ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

ஒருமை

நீ சுவாசித்த காற்று
என்னுள் நுழைந்து வெளியேறுகிறது

யாரோ என்றோ கழித்த சிறுநீர்
கடலில் கலந்து மழையாகி
என் வீட்டுக் குழாயில் கொட்டுகிறது

கடலிலிருந்தே பூமி பிறந்தது எனில்
நாம் பெயர் பல சூட்டிடினும்
உலகை சூழ்ந்த கடல் ஒன்று

கோடு வரைந்து பிரித்திடினும்
மண் ஒன்று

உனக்கும் எனக்கும் ஒரே சூரியன்
பிரித்து பொழிவதில்லை மழை

ஆயினும் இங்கு
நீ வேறு நான் வேறு
இனம்  மொழி மதம் சாதி

எனினும் நண்பா
எங்கோ வெடித்த குண்டு
எங்கோ பாய்ந்த பெருவெள்ளம்
எங்கோ வீழ்ந்த விமானம்
எங்கோ வீசிய புயல்
எங்கோ நடுங்கிய பூமி
என்னையும் உன்னையும் ஏன்
இப்படி கலங்கடிக்கிறது?

உன்னையும் என்னையும் இணைக்கும்
கண்ணுக்குத் தெரியாத
மனிதத்தின் அலரலில்
மானுட மனசாட்சி
விழித்துக் கொண்ட ஒரு நாளில்
இந்த பூமி
அமைதிப் பூச்சொரிந்து
ஆசீர்வதிக்கப்படும்.

==சுப்ரமண்ய செல்வா ==

கருத்துகள் இல்லை: