ஞாயிறு, 21 அக்டோபர், 2018

எண்ணிய வண்ணம் வாழ்வு: பகுதி-1 எண்ணமும் குணமும்

மூலம்:  As a Man Thinketh by James Allen        தமிழில்: சுப்ரமண்ய செல்வா

மனிதன் எதை எண்ணுகின்றானோ அதுவாகவே ஆகின்றான் என்பது முதுமொழி.  இந்தக் கூற்று மனித இருப்பின் சகல பரிமாணங்களையும் தழுவி நிற்கின்றது.  அவன் வாழ்வின் ஒவ்வொறு நிலைக்கும் சந்தர்ப்பத்திற்கும் பொருந்தி நிற்கிறது.  மனிதன் என்பவன் உண்மையிலேயே அவனது எண்ணங்களே.  குணம் என்பது அவனது எல்லா எண்ணங்களினதும் மொத்தக் கூட்டலே.

விதை இன்றி செடி இல்லை.  விதையிலிருந்தே செடி எழுச்சி பெறுகிறது. அவ்வாறே மனிதனின் ஒவ்வொறு செயலும் அவனுள் மறைந்திருக்கும் எண்ணம் என்னும் விதைகளிருந்து எழுச்சி பெறுகிறது.  இது தற்செயலான செயல்களுக்கு மட்டுமன்றி திட்டமிட்டு செய்யும் செயல்களுக்கும் சமமாக பொருந்தும்.

செயல் என்பது எண்ணத்தின் மலர்ச்சி.  இன்பமும் துன்பமும் அதன் கனிகள். ஆக மனிதன் சேகரிக்கும் சுவையானதும் மற்றும் கசப்பானதுமான அத்தனை கனிகளும் அவனால் பயிரிடப்பட்டவையே.

எண்ணமே எம்மை உருவாக்கியது
எண்ணமே எம்மை வார்த்தது
கள்ள மனமுடையோனை துன்பம் தொடர்கிறது
காளைதனை தொடரும் சக்கரம் போல்
நல்ல மனமுடையோனை இன்பம் தொடர்கிறது
அவனது சொந்த நிழலைப் போல்... சர்வநிச்சயமாய்.

மனிதன் என்பவன் இயற்கை நியதிக்குட்பட்ட பரிணாமமே தவிர, அவன் சிறப்பான சிருஷ்டி ஏதும் அல்ல.  காரணமும் விளைவும் என்பது நாம் கண்ணால் காண்கின்ற பொருள்மயமான இந்த உலகில் எவ்வளவு சாசுவதமானதோ, எண்ணங்கள் என்னும் மறைந்திருக்கும் உலகிலும் அது சாசுவதமானதே.  ஆக, உயர்ந்த தெய்வீக குணம் என்பது அதிர்ஷ்டவசமாக கிடைத்த சலுகை அன்று.  அது உயர்ந்த தெய்வீக எண்ணங்களுடனான நீண்ட உறவின் இயற்கையான வெளிப்பாடே.  அது போன்றே இழிவான, மிருகத்தனமான குணம் என்பது தொடர்ந்து கீழான எண்ணங்களுக்கு அடைக்கலம் கொடுத்ததன் பிரதிபலனே.

மனிதன் ஆவதும் அழிவதும் அவனாலேயே. எண்ணம் என்னும் பட்டறையில் அவன் தன்னையே அழித்துக்கொள்ளும் ஆயுதங்களை படைக்கின்றான்; அதே பட்டறையில் அவன் உவகை, ஊக்கம், அமைதி என்னும் சுவர்க மாளிகைகளை உருவாக்கக் கூடிய கருவிகளையும் படைக்கின்றான். சரியான எண்ணத் தேர்வினாலும் செயல்பாட்டினாலும் அவன் தெய்வீக பூரணத்துவம் அடைகின்றான்.  அதேபோல் தவறான எண்ணத் தேர்வினாலும் செயல்பாட்டினாலும் அவன் மிருகத்தைவிட கீழான நிலைக்குப் தள்ளப்படுகின்றான். இந்த இரண்டு எல்லைகளுக்கும் இடைப்பட்டதுதான் எல்லா விதமான குணங்களும்.  மனிதனே அவை அனைத்தினதும் படைப்பாளனும் எஜமானனும் ஆவான்.

ஆன்மாவைப் பற்றிய பழமையான ஆனால் இன்று மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள அற்புதமான உண்மைகளில் உன்னதமானது எதுவெனில் மனிதனே அவனது எண்ணத்தின் எஜமான். அவனது குணத்தின் கர்த்தா. அவனே அவனது சொந்த நிலையை, சூழ்நிலையை, தலைவிதியை உருவாக்குபவனும் உருமாற்றுபனும் ஆவான்.

அற்புத ஆற்றலும், அறிவும், அன்பும், கருணையும் படைத்தவனும் தனது எண்ணங்களின் எஜமானனும் ஆன மனிதன் எல்லா சூழ்நிலைகளுக்கான பதில்களை மட்டுமன்றி தான் விரும்பியவாரெல்லாம் தன்னை மாற்றிக் கொள்ளவும் புதுப்பித்துக் கொள்ளவும் தேவையான அருமருந்தினை தன்னகத்தே கொண்டுள்ளான்.

மனிதனே எப்பொழுதும் அவனின் எஜமான் - அவன் எவ்வளவு பலஹீனனாய், எவ்வளவு கைவிடப்பட்ட நிலையில் இருப்பினும்.  ஆனால் பலஹீனமான நிலையில், கீழான நிலையில் அவன் தன்னை ஆளத் தெரியாத முட்டாள் எஜமானனாய் இருக்கிறான்.  தனது படைப்பின் நியதி பற்றியும்  இருப்பின் மகிமை பற்றியும் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கும்போது, அவன் புத்திசாலி எஜமானன் ஆகிறான். அப்போது ஆக்கப்பூர்வமான எண்ணங்களுக்காக தனது ஆற்றலை புத்திசாலித்தனமாக பயன்படுத்துகின்றான்.   எண்ணங்களின் நியதியை மனிதன் தன்னுள்ளே கண்டுபிடிக்கும்போதே அவன் தன்னை முற்றும் உணர்ந்த எஜமானன் ஆகின்றான். இந்த கண்டுபிடிப்பு என்பது  முற்றிலும் சுய ஆராய்ச்சி, பிரயோகம், அனுபவம் சார்ந்ததே. 

தங்கமும் வைரமும் எப்படி நீண்ட தேடுதலும் தோண்டுதலுக்கும் பின்பே கிடைக்கின்றதோ  அப்படியே மனிதன் தன்னைப் பற்றிய ஒவ்வொரு உண்மையையும் தன் ஆன்மா என்னும் சுரங்கத்தை ஆழத் தோண்டும்போது அறிந்து கொள்கின்றான்.  தனது குணங்களை, வாழ்க்கையை, தலைவிதியை  தானே உருவாக்குகின்ற வல்லமை படைத்த மனிதன், தனது எண்ணங்களை கூர்ந்து கவனித்து  கட்டுப்படுத்தி தேவைக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கும்போது, அது அவனிலும் பிறரிலும் சூழ்நிலையிலும் ஏற்படுத்தும் அற்புத மாற்றங்களை ஐயமற நிரூபிக்கின்றான். தொடர்ந்த பொறுமையான பின்பற்றலாலும் ஆராய்ச்சியினாலும் காரண-விளைவு உண்மைகளை பூரணமாக உணர்கின்றான்.  தனக்கு கிடைக்கக் கூடிய ஒவ்வொரு அனுபவத்தையும், அன்றாட நிகழ்வுகளையும் - அவை எத்துனை அற்பமாய் இருப்பினும் - பயன்படுத்தி அவன் தன்னைப் பற்றிய அறிவை அறிந்து கொள்கின்றான்.  அவ்வறிவானது புரிந்துணர்வு, விவேகம், சுய பலம் என்பதாகும்.  ஆக மற்ற எல்லா சூழ்நிலைகளையும்விட கேளுங்கள் கொடுக்கப்படும். தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் கூற்று இந்நிலைக்கு மிகவும் பொருந்தும்.  ஏனெனில் பொறுமை, பயிற்சி, இடைவிடாத தேடுதல் மூலமே மனிதன் அறிவு என்னும் ஆலயத்தினுள் நுழைய முடியும்

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (21.10.2018)

காது கொடுத்துக் கேட்போம்

நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேச தொடங்குவோம். நாம் ஒரு சில வார்த்தைகளே பேசி இருக்கக் கூடிய நிலையில், கேட்டுக் கொண்டிருப்பவர் இடைமறித்து பேசத் தொடங்குவார்.  நாம் இதனைத்தான் சொல்ல வருகிறோம் என்று அவராகவே அனுமானித்து அவ்விடயம் பற்றிய அவரது கருத்துகளை விலாவாரியாக பேசி முடிப்பார். நாம் சொல்ல வந்ததை சொல்ல மறந்து அல்லது அதற்கு கால அவகாசம் இன்றி அந்த உரையாடல் நிறைவு பெறும்.  பெரும்பாலும் அவரது அனுமானம் நமது நோக்கத்திற்கு முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.

இது நம் எல்லோருக்கும் பரிச்சயமான ஒரு அனுபவம். பல வேளைகளில் நாமே அந்த கேட்பவராக இருந்திருப்போம்.

இதற்குக் முதற்காரணம் ஒருவர் பேசத் தொடங்கியதுமே அவர் கூற வருவது இதுவாகத்தான் இருக்கும் என்கிற நமது முன்முடிவு. அடுத்தது தான் அனுமானித்த அந்த விடயம்பற்றி கேட்பவர் தனது பாண்டியத்தை பறைசாற்றுகிற ஆவல். இது அவரின் தன்முனைப்போடு சம்பந்தப்பட்டது. மிகமுக்கிய காரணம் என்னவெனில் செவிமடுக்கும் பொறுமை இல்லாதிருப்பது.  இப்போதெல்லாம் மருத்துவர்களுக்கு கூட தமது நோயாளிகள் கூறுவதை முழுமையாக கேட்கின்ற பொறுமை இருப்பதில்லை.

'பெரும்பாலான மனிதர்கள் புரிந்துகொள்வதற்காக அன்றி பதில் சொல்வதற்காகவே செவிமடுக்கிறார்கள்' என்கிறார் 'அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்' என்னும் உலகப் புகழ்பெற்ற சுயமுன்னேற்ற நூலின் ஆசிரியரும், கல்வியாளருமான ஸ்டீஃபன் ஆர். காவி.

செவிமடுத்தல் என்பது ஒரு அற்புத கலை. மனித இருப்பில் செவிகளின் பங்கு அளப்பரியது. அதனால் தான் வள்ளுவர் கூட
'செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை' என்கிறார்.

'கேட்ட'லுக்கும் 'செவிபடுத்த'லுக்கும் நிறைய வேறுபாடு உண்டு.  கேட்டல் என்பது உடல் திறன்.  செவிமடுத்தல் என்பது செயல் திறன்.  கேட்டல் குறைபாடு உள்ளவர்களைத் தவிர மற்ற எல்லா மனிதர்களுக்கும், ஏன் விலங்குகளுக்கும்கூட, கேட்கும் உடல் திறன் இயற்கையாகவே அமைந்துவிடுகிறது.  நாம் செவிமடுக்காவிட்டாலும் ஒவ்வொறு கணமும் எத்தனையோ வித ஒலிகள் நமது செவிகளில் விழுந்தவண்ணமே  இருக்கின்றன.

ஆனால் செவிமடுத்தல் என்பது பயிற்சியினாலும், பொறுமையினாலும் வரக்கூடிய ஒரு திறமை.

உரையாடல் என்பது இருவழிப் பாதையாக இருக்கும்போது மட்டும்தான் அதில் ஈடுபட்ட அனைவருக்கும் அது பயன்மிக்கதாயும், நிறைவுள்ளதாயும் அமையும்.  அர்த்தமிக்க உரையாடலுக்கு ஆழ்ந்த செவிமடுத்தல் அவசியமாகிறது.

ஆங்கிலத்தில் 'ரீடிங்க் பிட்வீன் லைன்ஸ்' (reading between lines) எனச் சொல்வார்கள்.  பல வேளைகளில் ஒருவர் பேசும்போது பயன்படுத்தும் வார்தைகளின் மேலோட்டமான அர்த்தங்களைத் தாண்டி வேறு உள் அர்த்தங்கள் இருப்பதுண்டு. செவிமடுக்கும்போதுதான் பேசுபவர் சொல்வதை மட்டுமல்ல சொல்லாததையும் புரிந்துகொள்ள முடியும்.

'நமக்கு இரண்டு காதுகளும் ஒரு வாயும் இருப்பது பேசுவதைவிடவும் இரண்டு மடங்கு செவிமடுக்க வேண்டும் என்பதற்காகவே' என்பது சீனோ (Zeno of Citium) என்னும் கிரேக்க தத்துவஞானி இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு பகர்ந்த எளிமையான ஆனால் ஆழ்ந்த அர்த்தமுள்ள கூற்று.

மனிதத் தொடர்பாடலில் எழுத்து வடிவங்கள் உருவாக்கப்படுவதற்கு முன்பு வாய் வார்த்தைகளாகவே அனைத்தும் பகிரப்பட்டன.  சரித்திரங்களும், பழங்கதைகளும், புராணங்களும், நாட்டுப்புற கதைகளும், ஆன்மீக போதனைகளும் செவிவழிச் செய்திகளாகவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டன.  அவை எழுத்து வடிவம் பெறும் முன்பு பலநூறு வருடங்கள் நிலைத்திருந்தமையானது நமது முன்னோர்கள் எத்தகைய சிறப்புமிக்க செவிமடுப்பவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை பறைசாற்றுகிறது.

ஆனால் இன்றைய நவீன வேக உலகில் பொறுமையான செவிமடுத்தல் என்பது அரிதாகி வருவது வெளிப்படை.  செவிமடுப்பதைவிட பேசுவதையே நாம் அதிகம் விரும்புகிறோம்.  'ஒருவரின் செவிகள் கேட்க விரும்பும் மிக இனிமையான சப்தம் அவரது சொந்த குரல் ஒலியே' என்னும் நகைச்சுவையான கூற்றை மெய்ப்பிக்க முனைகிறோம்.

ஆனால் செவிமடுத்தல் ஒரு உயரிய குணம்.  அதனால் கிட்டும் பயன்களும் அளப்பரியன.

'பேசும்போது நீங்கள் அறிந்தவற்றையே திருப்பிச் சொல்கிறீர்கள்.  ஆனால் செவிமடுக்கும்போது புதிய விடயங்களை கற்றுக்கொள்கிறீர்கள்' என்கிறார் தலாய் லாமா.

ஆம், முன்முடிவுகளற்று பொறுமையாக செவிமடுக்கும்போது நாம் அறியாத பல புதிய விடயங்களை அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பு கிட்டுகிறது.  செவிமடுப்பவர் இடைமறித்து பேசும்போது பேசுபவரின் எண்ணவோட்டம் தடைபட்டு, பேச்சு திசைமாறி சொல்ல வந்த விடயம் சொல்லப்படாமல் போய்விடுவதுண்டு.   இதனால் இருவருக்குமே இழப்பு.

பொறுமையான செவிமடுத்தல் நம்மைப்பற்றிய நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்தும்.  செவிமடுப்பவர்கள் மதிக்கப்படுகிறார்கள்.  கவனமாக காதுகொடுத்து  கேட்கும்போது பேசுபவர் பற்றியும், அவர் கூறும் விடயங்கள் பற்றியும் நமது விருப்பையும், ஆர்வத்தையும்,  அவர் மீதான நமது மதிப்பையும் வெளிப்படுத்துகிறோம்.

கவனமான செவிமடுத்தலால் தவறான புரிதல்களும், தப்பபிப்பிராயங்களும் தவிர்க்கப்படும். பழைய மனக்கசப்புகள் களைய உதவும். புதிய புரிதல்கள் ஏற்படும். பிரச்சினைகளுக்குத் இலகுவில் தீர்வு கிட்டும்

சிலர் வேறெவ்வித எதிர்ப்பார்ப்புமின்றி தங்களது மனபாரங்களை இறக்கி வைப்பதற்காகவே பேசுவார்கள்.  அவ்வாறான சந்தர்ப்பங்களில் செவிமடுப்பவர் பேசுபவரின் சுமைதாங்கியாகவும், அவரை ஆற்றுப்படுதுவராகவும் ஆகிவிடும் அற்புதம் நிகழும்.

செவிகொடுப்பவர்கள் நோக்கி மற்றவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்;  நம்பத் தகுந்த  நல்ல நட்பாக, துவளும் தருணங்களில் தோள் கொடுக்கும் தோழமையாக  மதிக்கப்படுகிறார்கள்.  அதனால் அவர்களது நட்பு வட்டம் விரிவடைந்துகொண்டே இருக்கும்.  மற்றவர்கள் அவர்களின் பேச்சுக்கு செவிகொடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.

செவிமடுத்தல் என்பது செயற்கரிய காரியமன்று.  சிறிது விழிப்புணர்வுடனான தொடர் பயிற்சி நம் எல்லோரையும் நல்ல செவிமடுப்பவர்களாக மாற்றும்.  நம்மை எளிதில் உணர்ச்சிவசப்படாதவராக, பொறுமையானவராக, அமைதிமிக்கவராக மாற்றுகின்ற வல்லமையும் அதற்கு உண்டு.

பேசுவது அன்று செவிமடுப்பதே சிறப்பு.  வாருங்கள் காது கொடுத்து கேட்போம்.  தாய், தந்தை, வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், உறவுகள், நண்பர்கள், நாம் விரும்புவர்கள், விருப்பாதவர்கள், நம்மை விரும்பாதவர்கள், ஏன் எதிரிகள் என எல்லோரையும் செவிமடுப்போம். அது நமது வாழ்விலும், நம்மோடு தொடர்புகொண்டோர் வாழ்விலும் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தும்.

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (21.10.2018)

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

இடம்பெயர்வு

ஒரு மலர்வனத்தின் மொத்த  சுகந்தத்தையும்
சுமந்து கொண்டிருக்கிறது
நீ விட்டுச்சென்ற
மல்லிகையின் ஒற்றையிதழ்

பறந்த பின்னும்
விரல்களில் ஒட்டியிருக்கும்
பட்டாம்பூச்சியின் நிறத் துகள்கள் போல்
உரசிச் சென்ற
உன் தாவணியின்  வண்ணங்கள்
என் மேனி எங்கும்

உன் ஓர விழி பாச்சிய
வெளிச்சத்தின் பிரவாகத்தில்
புலர்ந்தே கிடக்கின்றன
என் பொழுதுகள்

ஓயாது ரீங்கரிக்கும்
உன் கொலுசொலியின் நாதத்தில்
கிறங்கிக் கிடக்கின்றன
செவிகள்

நா வறண்ட பின்னும்
நீரருந்த மறுத்து
நீ தந்த தேனீர்ச் சுவையில்
திளைத்திருக்கிறது என் நா

எனதான சித்திரங்கள்
அத்தனையும் அழிக்கப்பட்டு
உன்னுருவம் மட்டுமே
வியாபித்திருக்கிறது
மனவெளியெங்கும்

எனதென்று சொல்ல
எனது உயிரை மட்டுமே
மிச்சம் விட்டாய்

அரை நிமிட அருகாமையில்
உன்னை விட்டுவிட்டு
என்னை எடுத்துச் செல்லும்
மாயவித்தையை
எங்கு கற்றாய்?

- சுப்ரமண்ய செல்வா -

நன்றி: தினகரன் வாரமஞ்சரி (18.11.2018)

செவ்வாய், 9 அக்டோபர், 2018

வார்த்தைகள் வடிவமைக்கின்றன வாழ்க்கையை

மனைவியின் தொலைபேசி அழைப்பு இடையூறினை தவிர்க்கவும்,  அவள் அழைத்து தான் பதிலளிக்காவிட்டால் பதட்டப்படுவாள் என்பதற்காகவும் அலுவலக கூட்டம் தொடங்குமுன் மனைவிக்கு குறுஞ்செய்தி ஒன்றை அவசரமாக அனுப்பிவிட்டு கைப்பேசியை மௌனமாக்கினார் சிவா.

'மீடிங்க்... மொபைல் ஒன் சைலன்ஸ்'

அன்றைய கூட்டம் வழக்கத்திற்கு மாறாக சற்று நீண்டு விட்டது.  எல்லோரிடமும் விடைபெற்று தனது இருக்கைக்கு வந்து கைப்பேசியை உயிர்ப்பித்து பார்த்தபோது மனைவியிடமிருந்து ஐந்து தவறிய அழைப்புகள். குறுஞ்செய்தி அனுப்பியும் அழைத்திருக்கிறாளே என்று சற்று எரிச்சலுடன் மனைவிக்கு அழைப்பை ஏற்படுத்தினார்.  வழக்கத்திற்கு மாறான தாமதத்திற்கு பிறகு, முகமன் ஏதுமற்று, கொஞ்சம் சூடாக வந்து விழுந்தன வார்த்தைகள்,

"ஃபோன் பன்னுனா எடுக்க மாட்டீங்களா...?"

இன்னும் கொஞ்சம் சூடாகவே பறந்தன பதில் வார்த்தைகள்,

"ஏன் நீ மெஸேஜ் பார்க்க மாட்டியா...?"

அடுத்த ஐந்து நிமிடங்கள் அரங்கேறிய அனல் பறக்கும் சொற்போருக்குப் பிறகு அழைப்பு ஏற்படுத்தியதின் நோக்கம் நிறைவேறாமலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டது.  அதற்கு பிறகான அந்த நாள் அவர்கள் இருவருக்குமே அமைதியற்ற நாளாகவே அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

அன்று மாலை அவர்கள் இருவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டு, சமாதானமாகிய பிறகு அறிந்துகொண்ட உண்மை; மனைவி அந்த குறுஞ்செய்தியை பார்த்து இரண்டு மணித்தியாலங்களுக்குப் பிறகு, கூட்டம் முடிந்திருக்கும் என்று அனுமானித்து அழைத்திருக்கிறார். கூட்டம் முடிவடைந்த பின்னும் கணவர் கைப்பேசியை நிசப்த நிலையிலிருந்து மாற்றவில்லை என்று எண்ணி மீண்டும் மீண்டும் அழைத்திருக்கிறார்.

இப்போது இந்த காட்சியில் வார்த்தைகளை கொஞ்சம் மாற்றிப் பார்ப்போம்.

மனைவி: "மீட்டிங்க் முடிய லேட் ஆகிறிச்சோ..?" அல்லது
"ஃபோன சைலன்ஸ்ல இருந்து மாத்த மறந்து விட்டீர்களா?" அல்லது
உணர்ச்சிவசப்படாமல் "ஏம்பா ஃபோன் எடுக்கல..?"

இப்படி தொடங்கும் உரையாடல் எப்படி இனிமையாக தொடர்ந்து நிறைவுபெற்றிருக்கும் என்பதை எம்மால் ஊகிக்க முடியும்.

ஆம். வார்த்தைகள் வடிவமைக்கின்றன வாழ்க்கையை.

'நீங்கள் பேசுவது உண்மை இல்லை' என்பதும் 'நீங்கள் பொய் பேசுகிறீர்கள்' என்பதும் ஏறக்குறைய ஒரே அர்த்தம்தான்.  ஆனால் சொல்லப்படுபவரிடம்  இவை இரண்டும் இரண்டு விதமான எதிர்வினைகளை ஏற்படுத்தும். பின்னயதைவிட முன்னையதின் எதிர்வினை நிச்சயம் மென்மையானதாக இருக்கும்.

நாம் பிறருடன் வாய்மொழியாகவோ, எழுத்து மூலமோ தொடர்பு கொள்வதன் நோக்கம் எமது கருத்தை அவர்களுக்கு புரியவைப்பது மட்டுமன்றி, அதன் மூலம் நாம் விரும்புகின்ற விளைவை பெறுவதும் ஆகும்.  சரியான விளைவைப் பெற வேண்டுமெனில் சரியான வார்த்தைப் பிரயோகம் அவசியமாகிறது.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று என்பது நாம் அறிந்த திருக்குறள்.  இனிய சொற்கள் இருக்கும்போது கடுமையான சொற்களைப் பயன்படுத்துதல் என்பது மரத்திலே பழுத்து தொங்கும் பழங்களை விட்டுவிட்டு காய்களை பறித்து உண்பதற்கு ஒப்பானது என்கிறார் திருவள்ளுவர்.

வார்த்தைகள் வலிமையானவை.  அவற்றால் ஆக்கவும் முடியும்; அழிக்கவும் முடியும்.  அவற்றால் வீழ்ந்து கிடப்பவரை வீறுகொண்டு எழச் செய்து வெற்றி பெறச் செய்ய முடியும்.  முன்னேற வேண்டும் என்று முயற்சி செய்பவரை முடக்கிப்போடவும் முடியும்.

வார்த்தைகளால் முடியும் உறவுகளை உருவாக்கவும் உருக்குலைக்கவும்.
ஒற்றை வார்த்தையில்  உடைந்துபோன இதயங்கள், பிரிந்து போன சினேகங்கள், விலகிப் போன உறவுகள் ஏராளம்.

வார்த்தைகள் மனிதர்களில் மட்டுமல்ல சடப்பொருள்களிலும் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்துக்கிறது என்பதை மாஸாரு எமோடோ என்கிற ஜப்பானிய ஆராச்சியாளர் நிரூபித்துள்ளார். ஒரே அளவான கொள்கலன்களில் சுத்தமான தண்ணீரை நிரப்பி அவற்றில் சிலவற்றிடம் மென்மையான வார்த்தைகளையும், மற்றவற்றிடம் கடுமையான வார்த்தைகளையும் பேசி வந்துள்ளார்.  சில நாட்களுக்குப் பிறகு அவற்றை உறைய வைத்து நுண்ணோக்கியில் ஆராய்ந்தபோது மென்மையான வார்த்தைகள் பேசப்பட்ட நீரில் அழகான நீர்ப்படிகங்கள் உருவாகியிருப்பதையும், கடுமையான வார்த்தைகள் பேசப்பட்ட நீரில் அவலட்சணமான நீர்ப்படிகங்கள் உருவாகியிருப்பதையும் ஆச்சரியத்துடன் அவதானித்தார்.

தமிழ்நாட்டில் ஆழியாரில் அமைந்துள்ள மனவளக்கலை அறிவுத்திருக்கோயில் வளாகத்தில்  மனவளக்கலை பேராசிரியர் கலாநிதி எஸ். இலக்குமணன் அவர்கள் நடாத்திய ஆய்வுகளின் முடிவுகள் பெருவியப்புக்குரியதாய் அமைந்தன. அவர் ஒரு ஓய்வுபெற்ற வேளான் பூச்சியியல் விஞ்ஞானி மற்றும் அத்துறை பேராசிரியராதலால் தனது ஆய்வினை சரியான விஞ்ஞான முறைப்படி செய்துள்ளார். ஒரே எண்ணிக்கையிலான வெண்டைக்காய் செடிகளை இருவேறு ஒரே அளவிலான பாத்திகளில் நட்டு, ஒரு பாத்தியில் உள்ள செடிகளை தினமும் 'வாழ்க வளமுடன்' என்று வாழ்த்தி வந்துள்ளார். மற்றைய பாத்தியில் உள்ள செடிகளுக்கு வாழ்த்து ஏதும் சொல்லப்படவில்லை.  இரண்டு பாத்திகளிலும் உள்ள செடிகளுக்கும் ஒரே விதமான நீர்ப்பாசனம், உரமிடுதல் மற்றும் பராமரிப்பு முறைகள் கையாளப்பட்டன.  வாழ்த்து கூறப்பட்ட செடிகள் அதிசயத்தக்க வகையில் மற்றவற்றைவிட  60% வரை அதிக விளைச்சலைத் தந்தன.  இந்த ஆய்வு முடிவுகள் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 'ஏன்ஸியன்ட் சயன்ஸ்' (Ancient Science) என்னும் விஞ்ஞான சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டன.

எனவே எமது வார்த்தைகள் சக மனிதரிடம் மட்டுமன்றி, சடப்பொருள்களிலும், தாவரம் ஈறாக மற்ற உயிரினங்களிலும் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்தவை.

நேர்மறையான வார்த்தைகள் மனதுக்கு இதமூட்டி, சுகமான சூழலையும், சுமுகமான மனித உறவுகளையும் ஏற்படுத்துபவை.  நாமே ஒரு பரிசோதனை செய்து பார்க்கலாம். கண்களை மூடி, தளர்வாக அமர்ந்துகொண்டு, கீழ்வரும் சொற்களை ஒருவர் குறிப்பிட்ட இடைவெளி விட்டு சொல்ல, செவிமடுங்கள்:
வெளிச்சம்,  தாமரை, பச்சைப் புல்வெளி, பனி மலை, ஆகாயம்
அன்பு, பாசம், அமைதி,  நட்பு, கருணை
சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, கீழ்வரும் சொற்களை செவிமடுங்கள்:
இருள், கருகிய செடிகள், வரண்ட பூமி, பூகம்பம், விபத்து, ஆத்திரம், சண்டை, கொலை, மரணம்
இப்போது நினவுபடுத்திப் பாருங்கள். முன்னைய சொற்களையும், பின்னையை சொற்களையும் செவிமடுக்கும்போது உங்கள் மனநிலை எவ்வாறு வேறுபட்டது?  இவ்வாறுதானே நமது வார்த்தைகள் பிறர் மனங்களில் தாக்கங்களை ஏற்படுத்தும்.  இந்தப் புரிதல் நமது வார்த்தைகள் மீதான நமது பொறுப்புணர்ச்சியை அதிகரிக்கும்.  அதனால் நம்மிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் நல்லவைகளாகவே இருக்கும்.

ஒருவரை திருத்துவதற்காக சொல்லப்படும் வார்த்தைகளில் கவனம் தேவை.  அது அவரின் குறையை சுட்டிக்காட்டுவதாக அமைந்தால் நமது நோக்கம் நிறைவேறுவது கடினம்.  பொதுவாக குறைகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது ஒரு விடயம் தனக்கு புரியவில்லை என்று ஒத்துக்கொள்ளவோ ஒருவரின் தன்முனைப்பு இடங்கொடுப்பதில்லை.   'நான் சொல்வது உங்களுக்கு புரியவில்லை' என்பதைவிட 'நான் தெளிவாக சொல்லவில்லை என்று நினைக்கிறேன்' என்று தொடங்கும் உரையாடல் நாம் விரும்பும் பலாபலனைத் தரும்.

எதனைப் பேசுவது, எப்படிப் பேசுவது என்பதைப் போலவே எதனைப் பேசக்கூடாது என்பதும் மிக மிக முக்கியம். பெஞ்சமின் ஃப்ரான்க்லின் அவர்கள் சொன்னது போல் "சரியான இடத்தில் சரியான வார்த்தைகளை சொல்வதிலும் கடினமானது எதுவெனில் தூண்டப்பட்ட ஒரு தருணத்தில் தவறானதை சொல்லாதிருத்தல்."

பொதுவாக வாக்குவாதங்களின் போதுதான் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை வாரியிறைத்து விடுகிறோம். பல வேளைகளில் வாய்த்தவறி சொல்லும் வார்த்தைகள்கூட காலம் பல கடந்தும் மாறாத வடுக்களாய் மனதிலே தங்கிவிடுவதுண்டு.  பிறர் தவறு செய்யும்போது நீதிபதியாகவும், நாம் தவறு செய்யும்போது வக்கீலாகவும் நாம் ஆகி விடுகிறோம்.  நம்மை நியாயப்படுத்த எவ்வித வார்த்தைகளையும் பயன்படுத்தி, எந்த எல்லைக்கும் செல்லத் தாயாராகிவிடுகிறோம்.  பல வேளைகளில் வெற்றியும் பெற்றுவிடுகிறோம். ஆனால் அந்த வெற்றிக்கு நாம் கொடுத்த விலை மிக மிக அதிகமென்பதை  பிறகு உணர்கிறோம். பெரும்பாலும் அப்போது காலம் கடந்துவிட்டிருக்கும்; உறவுகளில் சீர்படுத்த முடியாத சேதம் விளைந்திருக்கும்.  வாதங்களில் வென்று உறவுகளை இழப்பதால் என்ன பயன்?

நாம் யார் என்பதை நமது வார்த்தைகளே உலகுக்கு உணர்த்துகின்றன. கிரேக்கப் பேரரசரும், தத்துவஞானியுமான மார்கஸ் ஒரீலியஸ் சொன்ன கூற்றொன்று 'ஒவ்வொரு செயலை செய்யும்போதும் இதுவே உங்கள் வாழ்க்கையின் கடைசி செயல் என்று நினைத்து செய்யுங்கள்' எனபதாகும்.  இதனயே கொஞ்சம் மாற்றி 'ஒவ்வொறு வார்த்தையைப் பேசும்போதும் இதுவே நமது கடைசி வார்த்தை' என்று நினைத்துப் பேசினால் வார்த்தைகள் நமது வாழ்க்கையை அழகானதாய், அர்த்தம் மிக்கதாய் வடிவமைக்கும்.

நன்றி: வீரகேசரி வார வெளியீடு / 07.10.2018

திங்கள், 8 அக்டோபர், 2018

லிங்கன் - ஒரு சமயத்தில் தோல்வியின் நாயகன் இவர்

எல்லோரிடமும் எந்நாளும் உண்டு ஒரு கேள்வி. உடற்குறை, உளக்குறை மிக்க எண்ணற்ற மனிதர்கள் எத்தனையோ மகத்தான சாதனைகள் புரிவதை கண்டும், கேட்டும்கூட எம்மைவிட்டு விலக மறுக்கும் ஒற்றைக் கேள்வி.

"என்னால் முடியுமா...?"

தயக்கத் தளைகளை நம் கால்களில் இறுகப்பூட்டி நம்மை முன்னேற விடாமல் முடக்கிப்போடும் கேள்வி. கனவு மொட்டுகள் நம்முள் மலரும்முன்னே கருகச்செய்யும் கேள்வி.

'என்னால் முடியுமா?' என்னும் கேள்விக்குறியை 'என்னால் முடியும்.' என்னும் முற்றுப்புள்ளியாக மாற்றுவது எப்படி?

உணமையில் 'என்னால் முடியுமா?' என்கிற இந்தக் கேள்விக்கு அடிப்படையாய் இருப்பது தோற்று விடுவோமோ என்கிற அச்சம். தோல்வி பயம் தருகின்ற அவநம்பிக்கையினால் முதல் அடி எடுத்து வைக்காமலேயே நனவாகாத  கனவுகள் ஆயிரமாயிரம்.

'ஒரு சிலரால்  மகத்தான வெற்றிகளை அடைய முடிகிறது என்பதே மற்றவர்களாலும் அது சாத்தியம் என்பதற்கு அத்தாட்சி' என்கிறார் ஆப்ரகாம் லிங்கன்.  அதனைச் சொல்லுகின்ற அருகதை அவரைத் தவிர வேறொருவருக்கு இருத்தல் அரிது.  ஏனெனில் ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை தோல்விகளின் தொடர்கதை. இதோ மலைக்கவைக்கும் அந்தத் தோல்வி பட்டியல்:
1816இல் அவரின் குடும்பம் தங்கள் குடியிருப்பில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப் படுகிறது. புதிய இடத்தில் குடில் அமைக்க சின்னஞ்சிறு ஆபிரகாம் லிங்கன் தனது தந்தைக்கு உதவி செய்கிறார்.
1818இல் தனது ஒன்பதாவது வயதில் தாயின் மரணம்.
1831இல் வியாபாரத்தில் தோல்வி.
1832இல் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி. அதே வருடம் தான் செய்து வந்த தொழிலையும் இழக்கின்றார்.  சட்டக் கல்லூரியில் நுழையும் முயற்சியும் தோல்வி.
1834இல் நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி தொடங்கிய வியாபாரத்தில் பெரும் நஷ்டம்.
1835இல் உயிருக்குயிராக காதலித்த, திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணின் திடீர் மரணம்.
1836இல் நரம்பு முறிவு நோயினால் பாதிக்கப்பட்டு ஆறுமாத காலம் படுக்கையில் கழிக்கிறார்.
1838இல் மாநில சட்டமன்றத்தில்  சபாநாயகர் ஆகும் முயற்சி தோல்வி.
1843இல் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சி தோல்வி.
1848இல் (1846இல்   வெற்றி பெற்று இருந்தும்) மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சி தோல்வி.
1849இல் ஜனாதிபதி ஆவதற்கு தான் அயராது பாடுபட்ட சசரி டெய்லர் வெற்றி பெற்றதும், தான் எதிர்பார்த்த நில அதிகாரி பதவியை தராததால் பெருத்த ஏமாற்றம்.
1854இல் அமெரிக்க செனட் தேர்தலில் தோல்வி.
1856இல் துணை ஜனாதிபதி நியமனத் தேர்வில் தோல்வி.
1858இல் மீண்டும் அமெரிக்க செனட் தேர்தலில் தோல்வி.

என்ன, மூச்சு முட்டுகிறதா? நம்புவதற்கு கடினமாக இருப்பினும் இவை அத்தனையும் உண்மை. நிஜம்  கற்பனையிலும் விசித்திரமானது என்பது எத்துணை உண்மை!  இத்தனை தோல்விகளையும் ஒரு மனிதர் எப்படி தாங்கிக் கொண்டார்?  சின்னச் சின்ன தோல்விகளை எல்லாம் கண்டு துவளுகின்ற, ஏன் தன்னையே மாய்த்துக் கொள்ளும் எல்லை வரை செல்லுகின்ற இந்தக்கால மனிதர்களுக்கு, தோல்விகளை கண்டு துவளாத ஆபிரகாம் லிங்கனின்  மனோதிடம் நம்ப முடியாத ஒன்றாக இருப்பதில் வியப்பில்லை.

அத்தனை தோல்விகளையும் கடந்து 1860இல் தனது ஐம்பத்தோராவது வயதில் அமெரிக்க ஜனாதிபதியானார் ஆபிரகாம் லிங்கன். வெற்றியின் பின் அவர் தனது பதவி காலத்திலும் முத்திரை பதிக்கத் தவறவில்லை. அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது நாடு பிளவுபடாமல் கட்டிக் காத்தது, கருப்பின அடிமைத்தனம் ஒழிப்புப் பிரகடனம் முதலிய செயல்களின் மூலம், படுகொலை செய்யப்பட்டு நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் அவர் இன்றும் நினைவுகூரப்படுகிறார். தோல்வி கண்டு துவளும் எண்ணற்றோருக்கு அவரது வாழ்க்கை எழுச்சியூட்டும் உதாரணம் என்பது நிதர்சனம்.

ஆபிரகாம் லிங்கனின் வெற்றியின் இரகசியம் என்ன? அது தோல்விகளின் முன்னே அடிபணியாது, முயற்சிகளை கைவிடாத திடமனம். வெற்றியாளர்கள் தடங்கல்களை கண்டு தங்கள் இலட்சியங்களை கைவிடுவதில்லை; கை விடுபவர்கள் வெற்றியாளர்கள் ஆவதில்லை. ஆபிரகாம் லிங்கன் வாழ்ந்த காலத்தில் உயிர் வாழ்ந்த 100 கோடி மக்களில் மிகச் சிலரே இன்று நினைவு கூறப்படுகிறார்கள். காரணம் வெற்றியாளர்களையே சரித்திரம் நினைவில் நிலை நிறுத்தி வைத்திருக்கிறது.

'என்னால் முடியுமா?' என்னும் சந்தேகக் கேள்விக்கு அடுத்த காரணம் நமது வயது பற்றிய ஐயம்.  ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு புதிதாக ஒன்றை தொடங்க முடியாது அல்லது சாதிக்க முடியாது என்கின்ற எண்ணம்.

பிரித்தானியாவை சேர்ந்த 97 வயதான வயோதிபர் ஒருவர் 10,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து குதித்து சாதனைப் படைத்துள்ளார்.  இந்த சாதனையையடுத்து ஜோர்ஜ் மொய்ஸி ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளிக்கையில் சொன்னது: "இவ்வாறு சாதனை செய்வது இது முதல் தடவை என்றபோதும், இது இறுதியான சாதனையல்ல.."

'மணிக்கு 108 மைல் வேகத்தில் காரோட்டி 106 வயது பெண்மணி சாதனை.' நாளிதழில் வந்த இன்னொரு செய்தி இது.

தனது 85 வயதிலும் ஒரு முன்னணி காட்சியறையில் சுறுசுறுப்பாக பணிபுரியும் ஒரு மூதிளைஞரை அண்மையில் சந்தித்து வியந்து நின்றேன்.  மனம் சோர்வுறும் போதெல்லாம் அவரோடு எடுத்துக்கொண்ட சுயபடத்தைப் பார்த்து புத்துணர்ச்சி பெறுகிறேன்.

சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்று சரித்திரம் படைத்தவர்கள் ஏராளம்.

பார்க்கின்சன் நோயை அடையாளம் கண்ட போது ஜேம்ஸ் பார்க்கின்சன் அவர்களுக்கு வயது 62.

இவ்வருட தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பொழுது டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு வயது 71.

விண்வெளியில் பயணித்த அதிக வயதான மனிதர் என்கின்ற சாதனையை படைத்த போது ஜோன் க்லென் அவர்களுக்கு வயது 77.

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் கால்பதித்த அதிக வயதான மனிதர் என்கிற சாதனையை 2013ஆம் வருடம் படைத்தபோது ஜப்பானை சேர்ந்த யுய்சீரோ மியுரா அவர்களுக்கு வயது 80. அதற்கு முன் அவர் இரண்டு முறை இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது எண்பதாவது வயதிலும்புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வுகளில் முனைப்புடன் ஈடுபட்டிருந்தார் தோமஸ் அல்வா எடிசன்.

உலகின் அதிக வயதான நெடுந்தூர ஓட்ட வீரரான ஃபவுஜா சிங் அவர்களின் வயது 101.

தனது 22வது வயதில் உலகக் கோடீஸ்வரர்கள் வரிசையில் ஒருவராக இடம்பிடித்த முகநூல் நிறுவனர் மார்க் ஷுகெர்பெர்க்கும், தனது 62வது வயதில் KFC உணவகத்தை ஆரம்பித்து வெற்றிபெற்று பெரும்பணக்காரரான ஹார்லண்ட் சண்டெர்ஸூம் நம்மைப்போன்ற மனிதர்களே.

வயது என்பது வெறும்  ஒரு எண் மட்டுமே என்று எண்ணுபவர்களுக்கு எந்த வயதிலும் சாதனை சாத்தியம்.

ஆக, தோல்வி பயமும், தங்கள் வயதைப் பற்றிய ஐயமும் அற்றவர்களின் வாழ்வில் 'என்னால் முடியுமா?' என்கிற கேள்விக்கே இடமில்லை.

'என்னால் முடியும்' என்று முன்னே செல்பவர்களை வரவேற்று வாகை சூட்டக் காத்திருக்கிறது வாழ்க்கை.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (07.10.2018)

செவ்வாய், 2 அக்டோபர், 2018

குடிக்காதவன் குடியும் கெடுமோ?

குடி குடியைக் கெடுக்குமென்று
கூக்குரலிட்டவனின்
குரல்வளை நசுக்கப்பட்டு
கெட்டுக் கிடக்கிறது அவன் குடி

'காக்கிகள்
கசிப்பினை ஒழித்திருந்தால்
கணவர் பிழைத்திருப்பார்'
அவளின் அழுகுரல் எதிரொலிக்கிறது
அவன் சாய்க்கப்பட்ட
இறப்பர் மரக் காடெங்கும்

வருமுன் காத்தல்
சமூக நோய்களுக்கு
பொருந்தாது போலும்

'உள்ளூர் போலீஸ் முதல்
நாட்டின் அதிபர் வரை
சொல்லியும் பயனில்லையே'
புத்திர சோகத்தில்
புலம்பும் தந்தை

ஏழையின் குரல் எப்பொழுது அப்பா
ஆளும் செவிகளை எட்டியது?
நாட்டை ஆள்பவர்களுக்கு - உன்
தோட்டப் பிரச்சினை துச்சம்

கசிப்பரக்கனிடமிருந்து
சக மனிதரைக் காக்க
அவன் கொடுத்த விலை
மிகப் பெரிது

அதிகாரத்தின்
குருடான கண்களையும்
செவிடான செவிகளையும்
பிரிந்த அவன் உயிர் கொண்டு
உயிர்ப்பித்து
கள்ளச்சாராயம்
இல்லாதொழியும் ஓர் நாளில்
அவன் பிறப்பும் இறப்பும் அர்த்தம் பெறும்

- சுப்ரமண்ய செல்வா -

(கள்ளச்சாரயத்திற்கு எதிராக போராடி படுகொலை செய்யப்பட்ட பாம்கார்டன் தோட்ட சமூக போராளி விஜேரத்னத்திற்கு சமர்ப்பணம்)

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (14.10.2018)

திங்கள், 1 அக்டோபர், 2018

ஒரு ஒப்புதல் வாக்குமூலம்

(இன்று உலக சிறுவர்கள் தினம்)

உலகச் சிறார்களே
உங்களிடம் அளிக்க
எங்களிடம் பாக்கியிருக்கிறது
ஒரு ஒப்புதல் வாக்குமூலம்

உங்களிடம் தருவதாய்
உறுதியளித்து
எங்கள் பெற்றோரிடமிருந்து
பெற்றுக்கொண்ட
பொக்கிஷமொன்றை
காணாமலாக்கிவிட்டோம்
அறியாதல்ல
அறிந்தே செய்தோம்

அது

மாசற்ற மண்ணும்
பசுமரக் காடுகளும்
தூசற்ற காற்றும்
தூய நன்னீரும்
காசுக்கு விலைபோகா
மாசிலாமணிகள் ஆண்ட
உன்னத உலகம்

ஆம் அதை
தெரிந்தே தொலைத்தோம்

உங்களிடம் கையளிக்க
எங்கள் பாவக்கரங்கள் கொண்டு
ஒரு புதிய உலகை
உருவாக்கினோம்

மரங்களை வீழ்த்தி
மழையை விரட்டினோம்
வேதியுரம் கொண்டு
மண்வளம் அழித்தோம்
கரிவளி கக்கச் செய்து
காற்றை கறைபடுத்தினோம்
ஒசோன் போர்வையில்
ஓட்டைப் போட்டோம்
நெகிழிக் கயிறுகொண்டு
நிலமகளை தூக்கிலிட்டோம்

மதமென்றும் இனமென்றும்
மனிதரைப் பிரித்தாளும்
சதி பயின்றோம்

உன்னத தியாகிகளை
உதைத்து விரட்டிவிட்டு
காடையர்கள் பாராள
காரணமானோம்
வாழத் தெரியாதோர்
வாழும் உலகில்
ஆளத்தெரியாதோர்
ஆட்சிதானே நடக்கும்!

அன்புச் செல்வங்களே!
அசலைத் தொலைத்துவிட்டு
போலியை கையளித்த
பாவிகளை மன்னியுங்கள்

உங்கள் பூக்கரங்கள் கொண்டு
ஒரு புத்துலகை படைத்திடுங்கள்
உங்கள் பிள்ளைகளிடம் அதனை
உவப்போடு அளித்திடுங்கள்

போலியை மீண்டும் அசலாக்கும்
புனிதப் புரட்சி மலரட்டும்!

- சுப்ரமண்ய செல்வா -

நீதியின் நிறம் கருப்பு

கருப்பு அப்பிக் கிடக்கின்றது
நீதிமன்றம் எங்கும்

குற்றம் செய்தவனும் 
குற்றம் சொன்னவனும்
காத்திருக்கிறார்கள்
கருத்த முகங்களுடன்

மழை நாளொன்றில் பூத்த சுவர் பாசிகள்
இந்தக் கொடு வெப்ப நாளில்
காய்ந்து கருத்துக் கிடக்கின்றன

கருப்பங்கி போர்த்தி
வழக்காடு பவரின்
கருவிழித் தூண்டில்கள்
காத்துக்கிடக்கின்றன
ஒரு கருப்பு மீன் இரைக்காக

கருப்பு சிறை வண்டியில்
வந்திறங்கிய
கைதிகளின் ஊர்வலம்

கருப்பு கம்பிகளின் பின்னே
அச்சத்துடன்
அலட்சியத்துடன்
துக்கத்துடன்
ஏக்கத்துடன்
கண்ணீருடன்
கவலையுடன்
அலைபாயும் கருவிழிகள்

கருத்த மேலுடை தரித்த
நீதிபதியின்
கருமை நிற எழுதுகோல்
கருப்பு மையில் எழுதிச் செல்கிறது
சில கருத்த தீர்ப்புகளை

வழக்குத் தொடுத்த
பாவத்திற்கு தண்டனையாக
நான்கு மணிநேரம்
கால்கடுக்க நின்று
வாய்தா சாபம் பெற்று
அந்த கருத்த நாளை
சபித்துச் செல்கிறான்
ஒரு வாதி

நீதிதேவதையின்
கண்களைச் சுற்றிய
கருப்புத் துணி
கொஞ்சம் விலகி இருக்கிறது
யாரேனும் இறுகக் கட்டி விடுங்களேன்.

- சுப்ரமண்ய செல்வா -
(27.09.2018)

(சில நாட்களுக்கு முன் நான் தொடுத்த வழக்கு நிமித்தம் நீதிமன்றம் சென்றிருந்தேன்)

நன்றி: தினகரன் வாரமஞ்சரி (21.10.2018)