ஞாயிறு, 21 அக்டோபர், 2018

எண்ணிய வண்ணம் வாழ்வு: பகுதி-1 எண்ணமும் குணமும்

மூலம்:  As a Man Thinketh by James Allen        தமிழில்: சுப்ரமண்ய செல்வா

மனிதன் எதை எண்ணுகின்றானோ அதுவாகவே ஆகின்றான் என்பது முதுமொழி.  இந்தக் கூற்று மனித இருப்பின் சகல பரிமாணங்களையும் தழுவி நிற்கின்றது.  அவன் வாழ்வின் ஒவ்வொறு நிலைக்கும் சந்தர்ப்பத்திற்கும் பொருந்தி நிற்கிறது.  மனிதன் என்பவன் உண்மையிலேயே அவனது எண்ணங்களே.  குணம் என்பது அவனது எல்லா எண்ணங்களினதும் மொத்தக் கூட்டலே.

விதை இன்றி செடி இல்லை.  விதையிலிருந்தே செடி எழுச்சி பெறுகிறது. அவ்வாறே மனிதனின் ஒவ்வொறு செயலும் அவனுள் மறைந்திருக்கும் எண்ணம் என்னும் விதைகளிருந்து எழுச்சி பெறுகிறது.  இது தற்செயலான செயல்களுக்கு மட்டுமன்றி திட்டமிட்டு செய்யும் செயல்களுக்கும் சமமாக பொருந்தும்.

செயல் என்பது எண்ணத்தின் மலர்ச்சி.  இன்பமும் துன்பமும் அதன் கனிகள். ஆக மனிதன் சேகரிக்கும் சுவையானதும் மற்றும் கசப்பானதுமான அத்தனை கனிகளும் அவனால் பயிரிடப்பட்டவையே.

எண்ணமே எம்மை உருவாக்கியது
எண்ணமே எம்மை வார்த்தது
கள்ள மனமுடையோனை துன்பம் தொடர்கிறது
காளைதனை தொடரும் சக்கரம் போல்
நல்ல மனமுடையோனை இன்பம் தொடர்கிறது
அவனது சொந்த நிழலைப் போல்... சர்வநிச்சயமாய்.

மனிதன் என்பவன் இயற்கை நியதிக்குட்பட்ட பரிணாமமே தவிர, அவன் சிறப்பான சிருஷ்டி ஏதும் அல்ல.  காரணமும் விளைவும் என்பது நாம் கண்ணால் காண்கின்ற பொருள்மயமான இந்த உலகில் எவ்வளவு சாசுவதமானதோ, எண்ணங்கள் என்னும் மறைந்திருக்கும் உலகிலும் அது சாசுவதமானதே.  ஆக, உயர்ந்த தெய்வீக குணம் என்பது அதிர்ஷ்டவசமாக கிடைத்த சலுகை அன்று.  அது உயர்ந்த தெய்வீக எண்ணங்களுடனான நீண்ட உறவின் இயற்கையான வெளிப்பாடே.  அது போன்றே இழிவான, மிருகத்தனமான குணம் என்பது தொடர்ந்து கீழான எண்ணங்களுக்கு அடைக்கலம் கொடுத்ததன் பிரதிபலனே.

மனிதன் ஆவதும் அழிவதும் அவனாலேயே. எண்ணம் என்னும் பட்டறையில் அவன் தன்னையே அழித்துக்கொள்ளும் ஆயுதங்களை படைக்கின்றான்; அதே பட்டறையில் அவன் உவகை, ஊக்கம், அமைதி என்னும் சுவர்க மாளிகைகளை உருவாக்கக் கூடிய கருவிகளையும் படைக்கின்றான். சரியான எண்ணத் தேர்வினாலும் செயல்பாட்டினாலும் அவன் தெய்வீக பூரணத்துவம் அடைகின்றான்.  அதேபோல் தவறான எண்ணத் தேர்வினாலும் செயல்பாட்டினாலும் அவன் மிருகத்தைவிட கீழான நிலைக்குப் தள்ளப்படுகின்றான். இந்த இரண்டு எல்லைகளுக்கும் இடைப்பட்டதுதான் எல்லா விதமான குணங்களும்.  மனிதனே அவை அனைத்தினதும் படைப்பாளனும் எஜமானனும் ஆவான்.

ஆன்மாவைப் பற்றிய பழமையான ஆனால் இன்று மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள அற்புதமான உண்மைகளில் உன்னதமானது எதுவெனில் மனிதனே அவனது எண்ணத்தின் எஜமான். அவனது குணத்தின் கர்த்தா. அவனே அவனது சொந்த நிலையை, சூழ்நிலையை, தலைவிதியை உருவாக்குபவனும் உருமாற்றுபனும் ஆவான்.

அற்புத ஆற்றலும், அறிவும், அன்பும், கருணையும் படைத்தவனும் தனது எண்ணங்களின் எஜமானனும் ஆன மனிதன் எல்லா சூழ்நிலைகளுக்கான பதில்களை மட்டுமன்றி தான் விரும்பியவாரெல்லாம் தன்னை மாற்றிக் கொள்ளவும் புதுப்பித்துக் கொள்ளவும் தேவையான அருமருந்தினை தன்னகத்தே கொண்டுள்ளான்.

மனிதனே எப்பொழுதும் அவனின் எஜமான் - அவன் எவ்வளவு பலஹீனனாய், எவ்வளவு கைவிடப்பட்ட நிலையில் இருப்பினும்.  ஆனால் பலஹீனமான நிலையில், கீழான நிலையில் அவன் தன்னை ஆளத் தெரியாத முட்டாள் எஜமானனாய் இருக்கிறான்.  தனது படைப்பின் நியதி பற்றியும்  இருப்பின் மகிமை பற்றியும் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கும்போது, அவன் புத்திசாலி எஜமானன் ஆகிறான். அப்போது ஆக்கப்பூர்வமான எண்ணங்களுக்காக தனது ஆற்றலை புத்திசாலித்தனமாக பயன்படுத்துகின்றான்.   எண்ணங்களின் நியதியை மனிதன் தன்னுள்ளே கண்டுபிடிக்கும்போதே அவன் தன்னை முற்றும் உணர்ந்த எஜமானன் ஆகின்றான். இந்த கண்டுபிடிப்பு என்பது  முற்றிலும் சுய ஆராய்ச்சி, பிரயோகம், அனுபவம் சார்ந்ததே. 

தங்கமும் வைரமும் எப்படி நீண்ட தேடுதலும் தோண்டுதலுக்கும் பின்பே கிடைக்கின்றதோ  அப்படியே மனிதன் தன்னைப் பற்றிய ஒவ்வொரு உண்மையையும் தன் ஆன்மா என்னும் சுரங்கத்தை ஆழத் தோண்டும்போது அறிந்து கொள்கின்றான்.  தனது குணங்களை, வாழ்க்கையை, தலைவிதியை  தானே உருவாக்குகின்ற வல்லமை படைத்த மனிதன், தனது எண்ணங்களை கூர்ந்து கவனித்து  கட்டுப்படுத்தி தேவைக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கும்போது, அது அவனிலும் பிறரிலும் சூழ்நிலையிலும் ஏற்படுத்தும் அற்புத மாற்றங்களை ஐயமற நிரூபிக்கின்றான். தொடர்ந்த பொறுமையான பின்பற்றலாலும் ஆராய்ச்சியினாலும் காரண-விளைவு உண்மைகளை பூரணமாக உணர்கின்றான்.  தனக்கு கிடைக்கக் கூடிய ஒவ்வொரு அனுபவத்தையும், அன்றாட நிகழ்வுகளையும் - அவை எத்துனை அற்பமாய் இருப்பினும் - பயன்படுத்தி அவன் தன்னைப் பற்றிய அறிவை அறிந்து கொள்கின்றான்.  அவ்வறிவானது புரிந்துணர்வு, விவேகம், சுய பலம் என்பதாகும்.  ஆக மற்ற எல்லா சூழ்நிலைகளையும்விட கேளுங்கள் கொடுக்கப்படும். தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் கூற்று இந்நிலைக்கு மிகவும் பொருந்தும்.  ஏனெனில் பொறுமை, பயிற்சி, இடைவிடாத தேடுதல் மூலமே மனிதன் அறிவு என்னும் ஆலயத்தினுள் நுழைய முடியும்

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (21.10.2018)

கருத்துகள் இல்லை: