- சுப்ரமண்ய செல்வா -
எல்லோருக்குமானது இந்த உலகு.
எல்லோருக்கும்
உண்டு இங்கு தமக்கென ஓர் இடம்.
அந்த இடத்தை மலர்வனமாக மாற்றி மகிழ்ந்திருக்கலாம்.
அல்லது பாலைவனமாக்கி பரிதவிக்கலாம்.
இந்த இரண்டு தேர்வுகளும் இருப்பது அவரவர் கைகளில்.
தமது சொந்த நிலங்களை நந்தவனமாக்கும் வாய்ப்பும், ஆற்றலும் மனிதருக்கு உண்டு.
ஆயினும் இங்கு சோலைகளைவிட பாலைகளே அதிகம். தன் வாழ்வை சோலையாக்கி சுகம் காண வேண்டிய மனிதன், வாய்ப்புகளைத் தவறவிட்டு, வழி தவறி, நெறி தவறி, தனது வாழ்வை தொலைத்துவிட்டு தவிப்பதைப் பார்க்கிறோம்.
மனிதன் உயிரினங்களின் உச்சம்.
நீண்ட நெடிய பரிணாமப் பயணத்தின் நிறைவு.
ஓரறிவில் இருந்து உயர்ந்து ஆறறிவாய் மலர்ந்திருக்கும் மகா அற்புதம். கோடானு கோடி ஆண்டு தவத்தின் பயனாய் இயற்கை பெற்ற வரம்.
‘மனிதன் என்பதன் அர்த்தம் மனது இதமானவன்’ என்கிறார் மகான் வேதாத்திரி மகரிஷி.
இதமானதாகவா இருக்கிறது இங்கு எல்லோர் மனங்களும்?
சக மனிதனின் சங்கடத்தில் சுகம் காணும் மனங்கள்.
தன்முனைப்பு தலைக்கேறி ‘தான்’, ‘தனது’ எனும் மமதையில் மற்றோரை துச்சமாய் மதிக்கும் மனப்பாங்கு.
இல்லாதான் நிலை கண்டு இரங்கா மனங்கள்.
‘ஈதல்
இசைபட வாழ்தல்’ என்றார் வள்ளுவப் பெருந்தகை.
இங்கு ஈதலும் இல்லை.
அதனால் இசைபட வாழ்தலும் இல்லை.
‘தக்கன பிழைத்து வாழ்தல்’ எனும் டார்வின்னின் பரிணாமக் கோட்பாடு மனித வாழ்வின் சகல பரிமாணங்களிலும் பரவி வியாபித்திருக்கிறது.
இங்கு பலசாலியே பிழைத்திருப்பான்.
பணம், கல்வி, அதிகாரம் என ஏதோ ஒரு பலத்தை பெறுவதற்கும், அதனை தக்க வைப்பதற்குமான ஓட்டப் போட்டி இங்கு இடையறாது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கணம் தாமதித்தாலும் காணாமல் போய் விடுவோம் எனும் அச்சத்தில் காலடியில் மிதிபடுபவனைப் பற்றி கவலைப்பட நேரம் ஏது? இயந்திர வாழ்க்கை இதயங்களையும் இரும்பாக்கி விட்டது.
பணம், பொருள், அதிகாரம் எதுவாயினும், இலக்குகளே முக்கியம் இங்கு.
எப்படி அவை அடையப்படுகின்றன என்பது பற்றி எவருக்கும் கவலை இல்லை.
அடைந்த இலக்குகள் கடந்த வழிகளை நியாயப்படுத்துகின்றன.
நெறி தவறி செல்வம் சேர்த்த பணக்காரன் முன் பவ்வியமாக பணிவதும், அட்டூழியம் செய்து அதிகாரம் பெற்றவன் முன் அடிபணிவதும் எவ்வித கூச்சமும் இன்றி இயல்பாய் நடக்கிறது. வணிகத்திலும், அரசியலிலும் பொய்யும், கையூட்டும், ஊழலும் பொது விதியென போதிக்கப்படுகிறது. பொது வாழ்வில் தூய்மையென்பது வெறும் கற்பனாவாதமாகவே காட்சிப்படுத்தப்படுகின்றது.
அதர்மங்கள் அங்கீகரிக்கப்பட்ட இவ்வாழ்கை முறையில் பலியானவை உண்மையும், நீதியும், நேர்மையும், நியாயமுமே.
உண்மையையே உரைப்பவன், நீதி
நெறி வழுவாதவன், நேர்மையாளன், நியாயத்திற்கு கட்டுப்பட்டவன் இங்கு பிழைக்கத் தெரியாதவனாக பரிகசிக்கப்படுகிறான்.
இளம் சந்ததியினருக்கு இச்சமிஞ்சை மிக ஆபத்தானது.
இன்றைய வேக உலக இளைஞன் எதையும் வேகமாக அடைய விளைகிறான்.
விதிகளும், வழிகளும் அவனுக்கு ஒரு பொருட்டல்ல.
மாறாதா இந்நிலை?
மாற்றவே முடியாதா?
மனிதகுலம் இன்று சென்று கொண்டிருக்கும் இந்த இருண்ட பாதை திரும்ப முடியாத ஒருவழிச் சாலையா?
நிச்சயம் இல்லை.
மாறாது இருப்பது மாற்றம் ஒன்றுதானே.
கற்காலத்திலிருந்து
தற்காலம் வரை மாற்றம் பல கண்ட மனித குலத்திற்கு இது ஒன்றும் மகத்தான காரியமல்ல.
இப்போது நடப்பது பாதை மாறிய பயணம்.
சரியான பாதை மறந்த பயணம்.
தேவை எல்லாம் சரியான பாதையை நினைவூட்டலும், வழி காட்டலுமே.
என்னதான் வேண்டும் இந்த மனிதனுக்கு?
ஏனிந்த இடையறாத ஓட்டம்?
பணம், பதவி, புகழ் இவற்றில் ஒன்றோ பலவோ, தனக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போய் விடுமோ? அல்லது இருப்பதை இழந்து விடுவோமோ? என்கிற அச்சம்.
சதா இந்த அச்சம் உந்தித் தள்ள, விடாமல் தொடர்கிறது ஓட்டம்.
ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால், ஓட்டத்தின் நோக்கம் பலவாயினும், எல்லா நோக்கங்களின் நோக்கமும் நிம்மதி அல்லது அமைதியே.
சரி, ஓட்டமின்றி இந்த அமைதியை அடைதல் சாத்தியமா?
நிச்சயம் சாத்தியமே.
இப்போதைய தேவை உண்மையான
பகுத்தறிவு. அது என்ன உண்மையான பகுத்தறிவு?
அது ஏற்கனவே எல்லா மனிதருக்கும் உள்ளதுதானே! அது ஒன்றுதானே மனிதனை மற்ற உயிரின்ங்களிலிருந்து
வேறுபடுத்திக் காட்டுவது.
இது வேறுவிதமான பகுத்தறிவு. விரிந்த மன நிலையில் அனைத்தையும்
பகுத்துப் பார்க்கும் அறிவு.
அனைத்துப் பொருட்களையும் பகுத்துச் சென்றால் இறுதியில் மிஞ்சுவது அணு அல்லவா.
அணு என்கிற தன்மையிலே பொருட்களுக்குள் வேறுபாடு ஏது?
மனித உடலும் அணுக்களின் கூட்டுதானே. எனின், அணுவாய் நோக்கும்போது சேதன மனிதனும், அசேதனப் பொருட்களும் வேறில்லையே.
ஓரறிவு முதல் ஆறறிவு ஈராக, அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் ஆதாரமான ஆற்றல் உயிர்.
அது பேதமில்லாதது.
உயிர் என்ற நிலையிலே, மனிதன் உட்பட, உயிர்களுக்குள் வேறுபாடு ஏது?
அந்நிலையில் நானும் நான்கு கால் பிராணியும் ஒன்றான போது, நானும் நீயும் எப்படி வேறாவோம்?
அதுபோல் உள்ளுறையும் ஆன்மாவானது அனைத்து மனிதருக்கும் ஒன்றே.
அதற்கு சாதியில்லை, மதம் இல்லை, மொழியில்லை, தேசம் இல்லை.
ஆன்ம உலகில் அனைவரும் உறவினரே.
நான் வேறு எனது கை வேறு அல்ல.
எனது கை என்னிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத ஓர் அங்கம்.
எனது கையும் சேர்ந்ததுதான் நான்.
அதுபோல் ஆன்மா எனும் நிலையில் என்னிலிருந்து பிரிக்க முடியாத, என்னில் ஓர் அங்கம் நீ.
நீயும் சேர்ந்ததுதான் நான்.
உனது வலியும், துயரமும், எனது வலி, எனது துயரம். உனது மகிழ்ச்சி, எனது மகிழ்ச்சி, உனது வெற்றி, எனது வெற்றி.
உன்னை வருத்துவது, என்னை வருத்துவது அல்லவா?
இந்த உண்மையை மனித குலம் உணர்ந்தால், தறிகெட்டு ஓடும் அதன் ஓட்டம் நிற்கும்.
அன்பும் கருணையும் பொங்கிப் பெருகும்.
தன்னைப் போல் பிறரையும் நேசித்து, சக மனிதரின் இன்ப துன்பங்களில் பங்கேற்று, எல்லோரும் இன்புற்றிருக்கும் நிலை உருவாகும்.
அமைதி அனைவரையும் அரவணைக்கும்.
தனி மனித அமைதி, உலக அமைதியாக உருவெடுக்கும்.
இதனை எல்லோராலும் சாதிக்க முடியுமா?
நிச்சயம் முடியும்.
தேவை மனமாற்றம் ஒன்றே.
காந்தி அடிகள் சொன்னதுபோல் நாம் உலகில் காண விரும்பும் மாற்றம் நம்மிலிருந்தே தொடங்கட்டும். மண்ணில் நிச்சயம் நல்ல வண்ணம் வாழலாம்.
நன்றி: சுகவாழ்வு