அன்புள்ள அப்பாவுக்கு... அன்புள்ள அம்மாவுக்கு... அன்புள்ள அண்ணாவுக்கு...
இப்படியாகவும் இன்னும் பலவுமாகவும் கடிதங்களால் நிறைந்திருந்தது நமது பால்ய, பதின்ம, வாலிப காலம். (2kக்கு முந்தைய காலகட்டம்). அறிவியல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாழ்க்கையின் இன்னுமொரு அற்புத அங்கம் கடிதப் பரிமாற்றம். நான் கடிதம் எழுதத் தொடங்கியது கண்டி அசோகா மாணவர் விடுதியில் இருந்தபோது. விடுதியில் கடிதம் எழுதுவது எங்களுக்கு கட்டாயமாக்கப் பட்டிருந்தது.
நான் வெளிநாட்டில் பணிபுரிந்தபோது எனது தந்தை எழுதிய கடிதங்களையும், பள்ளி விடுதியிலிருந்து எனது மகன் எழுதிய கடிதங்களையும், எங்களுடைய திருமண நிச்சயத்திற்கும் திருமணத்துக்கும் இடைப்பட்ட ஆறு மாத காலத்தில் எனது மனைவி எனக்கு எழுதிய கடிதங்களையும் இன்னும் பாதுகாத்து வைத்திருக்கிறேன். பழைய கடிதங்களை மீண்டும் வாசிக்கும் பொழுது ஏற்படும் மன உணர்வுகளுக்கு வார்த்தை வடிவம் கொடுக்க முடியாது.
முன்னைய காலத்தில் கடிதம் எழுதுவது காலத்தின் கட்டாயமாக இருந்தாலும் அது ஒரு கலையாக இருந்தது. வெள்ளைத்தாள் அல்லது கோடிட்ட தாள் எடுத்து, ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து, எண்ணங்களுக்கு எழுத்துரு கொடுத்து, கவரில் இட்டு, எச்சில் தொட்டு முத்திரை ஒட்டி, எப்போதும் வாய்திறந்து காத்திருக்கும் சிவப்பு தபால் பெட்டியில் போட்டுவிட்டுத் திரும்பும்போது நம்மில் ஒரு பகுதியும் அந்தக் கடித்ததொடு சென்றிருக்கும். சிலவேளைகளில் சில கண்ணீர்த் துளிகளால் எழுத்துகள் உருக்குலைந்து, பக்கங்கள் பள்ளமாகி பயணிக்கும் கடிதங்களும் உண்டு.
கடிதங்களின் வரவுக்காக காத்திருக்கும் பொழுதுகளில் தபால்காரரின் சைக்கிள் மணியோசை செவிகளுக்கு இன்னிசையாகும். அவசர அல்லது சுருக்கச் செய்திகளுக்கு தபாலட்டைகளின் தயவு நாடப்படும். சுமந்து செல்லும் விடயங்களின் வீரியத்திற்கு ஏற்ப கடிதங்களின் கனதி மாறுபடும்.
வாட்ஸ் அப்பில் வாழ்க்கை நடத்தும் இன்றைய எண்ணியல் வாழ்வில் கடிதங்கள் காலாவதியாகிவிட்டன. வசனங்கள் பிறகு வார்த்தைகளாகி இன்று எழுத்துகளுக்குள் சுருங்கிவிட்டன நமது நலம் விசாரிப்புகளும், எண்ணப் பரிமாற்றங்களும். [GM - Good morning, Tq - Thank you 🙂]
கடிதங்கள் இப்போது நமது பழைய நினைவுகளின் ஒரு பகுதி மாத்திரமே.
கடிதங்களைப் பற்றி சிந்திக்கும் பொழுது சில பழைய திரைப்படப் பாடல்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை.
**************
நான் எழுதுவது கடிதமல்ல -
உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல -
எண்ணம்
**************
அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம் - நான்
எழுதுவதென்னவென்றால் - உயிர்க்
காதலில் ஓர் கவிதை
***************
பெரும்பாலும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் இந்த பெருந்தொற்றுக் காலத்தில் அந்த கைபேசியை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு யாருக்காவது ஒரு கடிதம் எழுதலாமே!
- சுப்ரமண்ய செல்வா - #செல்வாசகம்
எனது முகநூல்: https://www.facebook.com/SubrmanyaSelva/
எனது வலையொளி: https://youtube.com/c/SubramanyaSelva
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக