எல்லோரிடமும் எந்நாளும் உண்டு ஒரு கேள்வி. உடற்குறை, உளக்குறை மிக்க எண்ணற்ற மனிதர்கள் எத்தனையோ மகத்தான சாதனைகள் புரிவதை கண்டும், கேட்டும்கூட எம்மைவிட்டு விலக மறுக்கும் ஒற்றைக் கேள்வி.
"என்னால் முடியுமா...?"
தயக்கத் தளைகளை நம் கால்களில் இறுகப்பூட்டி நம்மை முன்னேற விடாமல் முடக்கிப்போடும் கேள்வி. கனவு மொட்டுகள் நம்முள் மலரும்முன்னே கருகச்செய்யும் கேள்வி.
'என்னால் முடியுமா?' என்னும் கேள்விக்குறியை 'என்னால் முடியும்.' என்னும் முற்றுப்புள்ளியாக மாற்றுவது எப்படி?
உணமையில் 'என்னால் முடியுமா?' என்கிற இந்தக் கேள்விக்கு அடிப்படையாய் இருப்பது தோற்று விடுவோமோ என்கிற அச்சம். தோல்வி பயம் தருகின்ற அவநம்பிக்கையினால் முதல் அடி எடுத்து வைக்காமலேயே நனவாகாத கனவுகள் ஆயிரமாயிரம்.
'ஒரு சிலரால் மகத்தான வெற்றிகளை அடைய முடிகிறது என்பதே மற்றவர்களாலும் அது சாத்தியம் என்பதற்கு அத்தாட்சி' என்கிறார் ஆப்ரகாம் லிங்கன். அதனைச் சொல்லுகின்ற அருகதை அவரைத் தவிர வேறொருவருக்கு இருத்தல் அரிது. ஏனெனில் ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை தோல்விகளின் தொடர்கதை. இதோ மலைக்கவைக்கும் அந்தத் தோல்வி பட்டியல்:
1816இல் அவரின் குடும்பம் தங்கள் குடியிருப்பில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப் படுகிறது. புதிய இடத்தில் குடில் அமைக்க சின்னஞ்சிறு ஆபிரகாம் லிங்கன் தனது தந்தைக்கு உதவி செய்கிறார்.
1818இல் தனது ஒன்பதாவது வயதில் தாயின் மரணம்.
1831இல் வியாபாரத்தில் தோல்வி.
1832இல் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி. அதே வருடம் தான் செய்து வந்த தொழிலையும் இழக்கின்றார். சட்டக் கல்லூரியில் நுழையும் முயற்சியும் தோல்வி.
1834இல் நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி தொடங்கிய வியாபாரத்தில் பெரும் நஷ்டம்.
1835இல் உயிருக்குயிராக காதலித்த, திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணின் திடீர் மரணம்.
1836இல் நரம்பு முறிவு நோயினால் பாதிக்கப்பட்டு ஆறுமாத காலம் படுக்கையில் கழிக்கிறார்.
1838இல் மாநில சட்டமன்றத்தில் சபாநாயகர் ஆகும் முயற்சி தோல்வி.
1843இல் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சி தோல்வி.
1848இல் (1846இல் வெற்றி பெற்று இருந்தும்) மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சி தோல்வி.
1849இல் ஜனாதிபதி ஆவதற்கு தான் அயராது பாடுபட்ட சசரி டெய்லர் வெற்றி பெற்றதும், தான் எதிர்பார்த்த நில அதிகாரி பதவியை தராததால் பெருத்த ஏமாற்றம்.
1854இல் அமெரிக்க செனட் தேர்தலில் தோல்வி.
1856இல் துணை ஜனாதிபதி நியமனத் தேர்வில் தோல்வி.
1858இல் மீண்டும் அமெரிக்க செனட் தேர்தலில் தோல்வி.
என்ன, மூச்சு முட்டுகிறதா? நம்புவதற்கு கடினமாக இருப்பினும் இவை அத்தனையும் உண்மை. நிஜம் கற்பனையிலும் விசித்திரமானது என்பது எத்துணை உண்மை! இத்தனை தோல்விகளையும் ஒரு மனிதர் எப்படி தாங்கிக் கொண்டார்? சின்னச் சின்ன தோல்விகளை எல்லாம் கண்டு துவளுகின்ற, ஏன் தன்னையே மாய்த்துக் கொள்ளும் எல்லை வரை செல்லுகின்ற இந்தக்கால மனிதர்களுக்கு, தோல்விகளை கண்டு துவளாத ஆபிரகாம் லிங்கனின் மனோதிடம் நம்ப முடியாத ஒன்றாக இருப்பதில் வியப்பில்லை.
அத்தனை தோல்விகளையும் கடந்து 1860இல் தனது ஐம்பத்தோராவது வயதில் அமெரிக்க ஜனாதிபதியானார் ஆபிரகாம் லிங்கன். வெற்றியின் பின் அவர் தனது பதவி காலத்திலும் முத்திரை பதிக்கத் தவறவில்லை. அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது நாடு பிளவுபடாமல் கட்டிக் காத்தது, கருப்பின அடிமைத்தனம் ஒழிப்புப் பிரகடனம் முதலிய செயல்களின் மூலம், படுகொலை செய்யப்பட்டு நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் அவர் இன்றும் நினைவுகூரப்படுகிறார். தோல்வி கண்டு துவளும் எண்ணற்றோருக்கு அவரது வாழ்க்கை எழுச்சியூட்டும் உதாரணம் என்பது நிதர்சனம்.
ஆபிரகாம் லிங்கனின் வெற்றியின் இரகசியம் என்ன? அது தோல்விகளின் முன்னே அடிபணியாது, முயற்சிகளை கைவிடாத திடமனம். வெற்றியாளர்கள் தடங்கல்களை கண்டு தங்கள் இலட்சியங்களை கைவிடுவதில்லை; கை விடுபவர்கள் வெற்றியாளர்கள் ஆவதில்லை. ஆபிரகாம் லிங்கன் வாழ்ந்த காலத்தில் உயிர் வாழ்ந்த 100 கோடி மக்களில் மிகச் சிலரே இன்று நினைவு கூறப்படுகிறார்கள். காரணம் வெற்றியாளர்களையே சரித்திரம் நினைவில் நிலை நிறுத்தி வைத்திருக்கிறது.
'என்னால் முடியுமா?' என்னும் சந்தேகக் கேள்விக்கு அடுத்த காரணம் நமது வயது பற்றிய ஐயம். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு புதிதாக ஒன்றை தொடங்க முடியாது அல்லது சாதிக்க முடியாது என்கின்ற எண்ணம்.
பிரித்தானியாவை சேர்ந்த 97 வயதான வயோதிபர் ஒருவர் 10,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து குதித்து சாதனைப் படைத்துள்ளார். இந்த சாதனையையடுத்து ஜோர்ஜ் மொய்ஸி ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளிக்கையில் சொன்னது: "இவ்வாறு சாதனை செய்வது இது முதல் தடவை என்றபோதும், இது இறுதியான சாதனையல்ல.."
'மணிக்கு 108 மைல் வேகத்தில் காரோட்டி 106 வயது பெண்மணி சாதனை.' நாளிதழில் வந்த இன்னொரு செய்தி இது.
தனது 85 வயதிலும் ஒரு முன்னணி காட்சியறையில் சுறுசுறுப்பாக பணிபுரியும் ஒரு மூதிளைஞரை அண்மையில் சந்தித்து வியந்து நின்றேன். மனம் சோர்வுறும் போதெல்லாம் அவரோடு எடுத்துக்கொண்ட சுயபடத்தைப் பார்த்து புத்துணர்ச்சி பெறுகிறேன்.
சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்று சரித்திரம் படைத்தவர்கள் ஏராளம்.
பார்க்கின்சன் நோயை அடையாளம் கண்ட போது ஜேம்ஸ் பார்க்கின்சன் அவர்களுக்கு வயது 62.
இவ்வருட தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பொழுது டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு வயது 71.
விண்வெளியில் பயணித்த அதிக வயதான மனிதர் என்கின்ற சாதனையை படைத்த போது ஜோன் க்லென் அவர்களுக்கு வயது 77.
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் கால்பதித்த அதிக வயதான மனிதர் என்கிற சாதனையை 2013ஆம் வருடம் படைத்தபோது ஜப்பானை சேர்ந்த யுய்சீரோ மியுரா அவர்களுக்கு வயது 80. அதற்கு முன் அவர் இரண்டு முறை இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது எண்பதாவது வயதிலும்புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வுகளில் முனைப்புடன் ஈடுபட்டிருந்தார் தோமஸ் அல்வா எடிசன்.
உலகின் அதிக வயதான நெடுந்தூர ஓட்ட வீரரான ஃபவுஜா சிங் அவர்களின் வயது 101.
தனது 22வது வயதில் உலகக் கோடீஸ்வரர்கள் வரிசையில் ஒருவராக இடம்பிடித்த முகநூல் நிறுவனர் மார்க் ஷுகெர்பெர்க்கும், தனது 62வது வயதில் KFC உணவகத்தை ஆரம்பித்து வெற்றிபெற்று பெரும்பணக்காரரான ஹார்லண்ட் சண்டெர்ஸூம் நம்மைப்போன்ற மனிதர்களே.
வயது என்பது வெறும் ஒரு எண் மட்டுமே என்று எண்ணுபவர்களுக்கு எந்த வயதிலும் சாதனை சாத்தியம்.
ஆக, தோல்வி பயமும், தங்கள் வயதைப் பற்றிய ஐயமும் அற்றவர்களின் வாழ்வில் 'என்னால் முடியுமா?' என்கிற கேள்விக்கே இடமில்லை.
'என்னால் முடியும்' என்று முன்னே செல்பவர்களை வரவேற்று வாகை சூட்டக் காத்திருக்கிறது வாழ்க்கை.
நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (07.10.2018)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக