ஞாயிறு, 31 மார்ச், 2019

கானகத்தில் ஒரு பனிமாலைப் பொழுதில்

யாருடைய காடிதென்று நானறிவேன்
ஆயினும் அவனில்லமோ சிற்றூரில்
அறியப் போவதில்லை அவன்
பனிபோர்த்திய அவன் கானகத்தை
நான் பார்த்து நிற்பதை

அருகில் பண்ணை வீடேதுமில்லா தனிமையில்
பனியுறைந்த ஏரிக்கும் காட்டிற்குமிடையே
இருள் அடரும் இவ்வந்தியில்
தரித்திருப்பதன் விசித்திரத்தை
என் சிறுகுதிரை உணர்ந்திருக்க வேண்டும்

தன் சேணத்து
மணி அசைத்து வினவுகிறது
தவறேதும் உண்டோவென
மணியசைவின் பனிப்பொழிவின்
மென்காற்றின் மெல்லொலி தவிர
வேறு சப்தம் ஏதுமில்லை

வனப்புமிகு இவ்வனமென்னை வசீகரிக்கிறது.
ஆயினுமிது தாமதிக்கும் தருணமல்ல
நிறையவிருக்கின்றன நான்
நிறைவேற்றக் காத்திருக்கும் வாக்குறுதிகள்
தொலைதூரம் செல்ல வேண்டும் நான் துயில்கொள்ளும் முன்
ஆம்
தொலைதூரம் செல்ல வேண்டும் நான் துயில்கொள்ளும் முன்.

ஆங்கில மூலம்:  Stopping by the woods on a snowy evening - Robert Frost

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (24.03.2019)

செவ்வாய், 19 மார்ச், 2019

வாசல் வழி


மூன்று நாட்களுக்கு முந்திய இரவில்
இப்பெரும் பிரபஞ்சத்தில் பிரவேசித்த
பெண் சிசுவின் முதல் வருகை
உதிர்ந்த ஓர் உயிரின்
இறுதிப்பயணத்தின் தொடக்கம்
மணமுடித்த ஜோடி ஒன்றின்
மறுவீட்டு அழைப்பு
முன்ஜாமப் பொழுதொன்றில்
பூனையென வெளியேறும்
இளம்பெண்ணின் படிதாண்டல்
வன்ம வார்த்தைகள் வீசி
விரைந்து கடக்கும்
உறவோன்றின் பிரிவு
அறைந்து சாத்தப்பட்ட அவமானம்
ஊரடங்கிய ஓரிரவில்
உள்நுழையும் கள்வனின் அத்துமீறல்
இப்படியும் இன்ன  பிறவுமாக
எத்தனையோ சம்பவிக்கலாம்
வியர்வை பெருகும் கரங்கள் கொண்டு
தச்சன் உருவாக்கும்
இந்த வாசற்கதவு வழி!

(நன்றி: தினகரன் வாரமஞ்சரி - 17.03.2019)

திங்கள், 11 மார்ச், 2019

தடைகளும் வரங்களே

பூச்சி எப்படி அதன் பூச்சிக்கூட்டிலிருந்து வெளிவந்து பறக்கத் தொடங்குகிறது என் அறிய விருப்பிய ஒருவர் ஒரு பூச்சிக்கூட்டினை தனது வீட்டிற்கு எடுத்துச்சென்றார். சில நாட்களுக்குப் பின் அந்த பூச்சிக்கூட்டில் சிறு துளையொன்று உருவாகி இருப்பதைக் கண்டு அதன் அருகில் அமர்ந்து கவனிக்கத் தொடங்கினார். நேரம் செல்லத் தொடங்கியது. பூச்சி அந்த சிறு துளை வழியாக தன்னை திணித்து வெளிவர பல மணி நேரமாக போராடியது. ஒரு கட்டத்தில் எந்த அசைவுமில்லை. இனிமேல் வெளிவர முடியாமல் சிக்கிக்கொண்டதுபோல் தோன்றியது. அதன்மீது பரிதாபப்பட்டு உதவ எண்ணிய அந்த மனிதர் கத்தரிக்கோலொன்றினை எடுத்து கூட்டின் முனையை வெட்டி துளையை பெரிதாக்கினார். பூச்சி எளிதாக வெளிவந்தது. ஆனால் அதனுடைய உடல் வீங்கியும், இறகுகள் சுருங்கியும் இருந்தன. இறகுகள் பெரிதாகி பூச்சி பறக்கத் தொடங்கும் தருணத்திற்காக காத்திருந்தார். ஒன்றும் நடக்கவில்லை. அது தொடர்ந்து பருத்த உடலுடனும், சுருங்கிய சிறகுகளுடனும் சிரமத்துடன் ஊர்ந்து திரிந்தது. அதனால் இனி பறக்கவே முடியாது.

அந்த மனிதர் தனது கருணையினால் எழுந்த அவசரத்தில் இயற்கையின் அற்புத ஏற்பாடு ஒன்றினை புரிந்துக்கொள்ளத் தவறிவிட்டார். அது இலகுவாக வெளிவராமல் தடுக்கப்படுவதில் ஒரு நோக்கம் இருந்தது. அந்த சிறு துளை வழியாக வெளிவர பூச்சி போராடும்போது அதன் உடலில் நிறைந்துள்ள திரவம் சிறகுகள் பக்கம் உந்தித் தள்ளப்பட்டு, கூட்டை விட்டு வெளியே வந்ததும் பறப்பதற்கான ஆற்றலைக் கொடுக்கும். சுதந்திரமும், சிறகடித்துப் பறத்தலும் போராட்டத்திற்கு பின்பே சாத்தியம். அந்த பூச்சியின் போராட்டம் தடுக்கப்பட்டதால் அதன் உண்மையான சுதந்திரம் பறிபோனது.

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் தடைகளும் அத்தகையதே. மனித வாழ்க்கை எப்பொழுதும் மலர் தூவிய பாதையிலே நடைபயிலும் சுக பயணமாக இருப்பதில்லை. பல வேளைகளில் அது கல்லும் முள்ளும் நிறைந்த இருள் சூழ்ந்த கானகப் பயணமாகவும் இருப்பதுண்டு. உண்மையில் இந்த இருமை இயல்பே வாழ்க்கையை சுவாரஸ்யமிக்கதாக ஆக்குகின்றது என்று சொல்லலாம். பகல் – இரவு, நன்மை – தீமை, உண்மை - பொய் என உலகில் அனைத்தும் இரட்டைத் தன்மையோடு இருப்பதை நாம் காணலாம்.

தடைகளை இரண்டு விதங்களில் எதிர்கொள்ளலாம். தடைகளைக் கண்டு தளர்ந்து தன் விதியை நொந்து கழிவிரக்கத்தில் காலம் கடத்தலாம். இது எதிர்மறை எதிர்கொள்ளல். அல்லது தடைகளுக்கான காரணங்களை ஆராய்ந்து, அவற்றை வெற்றி கொள்வது எப்படி என திட்டமிட்டு, செயலாற்றி, தடைகளைத் தாண்டி முன் செல்லலாம். இது நேர்மறை எதிர்கொள்ளல்.

தடைகள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு அம்சம் என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டு நேர்மறையாக எதிர்வினையாற்றும்பொழுது வாழ்க்கையில் வெற்றி நம் வசமாகும்.

பாதியளவு நிறைந்துள்ள ஒரு பாத்திரத்தை பார்த்து பாதி நிறைந்திருக்கிறது என்று சொல்லலாம். அல்லது பாதி காலியாக இருக்கிறது என்றும் சொல்லலாம். பூத்துக் குலுங்கும் ரோஜா செடியின் முட்களை புறக்கணித்துவிட்டு மலர்களின் அழகில் மனம் மயங்கலாம். அல்லது மலர்களை மறந்துவிட்டு முட்களை சபிக்கலாம். அனைத்தும் நம் பார்வையில்தான் இருக்கிறது.

பல வேளைகளில் தடைகள் வரங்களாக அமைந்துவிடுவதுண்டு. ஓஷோ ஒரு கதை சொல்கிறார். அது ஒரு சீன பெண் துறவியைப் பற்றிய கதை.

ஒரு கிராமத்துக்கு சென்ற அந்த பெண் துறவி தனது போதனைகளை முடித்தபோது மாலையாகி இருள் படர தொடங்கி இருந்தது. அடுத்த கிராமம் தொலைவில் இருந்தது. இரவில் பயணிக்க இயலாது. அந்த கிராமத்தில் உள்ள வீடுகளை தட்டி இரவில் தங்கிக்கொள்ள இடம் கேட்டார். அவர்கள் அவரது தர்ம வழியை பின்பற்றுபவர்கள் அல்லர். அத்தோடு அந்தப் பெண்மணி அவர்களுக்கு பரிச்சயமற்றவர். யாரும் அவருக்கு இடம் தர முன்வரவில்லை. வேறுவழியின்றி அன்று இரவு அவர் அந்த ஊரின் வயல் மேட்டிலேயே உறங்க நேர்ந்தது. ஒரு மரத்தடியில் படுத்து அமைதியாக உறங்கினார். இரவு இரண்டு மணிக்கு விழிப்பு ஏற்பட்டது. குளிர் அதிகமாக இருந்ததால் உறக்கம் கலைந்தது. சுற்றுமுற்றும் பார்த்தார். அவர் கண்ட காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. சுற்றிலும் அமைதி. மரங்களும் செடிகளும் நிலவொளியில் குளித்துக் கொண்டிருந்தன. மலர்கள் அனைத்தும் மலர்ந்து மணம் வீசின. மரம் முழுவதும் மலர்கள். மெல்லிய தென்றல் மேனியை தழுவி சென்றது. அந்த அற்புத பொழுதின் ஆனந்தத்தை அவர் முழுமையாக அனுபவித்தார்.

மறுநாள் கிராமத்திற்கு சென்று தனக்கு தங்க இடம் தர மறுத்தவர்களை வணங்கி நன்றி சொன்னார். "நீங்கள் எனக்கு இடம் தந்திருந்தால் நான்கு சுவர்களுக்குள் எனது இரவு கழிந்திருக்கும். நீங்கள் மறுத்ததால் ஒரு அற்புத அனுபவத்தை பெரும் பாக்கியம் எனக்கு கிட்டியது. வயல்புரத்தில் மலர்ந்த மலர்களைக் கண்டேன். முழு நிலவைக் கண்டேன். என் வாழ்வில் இதுவரையில் கண்டறியாத ஒன்றை கண்டேன். நீங்கள் எனக்கு இடம் அளித்திருந்தால் நான் அதை இழந்திருப்பேன்." என்று சொன்னார்.

இதுபோல் தடைகள் வரங்களாக மாறிய அனுபவங்கள் நம் எல்லோருக்கும் இருக்கும்.

பல வேளைகளில் தடைகள் நாமே அறிந்திராத நமது பலத்தை நமக்கு அடையாளம் காட்டும் வாய்ப்புகளாகவும் அமைந்துவிடுவதுண்டு.

ஓட்டப்போட்டியில் கடைசியாக வந்த வீரர் கூட ஒரு யானையால் துரத்தப்பட்டால் போட்டியில் வென்றவரை விடவும் வேகமாக ஓடி தப்பிக்க முயல்வார்.

தடைகளை வென்று உலகின் உச்சியைத் தொட்ட அருணிமா சின்ஹாவின் கதை தனித்துவமானது.

அவர் இந்தியாவின் தேசிய மட்ட கரப்பந்தாட்ட வீராங்கனையாக இருந்தவர். ஒரு நாள் அவர் தொழில் விஷயமாக புதுடில்லி நோக்கி தொடருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது நான்கு திருடர்கள் அவரது தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார்கள். கூட்டம் நிறைந்த பெட்டியில் எவரும் உதவிக்கு வராத நிலையில் அவர் தனி ஒரு பெண்ணாக நின்று அவர்களுடன் போராடினார். தங்கச் சங்கிலியை பறிக்க முடியாத ஆத்திரத்தில் அவர்கள் அவரை தூக்கி தொடருந்துக்கு வெளியே வீசினார்கள். கீழே விழுந்து அடிபட்டவர் சுதாகரிப்பதற்குள் எதிர் திசையில் இருந்து வந்த வேறொரு தொடருந்து அவரது இடது காலின் மேல் ஏறி சென்றதால் அதனை முழங்காலுக்குக் கீழ் துண்டிக்க வேண்டி வந்தது. அந்த இளம்பெண்ணின் வாழ்க்கை இருண்டது. ஆயினும் மனதை தேற்றிக்கொண்டார். எதிர்காலம் சூனியமான நிலையில் மருத்துவமனையின் கட்டிலில் படுத்தவாறு அவர் ஒரு நம்பமுடியாத முடிவை எடுத்தார். அது எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைவது என்பது. வழமைபோல் கேள்விப்பட்டவர்கள் அனைவரும் எள்ளி நகையாடினார்கள். மனம் தளராது தொடர்ந்து போராடி தனது கனவை மெய்ப்பித்தார். எவரெஸ்ட் மலை ஏறிய உலகின் முதலாவது கால் துண்டிக்கப்பட பெண் என்னும் சாதனையை படைத்தார். 2015ஆம் வருடம் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது.

ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் தடைகளும், பிரச்சினைகளும் வாழ்க்கையில் நம்மை தகவமைத்துக்கொள்ள இயற்கை நல்கும் நல்வாய்ப்புகள் என்பது புரியும்.

நடைபயிலும் குழந்தை சமனிழந்து விழுந்து அழும்போது தாய் தூக்காமல் பார்த்திருப்பது அதன்மீது அன்பு இல்லாமையினால் அன்று. அதுவாகவே எழுந்து நடக்கும் ஆற்றலை குழந்தை பெற வேண்டும் என்பதற்காகவே.

மண்ணின் மேற்பரப்பில் மாணிக்கக் கற்கள் கிடைப்பதில்லை. பல்லாண்டு கால தொடர் அழுத்தமே மண்ணுக்கடியில் கூழாங்கற்களை மாணிக்கக் கற்களாய் மாற்றுகிறது.

காட்டில் வளரும் எல்லா மூங்கில்களும் புல்லாங்குழல்கள் ஆவதில்லை. வெட்டப்பட்டு, பதனிடப்பட்டு, உரசித் தேய்க்கப்பட்டு, துளையிடப்பட்ட மூங்கில்கள் மட்டுமே இன்னிசை பரப்பும் புல்லாங்குழல்கள் ஆகும் பேற்றினைப் பெறுகின்றன.

சிலவேளைகளில் வாழ்க்கையில் தடைகளும், போராட்டங்களும் நமக்கு அவசியமாயிருக்கிறது. போராட்டமற்ற வாழ்வு நம்மை முடமாக்கும். நமது உண்மையான ஆற்றல் நமக்குத் தெரியாமலே போய்விடும்.

எனவே, தடைகளைக் கண்டு தயங்காது அவற்றை நேர்மறையாக எதிர்கொள்வோருக்கு தடைகளும் வரங்களே.

(நன்றி: வீரகேசரி வார வெளியீடு (10.03.2019)

திங்கள், 4 மார்ச், 2019

இருமை இருப்பு

வாசல்களில் கழற்றி விடப்படும் காலணிகளைப் போல்
வேஷம் கலைந்து வீடடைகிறோம்
வெளியுலக ஆடைகளைந்து
அழுக்கு தீர குளித்து
உண்மை உடை தறிக்கிறோம்
முகமூடிகளைப் பத்திரப்படுத்துகிறோம்

சாதி கடந்தவர்கள் நாம்
எம் வாரிசுகளுக்கு
வாழ்க்கைத்  துணை தேடும் வரை

மதங்களை கடந்து மனிதரை நேசிக்கும்
மகாத்மாக்கள் நாம்
மதங்களின் பெயரால்
மனிதரை மாய்த்தாலும்
மௌனித்தே இருப்போம்

எமக்கில்லை
ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வு
நம் மாடி வீட்டு முல்லைக்கொடி
அயல்வீட்டு ஏழைக் கொம்பை
பற்றிப் படராத வரை

நாட்டுப்பற்றாளர் நாம்
நமது கட்டிலடி கறுப்புப்பணப் பெட்டிகள்
நம்மைக் காட்டிக் கொடுக்காத வரை

தமிழ் நமக்கு உயிர்
நம் பிள்ளைகளை
பன்னாட்டு பள்ளியில் சேர்க்க
பல லட்சம் செலவழிப்போம்
தங்கிலீஷில் பேசுவதே
இங்கிதம் எனக் கொள்வோம்

பெண்மையை போற்றுவோம்
நம் வீட்டுப் பெண்டிர்
தம்மாசைகளை ஆழப்புதைத்து
நம்மிஷ்டம்போல் இருக்கும் வரை

இப்படியாகவும்
இன்னும் பலவாகும்
இருமை இருப்பின்
மறுவடிவங்கள் நாம்

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (03.03.2019)

இலையாட்டம்

ஒன்றுபோல் நடனமிடுவதில்லை
ஒரு செடியின் எல்லா இலைகளும்
மேலும் கீழும்
வலமும் இடமும்
இடமும் வலமும்
முன்னும் பின்னுமாய்
எல்லா திசைகளிலும்
களிநடனம் புரிகின்றன
ஆம் என்றும்
இல்லை என்றும்
இருக்கலாம் என்றும்
காற்றோடு கலந்துரையாடுகின்றன
காற்றின் ஸ்பரிசத்தில் நாணி
காற்றோடு காதல் செய்து
காற்றோடு கலவி செய்து
களைத்துத் துயில்கின்றன
சில பொழுதுகளில்
எதிர்த்து நின்று தோற்றுப் போய்
காற்று கடந்ததும் தலைநிமிர்கின்றன
காற்றுத் தீண்டாத பொழுதுகளில்
அசைவற்று நிஷ்டையிலிருக்கின்றன
பிரிதொரு நாளில்
காற்றின் துணையோடே
உயிர்த் துறக்கின்றன.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி (03.03.2019)