புதன், 26 மே, 2021

கசடறுக்கும் கல்வி


கசடு அறக் கற்கச் சொல்கிறார் வள்ளுவர்.  எது கசடு? எத்தனையோ உண்டு.  அதில் தனது நலம் பற்றி மட்டுமே சிந்திப்பதும் செயல்புரிவதுமே பெரும் கசடு. வணிகமாகிவிட்ட இன்றைய கல்வி அதை ஊக்குவிப்பதில் ஆச்சரியமில்லை.  கற்றுத் தேர்ந்து தொழில் செய்து பணம் சம்பாதிபதையே நோக்கமாகக் கொண்ட இன்றைய கல்வியில் மனித வாழ்க்கை விழுமியங்கள் ஒரு விடுபட்ட  பாடம் ஆகிவிட்டது.  ஆரம்பப் பள்ளி ஓட்டப்பந்தயத்தில் எப்படியாவது முதல் இடத்தை பிடித்து விட வேண்டும் என்று அந்த சின்னஞ்சிறு கால்களுக்கு கற்றுத் தருகிறோம்.   வளர்ந்ததும் அது வாழ்க்கைப் பந்தயத்தில் 'எப்படியாவது'   முதலிடம்  பிடிக்க  ஓடுகிறது.  சக போட்டியாளரை இடறி விழச் செய்வது கூட தவறு இல்லை என்று எண்ணுகிறது.  

சிறுவர்கள் மனவியலாளர் Dr. Haim Ginott தனது Teacher and Child என்ற நூலில் ஹிட்லரின் நாஜி வதை முகாமிலிருந்து உயிர்பிழைத்த ஒரு பள்ளி அதிபர் கல்வியாளர்களுக்கு எழுதிய இந்தக் கடிதம் உள்ளது. 

**********************"

அன்புள்ள ஆசிரியர்களுக்கு, நான் நாஜி சித்திரவதை முகாமிலிருந்து உயிர்பிழைத்தவன்.  வேறு எவரும் காணக்கூடாத காட்சிகளை எனது கண்கள் அங்கு கண்டன.  படித்த பொறியியலாளர்களால் கட்டப்பட்ட நச்சு வாயு அறைகள்; படித்த மருத்துவர்களால் நஞ்சூட்டப்பட்ட சிறுவர்கள்; தாதிகளால் கொல்லப்பட்ட சிசுக்கள்; பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கல்வி கற்ற ஆயுதப்படையினரால் கொல்லப்பட்ட பெண்களும், குழந்தைகளும்.... 

எனவே நான் கல்வியின் மீது மிகுந்த சந்தேகம் கொள்கிறேன்.

எனவே ஆசிரியர்களே! எனது வேண்டுதல் என்னவெனில் உங்கள் மாணவர்கள் நல்ல மனிதர்களாக உருவாக உதவுங்கள்.  உங்கள் உழைப்பு மெத்தப் படித்த அரக்கர்களையும், திறமையான உளநோயாளர்களையும் உருவாக்கக் கூடாது.  எழுத்தும், வாசிப்பும், கணிதமும், சரித்திரமும் மாணவர்களை நல்ல மனிதர்களாக ஆக்கினால் மட்டுமே பயன் மிகுந்ததாக இருக்கும்.

**********************

இந்தக் கடமை ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் உண்டு.   இல்லம்தானே முதல் பள்ளி!

- சுப்ரமண்ய செல்வா -  #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

YouTube: https://youtube.com/c/SubramanyaSelva

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இந்த நவீன இயந்திர உலகில் மனிதமும் மனிதாபிமானமும் இன்று நம் மக்களிடம் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது
இதை பற்றிய தங்களின் கருத்து என்ன ஐயா .....

பெயரில்லா சொன்னது…

ஐந்து விரல்களும் ஒன்றாக அமைவதில்லை. Reality!

psselvaratnam சொன்னது…

உண்மை

psselvaratnam சொன்னது…

அதற்கான காரணம் உங்கள் கேள்வியிலேயே இருக்கிறது. 'நவீன' 'இயந்திர' உலகம். நவீன வாழ்க்கை முறையில் நமது தனிப்பட்ட குடும்பம் என்னும் சிறு தீவுகளாக வாழத் தொடங்கிவிட்டோம். போட்டி மிகுந்த உலகில் அவரவர் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் போராட்டத்தில் பிறரைப்பற்றி கவலைப்பட நேரம் இல்லாமல் போய்விட்டது. அடுத்தது அபரிமிதமான இயந்திர சார்புநிலை சக மனிதர்களின் தேவையை குறைத்துவிட்டது. ஆனால் மனிதர்கள் மனதளவில் விழுந்து விடும் பொழுது, இன்னொரு மனிதரால்தான் அவர்களை தாங்கிப் பிடிக்கவும், உயர்த்தி விடவும் முடியும். புதிய தலைமுறையினருக்கு அதன் அவசியத்தை உணர்த்த விழுமியம் சார்ந்த கல்வி மிக முக்கியம். கேள்விக்கு நன்றி. - சுப்ரமண்ய செல்வா -