வியாழன், 30 ஆகஸ்ட், 2018

புதிரானவள் நீ

ஒரு கவிதையைப் போலிருக்கிறாய்
புரிந்தும் புரியாமலும்
ஒவ்வொரு வாசிப்பின் முடிவிலும்
வெவ்வேறு அர்த்தமாகிறாய்
உன்மொழி கற்றுத்தா
ஒரு பொழிப்புரையெழுத

நம் மௌனங்கள் பரிமாறிக்கொள்ளும்
பரிபாஷையே போதுமானது
வார்த்தைகள் தேடிக் களைக்கும்
நம் சம்பாஷணைகளுக்கு
மௌனமே அடைக்கலமளிக்கிறது

பெருமழையில் கலைந்துபோகும்
மண்குவியலைப்போல்
உன்னில் கரைந்துபோக
வேட்கை கொள்கிறேன்
உன்னிசைவை ஒருமுறை சொல்
உன்னீர்ப்பு விசையில்
என்னைத் தொலைக்கிறேன்.

அருகில் செல்கையில் விலகிச்செல்லும்
கானலைப்போல் மாயமாகிறாய்
ஒரேயொரு முறை உன் காதலை மொழிந்து செல்
நீ மீண்டும் தோன்றும் கணம் வரை
உயிர்த்திருக்க

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

மழை மாலைப்பொழுது

சட்டென வந்துவிட்டது மழை
அறிந்திருந்தால்
வெறுந்தேநீர் கருப்பட்டியுடன்
காத்திருந்திருப்பேன்
வெருட்டும் இடி மின்னலை விட்டுவிட்டு
தென்றலை மட்டும் கூட்டி வந்திருக்கலாம்
மழையைப்போல் தென்றலுக்கும் குளிர்மை குணம்
சந்தோஷ சப்தத்தோடு கொட்டித் தீர்க்கிறது.
சாளரத்தில் பட்டுத்தெறிக்கும் சாரல்
சருமத்தை ஸ்பரிசித்து சிலிர்ப்பூட்டுகிறது.
அடையாளச் சுமைகளை இறக்கிவிட்டு
கூச்சத்தை பறக்கவிட்டு
கொட்டும் மழையில் இலக்கற்று நடக்கும்
வேட்கை மிகுகிறது
தரையைத் தழுவும் மழைநீர்
கழுவிச்செல்கிறது
எல்லா அழுக்குகளையும்
மழை வரவின் ஆச்சர்யம் விலகி
மழை உணர்ந்து
மழையில் லயித்து
மழையாகும் வேளை
கிளம்பிச் செல்கிறது மழை
மழைப்பாடலை முணுமுணுத்திருக்கிறது தூவானம்
கண்ணீரைப்போல மழைநீராலும் முடிகிறது
மனதை ஈரமாக்கிச் செல்ல.
- சுப்ரமண்ய செல்வா -