புதன், 28 மார்ச், 2018

பயணிக்காத பாதை

இலையுதிர்கால
எழில் வனமொன்றினில்
பிரிந்து நீண்டன
பாதைகள் இரண்டு

இரண்டிலும் ஒன்றாய்
பயணிக்க இயலா
பரிதவிப்பில் நான்
பார்த்து நின்றேன்
பாதை ஒன்றினை;
பார்வைக்கெட்டிய
புதர் நிறைந்த
வளைவுவரை.

பின்பு நான்
மறுபாதையினைத் தேர்ந்தேன்;
பாதங்கள் ஸ்பரிசிக்காத
பசும்புல் பாதையது.

அந்தக் காலை பொழுதினில்
சரிநிகராய் விரிந்தன
இருபாதைகளும்;
பாதங்கள் பட்டு சருகாகா
பச்சிலைப் பாதைகள் இரண்டு.

முன்னையப் பாதயினை
இன்னொரு நாளுக்கு
ஒதுக்கினேன்.
ஆயினும் நானறிவேன்
ஒருபாதையின் முடிவில்
வேறொரு பாதைத் தொடங்கும்
மாயப் பயணமிது.
இன்னொரு நாள் நான்
இவ்வழி வருவது ஐயமே.

யுகயுகங்களை கடந்து ஓர்நாளில்
பெருமூச்சுடன் பகர்வேன்;
எழில்வனமொன்றினில்
பிரிந்து நீண்டன
பாதைகள் இரண்டு
நான்
பயணம் குறைந்த
பாதையினைத் தேர்ந்தேன்.
அதனால் விளைந்தன
அனைத்து மாற்றங்களும்.

மூலம்: The Road Not Taken by Robert Frost
தமிழில்: - சுப்ரமண்ய செல்வா -

ஞாயிறு, 25 மார்ச், 2018

கணிதமும் வாழ்வும்

கணிதம் கற்றுத்தரும்
வாழ்க்கைப் பாடம்...

நல்லவை கூட்டு (+)
அல்லவை கழி (-)
அன்பை பெருக்கு (×)
மனிதரை வகுத்தலை (÷)
மட்டும்
மறந்தும் செய்யாதிரு!

ஏனெனில்
வாழ்க்கை கணக்கில்
வகுஎண் வகுபடு எண்
எதுவாயினும்
ஈவு பூஜ்ஜியமே!

- சுப்ரமண்ய செல்வா -

(தமிழில் கணிதம் கல்லாதவர்களுக்கு:
வகுஎண் = Divisor
வகுபடு எண் = Dividend
ஈவு = Quotient)

வெள்ளி, 23 மார்ச், 2018

நின்றுபோன மனிதத்தின் இதயம்

(சிரியப் போரில் கொள்ளப்படும் பொதுமக்களில் நால்வரில் ஒருவர் ஒரு குழந்தை - அண்மையச் செய்தி)
===================================================================

குழந்தையும் தெய்வமும்
ஒன்றென்றால்
சிரியத் தெருக்களில்
தினமும்
சிதறிச் சாகின்றன
சிலநூறு தெய்வங்கள்.
தெய்வங்களைக் காக்கும்
தெய்வமெது?
*  *  *  *
வல்லாதிக்க அரக்கர்களின்
விளையாட்டு பூமியில்
உதைபடும் பந்துகளாய்
சிரியச் சிறார்களின்
பிஞ்சுத்தலைகள்.
*  *  *  *
மானுடமும் ஊடகமும்
வளர்க்கும்
மௌன நெருப்பில்
தீக்குளித்து
உயிர்த்துறக்கின்றன
சிரிய மொட்டுக்கள்.
*  *  *  *
மனிதவுரிமை வள்ளல்களின்
மரண மௌனத்தில் கிழிகிறது
மனிதத்தின் செவிப்பறை.
*  *  *  *
அன்று ஈழம்
இன்று சிரியா
அதே மௌனம்
அதே அலட்சியம்
அதே வேடிக்கை நோக்கு.
மரணம்
தம் வாசல் வரும்வரை
மௌனித்திருத்தலே
மானுடத்தின் பெருஞ்சாபம்.
*  *  *  *
எஞ்சியிருக்கும்
பிஞ்சு விழிகளின்
ஒரே கேள்வி...
எந்த அதிர்ச்சி வைத்தியம்
நின்றுபோன
மனிதத்தின் இதயத்தை
துடிக்கச் செய்யும்?

- சுப்ரமண்ய செல்வா -

புதன், 21 மார்ச், 2018

கவிப்பிழை

கார்மேகக் கூந்தல்
பிறைநெற்றி
கயல்விழிகள்
முத்துப்பற்கள்
பவழ இதழ்கள்
சங்குக் கழுத்து
மாங்கனி மார்புகள்
கொடியிடை
தபேளா பிருஷ்டங்கள்
வாழைத் தொடைகள்

கற்பனை வானில்
சிறக்கடித்த ஆண்கவி
கவனிக்கத் தவறியது...

அவள் மனது.

- சுப்ரமண்ய செல்வா -

காணாமல்போனேன்

திடீரென்று நான்
காணாமல்போனேன்.

மனைவி மக்கள்
கலங்கினர்.
நண்பர்கள்
தேடிக் களைத்தனர்.
உறவுகள்
குழம்பினர்.
நிறுவனம்
ஸ்தம்பித்தது.
உலகம் என்
கைநழுவியது.

எல்லோரும் நான்
காற்றில் கரைந்ததாய்
கருதிய வேளை....

காணாமல்போன கைப்பேசி
கைவந்து சேர்ந்தது;

உயிர்த்தெழுந்தேன்.