வெள்ளி, 31 மார்ச், 2023

தவறுகள் அவமானங்களா?

எனது நிறுவன பணியாளர்களுடனான  அலுவலக கூட்டங்களில் நான் அடிக்கடி முகம் கொடுக்கும் ஒரு சூழ்நிலை.

எனது எழுத்துகளிலும் பேச்சுகளிலும் எப்போதும் அறிஞர்களின் கூற்றுக்களை மேற்கோள் காட்டுவது வழக்கம்.  கூறுகின்ற கருத்தை வலியுறுத்தி கேட்பவர், வாசிப்பவர் மனங்களில் அவற்றை ஆழப் பதிய வைப்பது அதன் நோக்கம்.

அத்தகைய கூட்டங்களில் நான் கேள்விகள் கேட்பதுண்டு.  உதாரணமாக ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் கூற்று ஒன்றை மேற்கோள் காட்டுவதற்கு முன்பு ஸ்டீவ் ஜாப்ஸ் என்றால் யார் என்று தெரியுமா என்கிற கேள்வி.  அடுத்த சில நொடிகள் அங்கு மயான அமைதி நிலவும்.  அங்கு இருப்பவர்களில் பெரும்பாலோருக்கு  சரியான பதில் தெரிந்திருக்கும்.  ஆனால் கூறத் தயக்கம்.  காரணம் தவறாக கூறி விடுவோமோ, அப்படி தவறாக கூறிவிட்டால் சக பணியாளர்கள் முன் அவமானப்பட்டு விடுவோமோ என்கின்ற அச்சம்.  

இப்படியான சந்தர்ப்பங்களை நம்மில் பலரும் பல சந்தர்ப்பங்களிலும் முகம் கொடுத்திருப்போம்.  இந்த அவசியமற்ற அச்சத்தின் காரணமாக நம் அறிவை, திறமையை வெளிப்படுத்தக்கூடிய  பல சந்தர்ப்பங்களை இழந்திருப்போம்.

இந்த அச்சம் அல்லது தயக்கத்துக்கு காரணம் தவறான பதிலை கூறுதல் அல்லது ஒரு விடயத்தை தவறாக செய்தல் என்பது அவமானத்துக்குரியது என்று சிறு வயது முதல் நம்முள்  ஆழப் பதிந்துள்ள தவறான எண்ணம்.

தவறுகள் அவமானங்கள் அல்ல.  

பலமுறை விழுந்து எழுந்தே நாம் நடக்கப் பழகுகிறோம். 

2774 தடவை தோல்வி அடைந்த பின்பே மின் விளக்குக்கான சரியான வரைபடத்தை அடைந்ததாக தாமஸ் அல்வா எடிசன் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு கண்டுபிடிப்புகளில் அவருடைய தோல்விகளைப் பற்றி அவரிடம் கேட்டபோது அவர் கூறிய பதில்:

"நான் பத்தாயிரம் முறை தோல்வியடையவில்லை.  சரியாக வேலை செய்யாத பத்தாயிரம் வழிகளை நான் வெற்றிகரமாக கற்றுக் கொண்டேன்."

தவறுகளே நமக்கு சரியானவற்றை கற்றுத் தரும் சிறந்த ஆசான்கள்.  எதுவும் செய்யாமல் இருப்பதை விட தவறாக ஒன்றை செய்வது சாலச் சிறந்தது.

பொதுவாக தனிமையில் செய்யும் தவறுகளையிட்டு நாம் அவமானப்படுவதில்லை.  ஆனால் அதே தவறை பிறர் முன் செய்யும்போது, அதனை நாம் அவமானமாக கருதுகிறோம்.  காரணம் நாம் குறைவாக மதிப்பிடப்படுவோம் என்கின்ற அச்சம்.  ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் எப்போதும் நம்மை நாம் சரியானவராக, பிழையற்றவராக காட்டிக் கொள்ள வேண்டும் என்கின்ற எமது ஈகோவின் உந்துதல் அது என்பது புரியும்.

இந்த மனநிலையிலிருந்து வெளி வந்தால் மாத்திரமே நம்மில் நேர்மறை மாற்றமும், வளர்ச்சியும் சாத்தியமாகும்.

எப்படி வெளிவருவது?

இந்த உலகில் எவரும் குறையற்றவர்களாக, முழுமையானவர்களாக இல்லை  என்கின்ற பேருண்மையை முழுமையாக உணர்ந்து கொள்வது.  நாமும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்பதை உணர்ந்து பிறர் முன் நாம் செய்யக்கூடிய தவறுகளையிட்டு நாம் படக்கூடிய அவமானத்தை காற்றில் கரைய விடுவது.

அடுத்த முறை அச்சமின்றி சொல்லலாம் ஒரு பிழையான பதிலை.  தயங்காமல் செய்யலாம் ஒரு தவறை. பல சந்தர்ப்பங்களில் நாம் நினைப்பது போல் அவை தவறாகவே இருக்காது என்பதுதான் ஆச்சரியமிகு உண்மை.

--------------------------
இந்த நாளும் இனிய நாளாகட்டும்!
என்றும் அன்புடன்
சுப்ரமண்ய செல்வா
(31.03.2023)

கருத்துகள் இல்லை: