் வேர்களை பற்றிக் கொள்கின்றன.  இவ்வாறு புதிதாக வளரும் சிறு மரம் முதற்கொண்டு ஒவ்வொரு மரமும் தனது பக்கத்தில் இருக்கும் மரத்துடன் கைகோர்த்து முழு  செம்மர வனங்களும் தமது ஒன்றுபட்ட ஆற்றலினால் காலத்தை வென்று கம்பீரமாக நிற்கின்றன. 

இது இயற்கை கற்றுத் தரும் இன்னுமொரு பாடம். 

இரண்டு விரல்களுக்கு இடையே இடைவெளி இருப்பது இன்னொரு கரங்களின் விரல்களைப் பற்றிக்கொள்ள.

ஒன்றுபட்டு எழுந்தால் எந்த உச்சத்தையும் தொடலாம்.  

- சுப்ரமண்ய செல்வா -     #செல்வாசகம்


திங்கள், 17 மே, 2021

அர்ச்சுன மனக்குவியல் (பகுதி: 1)

அர்ச்சுன மனக்குவியல்' (Arjuna Focus) கைவரப்பெற்றால் காரியம் யாவும் கைகூடும்.  அது என்ன 'அர்ச்சுன மனக்குவியல்'?  மகாபாரதக் கதையொன்று.... பாண்டவர், கௌரவர்களின் போர் பயிற்றுவிப்பாளரான துரோணாச்சியார் ஒருமுறை தன்னிடம் பயிற்சிபெறும் இளவரசர்கள் அனைவரையும் அழைத்தார்.  அவர்களது வில்லாண்மையையும், மனக்குவியலையும் சோதிக்கும் முகமாக மரத்திலாலான ஒரு பறவையை கிளையொன்றில் வைத்து அவர்களை வில்லேந்தி  பறவையின் கண்ணை குறிபார்க்கச் சொன்னார்.  குறிபார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொறுவரிடமும் 'என்ன தெரிகிறது' என்று கேட்டார்.

"வானம், மேகம், மலை, மரம், கிளை, இலைகள், பறவை" - ஒருவர் சொன்னார்.

"மலை, மரம், கிளை, இலைகள், பறவை" - இன்னொருவர் சொன்னார்.

"மரம், கிளை, இலைகள், பறவை" - மற்றொருவர் சொன்னார்.

இப்படி ஒவ்வொறுவராக சொல்லி வர, அவர்கள் பதில்களில் திருப்தியுறாத துரோணாச்சியார்  "உங்களில் ஒருவராலும் அந்த பறவையை வீழ்த்த முடியாது" என்று கூறிவிட்டு  இறுதியாக அர்ச்சுனனிடம் கேட்டார்:

"உனக்கு என்ன தெரிகிறது?"

"கருமை குருவே... கருமை மட்டுமே தெரிகிறது"

"வேறு என்ன தெரிகிறது?"

"வேறு எதுவும் தெரியவில்லை, கருமை மட்டுமே தெரிகிறது"

"என்ன கருமை அது?"

"பறவையின் கண்மணியின் கருமை குருவே... எனக்கு வேறெதுவும் தெரியவில்லை"

"அம்பை எய்து"  அடுத்த கணம் அம்பு பறவையின் கண்களை துளைத்தது.

தன்னிகரற்ற வில்லாளியான அர்ச்சுனனின் மனக்குவியல் அத்தகையது.  நமக்கும் அத்தகைய மனக்குவியல் கைவரப்பெற்றால் எல்லாச் செயல்களும் வெற்றிச்சிகரத்தை தொட்டு நிற்கும். அதை அடைவது எப்படி? (தொடரும்...)

- சுப்ரமண்ய செல்வா -    #செல்வாசகம்


சனி, 15 மே, 2021

அழுக்காறு என்னும் அழுக்கு

நம்மிடம் இல்லாத ஒன்று மற்றவரிடம் உள்ளபோது, நம்மால் சாதிக்க முடியாததை மற்றவர் சாதிக்கும்போது அதனை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை அழுக்காறு. 


நேரடியாக சொல்வதானால் பொறாமை.  இதில் விசித்திரம் என்னவென்றால் பில்கேட்ஸின் சொத்து ஒரே நாளில் சில பல பில்லியன் டாலர்களால் உயரும்போதோ, அவர் புதிதாக ஒரு பிரத்தியேக ஜெட் வாங்கும்போதோ  அதையிட்டு நாம் எரிச்சல் அடைவது இல்லை.  ஆனால் பஸ் வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கினால் அழுக்காறு தலைதூக்குகிறது.  

இதிலிருந்து வெளிவரத் தேவை மனநிலையில் மாற்றம்.  பிறரின் உயர்வை ஏற்றுப் போற்ற முடிந்திடின் அதுவே நமக்கு அகத்தூண்டுதலாக (inspiration) மாறி, நம்மாலும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையையும், சாதிக்கத் தேவையான உத்வேகத்தையும் அளிக்கும்.   'ஒருவர் பெருவெற்றியை அடைகிறார் என்பதே மற்றவராலும் அது சாத்தியம் என்பதற்கு சான்று' என்கிறார் ஆப்ரகாம் லிங்கன். பொறாமை என்பது எதிர்மறை உணர்வு (feeling), அகத்தூண்டுதல்  என்பது நேர்மறை (positive) உணர்வு.  நமது எண்ணங்களுக்கும், உணர்வு நிலைகளுக்கும் ஏற்ப உடலினுள் சுரக்கும் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுகிறது என்கிறது நவீன மருத்துவம்.  பொறாமையின்போது நாம் நம் அடிமனதிற்கு சொல்லும் செய்தி 'என்னில் குறையிருக்கிறது, என்னால் முடியாது'. அகத்தூண்டல் மனநிலையில் நாம் சொல்லும் செய்தி 'அவரால் முடிந்ததெனில் என்னாலும் முடியும். முயன்று பார்ப்போம்.' எண்ணங்களே எம்மை உருவாக்குகின்றன.  எதனைப் பயிரிடுகிறோமோ அதனையே அறுவடை செய்கிறோம்.

சிலவேளைகளில் நம்மைவிட குறை-நிலையில் உள்ளவர்கள் நம்மளவுக்கு உயரும்போதும் பொறாமை புகைவிடத் தொடங்குகிறது.  இது எப்போதும் நாம் மற்றவர்களைவிட உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்கின்ற  உயர்மனச் சிக்கலின் வெளிப்பாடு.   இயற்கை பாரபட்சமற்றது; அது அவரவரின் உழைப்புக்கும், முயற்சிக்கும் ஏற்ப வெகுமதியளிக்கிறது. வாழ்க்கை நமக்கு வாரி வழங்கியுள்ள வரங்களை நன்றியுடனும், பணிவுடனும் போற்றினால் அழுக்காறு அற்ற மனநிலை வாய்க்கும்.

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின். (குறள் 162)

விளக்கம்:

யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.

- சுப்ரமண்ய செல்வா -  #செல்வாசகம்


வியாழன், 13 மே, 2021

காணாமல்போன கடிதங்கள்

அன்புள்ள அப்பாவுக்கு... அன்புள்ள அம்மாவுக்கு... அன்புள்ள அண்ணாவுக்கு...


இப்படியாகவும் இன்னும் பலவுமாகவும் கடிதங்களால் நிறைந்திருந்தது நமது பால்ய, பதின்ம, வாலிப காலம்.  (2kக்கு மு‌ந்தைய காலகட்டம்).  அறிவியல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட  வாழ்க்கையின் இன்னுமொரு அற்புத அங்கம் கடிதப் பரிமாற்றம். நான் கடிதம் எழுதத் தொடங்கியது கண்டி அசோகா மாணவர் விடுதியில் இருந்தபோது.   விடுதியில் கடிதம் எழுதுவது எங்களுக்கு கட்டாயமாக்கப் பட்டிருந்தது. 

நான் வெளிநாட்டில் பணிபுரிந்தபோது எனது தந்தை  எழுதிய கடிதங்களையும், பள்ளி விடுதியிலிருந்து எனது மகன் எழுதிய கடிதங்களையும், எங்களுடைய திருமண நிச்சயத்திற்கும் திருமணத்துக்கும் இடைப்பட்ட ஆறு மாத காலத்தில் எனது மனைவி எனக்கு எழுதிய கடிதங்களையும் இன்னும் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.  பழைய கடிதங்களை மீண்டும் வாசிக்கும் பொழுது ஏற்படும் மன உணர்வுகளுக்கு வார்த்தை வடிவம் கொடுக்க முடியாது. 

முன்னைய காலத்தில் கடிதம் எழுதுவது காலத்தின் கட்டாயமாக இருந்தாலும் அது ஒரு கலையாக இருந்தது.  வெள்ளைத்தாள் அல்லது கோடிட்ட தாள் எடுத்து, ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து, எண்ணங்களுக்கு எழுத்துரு கொடுத்து, கவரில் இட்டு, எச்சில் தொட்டு முத்திரை ஒட்டி, எப்போதும் வாய்திறந்து காத்திருக்கும் சிவப்பு தபால் பெட்டியில் போட்டுவிட்டுத் திரும்பும்போது   நம்மில் ஒரு பகுதியும் அந்தக் கடித்ததொடு சென்றிருக்கும்.  சிலவேளைகளில் சில  கண்ணீர்த் துளிகளால் எழுத்துகள் உருக்குலைந்து, பக்கங்கள் பள்ளமாகி பயணிக்கும் கடிதங்களும் உண்டு.   

கடிதங்களின் வரவுக்காக காத்திருக்கும் பொழுதுகளில்  தபால்காரரின் சைக்கிள் மணியோசை செவிகளுக்கு இன்னிசையாகும்.  அவசர அல்லது சுருக்கச் செய்திகளுக்கு தபாலட்டைகளின் தயவு நாடப்படும்.  சுமந்து செல்லும் விடயங்களின் வீரியத்திற்கு ஏற்ப கடிதங்களின் கனதி மாறுபடும். 

வாட்ஸ் அப்பில் வாழ்க்கை நடத்தும் இன்றைய எண்ணியல் வாழ்வில் கடிதங்கள் காலாவதியாகிவிட்டன. வசனங்கள் பிறகு வார்த்தைகளாகி இன்று எழுத்துகளுக்குள் சுருங்கிவிட்டன நமது நலம் விசாரிப்புகளும், எண்ணப் பரிமாற்றங்களும். [GM - Good morning, Tq - Thank you 🙂]
கடிதங்கள் இப்போது நமது பழைய நினைவுகளின் ஒரு பகுதி மாத்திரமே. கடிதங்களைப் பற்றி சிந்திக்கும் பொழுது சில பழைய திரைப்படப் பாடல்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை.

************** நான் எழுதுவது கடிதமல்ல - உள்ளம் அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல - எண்ணம் ************** அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம் - நான் எழுதுவதென்னவென்றால் - உயிர்க் காதலில் ஓர் கவிதை ***************

பெரும்பாலும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் இந்த பெருந்தொற்றுக் காலத்தில் அந்த கைபேசியை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு யாருக்காவது ஒரு கடிதம் எழுதலாமே! 

- சுப்ரமண்ய செல்வா - #செல்வாசகம்

எனது முகநூல்: https://www.facebook.com/SubrmanyaSelva/

எனது வலையொளி: https://youtube.com/c/SubramanyaSelva