நம்மிடம் இல்லாத ஒன்று மற்றவரிடம் உள்ளபோது, நம்மால் சாதிக்க முடியாததை மற்றவர் சாதிக்கும்போது அதனை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை அழுக்காறு.
இதிலிருந்து வெளிவரத் தேவை மனநிலையில் மாற்றம். பிறரின் உயர்வை ஏற்றுப் போற்ற முடிந்திடின் அதுவே நமக்கு அகத்தூண்டுதலாக (inspiration) மாறி, நம்மாலும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையையும், சாதிக்கத் தேவையான உத்வேகத்தையும் அளிக்கும். 'ஒருவர் பெருவெற்றியை அடைகிறார் என்பதே மற்றவராலும் அது சாத்தியம் என்பதற்கு சான்று' என்கிறார் ஆப்ரகாம் லிங்கன். பொறாமை என்பது எதிர்மறை உணர்வு (feeling), அகத்தூண்டுதல் என்பது நேர்மறை (positive) உணர்வு. நமது எண்ணங்களுக்கும், உணர்வு நிலைகளுக்கும் ஏற்ப உடலினுள் சுரக்கும் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுகிறது என்கிறது நவீன மருத்துவம். பொறாமையின்போது நாம் நம் அடிமனதிற்கு சொல்லும் செய்தி 'என்னில் குறையிருக்கிறது, என்னால் முடியாது'. அகத்தூண்டல் மனநிலையில் நாம் சொல்லும் செய்தி 'அவரால் முடிந்ததெனில் என்னாலும் முடியும். முயன்று பார்ப்போம்.' எண்ணங்களே எம்மை உருவாக்குகின்றன. எதனைப் பயிரிடுகிறோமோ அதனையே அறுவடை செய்கிறோம்.
சிலவேளைகளில் நம்மைவிட குறை-நிலையில் உள்ளவர்கள் நம்மளவுக்கு உயரும்போதும் பொறாமை புகைவிடத் தொடங்குகிறது. இது எப்போதும் நாம் மற்றவர்களைவிட உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்கின்ற உயர்மனச் சிக்கலின் வெளிப்பாடு. இயற்கை பாரபட்சமற்றது; அது அவரவரின் உழைப்புக்கும், முயற்சிக்கும் ஏற்ப வெகுமதியளிக்கிறது. வாழ்க்கை நமக்கு வாரி வழங்கியுள்ள வரங்களை நன்றியுடனும், பணிவுடனும் போற்றினால் அழுக்காறு அற்ற மனநிலை வாய்க்கும்.
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின். (குறள் 162)
விளக்கம்:
யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.
- சுப்ரமண்ய செல்வா - #செல்வாசகம்
1 கருத்து:
அருமை...
கருத்துரையிடுக