திங்கள், 31 அக்டோபர், 2016

தீபாவளி

தீபாவளி என்பது
ஒரு நினைவூட்டலே.
நமக்குள் நடமாடும்
நரகாசுரனை
நாமே தேடி அழித்திட
தினந்தினம்
தீபாவளியே!

-- சுப்ரமண்ய செல்வா --

புதன், 26 அக்டோபர், 2016

மௌனத்தின் சப்தம்

நடுநிசி இரவின் விழிப்பில்
அருகில் யாருமில்லா
தனிமைத் தருணங்களில்
மௌனம்
பெருங்குரலெடுத்து பேசும்

இதய மயான மூலையில்
யாருமறியாது மூடிய குழியை
தோண்டத் தூண்டும்
ஈவிரக்கமின்றி ஆணையிடும்

தோண்டத் தோண்ட
திகில் மிகும்

ஓ...
ஒரு சவக்குழிக்குள்
இத்தனை எலும்புக்கூடுகளா.?!

நெஞ்சறிந்து வஞ்சித்தது
அஞ்சாது பொய்யுரைத்தது
கெஞ்சியும் இரங்காதது
ஆணவத்தில் ஆர்ப்பரித்தது
அச்சமின்றி இச்சித்தது
துச்சமென இகழ்ந்தது
இருந்தும் ஈயாதது
தெரிந்தும் திருடியது
போலியாய் புகழ்ந்தது
முறையற்று காமுகித்தது
பொறாமையில் புழுங்கியது
புறம்பேசி மகிழ்ந்தது

தோண்டத் தோண்ட
தோன்றிக்கொண்டேயிருக்கும்
ஆழப்புதைத்த அவலங்கள்

திகில் கண்டு திளைக்கும்
மௌனத்தின் சப்தத்தில்
மனசாட்சி விழித்தேழுந்து
மருகித் தவிக்கும்.

== சுப்ரமண்ய செல்வா ==

SMILE

Smile, they say, is contagious
Yet...
You refuse to return my smile
You search for hidden meanings

Who is he?
Why is the smile?
What does he want?

Lost in your quest for reason
Is a glorious moment when
A lifelong bond can blossom

Smile is a blessing
Only unto the humanity

Hence dear stranger
Unlock your lips
Let it curl a bit
Add some warmth in eyes
Smile
Not for this
Not for that
Just for the sake of smile.

== Subramanya Selva ==

Published in Daily News - 26.10.2016

தொடுதூரத்தில் விடிவானம்

கொஞ்சம் வெளியே வா தோழா
கொஞ்சம் சம்பாஷிப்போம்...

என்ன தயக்கம்?

சுய இரக்க சுவர்களுக்குள்
சுகம் கண்டது போதும்
வா வெளியே

அடிமைப்பட்டிருப்பதை
அறியாதிருத்தலே
ஆபத்தின் ஆரம்பம்
ஆனந்த அடிமைகள்தான்
சுதந்திரத்தின் முதல் எதிரிகள்

சுயவிருப்பக் கைதி நீ
உனது சிறை உனது சிருஷ்டி
காவலனும் நீ கைதியும் நீ
பூட்டுகள் ஏதுமில்லை வெளியே
உள்ளே நீயிட்ட தாள்
திறந்து வா

தயக்கத் தளைகளை
தகர்த்தெறிந்து வா
தற்சோதனைச் சாலையில்
கொஞ்சம் பயணிப்போம்

என்னதான் உன் பிரச்சினை?
ஏன் இந்த முடக்கம்?

'எதற்கும் உதவாதவன் நான்'
என்கிறாய்

அறிவாயா நண்பா
ஆண்டுகள் பலகோடியான
அகிலத்தின் சரித்திரத்தில்
உன்னைப்போல் இன்னொருவன்
என்றும் இருந்ததில்லை
இனியும் வரப் போவதில்லை
தனிப்பிறவி நீ - உன்
தனித்துவத்தை கொண்டாடு
தரணியறிய பறைசாற்று

'தொட்டதெல்லாம் தோல்வி' என்கிறாய்

சொல்.
எத்தனை கனவு விதைத்தாய்?
எத்தனை இரவு விழித்தாய்?
வீழ்ந்தாய்;
எத்தனை முறை எழுந்தாய்?

பெருங்கனவு... பெருவிருப்பம்
அயரா முயற்சி... சிதரா சிந்தனை
தளரா உழைப்பு... ... தணியா ஆர்வம்
தடைகளுக்கு அஞ்சா பெருநெஞ்சம்
தோல்வி கண்டு துவளா திடமனம்
இவைதான் நண்பா
வெற்றியாளரின் வீர லட்சணங்கள்

வெற்றி மாளிகைகளின்
வெளிப்பூச்சு கண்டு வியக்கிறாய்
கூர்ந்து பார் உள்ளே
தடைக்கற்கள் எல்லாம்
சுவர் கற்களாய் உருமாறிய
தடயம் தெரியும்

வெற்றி என்பது
எட்டித் தொடும் இலக்கல்ல.
தொடரும் பயணம்.
ஒரு நாளில் உருவாகவில்லை
ரோமாபுரி!

முடியாதென்பதற்கு
முன்னூறு காரணம் சொல்கிறாய்
முடியும் என்பதற்கு
ஒன்று கூடவா இல்லை உன்னிடம்?
தேடு.
உனக்குள் உள்ளது பொக்கிஷம்

மூடிய கதவை
முழுநேரம் வெறிக்கிறாய்
திறந்திருக்கும் கதவுகள் பக்கம்
திரும்ப மறுக்கிறாய்

தட்டினால் திறக்கப்படுவதும்
கேட்பதால் கொடுக்கப்படுவதும்
வெட்டிக்கதையல்ல
வாழ்க்கையின் வேதம்

எழுந்து வா!
எட்டி நட!

தொலைதூரத்திலல்ல தோழா

தொடுதூரத்தில்தான்
விடிவானம்!

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

மன்னித்துவிடு!

வெறுக்கப்படுபவரைவிட
வெறுப்பவர்க்கே வேதனை அதிகம்

வெறுப்புச் சுமை சுமந்து
நடக்கும் வாழ்வு கொடிது

சுமையிறக்கிய பறவையாய்
சுதந்திர வானில்
சிறகடித்துப் பறக்க ஆசையா...?

மன்னித்துவிடு.

மன்னிக்காமல்
மறத்தல் அரிது

முகம் பார்த்து மன்னிக்க
முடியவில்லையா?
அகம் நிறைந்து மன்னித்துவிடு

தன்னை தான் வெறுத்தலே
தாளாத சுமை
உன்னையும் சேர்த்து
மன்னித்துவிடு

விதிவிலக்கல்ல நீ
எல்லா இதய வீட்டுக்குள்ளும்
இறுகப் பூட்டிய
இருண்ட அறை உண்டு

இறந்தகாலம்
இறந்த காலம்
மற

ஏனெனில் இங்கு
கடந்த காலமற்ற ஞானியுமில்லை
எதிர்காலமற்ற பாவியுமில்லை.

==  சுப்ரமண்ய செல்வா  ==

சனி, 22 அக்டோபர், 2016

புன்னகை செய்

புன்னகை திரும்பி வருமாம்...
ஆயினும் நீ
என் புன்னகையை
திருப்பித் தர மறுக்கிறாய்.

காரணம் தேடுகிறாய்.

யார் இவன்?
எதற்கிந்த புன்னகை?
என்ன இவன் எதிர்பார்ப்பு?

உணர்ந்து கொள்
உன் காரணத் தேடலில்
உன்னத உறவொன்று உருவாகும்
பொக்கிஷ நிமிஷங்கள்
தொலைந்து போகலாம்

புன்னகை
மனிதருக்கு மட்டுமேயான வரம்...

ஆதலினால் அன்பான அன்னியனே
பூட்டிய உதடுகளை திற
கொஞ்சம் அவை விரியட்டும்
கண்களில் கொஞ்சம்
சினேகம் சேரட்டும்

புன்னகை செய்.

எதற்காகவுமல்ல
புன்னகைக்காக புன்னகை செய்.

திங்கள், 17 அக்டோபர், 2016

உயிர்ச்சொற்கள்

தமிழில் உயிரெழுத்து
பன்னிரெண்டு
ஆயினும் உண்மையில்
ஒவ்வொறு  எழுத்துக்கும்
உயிருண்டு
ஒவ்வொறு வார்த்தைக்கும்
உயிருண்டு

அன்பு காட்டும் வர்த்தைகள்
வன்மம் கக்கும் வார்த்தைகள்
ஆசை சொல்லும் வார்த்தைகள்
ஆளைக் கொல்லும் வார்த்தைகள்
ஆறுதல் வார்த்தைகள்
ஆத்திர வார்த்தைகள்
பாசம் பகிரும் வார்த்தைகள்
பாசாங்கு வார்த்தைகள்
சிந்தனை தூண்டும் வார்த்தைகள்
சினம் கிளரும் வார்த்தைகள்
பலம் தரும் வார்த்தைகள்
பரிகசிக்கும் வார்த்தைகள்
வியப்பு தரும் வார்த்தைகள்
விலைபேசும் வார்த்தைகள்
ஈரம் சொட்டும் வார்த்தைகள்
வறண்ட வார்த்தைகள்
உயிர் காக்கும் வார்த்தைகள்
உயிர் போக்கும் வார்த்தைகள்

             ********

என்றோ யாரோ சொன்ன
வாத்சல்ய வார்த்தையொன்று
இன்றும் மனதை நெகிழ்த்தும்

சொல்ல மறந்த
வார்த்தயொன்றின் நெருடலில்
நெஞ்சம் கனக்கும்

வருடங்கள் கடந்தும் மாறாதிருக்கும்
கீறிச் சென்ற வார்த்தைகள் தந்த
ரணங்களும் வலியும்

             ********

வார்த்தைகள்... வார்த்தைகள்... வார்த்தைகள்...

இறுதியில் மிஞ்சுவது
வார்த்தைகள் மட்டுமே
அவை நல்லவைகளாய்
இருந்துவிட்டு போகட்டுமே!

== சுப்ரமண்ய செல்வா ==

திங்கள், 10 அக்டோபர், 2016

ஆனந்த அடிமைகள்

தொலைக்காட்சி தொடர்களில்
தொலைந்துபோன தாய்மை

இணையப் பெருங்காட்டில்
தொலைதூரம் பயணிக்கும் தந்தை

முகநூலில் அகம் தொலைத்து
சுகம் காணும் மகன்

'வாட்ஸப்' வசீகரத்தில்
தன்வசமிழந்த மகள்

ஓடிக் கூடி விளையாடும் பருவத்தில்
* 'கோபப்பறவைகள்'
# 'கோவில் ஓட்டம்'  என
விரல்நுனி விளையாட்டில்
வீணாகும் பால்யம்

புத்துலகின் புத்திரரென
மார்தட்டும் நாம்

உண்மையில்....

அறிவியற் சிறையின்
விருப்பக் கைதிகள்

மெய்நிகர் உலகின்
ஆனந்த அடிமைகள்

(* Angry Birds / # Temple Run)

-- சுப்ரமண்ய செல்வா  --

வியாழன், 6 அக்டோபர், 2016

கற்றுத் தந்த கடவுளர்கள்...

தாய்
முதல் ஆசிரியை
ஆசிரியை
இரண்டாவது தாய்
ஆசிரியன்
தாயுமானவன்!

அன்னை தந்தைக்கு
அடுத்த தெய்வம்...
அருளியதனைத்தும்
அழியாச் செல்வம்

கருங்கற் பாறைகளை
கலைநயச் சிலைகளாய்
செதுக்கிய உளிகள்
ஒதுங்கிப் பார்த்து
உவகையுறும்

அறிவொளி காட்டி
அறியாமை இருளகற்றி
தடம் மாறும் தருணங்களில்
கரம்பற்றி வழிகாட்டி
நல்லதை ஊட்டி
அல்லதை அகற்றி
கனவுகள் விதைத்து - பெருங்
காட்சிகள் காட்டி...

இன்னொரு தாயாய்
இன்னொரு தந்தையாய்
ஒரு தாய் வழிப் பிறப்பாய்
உறவாய் நட்பாய்...

பிறப்பெத்தனை வேண்டும்
பெற்றதை ஈடு செய்ய

நாமறிந்த தமிழில்
'நன்றி' தவிர வேறில்லை!

--  சுப்ரமண்ய செல்வா  --

(06.10.2016 - ஆசிரியர் தினம்  -  நேற்றைய.. இன்றைய... நாளைய ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்)

நீ நான் தெய்வம்

ஒரு நேசப்   பார்வை
ஒரு சினேகப் புன்னகை
ஒரு ஆறுதல் வார்த்தை
ஒரு செவிகொடுத்தல்
எல்லோரும் இன்புற்றிருக்க
ஒரு நினைப்பு
உதவ நீளும் கரங்கள்
உயர்த்த விரையும் கால்கள்
மற்றவர் மகிழ்ச்சி கண்டு
மகிழும்  ஒரு மனசு
போதுமிது...
தேடித்திரிய  தேவையில்லை
தெய்வம் இங்கு நீயும் நானும்!

- சுப்ரமண்ய செல்வா -