ஞாயிறு, 12 ஜூலை, 2015

அன்பு சூழ் உலகு

விடியல் என்று ஏதுமில்லை
மெய்யெனத் தெரியும் பொய்யது
இருளே நிரந்தரம். இரவே நிரந்தரம்
தன்னைச் சுழற்றியே பூமி
விண்ணொளி பெறுகிறது.

அசிங்கம் என்று ஏதுமில்லை
அனைத்தும் மனிதன் கற்பிதம்
நரகலும் சிறுநீரும் கூட அசிங்கமில்லை
மனிதனுக்குள் இருப்பதனால்
அழகே நிரந்தரம்.

பொய்யென்று ஏதுமில்லை
மெய்யை மறைத்த மேகமது
உரைப்பவன் உள்ளத்தில் ஒளிந்திருக்கும்
மெய்யே நிரந்தரம்.

தோல்வி என்று ஏதுமில்லை
மனமது மருகும் மாயத் தோற்றம்
வெற்றியே நிரந்தரம்
நிறைந்த வெற்றி. குறைந்த வெற்றி.
அளவில் மாற்றம் அம்மட்டே.

பகை என்று ஏதுமில்லை
உறவில் விழுந்த சிறு கீறல்
காலம் கரையும்
கீறல் மறையும்
உறவே நிரந்தரம்

வன்மம் என்று ஏதுமில்லை
அன்பின் அளவில் குறைபாடு
குறைதீர்க்கும்
அன்பு சூழ் உலகமிது
அன்பே நிரந்தரம்