மனைவியின் தொலைபேசி அழைப்பு இடையூறினை தவிர்க்கவும், அவள் அழைத்து தான் பதிலளிக்காவிட்டால் பதட்டப்படுவாள் என்பதற்காகவும் அலுவலக கூட்டம் தொடங்குமுன் மனைவிக்கு குறுஞ்செய்தி ஒன்றை அவசரமாக அனுப்பிவிட்டு கைப்பேசியை மௌனமாக்கினார் சிவா.
'மீடிங்க்... மொபைல் ஒன் சைலன்ஸ்'
அன்றைய கூட்டம் வழக்கத்திற்கு மாறாக சற்று நீண்டு விட்டது. எல்லோரிடமும் விடைபெற்று தனது இருக்கைக்கு வந்து கைப்பேசியை உயிர்ப்பித்து பார்த்தபோது மனைவியிடமிருந்து ஐந்து தவறிய அழைப்புகள். குறுஞ்செய்தி அனுப்பியும் அழைத்திருக்கிறாளே என்று சற்று எரிச்சலுடன் மனைவிக்கு அழைப்பை ஏற்படுத்தினார். வழக்கத்திற்கு மாறான தாமதத்திற்கு பிறகு, முகமன் ஏதுமற்று, கொஞ்சம் சூடாக வந்து விழுந்தன வார்த்தைகள்,
"ஃபோன் பன்னுனா எடுக்க மாட்டீங்களா...?"
இன்னும் கொஞ்சம் சூடாகவே பறந்தன பதில் வார்த்தைகள்,
"ஏன் நீ மெஸேஜ் பார்க்க மாட்டியா...?"
அடுத்த ஐந்து நிமிடங்கள் அரங்கேறிய அனல் பறக்கும் சொற்போருக்குப் பிறகு அழைப்பு ஏற்படுத்தியதின் நோக்கம் நிறைவேறாமலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதற்கு பிறகான அந்த நாள் அவர்கள் இருவருக்குமே அமைதியற்ற நாளாகவே அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
அன்று மாலை அவர்கள் இருவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டு, சமாதானமாகிய பிறகு அறிந்துகொண்ட உண்மை; மனைவி அந்த குறுஞ்செய்தியை பார்த்து இரண்டு மணித்தியாலங்களுக்குப் பிறகு, கூட்டம் முடிந்திருக்கும் என்று அனுமானித்து அழைத்திருக்கிறார். கூட்டம் முடிவடைந்த பின்னும் கணவர் கைப்பேசியை நிசப்த நிலையிலிருந்து மாற்றவில்லை என்று எண்ணி மீண்டும் மீண்டும் அழைத்திருக்கிறார்.
இப்போது இந்த காட்சியில் வார்த்தைகளை கொஞ்சம் மாற்றிப் பார்ப்போம்.
மனைவி: "மீட்டிங்க் முடிய லேட் ஆகிறிச்சோ..?" அல்லது
"ஃபோன சைலன்ஸ்ல இருந்து மாத்த மறந்து விட்டீர்களா?" அல்லது
உணர்ச்சிவசப்படாமல் "ஏம்பா ஃபோன் எடுக்கல..?"
இப்படி தொடங்கும் உரையாடல் எப்படி இனிமையாக தொடர்ந்து நிறைவுபெற்றிருக்கும் என்பதை எம்மால் ஊகிக்க முடியும்.
ஆம். வார்த்தைகள் வடிவமைக்கின்றன வாழ்க்கையை.
'நீங்கள் பேசுவது உண்மை இல்லை' என்பதும் 'நீங்கள் பொய் பேசுகிறீர்கள்' என்பதும் ஏறக்குறைய ஒரே அர்த்தம்தான். ஆனால் சொல்லப்படுபவரிடம் இவை இரண்டும் இரண்டு விதமான எதிர்வினைகளை ஏற்படுத்தும். பின்னயதைவிட முன்னையதின் எதிர்வினை நிச்சயம் மென்மையானதாக இருக்கும்.
நாம் பிறருடன் வாய்மொழியாகவோ, எழுத்து மூலமோ தொடர்பு கொள்வதன் நோக்கம் எமது கருத்தை அவர்களுக்கு புரியவைப்பது மட்டுமன்றி, அதன் மூலம் நாம் விரும்புகின்ற விளைவை பெறுவதும் ஆகும். சரியான விளைவைப் பெற வேண்டுமெனில் சரியான வார்த்தைப் பிரயோகம் அவசியமாகிறது.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று என்பது நாம் அறிந்த திருக்குறள். இனிய சொற்கள் இருக்கும்போது கடுமையான சொற்களைப் பயன்படுத்துதல் என்பது மரத்திலே பழுத்து தொங்கும் பழங்களை விட்டுவிட்டு காய்களை பறித்து உண்பதற்கு ஒப்பானது என்கிறார் திருவள்ளுவர்.
வார்த்தைகள் வலிமையானவை. அவற்றால் ஆக்கவும் முடியும்; அழிக்கவும் முடியும். அவற்றால் வீழ்ந்து கிடப்பவரை வீறுகொண்டு எழச் செய்து வெற்றி பெறச் செய்ய முடியும். முன்னேற வேண்டும் என்று முயற்சி செய்பவரை முடக்கிப்போடவும் முடியும்.
வார்த்தைகளால் முடியும் உறவுகளை உருவாக்கவும் உருக்குலைக்கவும்.
ஒற்றை வார்த்தையில் உடைந்துபோன இதயங்கள், பிரிந்து போன சினேகங்கள், விலகிப் போன உறவுகள் ஏராளம்.
வார்த்தைகள் மனிதர்களில் மட்டுமல்ல சடப்பொருள்களிலும் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்துக்கிறது என்பதை மாஸாரு எமோடோ என்கிற ஜப்பானிய ஆராச்சியாளர் நிரூபித்துள்ளார். ஒரே அளவான கொள்கலன்களில் சுத்தமான தண்ணீரை நிரப்பி அவற்றில் சிலவற்றிடம் மென்மையான வார்த்தைகளையும், மற்றவற்றிடம் கடுமையான வார்த்தைகளையும் பேசி வந்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு அவற்றை உறைய வைத்து நுண்ணோக்கியில் ஆராய்ந்தபோது மென்மையான வார்த்தைகள் பேசப்பட்ட நீரில் அழகான நீர்ப்படிகங்கள் உருவாகியிருப்பதையும், கடுமையான வார்த்தைகள் பேசப்பட்ட நீரில் அவலட்சணமான நீர்ப்படிகங்கள் உருவாகியிருப்பதையும் ஆச்சரியத்துடன் அவதானித்தார்.
தமிழ்நாட்டில் ஆழியாரில் அமைந்துள்ள மனவளக்கலை அறிவுத்திருக்கோயில் வளாகத்தில் மனவளக்கலை பேராசிரியர் கலாநிதி எஸ். இலக்குமணன் அவர்கள் நடாத்திய ஆய்வுகளின் முடிவுகள் பெருவியப்புக்குரியதாய் அமைந்தன. அவர் ஒரு ஓய்வுபெற்ற வேளான் பூச்சியியல் விஞ்ஞானி மற்றும் அத்துறை பேராசிரியராதலால் தனது ஆய்வினை சரியான விஞ்ஞான முறைப்படி செய்துள்ளார். ஒரே எண்ணிக்கையிலான வெண்டைக்காய் செடிகளை இருவேறு ஒரே அளவிலான பாத்திகளில் நட்டு, ஒரு பாத்தியில் உள்ள செடிகளை தினமும் 'வாழ்க வளமுடன்' என்று வாழ்த்தி வந்துள்ளார். மற்றைய பாத்தியில் உள்ள செடிகளுக்கு வாழ்த்து ஏதும் சொல்லப்படவில்லை. இரண்டு பாத்திகளிலும் உள்ள செடிகளுக்கும் ஒரே விதமான நீர்ப்பாசனம், உரமிடுதல் மற்றும் பராமரிப்பு முறைகள் கையாளப்பட்டன. வாழ்த்து கூறப்பட்ட செடிகள் அதிசயத்தக்க வகையில் மற்றவற்றைவிட 60% வரை அதிக விளைச்சலைத் தந்தன. இந்த ஆய்வு முடிவுகள் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 'ஏன்ஸியன்ட் சயன்ஸ்' (Ancient Science) என்னும் விஞ்ஞான சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டன.
எனவே எமது வார்த்தைகள் சக மனிதரிடம் மட்டுமன்றி, சடப்பொருள்களிலும், தாவரம் ஈறாக மற்ற உயிரினங்களிலும் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்தவை.
நேர்மறையான வார்த்தைகள் மனதுக்கு இதமூட்டி, சுகமான சூழலையும், சுமுகமான மனித உறவுகளையும் ஏற்படுத்துபவை. நாமே ஒரு பரிசோதனை செய்து பார்க்கலாம். கண்களை மூடி, தளர்வாக அமர்ந்துகொண்டு, கீழ்வரும் சொற்களை ஒருவர் குறிப்பிட்ட இடைவெளி விட்டு சொல்ல, செவிமடுங்கள்:
வெளிச்சம், தாமரை, பச்சைப் புல்வெளி, பனி மலை, ஆகாயம்
அன்பு, பாசம், அமைதி, நட்பு, கருணை
சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, கீழ்வரும் சொற்களை செவிமடுங்கள்:
இருள், கருகிய செடிகள், வரண்ட பூமி, பூகம்பம், விபத்து, ஆத்திரம், சண்டை, கொலை, மரணம்
இப்போது நினவுபடுத்திப் பாருங்கள். முன்னைய சொற்களையும், பின்னையை சொற்களையும் செவிமடுக்கும்போது உங்கள் மனநிலை எவ்வாறு வேறுபட்டது? இவ்வாறுதானே நமது வார்த்தைகள் பிறர் மனங்களில் தாக்கங்களை ஏற்படுத்தும். இந்தப் புரிதல் நமது வார்த்தைகள் மீதான நமது பொறுப்புணர்ச்சியை அதிகரிக்கும். அதனால் நம்மிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் நல்லவைகளாகவே இருக்கும்.
ஒருவரை திருத்துவதற்காக சொல்லப்படும் வார்த்தைகளில் கவனம் தேவை. அது அவரின் குறையை சுட்டிக்காட்டுவதாக அமைந்தால் நமது நோக்கம் நிறைவேறுவது கடினம். பொதுவாக குறைகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது ஒரு விடயம் தனக்கு புரியவில்லை என்று ஒத்துக்கொள்ளவோ ஒருவரின் தன்முனைப்பு இடங்கொடுப்பதில்லை. 'நான் சொல்வது உங்களுக்கு புரியவில்லை' என்பதைவிட 'நான் தெளிவாக சொல்லவில்லை என்று நினைக்கிறேன்' என்று தொடங்கும் உரையாடல் நாம் விரும்பும் பலாபலனைத் தரும்.
எதனைப் பேசுவது, எப்படிப் பேசுவது என்பதைப் போலவே எதனைப் பேசக்கூடாது என்பதும் மிக மிக முக்கியம். பெஞ்சமின் ஃப்ரான்க்லின் அவர்கள் சொன்னது போல் "சரியான இடத்தில் சரியான வார்த்தைகளை சொல்வதிலும் கடினமானது எதுவெனில் தூண்டப்பட்ட ஒரு தருணத்தில் தவறானதை சொல்லாதிருத்தல்."
பொதுவாக வாக்குவாதங்களின் போதுதான் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை வாரியிறைத்து விடுகிறோம். பல வேளைகளில் வாய்த்தவறி சொல்லும் வார்த்தைகள்கூட காலம் பல கடந்தும் மாறாத வடுக்களாய் மனதிலே தங்கிவிடுவதுண்டு. பிறர் தவறு செய்யும்போது நீதிபதியாகவும், நாம் தவறு செய்யும்போது வக்கீலாகவும் நாம் ஆகி விடுகிறோம். நம்மை நியாயப்படுத்த எவ்வித வார்த்தைகளையும் பயன்படுத்தி, எந்த எல்லைக்கும் செல்லத் தாயாராகிவிடுகிறோம். பல வேளைகளில் வெற்றியும் பெற்றுவிடுகிறோம். ஆனால் அந்த வெற்றிக்கு நாம் கொடுத்த விலை மிக மிக அதிகமென்பதை பிறகு உணர்கிறோம். பெரும்பாலும் அப்போது காலம் கடந்துவிட்டிருக்கும்; உறவுகளில் சீர்படுத்த முடியாத சேதம் விளைந்திருக்கும். வாதங்களில் வென்று உறவுகளை இழப்பதால் என்ன பயன்?
நாம் யார் என்பதை நமது வார்த்தைகளே உலகுக்கு உணர்த்துகின்றன. கிரேக்கப் பேரரசரும், தத்துவஞானியுமான மார்கஸ் ஒரீலியஸ் சொன்ன கூற்றொன்று 'ஒவ்வொரு செயலை செய்யும்போதும் இதுவே உங்கள் வாழ்க்கையின் கடைசி செயல் என்று நினைத்து செய்யுங்கள்' எனபதாகும். இதனயே கொஞ்சம் மாற்றி 'ஒவ்வொறு வார்த்தையைப் பேசும்போதும் இதுவே நமது கடைசி வார்த்தை' என்று நினைத்துப் பேசினால் வார்த்தைகள் நமது வாழ்க்கையை அழகானதாய், அர்த்தம் மிக்கதாய் வடிவமைக்கும்.
நன்றி: வீரகேசரி வார வெளியீடு / 07.10.2018

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக