வியாழன், 21 ஜனவரி, 2010

உறவும் நட்பும்...

இல்லாதவற்றை இருப்பதாக்கி
கடுகுத் தவறை கடலளவாக்கி
கலைந்துபோகும் உறவுகள்...

சின்னச் சின்னச் சிக்கல்களில்
சிதறிப்போகும் சிநேகங்கள்...

எத்தனை பிணக்குகள்
எத்தனை பிரிவுகள்...

உறவே நட்பே
ஒன்றுரைப்பேன்
நானும் நீயும்
நாளையேகூட
மரணித்துவிடலாம்

நம்மையும் மிஞ்சியா
நம் வெஞ்சினம்
வாழ்வது...?

காலம் நம்முன்னே
காணாமல் போகிறது
நாளையப் பொழுதுகள்
நம்வசம் இல்லை...

இன்றே விரைந்து வா
கைகுலுக்கி
கவலை மறப்போம்

மன்னிப்பு கேட்பதன் அர்த்தம் 'நான் பிழை - நீ சரி' என்பதல்ல; 'நான் சிறியவன் - நீ பெரியவன் என்பதல்ல'.  அதன் அர்த்தம் 'நான் என் தன்முனைப்பைவிட (ego) உன் உறவை அதிகம் மதிக்கிறேன்' என்பதாகும்.

"மன்னித்துவிடு" எனும் ஒரே வார்த்தையில் மறக்கப்படக் கூடிய தவறுகள் எத்தனை?  உலர்ந்துவிட்ட உறவும் நட்பும் மீண்டும் துளிர்க்கும் வாய்ப்புகள் எத்தனை? 

தனிமரம் தோப்பாகாது.  ஒவ்வொரு தனிமனித வாழ்வின் உயர்விலும் உறுதுணையாய் இருப்பது உன்னத உறவுகளும், உயர்ந்த சிநேகன்களுமே.

வாழ்க்கையில் வரப்பிரசாதமாய் கிடைத்த அற்புத உறவுகளையும் சினேகங்களையும் அற்ப விசயங்களுக்காய் அறுத்து விடுவது எத்தனை கொடுமை? சிந்திப்போம்.

==  சுப்ரமண்யா செல்வா ==

1 கருத்து:

sainet சொன்னது…

அற்புதமான கவிதை,ஆழமான வரிகள்,உணர்வினைத்தூண்டும் கவிநயம்.உங்களுடனனா உரையாடல்களின் போதும், உங்களின் ஆக்கங்களை படிப்பதற்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களும் என் வாழ்வினை அர்த்தமுள்ள ஒன்றானதாக மாற்றி விடுகிறது.ஒர் அற்புதமான உறவினை எனக்களித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூர்வதோடு தாங்களின் இலக்கியப்பணி மென்மேலும் உயர்ந்தோங்கிட என் இனிய வாழ்த்துக்கள்.வாழ்க வழமுடன்.....