நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேச தொடங்குவோம். நாம் ஒரு சில வார்த்தைகளே பேசி இருக்கக் கூடிய நிலையில், கேட்டுக் கொண்டிருப்பவர் இடைமறித்து பேசத் தொடங்குவார். நாம் இதனைத்தான் சொல்ல வருகிறோம் என்று அவராகவே அனுமானித்து அவ்விடயம் பற்றிய அவரது கருத்துகளை விலாவாரியாக பேசி முடிப்பார். நாம் சொல்ல வந்ததை சொல்ல மறந்து அல்லது அதற்கு கால அவகாசம் இன்றி அந்த உரையாடல் நிறைவு பெறும். பெரும்பாலும் அவரது அனுமானம் நமது நோக்கத்திற்கு முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.
இது நம் எல்லோருக்கும் பரிச்சயமான ஒரு அனுபவம். பல வேளைகளில் நாமே அந்த கேட்பவராக இருந்திருப்போம்.
இதற்குக் முதற்காரணம் ஒருவர் பேசத் தொடங்கியதுமே அவர் கூற வருவது இதுவாகத்தான் இருக்கும் என்கிற நமது முன்முடிவு. அடுத்தது தான் அனுமானித்த அந்த விடயம்பற்றி கேட்பவர் தனது பாண்டியத்தை பறைசாற்றுகிற ஆவல். இது அவரின் தன்முனைப்போடு சம்பந்தப்பட்டது. மிகமுக்கிய காரணம் என்னவெனில் செவிமடுக்கும் பொறுமை இல்லாதிருப்பது. இப்போதெல்லாம் மருத்துவர்களுக்கு கூட தமது நோயாளிகள் கூறுவதை முழுமையாக கேட்கின்ற பொறுமை இருப்பதில்லை.
'பெரும்பாலான மனிதர்கள் புரிந்துகொள்வதற்காக அன்றி பதில் சொல்வதற்காகவே செவிமடுக்கிறார்கள்' என்கிறார் 'அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்' என்னும் உலகப் புகழ்பெற்ற சுயமுன்னேற்ற நூலின் ஆசிரியரும், கல்வியாளருமான ஸ்டீஃபன் ஆர். காவி.
செவிமடுத்தல் என்பது ஒரு அற்புத கலை. மனித இருப்பில் செவிகளின் பங்கு அளப்பரியது. அதனால் தான் வள்ளுவர் கூட
'செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை' என்கிறார்.
'கேட்ட'லுக்கும் 'செவிபடுத்த'லுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. கேட்டல் என்பது உடல் திறன். செவிமடுத்தல் என்பது செயல் திறன். கேட்டல் குறைபாடு உள்ளவர்களைத் தவிர மற்ற எல்லா மனிதர்களுக்கும், ஏன் விலங்குகளுக்கும்கூட, கேட்கும் உடல் திறன் இயற்கையாகவே அமைந்துவிடுகிறது. நாம் செவிமடுக்காவிட்டாலும் ஒவ்வொறு கணமும் எத்தனையோ வித ஒலிகள் நமது செவிகளில் விழுந்தவண்ணமே இருக்கின்றன.
ஆனால் செவிமடுத்தல் என்பது பயிற்சியினாலும், பொறுமையினாலும் வரக்கூடிய ஒரு திறமை.
உரையாடல் என்பது இருவழிப் பாதையாக இருக்கும்போது மட்டும்தான் அதில் ஈடுபட்ட அனைவருக்கும் அது பயன்மிக்கதாயும், நிறைவுள்ளதாயும் அமையும். அர்த்தமிக்க உரையாடலுக்கு ஆழ்ந்த செவிமடுத்தல் அவசியமாகிறது.
ஆங்கிலத்தில் 'ரீடிங்க் பிட்வீன் லைன்ஸ்' (reading between lines) எனச் சொல்வார்கள். பல வேளைகளில் ஒருவர் பேசும்போது பயன்படுத்தும் வார்தைகளின் மேலோட்டமான அர்த்தங்களைத் தாண்டி வேறு உள் அர்த்தங்கள் இருப்பதுண்டு. செவிமடுக்கும்போதுதான் பேசுபவர் சொல்வதை மட்டுமல்ல சொல்லாததையும் புரிந்துகொள்ள முடியும்.
'நமக்கு இரண்டு காதுகளும் ஒரு வாயும் இருப்பது பேசுவதைவிடவும் இரண்டு மடங்கு செவிமடுக்க வேண்டும் என்பதற்காகவே' என்பது சீனோ (Zeno of Citium) என்னும் கிரேக்க தத்துவஞானி இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு பகர்ந்த எளிமையான ஆனால் ஆழ்ந்த அர்த்தமுள்ள கூற்று.
மனிதத் தொடர்பாடலில் எழுத்து வடிவங்கள் உருவாக்கப்படுவதற்கு முன்பு வாய் வார்த்தைகளாகவே அனைத்தும் பகிரப்பட்டன. சரித்திரங்களும், பழங்கதைகளும், புராணங்களும், நாட்டுப்புற கதைகளும், ஆன்மீக போதனைகளும் செவிவழிச் செய்திகளாகவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டன. அவை எழுத்து வடிவம் பெறும் முன்பு பலநூறு வருடங்கள் நிலைத்திருந்தமையானது நமது முன்னோர்கள் எத்தகைய சிறப்புமிக்க செவிமடுப்பவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை பறைசாற்றுகிறது.
ஆனால் இன்றைய நவீன வேக உலகில் பொறுமையான செவிமடுத்தல் என்பது அரிதாகி வருவது வெளிப்படை. செவிமடுப்பதைவிட பேசுவதையே நாம் அதிகம் விரும்புகிறோம். 'ஒருவரின் செவிகள் கேட்க விரும்பும் மிக இனிமையான சப்தம் அவரது சொந்த குரல் ஒலியே' என்னும் நகைச்சுவையான கூற்றை மெய்ப்பிக்க முனைகிறோம்.
ஆனால் செவிமடுத்தல் ஒரு உயரிய குணம். அதனால் கிட்டும் பயன்களும் அளப்பரியன.
'பேசும்போது நீங்கள் அறிந்தவற்றையே திருப்பிச் சொல்கிறீர்கள். ஆனால் செவிமடுக்கும்போது புதிய விடயங்களை கற்றுக்கொள்கிறீர்கள்' என்கிறார் தலாய் லாமா.
ஆம், முன்முடிவுகளற்று பொறுமையாக செவிமடுக்கும்போது நாம் அறியாத பல புதிய விடயங்களை அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பு கிட்டுகிறது. செவிமடுப்பவர் இடைமறித்து பேசும்போது பேசுபவரின் எண்ணவோட்டம் தடைபட்டு, பேச்சு திசைமாறி சொல்ல வந்த விடயம் சொல்லப்படாமல் போய்விடுவதுண்டு. இதனால் இருவருக்குமே இழப்பு.
பொறுமையான செவிமடுத்தல் நம்மைப்பற்றிய நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்தும். செவிமடுப்பவர்கள் மதிக்கப்படுகிறார்கள். கவனமாக காதுகொடுத்து கேட்கும்போது பேசுபவர் பற்றியும், அவர் கூறும் விடயங்கள் பற்றியும் நமது விருப்பையும், ஆர்வத்தையும், அவர் மீதான நமது மதிப்பையும் வெளிப்படுத்துகிறோம்.
கவனமான செவிமடுத்தலால் தவறான புரிதல்களும், தப்பபிப்பிராயங்களும் தவிர்க்கப்படும். பழைய மனக்கசப்புகள் களைய உதவும். புதிய புரிதல்கள் ஏற்படும். பிரச்சினைகளுக்குத் இலகுவில் தீர்வு கிட்டும்
சிலர் வேறெவ்வித எதிர்ப்பார்ப்புமின்றி தங்களது மனபாரங்களை இறக்கி வைப்பதற்காகவே பேசுவார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் செவிமடுப்பவர் பேசுபவரின் சுமைதாங்கியாகவும், அவரை ஆற்றுப்படுதுவராகவும் ஆகிவிடும் அற்புதம் நிகழும்.
செவிகொடுப்பவர்கள் நோக்கி மற்றவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்; நம்பத் தகுந்த நல்ல நட்பாக, துவளும் தருணங்களில் தோள் கொடுக்கும் தோழமையாக மதிக்கப்படுகிறார்கள். அதனால் அவர்களது நட்பு வட்டம் விரிவடைந்துகொண்டே இருக்கும். மற்றவர்கள் அவர்களின் பேச்சுக்கு செவிகொடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.
செவிமடுத்தல் என்பது செயற்கரிய காரியமன்று. சிறிது விழிப்புணர்வுடனான தொடர் பயிற்சி நம் எல்லோரையும் நல்ல செவிமடுப்பவர்களாக மாற்றும். நம்மை எளிதில் உணர்ச்சிவசப்படாதவராக, பொறுமையானவராக, அமைதிமிக்கவராக மாற்றுகின்ற வல்லமையும் அதற்கு உண்டு.
பேசுவது அன்று செவிமடுப்பதே சிறப்பு. வாருங்கள் காது கொடுத்து கேட்போம். தாய், தந்தை, வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், உறவுகள், நண்பர்கள், நாம் விரும்புவர்கள், விருப்பாதவர்கள், நம்மை விரும்பாதவர்கள், ஏன் எதிரிகள் என எல்லோரையும் செவிமடுப்போம். அது நமது வாழ்விலும், நம்மோடு தொடர்புகொண்டோர் வாழ்விலும் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தும்.
நன்றி: வீரகேசரி வார வெளியீடு (21.10.2018)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக