வெள்ளி, 31 மார்ச், 2023

தவறுகள் அவமானங்களா?

எனது நிறுவன பணியாளர்களுடனான  அலுவலக கூட்டங்களில் நான் அடிக்கடி முகம் கொடுக்கும் ஒரு சூழ்நிலை.

எனது எழுத்துகளிலும் பேச்சுகளிலும் எப்போதும் அறிஞர்களின் கூற்றுக்களை மேற்கோள் காட்டுவது வழக்கம்.  கூறுகின்ற கருத்தை வலியுறுத்தி கேட்பவர், வாசிப்பவர் மனங்களில் அவற்றை ஆழப் பதிய வைப்பது அதன் நோக்கம்.

அத்தகைய கூட்டங்களில் நான் கேள்விகள் கேட்பதுண்டு.  உதாரணமாக ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் கூற்று ஒன்றை மேற்கோள் காட்டுவதற்கு முன்பு ஸ்டீவ் ஜாப்ஸ் என்றால் யார் என்று தெரியுமா என்கிற கேள்வி.  அடுத்த சில நொடிகள் அங்கு மயான அமைதி நிலவும்.  அங்கு இருப்பவர்களில் பெரும்பாலோருக்கு  சரியான பதில் தெரிந்திருக்கும்.  ஆனால் கூறத் தயக்கம்.  காரணம் தவறாக கூறி விடுவோமோ, அப்படி தவறாக கூறிவிட்டால் சக பணியாளர்கள் முன் அவமானப்பட்டு விடுவோமோ என்கின்ற அச்சம்.  

இப்படியான சந்தர்ப்பங்களை நம்மில் பலரும் பல சந்தர்ப்பங்களிலும் முகம் கொடுத்திருப்போம்.  இந்த அவசியமற்ற அச்சத்தின் காரணமாக நம் அறிவை, திறமையை வெளிப்படுத்தக்கூடிய  பல சந்தர்ப்பங்களை இழந்திருப்போம்.

இந்த அச்சம் அல்லது தயக்கத்துக்கு காரணம் தவறான பதிலை கூறுதல் அல்லது ஒரு விடயத்தை தவறாக செய்தல் என்பது அவமானத்துக்குரியது என்று சிறு வயது முதல் நம்முள்  ஆழப் பதிந்துள்ள தவறான எண்ணம்.

தவறுகள் அவமானங்கள் அல்ல.  

பலமுறை விழுந்து எழுந்தே நாம் நடக்கப் பழகுகிறோம். 

2774 தடவை தோல்வி அடைந்த பின்பே மின் விளக்குக்கான சரியான வரைபடத்தை அடைந்ததாக தாமஸ் அல்வா எடிசன் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு கண்டுபிடிப்புகளில் அவருடைய தோல்விகளைப் பற்றி அவரிடம் கேட்டபோது அவர் கூறிய பதில்:

"நான் பத்தாயிரம் முறை தோல்வியடையவில்லை.  சரியாக வேலை செய்யாத பத்தாயிரம் வழிகளை நான் வெற்றிகரமாக கற்றுக் கொண்டேன்."

தவறுகளே நமக்கு சரியானவற்றை கற்றுத் தரும் சிறந்த ஆசான்கள்.  எதுவும் செய்யாமல் இருப்பதை விட தவறாக ஒன்றை செய்வது சாலச் சிறந்தது.

பொதுவாக தனிமையில் செய்யும் தவறுகளையிட்டு நாம் அவமானப்படுவதில்லை.  ஆனால் அதே தவறை பிறர் முன் செய்யும்போது, அதனை நாம் அவமானமாக கருதுகிறோம்.  காரணம் நாம் குறைவாக மதிப்பிடப்படுவோம் என்கின்ற அச்சம்.  ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் எப்போதும் நம்மை நாம் சரியானவராக, பிழையற்றவராக காட்டிக் கொள்ள வேண்டும் என்கின்ற எமது ஈகோவின் உந்துதல் அது என்பது புரியும்.

இந்த மனநிலையிலிருந்து வெளி வந்தால் மாத்திரமே நம்மில் நேர்மறை மாற்றமும், வளர்ச்சியும் சாத்தியமாகும்.

எப்படி வெளிவருவது?

இந்த உலகில் எவரும் குறையற்றவர்களாக, முழுமையானவர்களாக இல்லை  என்கின்ற பேருண்மையை முழுமையாக உணர்ந்து கொள்வது.  நாமும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்பதை உணர்ந்து பிறர் முன் நாம் செய்யக்கூடிய தவறுகளையிட்டு நாம் படக்கூடிய அவமானத்தை காற்றில் கரைய விடுவது.

அடுத்த முறை அச்சமின்றி சொல்லலாம் ஒரு பிழையான பதிலை.  தயங்காமல் செய்யலாம் ஒரு தவறை. பல சந்தர்ப்பங்களில் நாம் நினைப்பது போல் அவை தவறாகவே இருக்காது என்பதுதான் ஆச்சரியமிகு உண்மை.

--------------------------
இந்த நாளும் இனிய நாளாகட்டும்!
என்றும் அன்புடன்
சுப்ரமண்ய செல்வா
(31.03.2023)

வியாழன், 30 மார்ச், 2023

கேள்விகளின் மகத்துவம்

 வளர்ச்சியை வசப்படுத்துவது எப்படி என்று நேற்று சிந்தித்தோம்.

ஆவல் மிக்க மனது தேடல் மிக்க மனிதர்களை உருவாக்குகிறது.  தேடலின் மூலம் வளர்ச்சி வசமாகிறது.

ஆர்வம் மிக்க மனதுக்கு அடிப்படையாய் இருப்பது கேள்விகள். கேள்விகளே ஆவலைத் தூண்டுகின்றன.  கேள்விகளே வளர்ச்சி பயணத்தின் கலங்கரை விளக்கங்கள்.

கற்கால மனிதனை தற்கால மனித நிலைக்கு உயர்த்தியிருப்பது கேள்விகளே.   காடு அதுவாக பற்றியெரிந்த பின் கிடைக்கும் விலங்குகளின் மாமிசம் சுவையாக இருக்கிறதே,  நெருப்பை எப்படி உருவாக்குவது? மீனைப் போல் நீந்தி வெகு தூரம் நீரில் நம்மால் ஏன் பயணிக்க முடியாது? ‌ பறவையைப் போல் எம்மால் ஏன் பறக்க முடியாது?  பகலைப் போல் இரவிலும் வீட்டுக்குள் எப்படி வெளிச்சத்தை கொண்டு வருவது? பல நூறு மைல்களை களைப்பின்றி எப்படி கடப்பது?  இப்படியாக அனைத்து அறிவியல் வளர்ச்சிக்கும் அடிப்படை காரணமாக இருப்பது ஏன்? எப்படி? என்னும் கேள்விகள்.

கிரேக்க மெய்யியலாளர் சாக்ரடீஸ் அவர்களின் கூற்று ஒன்று:

'ஆய்வுக்கு உட்படுத்தப்படாத (நமக்கு நாமே கேள்விகள் கேட்டுக்கொள்ளாத) வாழ்க்கை வாழத் தகுதியற்ற வாழ்க்கை'

கேள்விகள் கேட்பதன் மூலம் மாணவர்களின் அறிவுத்திறனை அதிகரிக்கலாம் என்று அறிந்து அதனை தனது கற்பித்தல் முறையாக நடைமுறைப்படுத்தியவர் பேராசான் சாக்ரடீஸ்.  அது இன்றும் 'Socratic Questioning' என்று அறியப்படுகிறது.

கேள்விகள் மனித வளர்ச்சியின் இன்றியமையாத அங்கம்.  அவை நம்மையும், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தையும் நன்கு புரிந்து கொள்ள வெகுவாக உதவுகின்றன. நாம் எதிர்கொள்ளும் தடைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக முன்னேற அவை நமக்கு கைகொடுக்கின்றன.

நாம் கேட்கும் கேள்விகளே நமது வளர்ச்சியையும், நமது உயர்வையும் தீர்மானிக்கின்றன.  

பிரெஞ்சு அறிவொளி இயக்க எழுத்தாளர் வோல்டயர் அவர்களின் கூற்று ஒன்று:

'ஒரு மனிதரை அவரது பதில்களை காட்டிலும் அவருடைய கேள்விகளைக் கொண்டு மதிப்பிடுங்கள்'

நாம் கேட்கும் கேள்விகள் நமது ஆர்வத்தையும் புதியவற்றை,  கற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற திறந்த மனதையும், வளர வேண்டும் என்கின்ற விருப்பத்தையும் வெளிப்படுத்துகின்றன.   

நாம் முகம் கொடுக்கும் மனிதர்களை, சூழ்நிலைகளை,  அறிந்து கொள்ளும் புதிய விடயங்களை அவற்றின் முக மதிப்பைக் கொண்டு ஏற்றுக் கொள்ளாமல், கேள்வி கேட்பதை நமது தன்னியல்பாக மாற்றிக் கொண்டால் வளர்ச்சி நிச்சயம்.

--------------------------
இந்த நாளும் இனிய நாளாகட்டும்!
என்றும் அன்புடன் / சுப்ரமண்ய செல்வா
(30.03.2023)

புதன், 29 மார்ச், 2023

வளர்ச்சியை வசப்படுத்திக் கொள்வது எப்படி?

 அக வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவை அவாமிக்க, ஆர்வம் மிக்க  துருவித் தேடி அறிந்து கொள்ள வேண்டும் என்கின்ற உந்துதல் மிக்க மனம். (An inquisitive mind).

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் கூற்று ஒன்று:

'என்னிடம் சிறப்பான திறமைகள் எதுவும் இல்லை. என்னிடம் இருப்பது பேரார்வம் மட்டுமே.'

அந்தப் பேரார்வம்தான் அவரை  இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அறிவியலாளராக, இயற்பியலாளராக மாற்றியது.  

ஆர்வம் மிக்க மனம் நம்மை தேடல் மிக்க மனிதர்களாக மாற்றுகிறது.  கேள்விப்படும் அனைத்தைப் பற்றியும் தேடி அறிந்து விரிவான அறிவைப் பெறும் உந்துதலை தருகிறது.

 அப்படி பெறுகின்ற அறிவின் மூலம்  நாம் அனுதினமும் வளர்கின்றோம்.  அத்தகைய வளர்ச்சி நமக்கு அளப்பரிய மனநிறைவைத் தருகிறது.

அறிவுத் தேடலில் வாசிப்பு மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. பள்ளிகள், கல்லூரிகளுடன் நின்றுவிட்ட கற்றலை வாசிப்பின் மூலமே தொடர முடியும்.

அறிவின் வளர்ச்சியில் கற்றது கைமண்ணளவு என்கின்ற பேருண்மை புரிகிறது.  

மேற்கத்திய தத்துவ மரபின் தந்தை எனக் குறிப்பிடப்படும் சாக்ரடீஸ் அவர்களின் கூற்று ஒன்று:

'எனக்குத் தெரிந்ததெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது என்பதே.'

எனவே தேடல் தொடர்கிறது. வளர்ச்சி வசப்படுகிறது.

இந்த இடையராத வளர்ச்சியின் மூலம் பெற்ற அறிவு, அவற்றை சக மனிதர்களுடன் பகிர்ந்து அவர்களையும் உயர்த்த வேண்டும் என்கின்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அந்த எண்ணத்தின் வெளிப்பாடுதான் எழுத்தாக, பேச்சாக இன்னும் பிற கலைகளாக, இலக்கியங்களாக வடிவெடுக்கிறது.

சாக்ரடீஸுக்கும் முந்தைய  கிரேக்க மெய்யியலாளர் ஹெராக்ளிட்டஸ் அவர்களின் அற்புதமான கூற்று ஒன்று:

'எந்த மனிதனும் ஒரே நதியில் இரண்டு முறை அடியெடுத்து வைப்பதில்லை, ஏனென்றால் அது ஒரே நதி அல்ல, அவன் ஒரே மனிதனும் அல்ல.'

உதாரணமாக இந்தப் பதிவை வாசிக்கத் தொடங்கும் முன் இருந்த நீங்களும் வாசித்த பிறகு இருக்கும் நீங்களும் ஒருவர் அல்லர்.

மனிதரின் அக வளர்ச்சி அத்தகைய நுண்ணிய பொழுதுகளில் நடந்து கொண்டிருக்கிறது.

ஆர்வம் மிக்கவர்களாக, தேடல் மிக்கவர்களாக  இருந்தால் அந்த வளர்ச்சி நம் அனைவருக்கும் சாத்தியம் என்பது மாற்ற முடியாத உண்மை.

--------------------------
இந்த நாளும் இனிய நாளாகட்டும்!
என்றும் அன்புடன் / சுப்ரமண்ய செல்வா
(29.03.2023)

செவ்வாய், 28 மார்ச், 2023

வளரக் கூடாதா?

 மாற்றத்தைப் பற்றி நேற்று எழுதியிருந்தேன்.  மாற்றத்தை போலவே வளர்ச்சியையும் நிலையானதாக ஆக்கிக் கொண்டால் (When growth becomes constant) மனிதர் வாழ்வு மதிப்பு மிக்கதாக, அர்த்தமுள்ளதாக மாறும்.

மரம் செடி கொடிகள் என அனைத்தும் வளருகின்றன.  மனிதர்கள் வளராமல் இருந்தால் எப்படி?  ஆனால் அவற்றுக்கும் எமக்குமடையே வளர்ச்சியில் வேறுபாடு இருக்கிறது.  தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும்  வளர்ச்சி புறமட்டத்தில் மாத்திரமே சாத்தியம்.

புறமட்டத்தில் மாத்திரமன்றி அகமட்டத்திலும் வளரக்கூடிய வாய்ப்பு ஆற்றலும் மனிதருக்கு மட்டுமே கிட்டியிருக்கும் பெரும் பேறு.  அந்த அக வளர்ச்சியே அல்லது அந்த அக மாற்றமே ஒரு மனிதரை மற்றவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

நாம் எப்போதும் பிறரை முந்தும் போட்டியிலேயே காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் நாம் முந்த வேண்டியது பிறரை அல்ல நம்மை.

கடந்த வருடத்தை, விட கடந்த மாதத்தை விட, கடந்த வாரத்தை விட, நேற்றை விட, ஏன் கடந்த நிமிடத்தை விட இந்த கணத்தில் நாம் எப்படி வளர்ந்து இருக்கிறோம் என்பதிலேயே எமது வாழ்க்கையின் அர்த்தம் தங்கியிருக்கிறது.  

ஒவ்வொரு நாளின் முடிவிலும் இன்று நாம் எதை சாதித்தோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.  அந்த சாதனை மிகச்சிறியதாகக் கூட இருக்கலாம்.  நம்மில் ஏற்பட்டுள்ள மாற்றம் அல்லது வளர்ச்சி அளவில் சிறியதாக இருக்கலாம். ஆனால் வளர்ச்சி ஏதாவது ஒரு வகையில் இருந்தேயாக வேண்டும்.

ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் கூற்று ஒன்று:

"நிறைய பணம் சம்பாதித்து பெரும் செல்வந்தனாக கல்லறைக்கு செல்வதை விட ஒவ்வொரு நாளும் 'இன்று மகத்தான ஒன்றை சாதித்தோம்' என்ற மனநிறையுடன் இரவு உறங்கச் செல்வதுயே நான் விரும்புகிறேன்"

தண்ணீர் தேங்கி இருக்கும் ஏரியை விட ஓடும் நதிக்கே உயிர்ப்பு அதிகம். 

அதுபோல் தொடர்ந்து வளரும் மனிதரின் வாழ்வே உயிர்ப்பு மிக்கதாக, ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சி மிக்கதாக இருக்கும்.

அந்த வளர்ச்சியை எப்படி வசப்படுத்திக் கொள்வது?

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

--------------------------

இந்த நாளும் இனிய நாளாகட்டும்!
என்றும் அன்புடன் / சுப்ரமண்ய செல்வா
(28.03.2023)

திங்கள், 27 மார்ச், 2023

கொடுக்கலாம் இன்னும் ஒரு வாய்ப்பு

 "மாற்றம் ஒன்றே வாழ்க்கையில் நிலையானது" (Only change is constant in life) - ஈராயிரத்து ஐந்நூறு  வருடங்களுக்கு முன்பு கிரேக்க தத்துவஞானி ஹெறக்லிடஸ் மொழிந்த மகத்தான உண்மை இது.  

உயிருள்ள, உயிரற்ற அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கின்றன. மனிதர்களும் மாறுகிறார்கள். காலம் மனிதருள் ஏற்படுத்தும் மாற்றம் மகத்தானது.  கடக்கும் ஒவ்வொரு கணமும் மனிதர்கள் முகம் கொடுக்கும் அனுபவங்கள், அவர்களுடைய எண்ணங்களில், நம்பிக்கைகளில், ஆளுமையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே கடந்து செல்கிறது.

ஆனால் அந்த மாற்றம் ஓர் இரவில் நடப்பதில்லை.  அது மிக மிக மெதுவான பயணம்.

 வாழ்வின் அனுபவங்கள் மனிதர்களை முதிர்ச்சி மிக்க புதிய மனிதர்களாக மாற்றுகிறது.  அந்த முதிர்ச்சி அவர்களை வாழ்க்கையை, மனிதர்களை, சூழ்நிலைகளை புதிய கண்கொண்டு பார்க்கும் வல்லமையை கொடுக்கிறது.  பிறரை அன்புடன், அனுதாபத்துடன், கருணையுடன், அவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு அணுகும் ஆற்றலை அவர்கள் பெறுகிறார்கள்.  ஒவ்வொருவருக்கும் இருக்கக்கூடிய தனிப்பட்ட உணர்வுகளை, அவர்களுடைய போராட்டங்களை புரிந்து கொள்ள முயல்கிறார்கள்.

தங்களுடைய கடந்த காலத்தைப் பற்றி எண்ணிப் பார்க்கிறார்கள்.  அதில் விட்ட தவறுகளுக்காக வருந்துகிறார்கள்.  அவற்றுக்காக பரிகாரம் செய்ய முயல்கிறார்கள். தங்களுக்குள் ஏற்பட்டுள்ள நேர்மறை மாற்றத்தை வெளிப்படுத்த வாய்ப்பு தேடுகிறார்கள்.

எனவே ஒருவர் என்றோ சொன்ன ஒரு சொல்லுக்காக, செய்த ஒரு செயலுக்காக இன்றும் அவர்களை வெறுப்பது சரியா என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். 

ஒருவருடைய கடந்த கால தவறுகளை  வைத்து அவரை மதிப்பீடு செய்யாமல்  அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுப்பது அவசியமாகிறது. மனதால் மாற்றம் பெற்ற ஒவ்வொரு மனிதரும் அந்த வாய்ப்புக்கு தகுதியானவர்கள். காலம் எல்லா காயங்களையும் ஆற்றும். பிரெஞ்சு கவிஞர் ஜீன் டி லா ஃபொன்டைனே கூறியது போல் "காலத்தின் சிறகுகளில் சோகங்கள் பறந்து போகும்".  அந்த வாய்ப்பை தர காலம் இன்னும் கடந்து விடவில்லை என்பதை கருத்தில் கொள்வோம்.

தயக்கத் தடையை கடந்து, அப்படி நாம் கொடுக்கும் ஒரு வாய்ப்பின் மூலம், பட்ட மரம் மீண்டும் துளிர்ப்பது போல், பிரிந்த ஒரு உறவு மீண்டும் இணைந்து, வாழ்க்கையை மேலும்  மகிழ்ச்சி மிக்கதாக, கொண்டாட்டம் மிக்கதாக மாற்ற முடியும் என்பதை மனதில் கொள்வோம்.

--------------------------
இந்த நாளும் இனிய நாளாகட்டும்!
என்றும் அன்புடன் / சுப்ரமண்ய செல்வா
(27.03.2023)